ஒரு விசுவாசி, தனது ஜீவியத்தில் தேவனுடைய பரிபூரண சித்தத்தை இழந்துபோக முடியும். இஸ்ரவேல் தேசத்திற்கு ராஜாவாய் இருக்கும்படி தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவன்தான் சவுல்! ஆனால், காலாவட்டத்தில், அவனுடைய பொறுமையின்மையினிமித்தமும், அவனுடைய கீழ்ப்படியாமையினிமித்தமும் தேவன் அவனைப் புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. அவர் புறக்கணித்த பிறகும் கூட, சில வருடங்கள் சவுல் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கத்தான் செய்தான்... ஆயினும் அவனோ, தன்னுடைய வாழ்க்கைக்கென்று தேவன் கொண்டிருந்த சித்தத்தை இழந்து போனான்! சாலொமோனைக்கூட மற்றொரு உதாரணமாய் நாம் கூறிட முடியும். தன்னுடைய ஆரம்ப வருடங்களில் தேவனைப் பிரியப்படுத்திய சாலொமோன் தன் பிற்கால ஜீவியத்தில், புறஜாதி ஸ்திரீகளைத் திருமணம் செய்து வீழ்ச்சியுற்றான்!
வனாந்தரத்தில் அழிந்த இஸ்ரவேலர்களின் மாதிரியை வைத்து நமக்கு எச்சரிப்புகளை புதிய ஏற்பாடு இரண்டுமுறை எடுத்துரைத்திருக்கிறது. “கானான் தேசத்திற்குள் பிரவேசிப்பதே” இஸ்ரவேலர்களைக் குறித்த தேவனுடைய பரிபூரண சித்தமாயிருந்தது. இருப்பினும் அவர்களில் இரண்டு பேரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் “தேவனுடைய மிகச் சிறந்த வாக்குத்தத்தத்தைத் தங்கள் அவிசுவாசத்தினிமித்தமும், தங்கள் கீழ்ப்படியாமையினிமித்தமும் இழந்து போனார்கள்” (1கொரிந்தியர் 10:1-12; எபிரெயர் 3:7-14). இன்றும் இவர்களைப் போலவே திரளான விசுவாசிகள் தேவன் தங்கள் வாழ்விற்காகக் கொண்டிருந்த பரிபூரணத் திட்டத்தைத் தங்கள் கீழ்ப்படியாமையினிமித்தமும்... தங்கள் திருமணம் அல்லது தங்கள் வேலையைத் தெரிந்து கொள்வதில் நடப்பித்த ஒத்த வேஷத்தினிமித்தமும் இழந்து போனார்கள்!
“தேவனுடைய பூரண சித்தம்” என்ற புத்தகத்தை எழுதிய G.கிறிஸ்டியன் வெய்ஸ் கீழ்கண்டவாறு அப்புத்தகத்தில் விவரித்திருக்கிறார்: ஒரு வேதாகமப்பள்ளி ஆசிரியர் தன்னுடைய மாணாக்கர்களுக்கு ஒரு சமயம் கூறும்போது, “மாணவர்களே, என் ஜீவியத்தில் தேவன் எனக்குத் தந்த முதல் பங்கை இழந்து, அதற்குப் பதிலாக அவர் தந்த இரண்டாவது பங்கில்தான் என் பெரும்பாலான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன்! தேவன் என்னை ஒரு மிஷனெரியாக இருக்கும் படியே வாலிப நாட்களில் என்னை அழைத்தார். ஆனால் நானோ, என் திருமணத்தினிமித்தம் அவர் அழைப்பிற்கு புறமுதுகு காட்டினேன். என் சுயநலத்தினிமித்தம் ஒரு வங்கியில் வேலைக்குச் சேர்ந்து பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாய்க் கொண்டிருந்தேன்! இருப்பினும், தேவனோ என்னிடத்தில் இடைவிடாது பல வருடங்கள் தொடர்ந்து பேசினார். நானும் தொடர்ந்து அவர் அழைப்பிற்கு இணங்க மறுத்துவிட்டேன்! இச்சமயத்தில் என் சிறு குழந்தை ஒரு நாற்காலியிலிருந்து தவறி விழுந்து மரித்துப் போனது! இச்சம்பவம் என்னை வெகுவாக பாதித்து தேவனுக்கு முன்பாக முழங்காலிடச் செய்தது. அன்று இராமுழுவதும் தேவனுக்கு முன்பாகக் கண்ணீரோடு ஜெபத்தில் தரித்திருந்தேன். அந்த இராத்திரியில்தான் என் ஜீவியத்தை தேவனுடைய கரத்தில் முழுமையாக ஒப்புவித்தேன்! ஆனால் இப்போதோ நான் ஆப்பிரிக்கா தேசத்திற்குச் சென்று ஊழியம் செய்யும் காலம் கடந்துவிட்டது! ஆம், ஊழியத்தின் வாசல் அடைபட்டுப்போனது!! இவ்வாறு தேவன் எனக்கென்று தந்த முதல் பங்கை நான் இழந்து போனேன். ‘ஆண்டவரே, நீர் என்னுடைய மீதியான ஜீவியத்தை ஏதாகிலும் ஊழியத்திற்குப் பயன்படுத்தும்!’ என மாத்திரமே நான் ஜெபிக்க முடிந்தது. அதன் விளைவாய் இப்போது நான் ஒரு வேதாகமப்பள்ளியின் ஆசிரியராகப் பணியாற்றுகிறேன். இருப்பினும், இந்தப்பணி தேவன் எனக்குத் தந்த இரண்டாவது பங்குதான் என்பதை என்னால் மறக்கவே முடியவில்லை!” என வருத்தத்துடன் கூறினார்.
