கானாவூரில் நடந்த திருமணம், தேவனை கனம் செய்வதால் கிடைக்கும் ஆசீர்வாத பெருக்கை நாம் காண்பதற்கு கிடைத்த ஒரு காட்சியாய் விளங்குகிறது (யோவான் 2:1-11). முதலாவது, ஒரு திருமணத்தில்தான் இயேசு தம்முடைய மகிமையை வெளிப்படுத்தத் தீர்மானித்தார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இன்றும்கூட, இயேசு தம் மகிமையை ஒவ்வொரு திருமண வைபவத்திலும், ஒவ்வொரு திருமண வாழ்க்கையிலும் வெளிப்படுத்த விரும்புகிறார்! “பாலிய ஈர்ப்பும், அன்பும், திருமணமும்” தேவன் நமக்கு அருளிய விலையேறப்பெற்ற பரிசே ஆகும்! ஆம், இவைகளைக் கொண்டே, தமது மகிமையை தேவன் நமக்கு வெளிப்படுத்துவது மாத்திரமல்லாமல், நம் மூலமாய் அனேகருக்கு வெளிப்படும்படியும் செய்கிறார். காரியம் யாதெனில், அப்படியெல்லாம் செய்வதற்கு நாம் நம்மை தேவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதுதான்!
கானாவூர் திருமணத்தில் திராட்சரசம் குறைவுபட்டது! திருமண வாழ்வில் பிரவேசிக்கும் யாராய் இருந்தாலும், அவர்களுக்கு பிரச்சனைகளும் தேவைகளும் கண்டிப்பாய் எழும்பும் என்பதையே இந்தக் குறைவு காண்பிக்கிறது. இவ்வாறு எழுகின்ற பிரச்சனைகள், கணவனுக்கும் மனைவிக்கும் தொடர்ச்சியான சலிப்பையும் சஞ்சலத்தையும் கொண்டு வருகிறது. ஆனால், இயேசுவுக்கு பிரதான தலைமைத்துவத்தை நம் திருமண வாழ்வில் அளிக்கும்போது கானவூரில் அவர் செய்தது போலவே, அனைத்து பிரச்சனைகளுக்கும் தேவைகளுக்கும் மகிமையான தீர்வு தருவார்!
உங்கள் இல்லத்திற்கு கிறிஸ்துவை “விருந்தினராக” அழைப்பது போதாது! “ஆண்டவர் இயேசுவே, எங்கள் இல்லத்தை நீர் ஆண்டு நடத்தும்” என்றே அவரை அழைத்திட வேண்டும். “கிறிஸ்துவே இந்த வீட்டின் தலைவர்” என்ற வாசக பலகையை உங்கள் வீட்டில் தொங்க வைத்து விட்டு, நீங்களோ தொடர்ந்து உங்கள் வீட்டின் தலைவராக.. இன்னும் சில வீடுகளில் மனைவி அந்த வீட்டின் தலைவராக இருந்தால், நீங்கள் தொங்கவிட்டிற்கும் வாசகம் கேலிக்குரியதாகவே இருக்கும். ஆனால் மெய்யாகவே, கிறிஸ்துவை தங்கள் தலைவராகவும் ஆண்டவராகவும் தங்கள் இல்லத்திற்கு வைத்தவர்கள் எவர்களோ, அவர்களுக்கு, அன்று 2000 வருடங்களுக்கு முன்பாக கானவூர் திருமணத்தில் தமது மகிமையை வெளிப்படுத்திய இயேசு, உங்கள் சொந்த ஜீவியத்தில் 'அதே மகிமையை' வெளிப்படுத்துவார்! (யோவான் 2:11).
“அவர் உங்களுக்குச் சொல்லுகிறபடியே செய்யுங்கள்!" என்ற அறிவுரையைத்தான், மரியாள் அங்கிருந்த வேலைக்காரர்களுக்குக் கூறினாள் (யோவான் 2:5). மரியாளின் ஆலோசனைக்கு செவிகொடுத்து, அந்த வேலைக்காரர்கள் இயேசு கட்டளையிட்ட அனைத்திற்கும் முழுமையாகவும் உடனடியாகவும் கீழ்ப்படிந்தபடியால், சீக்கிரத்தில் பிரச்சனை முழுவதும் தீர்ந்து விட்டது. திருமணமானவர்களும், திருமணத்திற்காக காத்திருக்கும் இளைஞர்களும், அன்று போலவே இன்றும் இயேசுவின் கட்டளைகளுக்கு முழுமையாகவும், உடனடியாகவும், கீழ்ப்படிந்து வாழ்ந்துவிட்டால் அனைத்து பிரச்சனைகளுக்கும் இயேசு “மகிமையான விடை” தருவதைக் காண்பார்கள்!
