WFTW Body: 

ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் அவளோடே விபசாரம் செய்தாயிற்று என இயேசு மலைப்பிரசங்கத்திலே தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார். மேலும் அத்தகைய மனிதன் இரு கண்களோடே விபசாரம் செய்து நரகத்திற்குப் போவதை பார்க்கிலும், ஒரு கண்ணைப் பிடுங்கியெறிந்துவிட்டுப் பரலோகத்திற்குச் செல்வது மேலானது என்றும் அவர் சொன்னார். ஒருவன் தனது கண்களால் தொடர்ச்சியாகப் பெண்களை இச்சையுடன் பார்த்துக் கொண்டிருப்பதே, அவன் நரகத்திற்குப் போய்ச் சேரப் போதுமானதாக இருக்கும் என்பதையே அவர் இதன் மூலமாகப் போதித்தார்.

இன்று மனிதனின் இருதயத்திற்குள்ளாக இருக்கும் இச்சையெனும் அக்கினியானது ஆதாமின் காலந்தொட்டு ஒவ்வொரு மனிதனின் இருதயத்திற்குள்ளும் எரிந்து கொண்டிருக்கும் நரக அக்கினியாகும். பரிசுத்த ஆவியின் அக்கினியால் மாத்திரமே இந்த அக்கினியை அவிக்க முடியும். உங்களுடைய இருதயமானது ஒன்று பாவம் செய்யத் தூண்டும் இச்சையுடன் எரியும்; அல்லது இயேசுவின் அன்புடன் எரியும். உங்களுடைய தெரிந்தெடுப்பானது இவ்விரண்டில் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்க முடியும்: அது இன்றுள்ள சுத்திகரிப்பவரின் அக்கினியாக இருக்கும் அல்லது வரப் போகும் நரக அக்கினியாக இருக்கும். இதற்கு மூன்றாவது மாற்று என எதுவும் இல்லை.

ஆண்டவர் பேசிக்கொண்டிருந்த அந்த யூத மக்கள், ஏற்கனவே தங்களுடைய நியாயப்பிரமாணத்தின் மூலமாக மிக உயர்ந்த தரத்தை எட்டியிருந்தனர். அவர்கள் ஒரு கண்டிப்பான ஒழுக்க நெறியைக் கடைப்பிடித்து வாழ்ந்தனர். அந்த ஒழுக்க நெறியின்படி, திருமணத்திற்கு வெளியில் நடத்தப்படும் பாலுறவானது எப்பொழுதும் மரண தண்டனையைக் கொண்டுவருவதாக இருந்தது. அந்நாட்களில் வாழ்ந்த மக்களை வேசித்தனத்திற்கு நேராக நடத்தும் ஆபாசப் படங்களுள்ள புத்தகங்களோ, பத்திரிக்கைகளோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளோ இருக்கவில்லை. அந்தச் சமுதாயத்தில் வாழ்ந்த பெண்மணிகள் நாகரீகமாக உடை அணிந்தனர்; ஆண்களும் பெண்களும் ஒருவரையொருவர் சந்தித்துப் பேசுவதே அபூர்வமாக இருந்தது. அப்படியிருந்தும், கட்டுப்பாடுகள் நிறைந்த அந்தச் சமுதாயத்திலும், பெண்களை இச்சிக்கின்ற ஆண்கள் இருந்ததை ஆண்டவர் அறிந்திருந்தார். அதனால் அதைக் குறித்துத் தம்முடைய சீஷர்களை அவர் எச்சரிக்க வேண்டியிருந்தது. அந்தக் கட்டுக்கோப்பான சமுதாயத்தையே அவர் அவ்வாறாக எச்சரித்தாரானால், காமவெறி நிறைந்த இன்றைய சமுதாயத்தில் வாழும் வாலிபரை அவர் எவ்வளவாக எச்சரிப்பார் என்று யோசித்துப் பாருங்கள்.

