நாம் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படவும் பூமியில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் (நபருக்கும்) நாம் ஆசீர்வாதமாக இருப்பதற்கென்றும் அழைக்கப்பட்டிருக்கிறோம். பரிசுத்த ஆவியின் வரத்தினாலே ஆபிரகாமுடைய ஆசீர்வாதம் நமக்கு சொந்தமாகும்படி கிறிஸ்துதாமே நமக்காக சிலுவையில் சாபமானார் என்று கலாத்தியர் 3:14 கூறுகிறது. தேவன் ஆபிரகாமிடம், “நான் உன்னை ஆசீர்வதிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்கள் எல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்” என்று கூறிய அந்த ஆசீர்வாதம் ஆதியாகமம் 12:2,3 -இல் காணப்படுகிறது. இதற்காகத்தான் நாம் தொடர்ந்தேச்சையாய் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட வேண்டும் என்று தேவனிடம் ஜெபிக்கிறோம்.
இது உங்களுடைய பிறப்புரிமை. எனவே எப்பொழுதுமே இதை உரிமை பாராட்டி வாழ்ந்திடுங்கள். ஆசீர்வாதம் ஓடும் வாய்க்கால் அடைபட்டு விடாதபடிக்கு நீங்கள் மனந்திரும்பியும், பாவஅறிக்கை செய்தும், எப்பொழுதுமே உங்கள் மனச்சாட்சியை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
முதலாவதாக, தேவன் நீங்கள் செய்யும் யாவற்றிலும், அதாவது, ஆவிக்குரியவை, உலகப் பொருட்கள், சரீரத்தேவைகள், படிப்பு, வேலை மற்றும் எல்லா விஷயங்களிலுமே, உங்களை ஆசீர்வதிக்க விரும்புகிறார். தேவனுடைய வாக்குத்தத்தங்களாவன: “நீ செய்வதெல்லாம் வாய்க்கும்” (சங்கீதம் 1:3) “நீ உன் வழியை வாய்க்கப் பண்ணுவாய்” (யோசுவா 1:8). இந்த புதிய உடன்படிக்கையின் காலத்தில், தேவன் முதலாவது உங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் உங்களை ஆசீர்வதித்து, வளம்பெறச் செய்து உங்களை வெற்றியுள்ளவர்களாக நிறுத்த விரும்புகிறார். அதன் பின்னர் உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களையும் அருளுகிறார். ஆனால், பழைய உடன்படிக்கையில் அவர்கள் உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களினால் மட்டுமே ஆசீர்வதிக்கப்பட்டார்கள்.
இரண்டாவதாக, உங்கள் வாழ்க்கையின் மூலம் பிறரை ஆசீர்வதிக்கும்படி தேவன் விரும்புகிறார். உங்களிலுள்ள தேவனுடைய ஜீவனை கொஞ்சம் அவர்கள் ருசித்துப்பார்க்க வேண்டும். இதன் விளைவாக நீங்கள் சிலருக்கு “ஜீவ வாசனையாகவும்” மற்றும் சிலருக்கு “மரணவாசனையாகவும்” இருப்பீர்கள்(2கொரிந்தியர் 2:16).
இவை எல்லாம் நிறைவேறும்படி, நீங்கள் பரிசுத்த ஆவியினால் எப்பொழுதும் நிரப்பப்பட மிகவும் வாஞ்சையோடு தேட வேண்டும்.
இந்த உலக வேலை என்பது நம் பிழைப்புக்கான ஒரு வழி மட்டுமே தான். அதன்மூலம், பணத்தேவைகளுக்காக நாம் யாரையும் சார்ந்திராமல் தேவனுக்கு ஊழியம் செய்யலாம். ஆனால் பூமியில் நமது குறுகிய வாழ்நாள் காலத்தில் நாம் எத்தனை பேருக்கு ஆசீர்வாதமாயிருக்க முடியுமோ அத்தனை பேருக்கு ஆசீர்வாதமாயிருக்க நாம் வாஞ்சிக்க வேண்டும்.