அந்தப் புத்தகத்தில் சகோதரன் வெய்ஸ் மேலும் கூறுகையில், “மேலே கூறப்பட்ட வேதாகமப் பாடசாலையின் ஆசிரியர்களைப் போலவே சாட்சி உடையவர்கள் ஏராளமானபேரை நான் சந்தித்திருக்கிறேன். அவர்கள் கூறிய சாட்சிகள் கண்ணீரில் எழுதப்பட்டதாகவே இருக்கிறது!!” எனவும் எழுதினார். இவ்வாறு தேவனுடைய பரிபூரண சித்தத்தின் வழியில் பிரவேசிக்காமல், தங்கள் சுய சித்தத்தில் தடம் புரண்டவர்களுக்கு வேறுவழியைத் தேவன் திறந்துவிட்டார் என்பது உண்மைதான். அதற்காக நாம் தேவனுக்கு நன்றியும் கூறக் கடமைப்பட்டிருக்கிறோம். அப்படியிருந்தும், இப்போது அவர்கள் சென்று கொண்டிருக்கும் வழி, தேவன் அவர்களுக்கெனத் தெரிந்துகொண்ட அவருடைய பரிபூரண சித்தத்தின்படியான முன்குறித்த வழி அல்லவே அல்ல! இவ்வாறு, ஒருவன் தன் ஜீவியத்தில் தேவனுடைய பரிபூரண சித்தத்தைத் தன் வாழ்வில் இழப்பது பெருந்துயரமேயாகும்! அன்பார்ந்த கிறிஸ்தவர்களே, இப்போது நீங்கள் வாசித்த வாசகங்களையும் அதன் சாட்சிகளையும் உங்கள் மனதில் நன்றாய் பதித்து வையுங்கள்... அப்போதுதான், நீங்களும் தேவன் உங்கள் வாழ்விற்கெனத் தெரிந்துகொண்ட அந்த ஆரம்ப முதல் பங்கை இழந்து போகாமல் கவனமாய் வாழ்ந்திட முடியும்! தேவனுடைய கரத்தில் தங்களை முழுமையாய் ஒப்புக்கொடுத்த யாதொருவனுடைய ஜீவியத்தையும் தேவன் எப்படியாவது பயன்படச் செய்வார் என்பதில் சந்தேகமேயில்லை! இருப்பினும், நாமோ அவருடைய சித்தத்தைத் தீவிரமாய்த் தேடி அதற்கு நம்மை முழுமையாய் ஒப்புக்கொடுக்கிறவர்களாய் இருந்திடவே நாடக்கடவோம்!! அப்போது மாத்திரமே, நம் ஜீவிய பயணத்தில் வேதனை நிறைந்த வெட்கத்திற்கு நம்மை விலக்கிக் காத்துக்கொள்ள முடியும்.