கானாவூர் திருமணத்தில், வெறும் தண்ணீர் திராட்சரசமாய் மாறிவிட்டது! ருசியில்லாததும், நிறம் இல்லாததும், அற்பமானதுமாய் இருந்தது கணப்பொழுதில் மதுரமும் மின்னிடும் விலையேறப் பெற்றதாயும் மாறிவிட்டது! ஆம் உங்கள் இல்லத்தை ஆண்டவருடைய ஆளுகைக்கே முற்றிலும் நீங்கள் ஒப்புக்கொடுத்து விட்டால், நாடோறும் சலிப்பாயிருக்கும் உங்கள் திருமண வாழ்க்கை, புத்தொளியுடன் மிளிரும் என்பதையே இந்த நிகழ்ச்சி சித்தரிக்கிறது. ருசியற்றது ருசியாகவும்! புறக்கணிக்கப்பட்டது விலையேறப்பெற்றதாகவும் மாறிடும், அற்புதம் விளையும்!
இந்த ஒரு அற்புதத்தின் மூலமாய், அங்கு கூடியிருந்த எண்ணற்ற ஜனங்களின் தேவை பூர்த்தி செய்யப்பட்டதைப் பாருங்கள்! ஒரு கிறிஸ்தவத் திருமண வாழ்க்கை, தம்பதியருக்குரிய மகிழ்ச்சியை மாத்திரம் பூர்த்தி செய்வதில்லை! தம்பதியரின் வாழ்க்கையைக் குறித்து தேவன் கொண்டுள்ள நோக்கம் என்னவெனில், அவர்களுடைய பாத்திரம் தொடர்ச்சியாக நிரம்பி வழிந்து கொண்டே இருக்க வேண்டும் (சங்கீதம் 23:5). அவர்களுடைய திருமண வாழ்க்கை, அனேகருக்கு ஆசீர்வாதமாய் இருக்க வேண்டும் என்பது மாத்திரமல்ல, அவர்கள் சந்திக்கிற ஒவ்வொரு நபருக்கும் ஆசீர்வாதமாய் இருந்திட வேண்டும்! தம்முடைய கட்டளைகளுக்கு எல்லாம் கீழ்ப்படிந்த தம்முடைய தாசனிடம் தேவன் பேசும் போது “நான் உன்னை ஆசீர்வதிப்பேன். நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்! பூமியில் உள்ள வம்சங்கள் எல்லாம் (குடும்பங்கள் எல்லாம்) உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்” என்றார்! (ஆதியாகமம் 12:2,3). விந்தை யாதெனில், கலாத்தியர் 3:14 தெரிவிக்கிறபடி “ஆபிரகாமுக்கு உண்டான இந்த ஆசீர்வாதம், நமக்குமானது” என வாசிக்கிறோம். திருமண வாழ்க்கையில், இதைவிட மேலான இலக்கு வேறு எது வேண்டும்? இந்த ஆசீர்வாதத்திற்குரிய நிபந்தனை என்னவென்றால், “நாம் எந்தளவிற்கு நம் அன்றாட ஜீவியத்தில் தேவனுக்குக் கீழ்ப்படிந்து வாழ்கின்றோமோ, அந்த அளவிற்கு மற்றவர்களுக்கு நாம் ஆசீர்வாதமாய் மாறிட முடியும்!” என்பதேயாகும். ஆபிரகாமிற்கு “நீ என் வார்த்தையைக் கேட்டு அதற்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியில் உள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்" என்று தேவன் தம் பேரில் ஆணையிட்டு கூறினார் (ஆதியாகமம் 22:18).
