ஒரு தம்பதியினர் சேர்ந்து ஒரு வீட்டைக் கட்ட முற்படும்போது, அவர்கள் ஒவ்வொரு செங்கல்லாக வைத்துக் கட்டுகிறார்கள். இது சரீர ரீதியாகவும், ஆவிக்குரிய ரீதியாகவும் உண்மையாயிருக்கிறது. நாம் பயன்படுத்தும் ஆவிக்குரிய “செங்கற்கள்” என்ன?
ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும் எண்ணங்களையும், ஒருவருக்கொருவர் பேசும் வார்த்தைகளையும் குடும்பமாகிய வீட்டைக் கட்டுவதற்குப் பயன்படும் செங்கற்களுக்கு ஒப்பிடலாம். உங்கள் குடும்பத்தை நீங்கள் எத்தகைய செங்கற்களால் கட்டினீர்கள் என்பது உங்களுக்குத் தான் தெரியும். பல தம்பதியர் பயன்படுத்தும் செங்கற்களின் தரத்தை வைத்துப் பார்க்கும்போது, அவர்களுடைய குடும்பங்கள் சிதைவதில் எவ்வித ஆச்சரியமுமில்லை.
இவ்வுலகத்தில் வீடு கட்டுகிறவர்கள், அது நீடித்து நிலைக்கவேண்டும் என்பதற்காக தரமான, பரிசோதிக்கப்பட்ட செங்கற்களையே பயன்படுத்துகிறார்கள். ஆனால், இவ்வுலகின் வீடுகள் நித்தியமானவை அல்ல — அவை ஒருநாள் அழிந்துபோகும். நாம் உண்மையில் கவனம் செலுத்த வேண்டிய வீடு என்பது, நம் வாழ்க்கைத் துணையோடு நாம் நித்தியத்திற்காகக் கட்டும் உறவாகும். ஆகவே, உங்கள் உறவில் நீங்கள் கொள்ளும் எண்ணங்களையும் பேசும் வார்த்தைகளையும் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். அவை ஒருவருக்கொருவர் தூய்மையும் நன்மையும் நிறைந்தவையாக இருக்கட்டும்.
எபிரெயர் 12:15 கசப்பின் வேரைக் குறித்து எச்சரிக்கிறது. நம் வாழ்க்கைத் துணையின்மீது இந்தக் கசப்பு நம் இருதயத்தில் உருவாக முடியும். கொலோசெயர் 3:19-இல் வேதம் புருஷர்களை தங்கள் மனைவிகளிடம் கசந்துகொள்ளாதிருக்கும்படி கட்டளையிடுகிறது. கசப்பு போன்ற இருதயத்தின் எண்ணங்களும் மனோபாவங்களும் மரணத்துக்குட்படுத்தப்பட்ட வேண்டும். நம் சிந்தை வாழ்க்கையில் இரத்தத்தின் முத்திரை இருக்க வேண்டும் — நாம் மரிக்கும் சிலுவையே அந்த முத்திரை. அன்பற்ற சிந்தைகளுக்கும், சுயநலமான சிந்தைகளுக்கும், பிரிவினை உண்டாக்கும் சிந்தைகளுக்கும் நான் மரிக்க வேண்டும். பிசாசு எப்போதும் உங்கள் அருகிலேயே நின்று, தன்னுடைய செங்கற்களை உங்கள் கைகளில் தர ஆயத்தமாயிருக்கிறான் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். அவைகளைக் கொண்டு நீங்கள் உங்கள் வீட்டைக் கட்டுவீர்கள் என்று நம்புகிறான். திருமணமானவர்களாகிய நம்மில் பலருக்கும் நம் வாழ்க்கைத் துணையின்மீது கடினமான, சுயநலமான, கசப்பான, சந்தேகமான சிந்தைகள் எழும்புவதற்கான சோதனைகள் வரும் என்பது தெரியும். நம்மை ஒரு சுயநல நோக்கோடு வாழச் செய்வதற்காக, பிசாசு சுயநலத்தின் செங்கற்களை நம்மிடம் கொண்டுவருகிறான். நம் வாழ்க்கைத் துணையின் மீதான சந்தேகத்தின் செங்கற்களையும் அவன் கொண்டுவருகிறான். சந்தேக எண்ணங்களுக்கு மரித்து, நம்புவதற்குக் கற்றுக்கொள்ளுங்கள். சந்தேக எண்ணங்களே பிசாசு கொண்டுவரும் மிக மோசமான செங்கற்கள்.
