WFTW Body: 

யாத்திராகமம் 17 -ம் அதிகாரத்தில், இஸ்ரவேலர் குடிக்கத் தண்ணீர் இல்லாத இடத்திற்கு வருவதை நாம் காண்கிறோம். சைன் அலை (Sine wave) கீழே சென்று, அவர்கள் மீண்டும் முறுமுறுக்க ஆரம்பிக்கிறார்கள். மறுபடியும் கர்த்தர் அவர்கள் கண்களுக்கு முன்பாக இருந்த தம்முடைய தீர்வைக் காண்பிக்கிறார். கர்த்தர் மோசேயை நோக்கி: “உனக்கு முன்பாக இருக்கும் கன்மலையைப் பார். அந்தக் கன்மலையை அடி” என்றார் (யாத்திராகமம் 17:6). மோசே கன்மலையை அடித்தான், தண்ணீர் ஓடத் தொடங்கியது. நான் இந்தப் பகுதியை முதலில் வாசித்தபோது, ஒரு சிறிய கன்மலையிலிருந்து சொட்டுச் சொட்டாக தண்ணீர் வருவதாகவும், ஒவ்வொருவராக அங்குத் தண்ணீர் குடிப்பதாகவும் யோசித்தேன். ஆனால் வனாந்தரத்திலே எத்தனை பேர் தாகமாயிருந்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? 20 மற்றும் 60 வயதிற்குட்பட்ட ஆண்கள் மாத்திரம் 6,00,000 பேர். இவர்கள் தவிர அநேக முதிர் வயதான ஆண்கள், இளம் வயதான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் இருந்தார்கள். அங்கே குறைந்தபட்சம் 20 லட்சம் பேர் இருந்திருக்கக்கூடும். 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் குடிப்பதற்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படும் என்று நினைக்கிறீர்கள்? சொட்டுச் சொட்டாக வரும் தண்ணீர் போதுமா? அது போதாது. அந்த 20 லட்சம் ஜனங்களெல்லாரும் ஓரளவுக்கு விரைவாகக் குடிக்க வேண்டுமென்றால், அது பல திசைகளிலும் ஓடும் பல நதிகளாக இருந்திருக்க வேண்டும். ஒருவேளை அந்த 20 லட்சம் ஜனங்களும் சொட்டுச் சொட்டாக வரும் தண்ணீரைக் குடிப்பதற்கு வரிசையில் நின்றிருந்தார்களானால், முன் வரிசைக்கு வருவதற்கு முன்பே அவர்களில் அநேகர் தாகத்தால் மரித்துப்போயிருப்பார்கள். அங்கே அப்படி நடக்கவில்லை. அவ்வனாந்தரத்தில் அடிக்கப்பட்ட கன்மலையிலிருந்து பல்வேறு நதிகள் ஓடின. இதை சிலுவையில் அறையப்பட்ட மனிதனிடமிருந்து (“ஓர் அடிக்கப்பட்ட கன்மலை”) ஓடும் ஆவியால் நிறைந்த வாழ்கைக்கு ஒப்பனையாக யோவான் 7:37-39 -ல் இயேசு குறிப்பிடுகிறார்.

இயேசு கல்வாரியிலே அடிக்கப்பட்டபோது, அது பெந்தெகொஸ்தேக்கு வழியை ஆயத்தம் செய்தது. பெந்தெகொஸ்தேக்கு முன்பு எப்போதும் கல்வாரியே. நாம் பரிசுத்த ஆவியானவருக்குள் ஞானஸ்நானம் பெற்றவுடன், ஜீவத் தண்ணீருள்ள நதிகள் உடனடியாக நம்மிடமிருந்து ஓடுவதில்லை. நாம் நேர்மையாக இருந்தால், அதை ஒத்துக்கொள்வோம். சிலுவையில் அறையப்படுகிறதும் அல்லது அடிக்கப்படுகிறதுமான ஒரு கிரியையை கர்த்தர் நமக்குள் செய்து, நம்மை நொறுக்கின பிறகுதான், மற்றவர்களை ஆசீர்வதிக்கும்படியாக நம்முடைய உள்ளத்திலிருந்து ஜீவத் தண்ணீருள்ள நதிகள் ஓடத் தொடங்கும். பூமியிலுள்ள லட்சக்கணக்கான ஜனங்களுக்கு ஆசீர்வாதமாக மாற்ற, உங்களையும் என்னையும் போன்ற சாதாரணமான, ஒன்றுக்குமே பிரயோஜனமில்லாத, பலவீனமான, புத்தியில்லாத ஜனங்களைத் தேவன் தேடுகிறார். ஆனால் இவையெல்லாம், கர்த்தர் நம்மை அடித்து நொறுக்க நாம் அனுமதிக்கிறோமா, இல்லையா என்பதைப் பொறுத்துள்ளது.