தங்கள் பாலியம், சிநேகம், மற்றும் திருமணம் - ஆகியவற்றுக்கடுத்த விஷயத்தில் பெரும் தோல்வி அடைந்தவர்களுக்கு, கானாவூர் திருமண அற்புதத்தில் “ஒரு நம்பிக்கையின் செய்தி" காத்திருக்கிறது. அந்தத் திருமண வைபவத்தில், திராட்சரசம் தீர்ந்துபோன சமயம், அவர்கள் கர்த்தரிடம் வந்தார்கள்! கர்த்தரோ, அவர்களைக் கைவிடவில்லை! அப்படியிருக்க, உங்களுடைய தோல்வி எத்தனை அதிகமாய் இருந்தாலும், அது அவருக்கு ஒரு பொருட்டல்ல. ஆகவே, அவரிடம் நீங்கள் திரும்பி வந்தால், உங்களையும் அவர் கைவிடமாட்டார்! உங்களிடம் அவர் எதிர்பார்ப்பதெல்லாம், அந்த கானவூர் திருமண நிகழ்ச்சியில் நடந்தது போல், அவரிடம் வந்து “உங்கள் தோல்வியை நேர்மையாய் அறிக்கை செய்ய வேண்டும்!” என்பது மாத்திரமே ஆகும். உங்கள் மதியீனத்தினால், அந்தப் பெண்ணிடம் அல்லது அந்தப் பையனிடம் 'வரையறை தாண்டி' சென்று விட்டீர்களோ? அல்லது உங்கள் அறியாமையினிமித்தம் 'காதல் விஷயத்தில் விழுந்து' தவறு செய்து வீட்டீர்களோ? இப்போது, இப்படியெல்லாம் ஏற்பட்டதின் நிமித்தம் மனவிசாரமும் சஞ்சலமும் கொண்டிருக்கிறீர்களோ? பிறர் உங்களை பழிதூற்றி நிந்தனை செய்யும் அளவிற்கு வந்து விட்டதோ? இனி நீங்கள், ஒரு கணம்கூட தாமதிக்காமல், கர்த்தரிடம் திரும்பி வாருங்கள்! இந்த நல்ல ஆண்டவர், பாவிகளுக்கு சிநேகிதர்! உங்கள் பாவங்களை மன்னிப்பதற்கு மாத்திரமல்லாமல், உங்கள் ஜீவியத்தில் சாத்தான் சீர்குலைத்த அனைத்தையும் சுத்திகரிக்கவும் காத்திருக்கிறார்! மெய்யாகவே, உங்கள் பாவங்களை மன்னிப்பதற்காகவும், சாத்தான் உங்களுக்கு போட்ட அனைத்து முடிச்சுகளையும் அவிழ்த்து விடுவதற்காகவுமே இயேசு இந்த உலகத்திற்கு வந்தார் (1யோவான் 3:5,8). உங்களுக்கும் கூட நம்பிக்கை வைக்கப்பட்டிருக்கிறது! ஆகவே, மனமடிவிற்கு நீங்கள் கண்டிப்பாய் இடம் தந்துவிடக் கூடாது! அன்று கானாவூர் திருமணத்தில், தேவை ஏற்பட்ட இடத்தில், தேவைக்கு அதிகமாகவே ஆண்டவர் செய்தார்! அதுபோலவே, இன்று உங்கள் ஜீவியத்தில் காணும் 'ஒவ்வொரு தேவைக்கும்' மேலாகவே அவர் செய்து முடிப்பார்! கானாவூர் திருமணத்தில் தமது மகிமையை வெளிப்படுத்திய ஆண்டவர், உங்கள் ஜீவியத்திலும் அதே போன்று தமது மகிமையை வெளிப்படுத்துவார் என்பது திண்ணம்!
திருமண வாழ்வின் யாதொரு பகுதியில் 'ஏமாற்றத்தை' நீங்கள் அடைந்திருந்தாலும், மெய்யான கிறிஸ்தவ ஜீவியத்தின் ஆசீர்வாதமானது "பற்றிப் பிடித்துக்கொள்வதனால்" அல்லாது “இழப்பிலிருந்துதான்” துவங்குகிறது என்ற உண்மையை இன்று அறிந்துகொள்ளுங்கள்! (அப்போஸ்தலர் 20:35). நிறைவேறாத விருப்பங்கள் உங்களுக்கிருந்தாலும், தேவன் சகலத்தையும் உங்களது நன்மைக்கேதுவாக நடந்தேறப்பண்ணி, அவருடைய மகிமைக்கென்று ஒரு பூரண வாழ்க்கை வாழ அவர் உங்களுக்கு உதவி செய்ய முடியும்.