WFTW Body: 

பழைய உடன்படிக்கையின் அநேக 'சடங்காச்சாரங்கள்' புதிய உடன்படிக்கையில் ஒரு நிறைவேறுதலைக் கொண்டிருக்கின்றன. 'விருத்தசேதனம்' என்பது பழைய உடன்படிக்கையின் கீழ் ஒரு முக்கியமான சடங்காச்சாரமாயிருந்தது! மெய்யாகவே, இதுபோன்றதொரு முக்கியமான சடங்காச்சார நிகழ்ச்சி புதிய உடன்படிக்கையில் மிக ஆழமான ஆவிக்குரிய அர்த்தம் கொண்டதாயிருக்க வேண்டும் - அவ்வாறே அது இருக்கிறது.

இதனுடைய அர்த்தத்தை பிலிப்பியர் 3:3,4 வசனங்களில், “மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல், தேவனுடைய ஆவியினாலே அவருக்கு ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்" என வாசிக்கிறோம். இந்த மூன்று வாக்கியங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாகும். ஆவியில் ஆராதனைசெய்வதென்பது, கிறிஸ்துவில் மாத்திரமே மேன்மைபாராட்டுகிறதாயும், நம் மாம்சத்தின்மேல் நம்பிக்கை வைத்திடாமல் ஜீவிக்கும் ஜீவியத்தின்மூலம் வெளிப்படுகிறதாயும் இருக்கிறது.

சரீரப்பிரகாரமாக விருத்தசேதனம் செய்துகொண்டபோது ஜனங்கள் தங்கள் சரீரப்பிரகாரமான மாம்சத்தின் ஒரு பகுதியை வெட்டியெறிந்து விடுவார்கள். ஆவிக்குரிய விருத்தசேதனத்தில், நம் சுயஜீவியமாகிய ‘மாம்சத்தின் மீது கொண்ட நமது நம்பிக்கையை' வெட்டியெறிந்து, அதை மரணத்திற்கு உட்படுத்துகிறோம். பழைய ஏற்பாட்டில், விருத்தசேதனம் செய்திடாதவர்கள், இஸ்ரவேலின் ஒரு பங்காய் இருந்திட இயலாது (ஆதியாகமம் 17:14). புதிய ஏற்பாட்டில், 'தன்மீது நம்பிக்கை கொண்ட எவரும்' இயேசு கிறிஸ்துவின் மெய்யான சபையில் ஒரு பங்காய் இருந்திட இயலாது. கிறிஸ்துவில் மட்டுமே மேன்மைபாராட்டி, தங்கள்மீது நம்பிக்கை கொண்டிராதவர்கள் மாத்திரமே மெய்யான சபையின் ஒரு பங்காயிருக்கிறார்கள். மற்றவர்கள் கட்டியிருப்பதைவிட நம் சபையை நாம் மேன்மையாய்க் கட்டியிருக்கிறோம் என்பதைக்குறித்து நாம் மேன்மைபாராட்டினால், அவருடைய மெய்யான சபையில் தேவன் நமக்கு இடமளிக்கவே மாட்டார்.

தங்கள் கையின் கிரியைகளில் மேன்மைபாராட்டிய” ஜனங்களைக் குறித்து அப்போஸ்தலர் 7:41 கூறுகிறது. நாம் சாதித்திருப்பவைகளைக் குறித்து நாம் மேன்மைபாராட்டினால், ஆவிக்குரிய விதத்தில் நாம் விருத்தசேதனமடையாதவர்களாய் இருக்கிறோம். ஏதாவதொன்றை நீங்களாகவே சாதித்துவிட்டதாக உணருவீர்களானால், உங்கள் விசுவாசம் தோற்றுப்போய் விட்டது. பின்பு தேவன், உங்கள் மீது கொண்ட அன்பினிமித்தம், அவரையே முழுமையாக சார்ந்திருப்பது தான் மெய்யான விசுவாசம் என்பதை உங்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்காக, “இராமுழுவதும் மீன்பிடிக்கச் சென்றும், ஒன்றும் பிடிக்கவில்லை” (யோவான் 21:3) என்ற நிலைக்கு உங்களை அனுமதிப்பார்.

ஒரு நாள் நேபுகாத்நேச்சார் தன் அரண்மனையின் உப்பரிகையில் நின்று கொண்டு, தான் கட்டின மகா இராஜ்ஜியமாகிய பாபிலோனைக்குறித்து மேன்மைபாராட்டினான் (தானியேல் 4:29,30). அவ்வாறு அவன் எண்ணியவுடன், தேவன் அவனுடைய இராஜ்ஜியத்தை அவனிடமிருந்து அகற்றி, அவனை ஒரு மிருகத்தைப்போல மாற்றிவிட்டார். சொஸ்த புத்திக்கு அவன் திரும்பிவர அவனுக்குப் பல வருடங்கள் ஆனது. அதுபோலவே, அநேக விசுவாசிகள் 'தாங்கள் தேவனுக்கென்று சாதித்தவைகளை' எண்ணி தங்களுக்குள் இரகசியமாக மேன்மைபாராட்டுகிறார்கள். ஆனால் நேபுகாத்நேச்சார், கடைசியில் தன் மதியீனத்திலிருந்து மனந்திரும்பி தேவனை மகிமைப்படுத்தினான் (தானியேல் 4:34-36). முடிவில், அவன் தன் இருதயத்தில் விருத்தசேதனம் பெற்றான். மிக வருத்தமான காரியம் என்னவென்றால், அநேக கிறிஸ்தவத் தலைவர்கள், இன்னமும் தாங்கள் “ஆவிக்குரிய விருத்தசேதனத்தை” அனுபவிக்காமலே இருக்கிறார்கள்.

நம் முழு இருதயத்தோடும் அவரிடத்தில் அன்புகூரும்படிக்கு, நம் இருதயத்தில் நாம் விருத்தசேதனம் அடைந்திடவேண்டும் என்று தேவன் விரும்புகிறார் (உபாகமம் 30:6). அதுவே இருதய விருத்தசேதனத்தின் அடையாளம். நம்மை நாமே நேசிக்கிறவர்களாயும் நம்மில் நாமே மேன்மைபாராட்டுகிறவர்களாயுமிருந்தால் நாம் விருத்தசேதனமடையாதவர்களே.