ரோமன் கத்தோலிக்க சபையிலே, மக்கள் தங்கள் பாவங்களை பாதிரியாரிடம் அறிக்கை செய்யும் பழக்கத்தை கொண்டிருக்கின்றனர். சில சீர்திருத்த சபைகளும் கூட விசுவாசிகள் பாவத்தை மேற்கொள்ளும்படியாக, அவர்கள் தங்களுக்கு ஒரு “உத்தரவாதமுள்ள கூட்டாளியை” கொண்டிருக்கவும், அவரோடு தங்கள் பாவங்களை தவறாமல் அறிக்கையிடும்படியாகவும் போதிக்கிறார்கள். இத்தகைய போதனையானது புதிய ஏற்பாட்டில் எங்கும் காணப்படவில்லை. அது மனோதத்துவத்தின் போதனையேயல்லாமல் பரிசுத்த ஆவியின் போதனையல்ல. ஆனாலும் பல விசுவாசிகள், இந்த தவறான போதனையை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொண்டு அதைப் பின்பற்றுகிறார்கள்.
வேதாகமத்தில் இந்த உத்தரவாதமுள்ள கூட்டாளியைப் பற்றி எங்கும் கூறப்படவில்லை. உண்மையில் இந்த வழியில் நாம் பாவத்தை தவிர்ப்பதென்பது மனிதருக்கு பயப்படும் பயத்தினிமித்தம் நாம் நாடுகிற பரிசுத்தமேயாகும் - இந்த “உத்தரவாதமுள்ள கூட்டாளியிடம்” நம் பாவத்தை ஒத்துக்கொள்ளவேண்டிய அவமானத்தின் நிமித்தமாக நாம் பாவத்தை தவிர்க்கிறோம். ஆனால் வேதமோ நாம் மனுஷருக்கு பயப்படும் பயத்தினால் அல்ல - தேவபயத்தோடு பரிசுத்தமாகுதலை பூரணப்படுத்தும்படி கட்டளையிடுகிறது (2கொரிந்தியர் 7:1). நாம் தேவனுக்கே கணக்கு ஒப்புவிக்க வேண்டும் - “அவர் ஒருவருக்கு மாத்திரமே நாம் அதை செய்ய வேண்டும்” (எபிரெயர் 4:13).
நாம் நம்முடைய பாவங்களை கர்த்தரிடத்தில் மட்டுமே அறிக்கையிட வேண்டும். “நீங்கள் உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிடுங்கள்” என்ற யாக்கோபு 5:16 இல் உள்ள கட்டளையானது பெரும்பாலும் அதன் சூழலுக்கு மாறாக பயன்படுத்தப்படுகிறது. அந்த வசனத்தின் சரியான பின்னணியில், சபை மூப்பர்களால் ஜெபிக்கப்படும் ஒரு நோய்வாய்ப்பட்ட விசுவாசியைத்தான் அது குறிப்பிடுகிறது என்பது தெளிவாய் இருக்கிறது. ஏனெனில், நோயானது சில சமயங்களில் பாவத்தினால் ஏற்படுகிறது (யோவான் 5:14 இல் நாம் காண்பது போல), நோயுற்ற நபர் தன் பாவங்களை அறிக்கையிடும்படியாக கூறப்படுகிறார் (அது அவரது நோய்க்குக் காரணமாய் இருந்திருக்கலாம்) “அவர் குணமடையும்படியாக” அதை செய்ய வேண்டியிருந்தது. அது விசுவாசிகள் தங்கள் சகவிசுவாசிகளோடு தங்கள் பாவங்களை அறிக்கையிட வேண்டும் என்று போதிக்கவில்லை. எந்த வசனமும் அதன் பின்னணிக்கு மாறாக எடுத்து பயன்படுத்துவதென்பது மிகவும் ஆபத்தானது. தவறான பின்னணியிலிருந்து எடுக்கப்படும் ஒரு வசனமானது தவறான போதனையை நியாயப்படுத்துவதாய் மாறிவிடுகிறது. எனவே நீங்கள் எல்லா வசனங்களையும் அதன் சரியான பின்னணியிலிருந்து கற்று, பின் வேதத்தில் உள்ள அதே தலைப்பிலான மற்ற வசனங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்படி கவனமாயிருங்கள்.
