அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகளிலிருந்து ஆவியினால் நிறைந்த ஊழியத்தைப் பற்றி நான்கு காரியங்களை நான் குறிப்பிட விரும்புகிறேன்.
ஒர் ‘அன்பின் அடிமை’: எல்லாவற்றிற்கும் முதலாவதாக, ஓர் ‘அன்பின் அடிமை’ செய்கிற ஊழியமே ஆவியினால் நிறைந்த ஊழியமாகும். “என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவரும்” என்று அப்போஸ்தலர் 27:23ல் பவுல் கூறுகிறார். தன் தேவனுக்கு ஓர் ‘அன்பின் அடிமையாக’ அவர் இருந்தார். தன் சொந்த ஜீவியத்தில் தனக்கென்று எந்த உரிமையையும் தக்கவைத்துக் கொள்ளவில்லை. அவர் சகலவற்றையும் தனது எஜமானரிடம் ஒப்புக்கொடுத்திருந்தார். அதனால், ஒரு மனிதன் தன்னுடைய முழு ஜீவனையும் தேவனிடம் ஒப்புக்கொடுக்கும்பொழுது, அவன் தேவனுக்குப் பெரிய தயவு ஒன்றும் செய்கிறதில்லை. அவன் தேவனிடத்திலிருந்து எதைத் திருடியிருந்தானோ, அதைத்தான் அவருக்குத் திருப்பிக் கொடுக்கிறான். நான் ஒரு மனிதனுடைய பணத்தைத் திருடியிருந்து, பின்னர் என்னுடைய பாவத்தைக் குறித்து உணர்த்தப்பட்டு, அப்பணத்தை அவனுக்குத் திருப்பிக் கொடுப்பதினால், நிச்சயமாக நான் அந்த மனிதனுக்குத் தயவு செய்கிறதில்லை. நான் ஒரு மனந்திரும்பிய திருடனாக அவனிடத்திற்கு செல்வேன். நம்முடைய ஜீவனை அவரிடம் நாம் ஒப்புக்கொடுக்கும்பொழுதும், அப்படிப்பட்ட நேர்த்தியான மனப்பான்மை கொண்டே நாம் அவரை அணுக வேண்டும். தேவன் நம்மை கிரயத்துக் கொண்டார் என்பதை நாம் உணரும்பொழுது, நம்முடைய அர்ப்பணிப்பின் நேர்த்தியான ஆதாரத்திற்கே வந்தடைகிறோம். தன் எஜமானனை நேசித்தப்படியினால், தன்னுடைய சேவையிலிருந்து ஏழாம் வருஷத்தில் விடுதலை பெற்று போக அனுமதியிருந்தாலும் சேவையில் தொடர விரும்பும் அந்த எபிரேய அடிமையைப் போலவே (யாத்திராகமம் 21:1-6) கர்த்தருடைய ஓர் ‘அன்பின் அடிமையாக’ பவுல் இருந்தார். கூலிக்காக ஊழியஞ்செய்கிறவனாயிராமல், தனக்கென உரிமையேதும் இல்லாத ஒருவனாய் சேவித்தான். தேவனுக்காக என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் விரும்புகிறதை ஓயாமல் செய்துகொண்டிராமல், தாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று தேவன் விரும்புகிறார் என்பதை அறிந்து, அவரையே எப்போதும் நோக்கிப் பார்க்கிறவர்களாய், அவ்வளவாய் தங்களை முற்றிலும் அர்ப்பணிக்கிறவர்களையே தேவன் தேடுகிறார். தான் எதைச் செய்ய விரும்புகிறானோ அதையே செய்துகொண்டு ஒரு அடிமை சுற்றித் திரிய மாட்டான். “எஜமானனே நான் என்ன செய்ய வேண்டும் என்று நீர் விரும்புகிறீர்?” என்று எஜமானனிடம் கேட்டு, அவர் சொல்கிறதையே அடிமை செய்கிறான். தன்னுடைய எஜமான் சொல்கிறதை மாத்திரம் செய்கிறதே ஒரு ஊழியக்காரனைப் பற்றிய மிக முக்கியமான காரியமென்று (1 கொரிந்தியர் 4:2 – Living Bible) வேதம் கூறுகிறது.