நதிகள் ஓடத் தொடங்கியவுடன், 8 -ம் வசனத்தில் உடனடியாக அமலேக்கியர் வந்தனர் என்று வாசிக்கிறோம். பழைய ஏற்பாடு முழுவதும், அமலேக்கியரை நம்முடைய மாம்சத்திற்கு ஒப்பிடலாம். ஆவியும் மாம்சமும் ஒன்றுக்கொன்று எப்பொழுதுமே போர் செய்கிறது. நதிகள் ஓடத் தொடங்கியவுடனே, தேவனுடைய மக்களுக்கு எதிராக அமலேக்கியர் போரிட்டனர். இயேசு பரிசுத்த ஆவியானவரால் அபிஷேகம் பண்ணப்பட்டவுடனே, சாத்தான் அவரைச் சோதிக்க வந்தான். (லூக்கா 3:22; லூக். 4:1,2). மோசேயும் யோசுவாவும் ஒன்றாகச் சேர்ந்து செயல்பட்டபடியால், கடைசியாக அமலேக்கியர் தோற்கடிக்கப்பட்டனர். மோசே மலை உச்சியில் தன் கைகளை உயர்த்தி ஜெபித்துக் கொண்டிருக்க, யோசுவா பள்ளத்தாக்கில் அமலேக்கியரோடு யுத்தம்பண்ணினான். இவ்விரண்டும் இணைந்தே மாம்சத்தை ஜெயங்கொள்ள நமக்கு உதவும் - ஆவியின் பட்டயத்தை (தேவ வசனம்) சத்துருவுக்கு எதிராக நேரடியாக உபயோகப்படுத்துவதும் (இயேசு வனாந்தரத்தில் உபயோகப்படுத்தியது போல), நம்முடைய (பலவீனங்களையும், உதவியற்ற நிலைமையையும் கண்டுணர்ந்து) கைகளைத் தேவனை நோக்கி உயர்த்தி ஜெபம்பண்ணுவதுமாகும்.

மோசேயின் கைகள் சோர்ந்துபோனபிறகு, ஆரோனும் ஊரும் அவன் கைகளைத் தாங்கினார்கள் (யாத்திராகமம் 17:12). நாம் பலவீனமாகவும் சோர்வாகவும் இருக்கும்போது, நமக்கு உதவிசெய்ய ஆரோன்களும் ஊர்களும் தேவை. என்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கையில் நான் கண்ட மிகப்பெரிய சத்தியங்களில் ஒன்று இது: “நான் தனியாக ஜெயங்கொள்ள முடியாது. கிறிஸ்துவின் சரீரத்திலுள்ள சக விசுவாசிகள் எனக்குத் தேவை.” பல ஆண்டுகளுக்கு முன்பாக வழியில் விழாமல் நான் இன்று இங்கே நின்று கொண்டிருக்கிறதற்கும், என் நம்பிக்கைகளை விட்டுக்கொடுத்து ஒத்தவேஷம் தறியாமல் இருப்பதற்கும், எனக்குத் தொடர்ச்சியாக உக்கமளித்து ஜெபித்து புத்திசொல்லிய சகோதர சகோதரிகள் ஒரு காரணமாகும். அநேக வருடங்களாக என் கைகளைத் தாங்கின பல ஆரோன்களும் ஊர்களும் எனக்கு உண்டு. நான் அவர்களை அதிகமாக மதிக்கக் கற்று கொண்டேன். ஆரோனும் ஊரும் மோசேயைப் போல வரம் பெற்றவர்களாயும், மோசே தேவனை அறிந்த விதத்தில் அறிந்தவர்களாயும் இல்லை. ஆனாலும் மோசேக்கு அவர்கள் தேவைப்பட்டார்கள். ஆரோனாவது ஒரு தலைவராக இருந்தார். ஆனால் ஊர் என்பவர் வேதாகமத்தில் மறுபடியும் ஒருபோதும் தோன்றாத அறியப்படாத ஒரு நபர். ஆனால் மிகப்பெரிய தேவனுடைய மனிதரான மோசேக்கு இந்த அறியப்படாத மனிதனின் உதவி தேவைப்பட்டது. கிறிஸ்துவின் சரீரத்தில் பலவீனமான அறியப்படாத சகோதரர்களை ஒருபோதும் அசட்டைப்பண்ணாதீர்கள். நீங்கள் உலகிலே மிகப்பெரிய தேவனுடைய மனிதராக இருந்தாலும்கூட உங்களுக்கு அவர்கள் தேவை. இயேசுவும்கூட கெத்செமனேயில் தம்முடைய கைகளைத் தாங்குமாறு தடுமாறுகிற பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரை கேட்டுக் கொண்டார். தலையானது (கிறிஸ்து) கால்களை (சரீரத்தின் தாழ்வான அவயவயங்கள்) நோக்கி: நீங்கள் எனக்கு வேண்டுவதில்லையென்று சொல்லுவதில்லை (1கொரிந்தியர் 12:21).