எழுதியவர் :   சகரியா பூணன் வகைகள் :   சீஷர்கள்
WFTW Body: 

“என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்” (யோவான் 6:38). இயேசு தாம் என்ன செய்வதற்காகப் பூமிக்கு வந்தார் என்பதை தம்முடைய சொந்த வார்த்தைகளில் நமக்குச் சொல்கிறார். இயேசு தம்முடைய ஜீவிய காலம் முழுவதிலும் ஒவ்வொரு நாளும் எவ்வாறு வாழ்ந்தார் என்று இந்த வாக்கியத்தில் நமக்கு விளக்கிச் சொல்லப்பட்டிருக்கிறது. இயேசு நாசரேத்து ஊரில் வாழ்ந்த முப்பது ஆண்டுகளும் மறைக்கப்பட்ட ஆண்டுகள் எனப் பொதுவாக குறிப்பிடப்படுகின்றன. ஆனால் அந்த 30 ஆண்டுகளிலும் ஒவ்வொரு நாளும் இயேசு என்ன செய்தார் என்பதை அவர்தாமே இங்கே நமக்கு வெளிப்படுத்துகிறார். அவர் தம்முடைய சித்தத்தை வெறுத்து (மறுத்து) பிதாவின் சித்தத்தை செய்தார். நித்திய காலமாய் இயேசு பிதாவோடே பரலோகத்திலிருந்த போது அவர் தமது சுய சித்தத்தை ஒருபோதும் வெறுக்க வேண்டியிருந்ததில்லை. ஏனென்றால் அவருடைய சுய சித்தமும் அவருடைய பிதாவின் சித்தமும் ஒன்றாகவேயிருந்தது. ஆனால் அவர் நம்முடைய மாம்சத்தில் பூமிக்கு வந்தபோது, அந்த மாம்சத்திற்கு ஒரு சுய சித்தம் இருந்தது. அந்த சுய சித்தம் ஒவ்வொரு கட்டத்திலும் பிதாவின் சித்தத்திற்கு முற்றிலும் மாறுபட்டிருந்தது. தம்முடைய சுய சித்தத்தை எல்லா நேரங்களிலும் வெறுப்பதே இயேசுவுக்கு தன் பிதாவின் சித்தத்தை செய்வதற்கு ஒரே வழியாய் இருந்தது. இயேசு தம்முடைய ஜீவிய காலம் முழுவதும் சுமந்த சிலுவை இதுவே – தன்னுடைய சுய சித்தத்தைச் சிலுவையில் அறைதல். நாம் அவரை பின்பற்ற வேண்டுமென்றால் “சுய சித்தத்தை வெறுக்கிறதான”இந்த சிலுவையை ஒவ்வொரு நாளும் சுமக்கும்படி நம்மை இப்பொழுது கேட்கிறார்.
தம்முடைய சுய சித்தத்தைத் தொடர்ச்சியாக வெறுத்ததினால் மாத்திரமே இயேசு ஒரு ஆவிக்குரிய மனிதர் ஆனார். அவ்வாறு நம்முடைய சுய சித்தத்தை வெறுப்பதே நம்மையும் ஆவிக்குரியவர்களாக்கும்.

ஆவிக்குரிய தன்மை என்பது, ஏதோ ஒருமுறை தேவனைச் சந்திப்பதின் மூலமாக வருவதில்லை. அது சுய சித்தத்தை வெறுத்து தேவனுடைய சித்தத்தைச் செய்கிற வழியை, தொடர்ச்சியாக நாளுக்கு நாள், வாரங்கள் தோறும் ஒவ்வொரு வருடமும் தெரிந்தெடுப்பதினால் வரும் விளைவாகும். மனந்திரும்பி பத்து வருடங்களான இரண்டு சகோதரர்களின் (ஒரே நாளில் மனந்திரும்பி கிறிஸ்துவுக்குள்ளானவர்கள்) ஆவிக்குரிய நிலைமையை கவனித்துப் பாருங்கள். ஒருவர் இப்பொழுது ஆவிக்குரிய பகுத்தறிவை உடையவராய் முதிர்ந்த சகோதரனாக இருக்கிறார். அவரிடம் சபையில் அதிக பொறுப்புகளைத் தேவன் கொடுக்க முடிகிறது. மற்றொருவர் பகுத்தறிவு இல்லாமல் இன்னும் குழந்தையைப் போல இருக்கிறார். சபையிலுள்ள மற்றவர்களே அவருக்குத் தொடர்ச்சியாக போதித்து அவரைத் தொடர்ச்சியாக உற்சாகப்படுத்த வேண்டியிருக்கிறது. இவ்விருவருக்கு இடையிலான இவ்வளவு பெரிய வித்தியாசத்திற்கு காரணம் என்ன? தங்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் கடந்த பத்து வருடங்களில், ஒவ்வொரு நாளும் எடுத்த சிறு தீர்மானங்களே