நம் சுய சித்தத்தின்படி நாமே ஓர் இடத்தைத் தெரிந்து கொண்டு ஜீவித்திடும் வாழ்க்கை ஒருபோதும் வெற்றியுள்ள ஜீவியத்தை நமக்குத் தராது! ஆண்டவருக்கென முழுமையாகப் பயன்படும் ஓர் ஊழியத்தைப் பெற்றிடவும் முடியாது! அல்லது யாதொருவருக்கும் ஆசீர்வாதமாக இருந்திடவும் முடியாது! இன்று அநேகருடைய எண்ணமோ, தங்கள் வேலையையும், தாங்கள் வசிக்கும் இடத்தையும் தாங்களே தெரிந்து கொண்டு, அதிலே தங்கியிருந்து ஆண்டவருக்கு சாட்சியாக வாழ்வதற்கே முயற்சிக்கிறார்கள். தேவனும் தம்முடைய மிகுந்த இரக்கத்தின்படி, இதுபோன்ற விசுவாசிகளை மிகக்குறைந்த அளவு பயன்படுத்திடவும்கூடும்! ஆனால் தேவனுடைய திராட்சத் தோட்டத்தில் அவர்களின் பங்கோ வெகு குறைவாகவே இருக்கும்!! இவர்கள் மாத்திரம் தங்கள் ஆரம்ப ஜீவியத்திலேயே தேவனுடைய திட்டத்தை முழு இருதயமாய் நாடி அவருடைய பரிபூரண சித்தத்தின் மையத்தில் நிலைத்திருந்திருப்பார்களேயாகில் “வாழ்வின் முழு பங்கையும்” அவர்கள் ஜெயமாய் நிறைவேற்றியிருந்திருக்கமுடியும். இவ்வாறெல்லாம் நிலை கொண்டிருக்கும் தேவனுடைய பிரமாணங்களை இவர்கள் கவனயீனமாய் அலட்சியப்படுத்தியதின் விளைவாய், இன்றோ அவர்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சி கூனிக் குறுகியதாயும், சொற்ப கனியுடையதாகவும் தேங்கிவிட்டது!
இப்போதும் என்ன? தேவனுடைய சித்தம் செய்வதில் நீங்கள் எந்த விஷயத்திலாவது அவருக்குக் கீழ்ப்படியாதிருந்தால், இன்னும் காலம் விரயமாவதற்கு முன்பாக அவரிடத்தில் மனந்திரும்பி கிட்டிச் சேருங்கள். ஆம், உங்களில் அநேகர் யோனாவிற்குச் சம்பவித்தது போலவே, தேவன் உங்களுக்காக வைத்திருக்கும் பிரதான பாதைக்குள் 'மீண்டும்' திரும்பி வந்துவிடமுடியும்!
நாம் யாராயிருந்தாலும் நம் ஒவ்வொருவருக்கும் ஒரே ஒரு வாழ்க்கைதான் இருக்கிறது! இந்த ஒரே வாழ்க்கையின் முடிவில், பவுலைப்போலவே “தேவன் எனக்கென நியமித்த ஓட்டத்தை நிறைவாய் ஓடி முடித்தேன்” (2தீமோத்தேயு 4:7) எனக் கூற முடிந்தவர்கள் மெய்யாகவே பாக்கியவான்கள்!!
“இந்த உலகமும் அதிலுள்ள இச்சையான யாவும் ஒரு நாள் ஒழிந்து மறைந்து போகும்! ஆனால், தேவனுடைய சித்தத்தை கவனமாய்ப் பின்பற்றி வாழ்கிறவனெவனோ, அவனே என்றென்றைக்கும் ஒழிந்து போகாத நிரந்தரமான பங்கைப் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்திடுவான்” (1யோவான் 2:17 J.B. Phillips ஆங்கில வேதாகமம்) எனக்கூறும் அற்புத வசனத்தை நாம் மனதில் கொள்ளக்கடவோம்.
“நீங்கள் வாழ்வின் அர்த்தத்தையும் அதன் நோக்கத்தையும் அறியாத மனுஷர்களைப்போல் இராமல், இந்த ஜீவியத்தை மிகுந்த பொறுப்புள்ள உணர்வோடு கடைபிடித்து வாழுங்கள். இந்த நாட்களின் பல்வேறு கஷ்டங்களையும் ஒரு பொருட்டாக எண்ணாமல், உங்கள் காலத்தை செம்மையாய்ப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏனோ-தானோ என்று இராமல் தேவனுடைய சித்தம் இன்னதென்றறிந்து அதை உறுதியாகப் பற்றிக்கொண்டு வாழுங்கள்” (எபேசியர் 5:15-17 J.B. Phillips ஆங்கில வேதாகமம்) என எச்சரிக்கும் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்.