WFTW Body: 

நாம் பிதாவினுடைய சமூகத்தில் பிரவேசித்து அவருடைய சமூகத்தில் எப்போதும் தங்கியிருக்கும்படியாய், இயேசு நமக்காக ஒரு பாதையைத் திறந்தார். நாம் செல்லவேண்டிய அந்தப்பாதையில் இயேசுவே முதலாவது ஓடி பிரவேசித்தபடியால், அவர் நமக்கு முன்னோடியானவர்'' என பெயர் சூட்டப்பட்டார்! இவ்வாறு அவர் திறந்துவைத்த பாதை அல்லது மார்க்கத்தை "புதிதும் ஜீவனுமான மார்க்கம்'' என வேதம் அழைக்கிறது (எபிரேயர் 10:20). இயேசுவைப் பின்பற்றிச் செல்லும் இந்த வாழ்க்கையை பவுல் குறிப்பிடும்போது, “இயேசுவின் மரணத்தை எப்போதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம்" (2கொரிந்தியர் 4:16) என கூறினார். மேலும் “நான் கிறிஸ்துவுடனே கூட சிலுவையில் அறையப்பட்டேன். இனி ஜீவிப்பது நான் அல்ல!" என்ற ஆச்சரியமான வாசகம் பவுலின் சொந்த சாட்சியாக இருக்கிறது. அதாவது "தானும் கல்வாரியில் கிறிஸ்துவுடன் மரித்தபடியால், இப்போது கிறிஸ்துவே அவருக்குள் பிழைத்திருக்கிறார்'' என்பதே அவருடைய வலிமையான சாட்சியாகும். இதுவே, பவுலினுடைய வியக்கத்தகு வாழ்க்கைக்கும், தேவன் அவரை வலிமையாக பயன்படுத்தியதற்கும் உரிய ரகசியமாய் இருக்கிறது.

இப்பூமியில் இயேசு சிலுவையின் பாதையில் அதாவது சுயத்திற்கு மரிக்கும் பாதையில்தான் எப்போதும் நடந்தார். அவர் ஒரு சமயத்தில் கூட தனக்குப் பிரியமாய் நடக்கவேயில்லை (ரோமர் 15:3). நாம் நமக்கே பிரியமாய் நடப்பதுதான் எல்லா பாவத்திற்கும் அடிப்படையான காரணமாகும்! அதேபோல, ஒருவன் தன்னைத்தானே வெறுக்கும்” வாழ்க்கையே பரிசுத்தத்தின் அடித்தளமாயும் இருக்கிறது. ஒருவன் அனுதினமும் தன்னைத்தானே வெறுத்து, அனுதினமும் தனக்குத்தானே மரிக்காவிட்டால், அவன் இயேசுவை ஒருக்காலும் பின்பற்றிவர முடியாது என லூக்கா 9:23-ல் இயேசு தாமே கூறினார். நாம் கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டவர்களாயும், பரிசுத்தாவியைப் பெற்றவர்களாயும், வேத வாக்கியத்தில் ஆழ்ந்த அறிவுகொண்டவர்களாயும் இருக்கலாம். ஆனால், நாம் அனுதினமும் நமக்கு நாமே மரிக்காவிட்டால், ஆண்டவர் இயேசுவைப் பின்பற்றி நடந்திட ஒருக்காலும் முடியாது!

ஒருசமயம், இயேசு இந்த சத்தியத்தைக் குறிப்பிடும்போது, சிலர் பழைய வஸ்திரத்தையே ஒட்டுப்போட்டு வைத்துக்கொள்ள நினைக்கிறார்கள் என்றும், அவ்வாறு செய்தால் அந்த வஸ்திரம் கிழிந்து போகும் என்றும் இயேசு குறிப்பிட்டார். ஆகவே, நாம் செய்யவேண்டியதெல்லாம் இப்போது பழைய வஸ்திரத்தைப் புறக்கணித்துவிட்டு (அதாவது சுய-ஜீவியத்திற்கு மரித்து விட்டு) புதிய வஸ்திரத்தைப் பெற்றுக்கொள்வதே ஆகும்! இதை மேலும் குறிப்பிட்டு, இன்னொரு உவமையில் இயேசு கூறும்போது "கனி நல்லதாய் இருக்க விரும்பினால் மரம் நல்லதாய் மாற வேண்டும்" என கூறினார். ஆம், கெட்ட கனிகளை மாத்திரம் வெட்டிப்போடுவது போதாது என்பதே இயேசு நமக்கு கற்பித்த பாடமாகும்!!

இவ்வாறு இயேசு கூறிய உவமானங்கள் அனைத்தும், ஆழமான ஒரு சத்தியத்தையே வலியுறுத்துவதாய் இருக்கிறது. அது என்னவெனில்: பழைய மனிதனை நாம் ஒருக்காலும் சீர்படுத்தவே முடியாது. எனவேதான் அவன் தேவனால் சிலுவையில் அறையப்பட்டான்! (ரோமர் 6:6). இவ்வாறு பழைய மனிதனுக்கு தேவன் வழங்கிய நியாயத்தீர்ப்பை நாம் ஏற்றுக்கொண்டு, இப்போது, அவனை முழுவதுமாய் களைந்து போட்டு புதிய மனிதனை நாம் தரித்துக் கொள்ள வேண்டும்.

சிலுவையின் பாதையே ஆவிக்குரிய வளர்ச்சியின் பாதையாகும். நீங்கள் கோபம், எரிச்சல், பொறுமையின்மை, இச்சையான சிந்தைகள், நேர்மையின்மை, பொறாமை, தீமை செய்தல், கசப்பு, பண ஆசை.. போன்ற பாவங்களை இன்னும் ஜெயிக்கவில்லையோ? அப்படியானால், "நீங்கள் உங்கள் வாழ்வில் சிலுவையின் வழியை புறக்கணித்து விட்டீர்கள்" என்பதே உங்கள் தோல்விக்கு காரணமாகும்!

ஒரு மரித்த மனிதன் தன் நியாயங்களுக்காக வாதாட எழுந்து நிற்கமாட்டான்! அவன் பதிலுக்கு பதில் சண்டை போடவும் மாட்டான்! அவன் தன்னுடைய கௌரவத்தைக் குறித்து அக்கறை கொள்ளவும் மாட்டான்! அவன் பழிவாங்கவும் மாட்டான்! அவன் யாரிடத்திலும் கசந்து கொள்ளவும் மாட்டான்! இதுவே சுயத்திற்கு மரிப்பதன் பொருளாகும். நாம் மெய்யான ஆவிக்குரிய வளர்ச்சியடைய வேண்டுமென்றால், நாம் ஒவ்வொருவரும் சிலுவையின் பாதையில் அனுதினமும் நடந்து வரவேண்டும்!