இதைப்போலவே, நாம் ஒருவருக்கொருவர் பேசும் வார்த்தைகளும் குடும்பத்தைக் கட்டுவதற்குப் பயன்படும் செங்கற்களே. கணவனும் மனைவியும் பேசும் எல்லா வார்த்தைகளும் ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டு, நியாயத்தீர்ப்பு நாளில் எல்லாராலும் கேட்கப்படும் என்றால் — நம்மில் எத்தனை பேர் அதை ரசித்துக் கேட்போம்? அல்லது நாம் வெட்கப்பட்டு ஓடி மறைந்துகொள்வோமா? ஒருவருக்கொருவர் அன்பான, கனிவான வார்த்தைகளையே பேசிக்கொண்ட சில தம்பதியினருக்கு அது எவ்வளவு அற்புதமாக இருக்கும்! நியாயத்தீர்ப்பு நாளில் உலகம் முழுவதும் கூட தங்கள் உரையாடல்களைக் கேட்கலாம் என்ற தைரியம் அவர்களுக்கு இருக்கும்.
ஆம், நம்மில் எவரும் பூரணர் அல்ல. ஆனால், நம்மைத் தாழ்த்துவதற்கும், நன்மையான வார்த்தைகளைப் பேசுவதற்கும், சாத்தான் நம் நாவில் வைக்கும் தீமையான வார்த்தைகளுக்கு மரிப்பதற்கும் நாம் பழகிக்கொள்ள முடியும். இதற்கு மாறாக, கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் நோக்கிப் பேசும் கொடுமையான வார்த்தைகளை சற்று எண்ணிப்பாருங்கள் — “உன் அப்பா மோசம்... உன் வீட்டாரின் லட்சணம் தெரியாதா?” என்றெல்லாம் பேசிக்கொள்கிறார்கள். இன்று அநேகக் குடும்பங்கள் இதுபோன்ற செங்கற்களை வைத்தே கட்டப்படுவது துக்ககரமானது. இவ்வாறு தரம் குறைந்த நிலை நிலவும் இந்தச் சூழலில், தேவன் தம்முடைய வார்த்தையில் நமக்குத் தந்திருக்கும் மாதிரியின்படியே, தேவனை மகிமைப்படுத்தும் ஒரு குடும்பத்தை நாம் கட்ட வேண்டியது அவசியம்.
"கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்பட வேண்டாம்" என எபேசியர் 4:29 கூறுகிறது. கெட்ட வார்த்தைகள் கெட்ட செங்கற்களுக்குச் சமமானவை. கணவன் மனைவியாகிய நாம் “ஒருவரோடொருவர் கிருபை பொருந்திய வார்த்தைகளை மட்டுமே பேசுவோம்” என்ற இந்த ஓர் எளிய நியமத்தை மட்டும் கடைபிடித்தால், பல ஆண்டுகளாய் ஏராளமானோர் கட்டிக்கொண்டு வரும் மோசமான குடும்பங்களை விட சிறந்த குடும்பத்தை ஒரே ஒரு வருடத்தில் கட்டிவிட முடியும். இது நம் ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக சாத்தியமே. உங்கள் வீட்டில் உள்ள யாரையாவது தீமையாய்ப் பேசும்படி சோதனைகள் உங்களுக்கு வரும். ஆனால் அது சோதனை மட்டுமேயாகும். யாராவது உங்கள் வீட்டிற்கு வரும்போது நீங்கள் புறங்கூறத் தொடங்கினால், கெட்ட செங்கற்களால் உங்கள் குடும்பத்தை நீங்கள் கட்டுகிறீர்கள். பிசாசு உங்களிடம் கெட்ட செங்கற்களை நீட்டினான், நீங்களும் அவற்றை உடனே ஏற்றுக்கொண்டீர்கள். அவன் உங்கள் குடும்பத்தை அவ்விதம் அழிக்க இடம் கொடுக்காதீர்கள். தேவனுடைய மாதிரியை தீவிரமாய்ப் பின்பற்ற நீங்கள் தீர்மானிப்பீர்களென்றால், பரலோகத்தைப் போன்றதொரு குடும்பம் உங்களுக்கு உண்டாகும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
உபாகமம் 33:16-இல் தேவன் “முட்செடியில் எழுந்தருளினவர்” என்று குறிப்பிடப்படுகிறார். இது யாத்திராகமம் 3-ஐ மேற்கோள்காட்டுகிறது — அங்கே தேவன் பற்றியெரியும் முட்செடியிலிருந்து மோசேயிடம் பேசினார். வேதாகமம் குறிப்பிடும் தேவனுடைய முதல் வாசஸ்தலம் இதுவே. அந்த முட்செடியானது அக்கினியில் எரிந்துகொண்டிருக்கும்போது, அதில் உள்ள எந்தக் கிருமியும் பாக்டீரியாவும் உயிர் பிழைத்திருக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். அந்த அக்கினி எல்லாக் கிருமிகளையும் பாக்டீரியாக்களையும் சுட்டெரித்திருக்கும். நம் வீடுகளிலுள்ள எல்லாக் கிருமிகளையும் பாக்டீரியாக்களையும் அழித்துப்போட பரிசுத்த ஆவியின் அக்கினியாகிய அந்த அக்கினி நமக்கும் தேவை. நான் எந்த கிருமிகளையும் பாக்டீரியாக்களையும் குறிப்பிடுகிறேன்? ஒருவரையொருவர் நோக்கி நாம் கொள்ளும் தெய்வபக்தியற்ற சிந்தைகள், பேசும் கனிவற்ற கெட்ட வார்த்தைகள், தேவையற்ற வதந்திகள் — இவையே அந்தக் கிருமிகள். நாம் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும்போது, பரிசுத்த ஆவியின் அக்கினி நம் இல்லங்களில் இருக்கும்போது, நம் இல்லங்கள் சுத்திகரிக்கப்படும். நம் வீடு சரீரப் பிரகாரமாக சுத்தமானதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் நம் வார்த்தைகளும் சிந்தைகளும் தூய்மையானவையாக இருக்க வேண்டும்.
தேவன் எதைக் குறித்து கரிசனைப் படுகிறார், மனிதன் எதைக் குறித்து கரிசனைப் படுகிறான் என்பதற்கிடையே உள்ள வித்தியாசம் இது தான். பரிசேயர்கள் வெளிப்புறத்தில் சுத்தமாயிருக்கிறார்கள். ஆனால் இயேசுவின் சீஷர்கள் இருதயத்தைத் தூய்மையாய் காத்துக்கொள்கிறார்கள். தேவன் அவர்கள் இல்லங்களில் வாசம்பண்ண எதுவாக அவர்களுடைய சிந்தைகளும் வார்த்தைகளும் செம்மையாயிருக்கின்றன. நாம் இதை நாடுவோமானால், பழைய ஏற்பாட்டு ஆசரிப்புக் கூடாரத்தில் தேவனுடைய மகிமை இறங்கி தங்கியதைப் போல நம் இல்லங்களும் மகிமையினால் நிரம்பும். இதுபோன்ற அநேகக் குடும்பங்கள் நம் மத்தியில் இருந்தால் எவ்வளவு அற்புதமாயிருக்கும்! அன்று முட்செடியில் வாசம்பண்ணும் தேவன், தாம் மகிமைப்படுத்தப்படக்கூடிய இல்லங்களிலும் வாசம்பண்ணுவார்.