இன்றைய சமுதாயமானது நம்முடைய மனங்களில் பாலியல் ஆசைகளைப் போஷித்து வளர்ப்பதற்கான எரிபொருளை நிரப்புகிற வேலையைச் செய்கின்றது. ஆகவேதான் நாமனைவருமே நம்முடைய நாட்களில் அதிகக் கவனமுள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் இச்சையென்னும் அக்கினியை அவித்துப் போடுவதில் மிகவும் சீரியஸான நபராய் இருப்பீர்களானால், நீங்கள் உங்களுக்குக் கிடைக்கக்கூடிய எரிபொருள் விநியோகத்தை மிக சீரியஸாகத் தடுத்து நிறுத்த வேண்டும். நீங்கள் இந்த எரிபொருளின் மூல ஆதாரத்தை மூர்க்கமாய், தீவிரமாய், எவ்வித இரக்கமும் காட்டாமல் துண்டித்து விடுவதிலே முனைந்து நிற்க வேண்டும். கண்ணைப் பிடுங்கிப் போடு, கையைத் தறித்துப் போடு என்றெல்லாம் சொல்லப்பட்டிருப்பதின் அர்த்தம் இதுதான். நம்மைப் பாவம் செய்யத் தூண்டும் ஏதுக்களை அழித்துவிட வேண்டுமென இயேசு நமக்குக் கட்டளைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார். இயேசுவானவர் பாவத்தால் உண்டாகும் ஆபத்தையும், நரக அக்கினியின் உண்மையையும் குறித்த விஷயத்தில் வேறெவரைக் காட்டிலும் மிக அதிக விழிப்புடன் இருந்தார். எனவேதான் நாம் பாவத்திலிருந்து இரட்சிக்கப்படும்படிக்கு அவர் நமக்கு அத்தகைய தீவிர ஆவிக்குரிய அறுவை சிகிச்சையைச் செய்ய வேண்டுமென ஏவுகிறார்.

இயேசுவின் கட்டளைக்கு நாம் இன்று செயலாக்கம் கொடுக்க வேண்டுமானால், அது, “உன்னுடைய தொலைக்காட்சிப் பெட்டியானது உன்னுடைய மனதிலே நீ பாவம் செய்ய இடறலுண்டாக்கினால் அதை விட்டுவிடு” என்பதாகத்தான் இருக்கும். சின்னத்திரையில் தோன்றும் பிரபலங்களோடு நீங்கள் நரகத்திற்குப் போவதைக் காட்டிலும், TV நிகழ்ச்சிகளைத் தவறவிட்டவராய்ப் பரலோகத்திற்குச் செல்லுவது உங்களுக்கு நலமாயிருக்கும். அல்லது ஏதேனும் ஒரு பத்திரிக்கையோ அல்லது ஒரு குறிப்பிட்ட இசையோ நீங்கள் பாவம் செய்ய ஏதுவாக இருக்குமானால், அந்தப் பத்திரிக்கைக்கும், ஒலிநாடாக்களுக்கும் அதே நிலையை நீங்கள் உருவாக்க வேண்டும். நிச்சயமாகவே நீங்கள் மிகவும் பற்றுதலோடு அனுபவிக்கத்தக்க, ஒருவேளை அதன் விளைவாக நீங்கள் பரலோகத்தைத் தவறவிட்டு, நரகத்திற்கே போய் விடலாம் என்று நினைக்குமளவிற்கு நிச்சயமாகவே இப்புவியில் நீங்கள் பற்றிக் கொள்ளத்தக்க அருமையான காரியம் என்று எதுவும் இல்லை.

நீங்கள் இதை வாசிக்கும்போதே, சாத்தான் உங்கள் காதுகளில், “இவ்வளவு சிறிய காரியத்தினிமித்தம் நீ சாகவே சாவதில்லை (நீ நரகத்திற்குப் போகவே போவதில்லை)” என்று கிசுகிசுப்பான். ஒரு பத்திரிக்கையிலோ அல்லது TV-யிலோ காணப்படுவதை இச்சையோடே பார்க்கிற உன்னுடைய பார்வையை விபசாரம் என்று சொல்ல முடியாது என்று அவன் தந்திரமாகச் சொல்லுவான். அவனுக்குச் செவி சாய்க்காதீர்கள். ஏனெனில் சாத்தானானவன் ஆதிகாலமுதல் ஒரு பொய்யனாய் இருக்கிறான் என்று இயேசு நம்மை எச்சரித்திருக்கிறார்.