சுவிசேஷத்தைக் குறித்த பேரார்வம்: இரண்டாவதாக, மற்றவர்களுக்கு நான் கடனாளியாய் இருக்கிறேன் என்பதை உணர்ந்த ஊழியமே ஆவியினால் நிறைந்த ஊழியமாகும். “கிரேக்கருக்கும் (நாகரீகமுள்ளவர்கள்) மற்ற அந்நியர்களுக்கும் (barbarians - நாகரீகமில்லாதவர்கள்) நான் கடனாளியாயிருக்கிறேன் (ரோமர் 1:14)” என்று பவுல் கூறினார். உலகத்தோடு பகிர்ந்துகொள்ளும்படியாக தேவன் நமக்கு ஒரு பொக்கிஷத்தைக் கொடுத்திருக்கிறார். அநேக ஜனங்களுக்குப் பண-அஞ்சல் (money-orders) வழங்குவதற்காக அதிகப்பணம் ஒப்புவிக்கப்பட்டுள்ள அஞ்சல்-அலுவலக (post-office) ஊழியர்களைப் போல நாம் இருக்கிறோம். ஒவ்வொருவருக்கும் அவனவனுடைய பங்கைக் கொடுத்து தீருமட்டும் அத்தகைய ஊழியன் ஒரு கடனாளியாயிருக்கிறான். அவன் ஆயிரக்கணக்கான ரூபாய்களை வைத்திருந்தாலும் அவற்றில் ஒரு பைசா கூட அவனுடையதல்ல. அவன் அநேகருக்கு கடனாளியாக இருக்கிறான். சுவிசேஷத்தின் செய்தியைத் தேவன் ஒப்புவித்தபோது அப்போஸ்தலனாகிய பவுல் இதே போன்ற கடனை உணர்ந்தார். அது கொடுக்கப்பட வேண்டும் என்பதை அவர் அறிந்திருந்தார். இரட்சிப்பின் செய்தியைக் கொடுத்துத் தீருமட்டும் மற்றவர்களுக்கு கடனாளியாய் இருக்கிறேன் என்றும் அவர் அறிந்திருந்தார். நற்செய்தியைப் பிரசங்கித்து இருபத்தைந்து ஆண்டுகள் கழித்த பின்பும், இன்னும் "நான் கடனாளியாக இருக்கிறேன்" என்று பவுல் கூறுகிறார். தம்முடைய கடனை ரோமாபுரி மக்களுக்குத் தீர்க்க அங்கே வரத் தயாராக இருப்பதாக ரோமாபுரி கிறிஸ்தவர்களிடம் சொல்கிறார். “நான் கடனாளியாயிருக்கிறேன்... நான் இயன்றமட்டும் சுவிசேஷத்தை பிரசங்கிக்க விரும்புகிறேன்... நான் சுவிசேஷத்தைக் குறித்து வெட்கப்படேன்...” என்று மூன்று முறை "நான் இருக்கிறேன் (I am)" என்கிற பதத்தை பவுல் பயன்படுத்துகிறதை ரோமர் 1:14-16 வசனங்களில் கவனியுங்கள். மற்றவர்களுக்கு கடன்பட்டிருப்பதை உணர்ந்து, எப்போதுமே அதைத் தீர்ப்பதற்குத் தயாராய் வெளிநோக்கிச் (outgoing) செல்வதே ஆவியினால் நிறைந்த ஊழியமாகும். சுவிசேஷத்தைக் குறித்த பேரார்வம் கொண்டு, சொந்த திருப்தியை மனதிற்கொள்ளாமல், மற்றவர்களுடையத் தேவைகளைக் குறித்து கரிசனை கொண்டு, தொடர்ச்சியாக வெளிநோக்கிச் செல்வதே ஆவியினால் நிறைந்த ஊழியமாகும். கிறிஸ்துவும் தமது சொந்த திருப்தியை ஒருபோதும் தேடவில்லை (ரோமர் 15:3).
