எழுதியவர் :   சகரியா பூணன் வகைகள் :   திருச்சபை
WFTW Body: 

"கிறிஸ்து சபையில் அன்புகூர்ந்து அதற்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்" (எபே 5:25). சபையைக் கட்டுவதற்காக நாமும் இது போலவே சபையை நேசிக்க வேண்டும். நாம் நம்முடைய பணத்தையும், காலத்தையும் கொடுத்தால் மாத்திரம் போதாது. நாம், நம்மையே, அதாவது நம்முடைய சொந்த ஜீவனையே ஒப்புக்கொடுக்க வேண்டும்.

தேவனானவர் தாம் மனிதன் மீது கொண்டுள்ள தம்முடைய அன்பை அவனுக்கு விவரித்துக் காண்பிக்க விரும்பிய போது, அவரால் இப்பூமியில் ஒரேயோர் உதாரணத்தை மட்டுந்தான் ஒப்பிட்டுக் காட்ட முடிந்தது; ஒரு தாயானவள் புதிதாகப் பிறந்த தன்னுடைய சேயின் மீது செலுத்தும் அன்புதான் அந்த உதாரணமாகும் (பார்க்கவும். ஏசா 49:15). நீங்கள் ஒரு தாயை உற்றுக் கவனித்தால், அவள் தன் குழந்தையின் மேல் பொழியும் அன்பில், தியாகத்தின் ஆவி நிறைந்திருப்பதைக் காண்பீர்கள். காலை முதல் இரவு வரையும், பின்பு இரவு முழுவதையும், ஒரு தாயானவள் தனது குழந்தைக்காகத் தியாகம் செய்து, தியாகம் செய்து, தியாகம் செய்தவாறே கழிக்கிறாள். அதற்குக் கைம்மாறாக அவள் ஒன்றையும் பெற்றுக் கொள்வதில்லை. அவள் வருடத்திற்கு வருடம், தன்னுடைய குழந்தைக்காக, எவ்வித பிரதி பலனையும் எதிர்பாராமல், எல்லாவித வேதனைகளையும், அசௌகரியங்களையும் மகிழ்வுடன் தாங்கிக்கொள்கிறாள். இப்படித்தான் தேவன் நம்மையும் நேசிக்கிறார்.

பெருவாரியான விசுவாசிகள், தங்களுடன் ஒத்துப் போகிறவர்களையும், தங்கள் குழுவுடன் இணைந்து கொள்ளுகிறவர்களையும் மாத்திரமே நேசிக்க அறிந்துள்ளனர். அவர்களுடைய அன்பானது மனுஷீகமானதாகும். இந்த அன்பானது தியாகம் நிறைந்த தாய்மார்களின் அன்பிற்கு வெகு தொலைவிற்கு அப்பால் உள்ள ஒன்றாகவே இருக்கின்றது! இருப்பினும், தெய்வீக அன்பை இலக்காக வைத்துத்தான், நாம் நம்முடைய போராட்டத்தைத் தொடர வேண்டும்.

ஒரு தாய் தன்னைச் சுற்றியுள்ளவர்கள், தன் குழந்தைக்காக ஏதாவது தியாகம் செய்வார்களா, மாட்டார்களா என்பதைக் குறித்தெல்லாம் அக்கறைப்படுவதில்லை. அவள் தானாக முன்வந்து, மனமுவந்து எல்லாவற்றையும் தியாகம் செய்கின்றாள். இந்த விதமாகவே, சபையை தன்னுடைய சொந்தக் குழந்தையாகக் கண்டுவிட்ட ஒருவன், சுற்றியுள்ளவர்கள் சபைக்காக ஏதாவது செய்வார்களா, இல்லையா என்பதைப் பற்றிச் சற்றும் கவலைப்படுவதில்லை. அவன் தன்னையே மகிழ்வுடன் தியாகம் செய்கின்றான். யாருக்கு எதிராகவும் அவனிடத்தில் குறையோ, எதிர்பார்ப்போ இருப்பதில்லை.