காரணமாகும். இன்னும் பத்து வருடங்கள் அவர்கள் அதே வழியில் தொடர்ந்து சென்றால், அவர்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் இன்னும் அதிகமாக தெரியும். ஒரு 2000-வாட் பல்பு வெளியிடும் ஒளிக்கும், ஒரு 5-வாட் பல்பு வெளியிடும் ஒளிக்கும் உள்ள வித்தியாசம் போல் அவர்களின் மகிமையின் அளவு நித்தியத்தில் வித்தியாசமாய் இருக்கும். ஒரு நட்சத்திரத்தின் மகிமைக்கும் இன்னொரு நட்சத்திரத்தின் மகிமைக்கும் வித்தியாசம் இருக்கும் (1 கொரி 15:41). நீங்கள் ஒரு வீட்டிலுள்ளவர்களை சந்திக்கச் செல்லுகிற ஒரு சூழ்நிலையை யோசித்துப் பாருங்கள். அங்கே, அவ்வீட்டில் இல்லாத ஒரு சகோதரனைக் (உங்களுக்குப் பிடிக்காத சகோதரன்) குறித்து ஏதோ எதிர்மறையான காரியத்தைச் சொல்ல சோதிக்கப்படுகிறீர்கள். அப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள்? அந்த சோதனைக்கு விட்டுக்கொடுத்துப் புறங்கூறுவீர்களா? அல்லது உங்களை நீங்களே வெறுத்து (மறுத்து) உங்கள் வாயை மூடுவீர்களா? யாரைக்குறித்தாவது தீமையாய் பேசின காரணத்தினால், குஷ்டரோகத்தையோ புற்றுநோயையோ கொடுத்து தேவன் தண்டிப்பதில்லை. ஆம் தேவன் தண்டிப்பதில்லை. எனவே இப்படிப்பட்ட பாவம் தங்களுடைய ஜீவனை அழித்துவிடாது என்று அநேகர் கற்பனை செய்கிறார்கள். ஐயோ பரிதாபம்! ஒவ்வொரு முறையும் தங்களைத் தாங்களே பிரியப்படுத்தின நேரங்களிலெல்லாம், கொஞ்சம் தங்களையே அழித்துக்கொண்டார்கள் என்பதை நித்தியத்தில் மாத்திரமே அநேக சகோதர சகோதரிகள் உணருவார்கள். பின்னர் எப்படி தங்களுடைய பூமிக்குரிய ஜீவியத்தை வீணடித்து விட்டார்கள் என்பதைக் குறித்து அவர்கள் மனம் வருந்துவார்கள்.

இயேசுவும்கூட நாசரேத் ஊரிலிருந்த 30 வருடங்களும் இதே போன்ற சூழ்நிலைகளில் சோதிக்கப்பட்டார். “அவர் எல்லா சமயங்களிலும் ஒருபோதும் தம்மை பிரியப்படுத்தவில்லை” (ரோமர் 15:3) என்று அந்த மறைக்கப்பட்ட வருடங்களைப் பற்றி எழுதப்பட்டுள்ளது. அவர் எப்பொழுதும் தம்மைத் தாமே வெறுத்தார். இவ்வாறாக அவர் எல்லா சமயங்களிலும் பிதாவானவரைப் பிரியப்படுத்தினார். ஒரு வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளில் தன்னைத்தானே ஒருவன் பிரியப்படுத்த முடியும். உதாரணமாக ’புசிப்பு’ என்ற பகுதியில் ஒரு சூழ்நிலையை யோசித்துப் பாருங்கள். அங்கே பசியே இல்லாத சமயத்திலும் கொஞ்சம் பணம் செலவழித்துப் புசிப்பதற்கு ருசிகரமான தின்பண்டங்களை வாங்கத் தீர்மானிக்கிறீர்கள். அதிலே பாவமோ தவறோ கண்டிப்பாக எதுவும் இல்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை முறையைப் பற்றி அது பேசுகிறது. உங்களுக்குப் பணம் இருக்கிறபடியால் உங்களுக்கு அதன் தேவை இருக்கிறதோ இல்லையோ, நீங்கள் விரும்புகிறதை வாங்கிக் கொள்ளுகிறீர்கள். உங்களுக்கு பிரியமானதையே நீங்கள் செய்கிறீர்கள். நீங்கள் ஏதாவது வாங்க வேண்டுமென்று உணர்ந்தால் அதை நீங்கள் வாங்குகிறீர்கள். நீங்கள் எங்கேயாவது செல்ல வேண்டும் என்று உணர்ந்தால் அங்கே நீங்கள் செல்லுகிறீர்கள். தாமதமாகத் தூங்க வேண்டும் என்று