மனிதப் பற்றாக்குறை: மூன்றாவதாக, மனிதப் பற்றாக்குறையை உணர்ந்த ஊழியமே ஆவியினால் நிறைந்த ஊழியமாகும். 2 கொரிந்தியர் 10:1–ல் பவுலின் வார்த்தைகளைக் கவனியுங்கள், “உங்களுக்கு முன்பாக தாழ்மையாய் (அடிமட்டமாய்) இருந்தேன்” அல்லது வேறு வார்த்தைகளில் சொன்னால் “எனக்கு ஈர்க்கக்கூடிய ஆளுமை (personality) இல்லை” என்று பவுல் கூறுகிறார். அப்போஸ்தலனாகிய பவுல் வெறும் 4 அடி 10 அங்குலம் உயரமானவராகவும், வழுக்கையாகவும், கொக்கி போன்ற மூக்கு உடையவராகவும் இருந்தார் என்று பாரம்பரியம் நமக்குச் சொல்லுகிறது. ஒருவேளை அவர் கண் நோயால் பாதிக்கப்பட்டும் இருந்திருப்பார். கண்டிப்பாக அவருக்கு ஒரு “திரைப்பட நட்சத்திரத்தை” போன்ற ஆளுமை இல்லை. எந்த ஒரு மனித காரணிகளையும் (factor) சார்ந்து அவரது ஊழியத்தின் வெற்றி இருக்கவில்லை, ஏனென்றால் அவருடைய தோற்றத்திலோ பேச்சிலோ ஈர்க்கக்கூடியதாக எதுவுமில்லை. “நான் பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடத்தில் இருந்தேன் (1 கொரிந்தியர் 2:3)” என்று தான் பிரசங்கிப்பதைக் குறித்து பவுல் கொரிந்தியர்களுக்கு எழுதுகிறார். அவர் பிரசங்கம் செய்கையில், தம் மூலமாகத் தேவனுடைய வல்லமை கடந்துசெல்கிறது என்று உணர்ந்தவராக இருப்பதைக் காட்டிலும் தம்முடைய பலவீனத்தை உணர்ந்தவராக இருந்தார். இதுவே ஆவியினால் நிறைந்த ஊழியமாகும். அந்நிய கொரிந்துப் பட்டணத்தில் பவுலினுடைய பிரசங்கத்தின் விளைவாக ஒரு சபை நிறுவப்பட்டது என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.
நம்முடைய அழைப்பை நிறைவேற்றுதல்: நான்காவதாக, தேவனுடைய பிரத்யேகமான அழைப்பை நிறைவேற்றும் ஊழியமே ஆவியினால் நிறைந்த ஊழியமாகும். “நான் ஊழியக்காரனானேன் (கொலோசெயர் 1:26)” என்றும் “நான் அப்போஸ்தலனாக நியமிக்கப்பட்டிருக்கிறேன் (1 தீமோத்தேயு 2:7)” என்றும் பவுல் கூறுகிறார். எந்தவொரு மனிதனாலும் நியமிக்கப்படாமல், தன்னுடைய இரட்சகரின் ஆணி பாய்ந்த கரங்களால் பவுல் நியமிக்கப்பட்டிருந்தார். பவுலை ஒரு அப்போஸ்தலனாகத் தேவன் அழைத்திருந்தார். “இந்த அழைப்பு எனக்கு அளிக்கப்பட்டுள்ளது (கொலோசெயர் 1:26)” என்று பவுல் கூறுகிறார். இது தேவனுடைய ஈவு – அவர் சாதித்ததோ சம்பாதித்ததோ அல்ல. “மற்றவர்களுக்கு ஊழியஞ்செய்யும்படியாக இந்த அழைப்பு அவருக்கு அளிக்கப்பட்டது” என்றும் அதே வசனத்தில் பவுல் கூறுகிறார். அது