பொதுவாக இந்தியாவில் உள்ள பிரபலமான பிரசங்கிமார்கள் பெரிய நகரங்களில் மட்டுமே பிரசங்கிப்பார்கள். அவர்கள் கிராமங்களிலுள்ள ஏழை, எளிய (படிப்பறிவில்லாத) மக்களோடு உட்காருவதற்கு நேரம் எடுப்பதில்லை. எனவே இந்தியாவின் கிராமங்களில் உள்ள ஏழை மக்களுக்கு ஊழியம் செய்யும் பாக்கியத்தையும், கனத்தையும் தேவன் நமக்கு கொடுத்திருப்பதால் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஜெயம்கொள்ளும் வாழ்க்கையின் சுவிசேஷத்தை நான் அங்கு பிரசங்கிக்கிறேன். கர்த்தர் அங்கு சபைகளைக் கட்டுகிறார். மேலும் என் மனைவி அங்குள்ள ஏழைப்பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மருத்துவ சேவை செய்கிறார். இம்மக்களுக்கு நாங்கள் சேவை செய்ததால் நாங்கள் இருவருமே அதிகமாக ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம்.
தேவன் எங்களது ஒலிநாடாக்கள் மற்றும் புத்தகங்களை எடுத்துச்சென்ற இடங்களைப் பார்க்கும்போது ஆச்சரியமாய் இருக்கிறது. அவைகள் பூமியின் கடைசிபரியந்தமும் (அப்போஸ்தலர் 1:8), எல்லாக் கண்டங்களுக்கும் சென்றிருக்கின்றன. பல பிரசங்கிமார்கள் கூட தங்கள் சபைகளில் பேசும் செய்திகளில் இந்தப் புத்தகங்கள் மற்றும் ஒலிநாடாக்களில் உள்ள செய்திகளைப் பயன்படுத்துகிறார்கள். இப்படியாக வார்த்தையானது நான் ஒரு போதும் போக முடியாத சபைகளுக்குக் கூட சென்றடைகிறது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! நம்முடைய புத்தகங்கள் மற்றும் ஒலிநாடாக்களின் மூலம் பணம் சம்பாதிக்க முயற்சிக்காமல், அவற்றிலுள்ள சத்தியங்களைக் கடைபிடித்து வாழ்வார்களானால், அவர்கள் அவற்றை இலவசமாகப் பயன்பபடுத்திக்கொள்ளலாம் என்று ஜனங்களை நாம் உற்சாகப் படுத்தியிருக்கிறோம்.
தொடர்ந்தேச்சையாய் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும்படிக்கும் தீர்க்கதரிசன வரத்துக்காகவும் (அதாவது “நாம் பேசுவதைக் கேட்பவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக பேசக்கூடிய திறனுக்காகவும்”) தேவனைத் தேடுங்கள். தீர்க்கதரிசன வரத்துக்காக ஜெபிப்பதெல்லாம் பெருமையான செயல் என்று எண்ணிவிடாதீர்கள். இப்படித்தான் பிசாசு ஜனங்களை ஏமாற்றுகிறான். பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு விசுவாசியும் இந்த தீர்க்கதரிசன வரத்தை ஆவலாய் தேடும்படியாக வலியுறுத்துகிறார் (1கொரிந்தியர் 14:1). எனவே, இந்த வரத்தை நாடுங்கள். உங்களுக்குத் தேவையான எந்த விஷயமாய் இருந்தாலும் அதை நீங்கள் தேவனிடத்தில் கேட்கவில்லை என்றால் அது உங்களுக்குக் கிடைக்காது. தேவையான பொருட்கள், புத்தி, வேலையில் உள்ள ஏதாவது பிரச்சனைக்குரிய தீர்வு அல்லது பொதுவாக எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதை நீங்கள் தேவனிடத்தில் தைரியமாய் கேட்க வேண்டும். நாம் அவரிடம் சென்று தீர்வை பெற்றுக் கொள்வதற்காகத்தான் தேவன் நாம் பிரச்சனைகளை எதிர்கொள்ளும்படி அனுமதிக்கிறார். இயேசு அடக்கும் புயல்களை எல்லாம் நாம் ஒரு போதும் சந்திக்கவில்லையென்றால் நம் வாழ்க்கை சலிப்பாகி விடாதா! எனவே, கேளுங்கள், உங்கள் சந்தோஷம் நிறைவாய் இருக்கும்படி கேட்டுக் கொண்டே இருங்கள்.