உணர்ந்தால் தாமதமாக நீங்கள் தூங்குகிறீர்கள். நீங்கள் கூட்டங்களுக்கு வழக்கமாகச் சென்று, ஒவ்வொரு நாளும் உங்கள் வேதாகமத்தை வாசித்தாலும் கூட, “உங்கள் சொந்த விருப்பத்தின்படியே வாழ்கிறதான” அப்படிப்பட்ட வாழ்க்கைக்குரிய முடிவின் பலன் என்ன? உங்கள் இரட்சிப்பை நீங்கள் இழக்காமல் இருக்கலாம். ஆனால் தேவன் அவருக்காக வாழ்வதற்கு உங்களுக்குக் கொடுத்த ஒரு ஜீவனை கண்டிப்பாக வீணடித்துவிடுவீர்கள். மற்றொரு சகோதரன் வேறு விதமாக நடந்துகொள்கிறான். அவன் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கிறான். அவனுக்குப் பசியில்லாத நேரங்களில் தேவையில்லாத எதையும் புசிக்கக்கூடாது என்றும் அவன் தீர்மானிக்கிறான். தனக்கென்று தேவையில்லாத பொருட்களை வாங்கக்கூடாது என்றும் அவன் தீர்மானிக்கிறான். தேவனோடு ஒவ்வொரு நாளும் நேரம் செலவழிப்பதற்காக 15 நிமிடம் முன்னதாகவே எழுந்திருக்கவும் தீர்மானிக்கிறான். யாராவது ஒருவர் தன்னிடம் கோபமாகப் பேசும்பொழுது, மென்மையாகப் பதிலளிக்கவும் தீர்மானிக்கிறான். அவன் எப்பொழுதுமே அன்பிலும் நற்குணத்திலும் நிலைத்திருக்கவும் தீர்மானிக்கிறான். அவனுடைய இச்சைகளைத் தூண்டிவிடும் செய்தித்தாளிலுள்ள சில செய்திகளை வாசிக்கக்கூடாது என்றும் தீர்மானிக்கிறான். ஒவ்வொரு சூழ்நிலையிலும் தன்னைத்தானே தாழ்த்தவும் தன்னைத் தானே நியாயப்படுத்தக்கூடாது என்றும் தீர்மானிக்கிறான். உலகத்தின் பக்கமாய் ஈர்க்கச் செய்கிறதான சில நட்புகளை விட்டுவிடவும் தீர்மானிக்கிறான். தொடர்ச்சியாக தன்னுடைய சித்தத்தை (தன்னைப் பிரியப்படுத்துகிறதை) வெறுப்பதின் மூலமாய் தன்னுடைய சித்தத்தில் தேவனை மாத்திரமே பிரியப்படுத்த வலிமை பெற்றவனாய் மாறுகிறான். அந்த தேவையற்ற பொருட்களை வாங்காமல் இருக்கிறதினாலோ, 15 நிமிடத்திற்கு முன்னமே தன்னுடைய படுக்கையை விட்டு எழுந்து இருக்கிறதினாலோ தன்னுடைய மனுஷீக கண்ணியத்தை விட்டு விட்டு மன்னிப்பு கேட்கிறதினாலோ அவன் எதை இழந்தான்? ஒன்றுமில்லை. ஆனால் எதைப் பெற்றிருப்பான் என்று யோசித்துப் பாருங்கள்.

சிறிய காரியங்களில் தொடர்ச்சியாக உண்மையுள்ளவனாயிருக்கிற இதுபோன்ற ஒரு மனிதன் சில வருடங்களிலேயே ஒரு நம்பத்தக்கத் தேவ மனிதனாக மாறிடுவான். வேத அறிவைப் பெற்றிருப்பதினால் அவன் அப்படி மாறாமல், தன்னுடைய வாழ்க்கையில் எடுக்கிற சிறியத் தீர்மானங்களில், தன்னைப் பிரியப்படுத்தாமல் தேவனையேப் பிரியப்படுத்துகிறதில் உண்மையுள்ளவனாய் இருக்கிறபடியால், தேவ மனிதனாக மாறிடுவான். எனவே பெலவீன சித்தம் (weak willed) உடையவர்களாய் இருக்க வேண்டாம். எல்லா நேரங்களிலும் தேவனைப் பிரியப்படுத்த உங்களுடைய சித்தத்தைப் பயிற்சி செய்யுங்கள். பயிற்சியினால் (அநேக வருடங்களாய் தங்களுடைய சித்தத்தை சரியான திசையில் பயிற்சி செய்தவர்கள்) தங்களுடைய புலன்களை (senses) நன்மை தீமையைப் பகுத்தறிய பழக்குவித்தவர்களே முதிர்ச்சியான கிறிஸ்தவர்கள் (எபி 5:14). நீங்கள் ஒரு உண்மையான தேவ மனுஷனாக அல்லது தேவ மனுஷியாக மாறுவேன் என்று தீர்மானம் செய்யுங்கள்.