மற்றவர்கள் சபைக்காக எந்தத் தியாகத்தையும் செய்வதில்லை என்று குறை சொல்லுகிறவர்களெல்லாம் தாய்மார்களாக இராமல், கூலிக்கு அமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு ஒப்பாகவே இருக்கிறார்கள். இப்படிப்பட்ட செவிலியர்களெல்லாம், தங்களுக்கான வேலை நேரத்தை வகுத்துக் கொண்டவர்கள். அடுத்த 8 மணிநேர ஷிஃப்டுக்கு வர வேண்டியவர் குறிப்பிட்ட நேரத்திற்கு வராவிட்டால், அதற்காக முறையிடுவார்கள். ஆனால் ஒரு தாயோ 8 மணி நேர ஷிஃப்டு போட்டு வேலை செய்வதில்லை. அவள் 24 மணி நேர ஷிஃப்டு என்ற அடிப்படையில் தினந்தோறும் பணி செய்கிறாள். அவள் வருடந்தோறும் இது போலவே வேலை செய்தாலும், அதற்காகச் சம்பளம் எதையும் பெற்றுக் கொள்வதில்லை. பிள்ளைக்கு 20 ஆண்டுகள் பூர்த்தியான பின்பும், தாயின் பணியானது நிறைவடைவதில்லை.

தாய்மார்களுக்கு மட்டுந்தான் குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கின்றது. தாங்கள் கவனித்துக் கொள்ளுகிற குழந்தைகளுக்கானப் பாலைத் தாதிமார்களால் உற்பத்தி செய்ய இயலாது. அதைப் போலவே, சபையிலே தாயைப் போலுள்ளவர்களுக்கு, தங்களுடைய ஆவிக்குரிய பிள்ளைகளுக்குக் கொடுப்பதற்கென்று ஒவ்வொரு கூட்டத்திலும் வழக்கமாக வார்த்தை இருக்கும். அநேக மூப்பர்கள் தாயாக இல்லாமல் தாதியாக இருப்பதினால், சபைக்கான வார்த்தை அவர்களிடத்தில் இருப்பதில்லை.

ஒரு தாய் தன்னுடைய பிள்ளையிடமிருந்து சம்பளம் பெற்றுக் கொள்வதில்லை. எந்த ஒரு பிள்ளையும் தன்னுடைய தாய் ஆற்றும் சேவைக்காக பணம் கொடுப்பதுமில்லை. உண்மையில், நீங்கள் ஒரு தாயிற்குச் செலுத்தப்பட வேண்டிய சம்பளத்தைக் கணக்கிடுவீர்களானால், அது செவிலியர்களுக்கு வழங்கப்படுவதைப் போல், மணிக்கு ரூ.200/- வீதம் கணக்கிடப்பட்டால், அப்பிள்ளை வளர்ந்து 20 ஆண்டுகளானவுடன், அத்தொகையானது ரூ. 30 மில்லியனைத் தொட்டுவிடும். எந்தக் குழந்தையால் இவ்வளவு பெரிய தொகையைத் திரும்பச் செலுத்தித் தீர்க்க முடியும்?

இப்பொழுது நமக்கு முன்பாக வைக்கப்படும் கேள்வி இதுதான்: இதைப் போலவே கர்த்தருக்கென்றும், அவருடைய சபைக்கென்றும் பாடுபட விருப்பம் உடையவர் யார்? எவ்விதக் கட்டணத்தையும் வசூலிக்காமல், நாளுக்கு நாள், வருடத்திற்கு வருடம் இயேசு வரும்வரை, தன்னையே ஒப்புக் கொடுப்பவர் யார்?

இப்படிப்பட்ட ஒரு நபரையாவது தேவன் எங்காவது காண்பாராகில், அவனைச் சபை கட்டுவதற்கு அவர் பயன்படுத்திக் கொள்வார். தியாக ஆவி இல்லாத, அரை இருதயங்கொண்ட 10000 விசுவாசிகளைப் பயன்படுத்துவதைக் காட்டிலும் அவர் அவனைப் பயன்படுத்துவார்.