“வரும் நாட்களில் இன்னும் அதிகச் சிறப்பாய் நடந்து கொள்ளுவேன்”, அல்லது “அதை விட்டுவிட முயற்சிப்பேன்” போன்ற வார்த்தைகளை இந்தப் பாவம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உபயோகிக்காதீர்கள். பொல்லாங்காய்த் தோன்றுகிற காரியங்களை விட்டு விலக வேண்டுமென வேதம் நம்மை எச்சரிக்கின்றது. நீங்கள் இப்பாவத்தை உடனடியாகவும், நிரந்தரமாகவும் விட்டுவிட தேவன் உங்களுக்கு எல்லாவிதத்திலும் உதவி செய்வார் என்பதை நீங்கள் விசுவாசியுங்கள். ஜீவனுள்ள தேவனின் ராணுவத்தில், வீரனாக உள்ள உங்களைப் பரிகசிக்கிற இந்த கோலியாத்தின் தலையை வெட்டிச் சாய்க்கிற வரையிலும் நீங்கள் அயராது இந்த யுத்தத்தை இன்றிலிருந்து மேற்கொள்ளுங்கள்.

பெண்பிள்ளைகளுடன் சரீரப்பிரகாரமான தொடர்பைத் தவிர்க்க வேண்டுமென 1கொரிந்தியர் 7:1 எச்சரிக்கின்றது. பரிசுத்த ஆவியானவர் ஏதேனும் ஒரு காரியத்தை “நல்லதல்ல” (இங்கு சொல்லப்பட்டிருப்பதைப் போல) என்று சொல்லுவாரானால், அதைத் தவிர்த்துவிடுவதற்கு எந்த ஒரு சீஷனுக்கும் இது ஒன்றே போதுமானதாகும். பிரமாணம்சார்ந்து நிற்பவர்கள் எழுத்தின்படி வாழ்கின்றனர். ஆனால் ஒரு சீஷனோ கற்பனையிலுள்ள ஆவியின்படி வாழ்கிறான். உதாரணமாக: விபசாரம்தான் ஒருவனை தன்னுடைய இருதயத்தில் ஒரு ஸ்திரீயை இச்சையுடன் பார்க்கச் செய்கின்றது என்பதை இயேசு அறிந்திருந்தார். ஏனென்றால் அவர் ஏழாம் கற்பனையின் ஆவியை விளங்கிக்கொள்ள வேண்டுமென நாடினார். அதைப் போலவே, நீங்கள் முழு இருதயங்கொண்ட நபராய் இருந்தால், தேவனுடைய கற்பனைகளுக்கு வேராய் இருப்பது எது என்பதை உங்களால் கண்டு கொள்ள முடியும். பவுல் தீமோத்தேயுவிற்குச் சொல்லுவதைக் கவனியுங்கள்: “வாலிபருக்கு அடிக்கடி நேரிடுகிற சோதனைகள் எதுவும் உன்னைச் சோதியாதபடிக்கு அதைவிட்டு விலகு” (2தீமோத்தேயு 2:22 - Living). சோதனைகளுக்கான எல்லாவித சாத்தியக் கூறுகளையும் விட்டு நீ விலக வேண்டும்.

கர்த்தர் தம்முடைய ஆலயத்தை மீண்டுமாய்ச் சுத்திகரித்துக் கொண்டிருக்கிறார். உங்களுடைய சரீரந்தான் இப்போது அவருடைய ஆலயமாக இருக்கின்றது. அதற்குள் அவர் ஒரு முழுமையான வேலையைச் செய்வதற்கு அவரை அனுமதியுங்கள்.