ஒரு மனிதனிடம் நாம் அறிக்கை செய்ய வேண்டிய ஒரே பாவம் அவருக்கு எதிராக நாம் செய்த பாவம் மட்டுமே - உதாரணமாக, நாம் அவரை ஏமாற்றி இருந்தாலோ அல்லது ஏதோ ஒரு வழியில் அவரை புண்படுத்தி இருந்தாலோ, அல்லது இதுபோன்ற வேறெதுவுமோ, அந்த நபருக்கெதிராக செய்த பாவத்தை அந்த நபரிடம் அறிக்கை செய்யவேண்டும். (மத்தேயு 5:23,24) இதை எப்பொழுதும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
நாம் ஒரு போதும் நமது கடந்த கால பாவங்களைக் குறித்து ஒருவரிடமும், விவரித்துப் பேசுதல் கூடாது. ஏனென்றால் அது சாத்தானை மகிமைப்படுத்துகிறது (நம்மை அப்பாவங்களை செய்ய வைத்தவன் அவன் தான்). மேலும் நமது அறிக்கையை கேட்பவரின் மனதையும் அது கறைபடுத்துகிறது. இப்பொழுது நாம் கிறிஸ்துவின் இரத்தத்தாலே கழுவப்பட்டும் நீதிமான்களாக்கப்பட்டும் இருக்கிறோம் (நான் ஒரு போதும் பாவமே செய்யாதது போல இப்போது தேவன் என்னைப் பார்க்கிறார்) என்பதை அறிக்கை செய்வதினாலே தேவனை மகிமைப்படுத்துகின்றோம். இதை உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். நிச்சயமாக நாம் தேவனுடைய கிருபையினாலே மீட்கப்பட்ட பாவிகள் என்பதை எப்போதும் ஒத்துக்கொள்ளவேண்டும். ஆனால் நம் பாவங்களை குறித்த முழு விவரங்களையும் தேவனைத் தவிர வேறு யாரிடமும் அறிக்கை செய்தல் கூடாது. இதுவே புதிய உடன்படிக்கையின் வழி.
எல்லா விசுவாசிகளும் தங்கள் சாட்சியை பகிர்ந்து கொள்ளும்போது, எப்போதும் தேவன் தங்களுக்குள் செய்த கிரியைகளுக்காக அவரை மகிமைப்படுத்த வேண்டும் (நன்மையான காரியங்களை மட்டும்), மேலும் அவர்களது இரட்சிக்கப்படாத கடந்த கால வாழ்க்கையிலே சாத்தான் அவர்களை என்னவெல்லாம் செய்ய வைத்தான் என்ற விவரங்களை குறிப்பிடுவதன் மூலம் சாத்தானை மகிமைப்படுத்த வேண்டாம். நாங்கள் பாவிகளாய் - பின்மாற்றகாரராய் அல்லது முரட்டாட்டமாய் இருந்தோம் என்று சொன்னால் அதுவே போதுமானது.
பேதுரு தன் நிருபங்களிலே மருரூபமலையின் அனுபவத்தை குறித்து பேசினாரேயொழிய தான் கர்த்தரை மறுதலித்ததை குறித்து பேசவில்லை என்பதை நான் கண்டபோது தனிப்பட்ட முறையில் உற்சாகப்படுத்தபட்டேன் (2பேதுரு 1:17,18). அதேபோல, பவுலும் தன் சாட்சியை யூதர்களிடமும் (அப்போஸ்தலர் 22) மற்றும் அகிரிப்பாவிடம் (அப்போஸ்தலர் 26) கூறும்போது தேவன் தன்னை எவ்வாறு சந்தித்தார் என்பதை விரிவாகவும் தான் கிறிஸ்தவர்களை துன்புறுத்தினதை குறித்து மிக சுருக்கமாகவும் கூறுகிறார். குறிப்பிட்ட பாவங்களை அறிக்கையிடுவதென்பதை ஒரு ரோமன் கத்தோலிக்க அல்லது புறஜாதிகளின் யோசனையாகவே நான் காண்கிறேன், துரதிஷ்டவசமாக இப்போதெல்லாம் சில சீர்திருத்த சபையின் எழுத்தாளர்கள் கூட இதை ஊக்குவிக்கின்றனர். “இப்படிப்பட்ட போதனைகள் சுய இஷ்டமான ஆராதனையையும், மாயமான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும்பற்றி ஞானமென்கிற பேர்கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பேணுகிறதற்கே ஒழிய மற்றொன்றிற்கும் பிரயோஜனப்படாது” (கொலோசெயர் 2:23). சரீர ஒடுக்கம் என்பது தாழ்மையல்ல - அது ஞானமும் அல்ல. ஞானமே நமது மிகப்பெரிய தேவை.