WFTW Body: 

நாம் அப்பம்பிட்கும்பொழுது இயேசு கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூரும்படி 1கொரிந்தியர் 11-ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறோம். “மரணமே தேவனுடைய ஜீவனுக்கான நுழைவாயில்” என்பதை இயேசு தமது வாழ்க்கையின் மூலமாகவும், தமது உபதேசத்தின் மூலமாகவும் நமக்குக் காண்பித்தார் (2கொரிந்தியர் 4:10-ஐப் பார்க்கவும்). எனவே கிறிஸ்துவின் மரணத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் நாம் தியானித்து, அந்த மரணத்தில் பங்குகொள்வது (பிட்கப்பட்ட அப்பத்தைப் புசிப்பது) என்றால் என்ன என்பதையும், கிறிஸ்துவுடனேகூட சிலுவையில் அறையப்படுவது என்றால் என்ன என்பதையும் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்வது நமக்கு நல்லது.

தாம் ஒருபோதும் செய்யாத குற்றத்திற்காக சிலுவையிலே பழியை ஏற்றுக்கொண்டது கிறிஸ்துவின் மரணத்தின் ஓர் அம்சமாகும் (“நான் ஒருபோதும் செய்யாத குற்றத்திற்காக தண்டிக்கப்படுகிறேன், நான் ஒருபோதும் திருடாததை திரும்பிச்செலுத்த வேண்டியதாயிற்று” - சங்கீதம் 69:4 லிவிங் மொழிப்பெயர்ப்பு). இது, தான் செய்த குற்றத்திற்கான பழியை ஏற்க மறுத்த ஆதாம் செய்ததற்கு நேர் எதிரானது. அவன் தனது மனைவியின்மீது பழிசுமத்தினான் (ஆதியாகமம் 3:12). இவை, ஆதாமின் பிள்ளைகளும் தேவனுடைய பிள்ளைகளும் நடக்கும் முற்றிலும் வேறுபட்ட இரு வழிகளாகும்.

தங்கள் தகப்பனைப் போலவே ஆதாமின் பிள்ளைகளும் தங்களை நியாயப்படுத்திக் கொள்கிறார்கள். இயேசு பரிசேயர்களிடம், “நீங்கள் உங்களை நியாயப்படுத்திக் கொள்பவர்கள்” என லூக்கா 16:15-ல் கூறினார். தன்னுடைய சொந்த தேவையையோ, தன்னுடைய சொந்த பாவத்தையோ ஆதாமால் பார்க்க முடியவில்லை. அவனால் பிறருடைய பாவத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. யாதொருவன் மற்றவர்களைக் குற்றஞ்சாட்டி, தன்னிடத்திலோ தவறொன்றும் காணாதிருப்பானானால், உண்மையில் அவன் குற்றம்சாட்டுபவனாகிய சாத்தானோடு ஐக்கியம் கொண்டிருக்கிறான்.

மரித்துக்கொண்டிருந்த கள்ளன், “ஆண்டவரே, என்னை நினைத்தருளும்” என்று சொன்னதினால் மாத்திரம் அல்ல, அந்த வார்த்தைகளைச் சொல்வதற்கு முன்பாக அவன் தன்னுடைய சொந்த பாவங்களுக்கான பழியை ஏற்றுக்கொண்டதினாலேயே இரட்சிக்கப்பட்டான்.

மற்றவர்களை நியாயந்தீர்க்க தேவனுக்கு நம்முடைய உதவி தேவை இல்லை. அதையெல்லாம் தாமே செய்ய அவர் மிகவும் திறமையானவர்! நாம் நம்மை மட்டுமே நியாயந்தீர்க்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். ஒரே ஒரு காரியத்தை மட்டும் செய்யும்படி தேவன் நம்மை அழைக்கிறார்: "உன் அக்கிரமத்தை ஒத்துக்கொள்" (எரேமியா 3:13). அத்தகைய விசுவாசிகளே இந்த உலகத்தில் மகிழ்ச்சியான மக்களாய் இருப்பார்கள்.

வடதிசை ராஜ்ஜியமான இஸ்ரவேலின் தோல்வியிலிருந்து யூதா தேசத்தார் தங்களுக்கு எந்த பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்று கர்த்தர் எரேமியா மூலம் யூதா தேசத்திற்குக் கூறினார் (எரேமியா 3:6-8). அவர் மேலும் கூறுகையில், யூதாவைக் காட்டிலும் இஸ்ரவேல் மேலானது எனக் கூறினார். செத்த ஸ்தாபனங்களில் இருந்து வெளியே வந்த பல கிறிஸ்தவக் குழுக்கள், அந்த செத்த ஸ்தாபனங்களுக்கு தேவன் என்ன செய்தார் என்பதிலிருந்து பாடம் கற்கவில்லை. எனவே அவர்கள் அந்த ஸ்தாபனங்களை விட அதிக பரிசேயத்தனமுள்ளவர்களாகவும், அதிகமாய் மரித்தவர்களாகவும் மாறிவிட்டனர்.

இயேசுவையே நோக்கிப் பார்த்து, எப்பொழுதும் அவருடைய பிரசன்னத்தில் வாழுங்கள். இது நம்மை நாமே தொடர்ந்தேச்சையாய் நியாயந்தீர்த்து வாழும் வாழ்க்கைக்கு வழிவகுக்கும். அதுதான் அனைத்து ஆவிக்குரிய முன்னேற்றத்திற்குமான வழி. இது வெளியிலுள்ள பிற சபைகளில் கேட்கக்கிடைக்காத ஒரு செய்தியாகும். நீங்கள் உங்களுக்குள்ளாக உற்றுநோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கக் (introspective) கூடாது - அது ஆக்கினைக்கும் அதைரியத்திற்கும் நேராய் நடத்திவிடும். ஆனால் இயேசுவையே நோக்கிப்பாருங்கள் – நீங்கள் அவரைப் பார்க்கும்போது, ​​ஏசாயா, யோபு மற்றும் யோவான் (பத்மு தீவில்) பார்த்தது போல், உங்களுக்குள்ளாகவே இருக்கும் தீமையைக் காண்பீர்கள். அப்பொழுது உங்களையே நீங்கள் நியாயந்தீர்த்துக் கொள்ளமுடியும்.

நான் ஒருபோதும் எனக்குள்ளாக உற்றுநோக்கிப் பார்ப்பதில்லை. (என்னைப் போல சோதிக்கப்பட்ட ஒரு மனிதனாயிருந்த) இயேசுவை மட்டுமே நோக்கி, தொடர்ந்து அவருடைய பரிபூரண பரிசுத்தத்தையும் அவரது அன்பையும் அவரது மனத்தாழ்மையையும் நான் பார்க்கிறேன். அது என்னை எப்பொழுதும் என் தேவையைக் குறித்த உணர்வுள்ளவனாய் வைத்திருக்கிறது.