சபையைக் கட்டியெழுப்புவதற்காய் தேவனால் அவருக்கு ஒப்புவிக்கப்பட்ட ஒரு உக்கிராண உத்தியோகமாகும். நம் ஒவ்வொருவருக்கும் தேவன் ஒரு பிரத்யேக அழைப்பை வைத்திருக்கிறார். தேவன் நம்மை அழைத்திராத ஒன்றிற்காக நம்மை மாற்றும்படி அவரிடம் கேட்பது வீணாகும் – ஏனென்றால் நாம் ஒவ்வொருவரும் எந்த வரத்தை பெற்றிருக்க வேண்டும் என்று பரிசுத்த ஆவியானவர் தீர்மானிக்கிறார். பவுல் ஒரு அப்போஸ்தலனாக அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் எல்லோருக்கும் அப்படிப்பட்ட அழைப்பு இல்லை. அவர் நம்மை அழைத்திருக்கிற காரியத்தைச் செய்வதற்குரிய வல்லமைக்காகத் தேவனுடைய முகத்தை நாம் தேட வேண்டியதே அவசியமானதாகும். “நீ கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றும்படி கவனமாயிருப்பாயாக (கொலோசெயர் 4:17)” என்பதே அர்க்கிப்புவுக்கு பவுல் கொடுத்த ஆலோசனையாகும். கிறிஸ்துவின் சரீரத்தில் பல வரங்களைத் தேவன் வைத்திருக்கிறார். நம்முடைய வரத்தையும் நம்முடைய அழைப்பையும் அறிந்துகொண்டு, அந்த வரத்தை உபயோகப்படுத்தி நம்முடைய அழைப்பை நிறைவேற்றுவதே முக்கியமான காரியமாகும். தேவன் நமக்குக் கொடுத்திருக்கிற பிரத்யேகமான அழைப்பை நிறைவேற்றும் ஊழியமே ஆவியினால் நிறைந்த ஊழியமாகும். குறிப்பாக ஒரு வரத்தை நாம் தேட புதிய ஏற்பாடு ஊக்குவிக்குமானால் அது தீர்க்கதரிசன வரமேயாகும் (1 கொரிந்தியர் 14:39). இன்று சபைக்கு மிகவும் தேவையான வரம் ஒருவேளை இதுவாக இருக்கலாம். ஒரு தீர்க்கதரிசன ஊழியமானது பக்திவிருத்தியும் (பலப்படுத்திக் கட்டியெழுப்பும்), புத்தியும் (கடிந்துகொண்டு சவால்களை விடுக்கும்), ஆறுதலும் (உற்சாகமளித்து ஊக்குவிக்கும்) கொடுக்கிற ஊழியமாகும் (1 கொரிந்தியர் 14:3). தேவன் நம்முடைய சபைகளில் நமக்குத் தீர்க்கதரிசிகளைத் தரவேண்டும் என்று நாம் ஜெபிப்பது அவசியமாகும். பயமும் பட்சபாதமும் இல்லாமல் தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பேச வேண்டும். தங்களுடைய ஊதியத்திலோ சமூக அந்தஸ்திலோ பிரபல்யத்திலோ அதிக அக்கறையுள்ள தொழிற்பண்பட்ட (professional) மதசார்ந்த வேதபாரகரைப் போல இல்லாமல் ஒரு வித்தியாசமான பண்புடையவர்களாய் அவர்கள் இருக்க வேண்டும். நம்முடைய அழைப்பு இன்னதென்று தெரிந்துகொள்ளக் கர்த்தருடைய முகத்தை வாஞ்சையோடு தேட அவர் நம் ஒவ்வொருவருக்கும் உதவிசெய்வாராக.