WFTW Body: 

அப்போஸ்தலனாகிய பவுலின், பிலிப்பியருக்கு எழுதின நிருபம், சந்தோஷத்திற்கென்று அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள நிருபம். “நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்போதும் சந்தோஷத்தோடே விண்ணப்பம்பண்ணி” (பிலிப்பியர் 1:4) “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்” (பிலிப்பியர் 4:4) என்பதாக உள்ளது.

பவுல் சிறைச்சாலையில் இருந்தபோது பிலிப்பியர் நிருபம் எழுதப்பட்டது (பிலிப்பியர் 1:13). பவுல் ஒரு சிறைச்சாலையில் இருந்தபொழுது சந்தோஷத்தை குறித்து இவ்வளவு அதிகமாக எழுதினார் என்பதைப் பார்ப்பது சவாலாய் இருக்கிறது. நம்முடைய சூழ்நிலைகளெல்லாம் சௌகரியமாய் இருக்கும்பொழுது சந்தோஷத்தை குறித்துப் பிரசங்கிப்பது எளிதாய் இருக்கலாம். ஆனால் நம்முடைய சூழ்நிலைகள் கடினமாக இருக்கும்பொழுது சந்தோஷத்தை குறித்து எழுதுவது முற்றிலும் வேறுபட்ட ஒரு காரியம். ஒரு கிறிஸ்தவன் எல்லா சூழ்நிலைகளிலும் சந்தோஷத்தோடு இருப்பது சாத்தியம் என பவுலினுடைய வார்த்தைகள் நமக்குப் போதிக்கிறது. அதுதான் கிறிஸ்துவினுடைய சிந்தை, கிறிஸ்துவினுடைய மனப்பான்மையும் கூட.

தாம் சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தின நாள் இரவில், இயேசு சந்தோஷத்தை குறித்து அதிகமாய் பேசினார் (யோவான் 15 மற்றும் 16 ஆம் அதிகாரம்). கடைசி இராபோஜனத்தில், “உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்கு சொன்னேன்” என்றும் “உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான்” என்றும் “என்னுடைய சந்தோஷத்தை உங்களுக்குக் கொடுக்க விரும்புகிறேன்” என்றும் அவர் தம்முடைய சீஷர்களுக்கு சொன்னார். இன்னும் சில மணி நேரங்களில் அவர் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு, ஒரு குற்றவாளியை போல வெளியரங்கமாக சிலுவையில் அறையப்படப் போகிறார். இருப்பினும், அவர் தம்முடைய சந்தோஷத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து, அவர்களை உற்சாகப்படுத்தினார்.

இந்த கிறிஸ்துவின் சிந்தையையும், கிறிஸ்துவின் மனப்பான்மையையும் பவுல் பெற்றிருந்தார். அவர் சிறைச்சாலையில் சந்தோஷத்தினால் நிறைந்திருந்தார். பவுல் இந்தக் கடிதத்தை எழுதியபோது (அப்போஸ்தலர் 28:16, 30,31) வெறும் வீட்டுக்காவலில் (house arrest) இருந்தாரோ அல்லது உண்மையான ரோம சிறைச்சாலையில் இருந்தாரோ என்பது நமக்குத் தெரியாது. அந்த நாட்களில் ரோம சிறைச்சாலைகளானது எலிகளினாலும், கொசுக்களினாலும், ஊரும் பூச்சிகளினாலும் நிறைந்த இருண்ட நிலவறைகளாய் (dark dungeons) இருந்தது. இங்கே கைதிகள் தரையிலே உறங்க வேண்டும். அவர்களுக்கு மிகவும் குறைவான உணவே கொடுக்கப்பட்டது. இந்த இரண்டு இடங்களில் எந்த இடத்தில் பவுல் இருந்தாலும், சூழ்நிலைகள் மோசமாகத்தான் இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும்கூட பவுல் சந்தோஷத்தினால் நிறைந்திருந்தார். சுவிசேஷத்தைப் பிரசங்கித்ததற்காக அவர் சிறைப்பட்டிருந்தார். ஆனால் தன்னுடைய துக்கங்களுக்காக அவர் கண்ணீர் விடவில்லை. யாரிடத்திலும் எந்த ஒரு அனுதாபத்தையும் அவர் விரும்பவில்லை. அவர் சந்தோஷத்தினால் நிறைந்திருந்தார்.

சௌகரியமாய் வாழ்ந்து கொண்டு, மிகவும் சிறிய சிரமத்திற்கும் குறை சொல்லும் கிறிஸ்தவர்களுக்கு, பவுல் ஒரு அருமையான மாதிரியாய் இருக்கிறார். சிறிய கஷ்டத்தை எதிர்கொள்ளும்போது அல்லது ஒரு சிறிய சோதனையின் வழியே செல்லும்போது மற்றவர்களுடைய அனுதாபத்தைப் பெற முயற்சிக்கும் விசுவாசிகளை நாம் அடிக்கடி பார்க்கிறோம். பவுல் தன்னுடைய பாடுகளைக் குறித்து ஒரு வார்த்தையும் இங்கே சொல்லவில்லை. மாறாக, “நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்போதும் சந்தோஷத்தோடே விண்ணப்பம்பண்ணி, நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.” (பிலிப்பியர் 1:4, 6) என்று சொன்னார். முழு இரவும் கொசுக்களினால் கடிக்கப்பட்டு, அந்த இருண்ட நிலவறையின் தரையிலே ஊர்ந்து செல்லும் எலிகள், பூச்சிகள் மற்றும் அங்கிருந்த எல்லாவற்றையும் தவிர்க்க முயற்சி செய்துகொண்டே இந்த கடிதத்தை அவர் எழுதியிருப்பார் என்பதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. தன்னை குளிரிலிருந்து பாதுகாப்பதற்கு அவருக்கு சூடு தருகின்ற ஆடைகளும் இல்லாமல் இருந்திருக்கலாம். அவருடைய சந்தோஷம் தன்னுடைய சூழ்நிலைகளினால் வராமல், பிலிப்பி பட்டணத்தின் விசுவாசிகளிடம் அவர் கண்ட தேவ கிருபையினாலேயே வந்தது.

அநேக ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு தரிசனத்தின் மூலமாக பிலிப்பி பட்டணத்திற்கு போகும்படி கர்த்தர் வழிநடத்தினார். (அப்போஸ்தலர் 16:9-12). அவர் அந்த தரிசனத்தைப் பின்பற்றி, அங்கே சென்று ஜனங்களைக் கர்த்தரிடம் வழிநடத்தினார். பிறகு அந்த பட்டணத்திலேயே சிறைப்பட்டார். அங்கே மனந்திரும்பின சிறைச்சாலைக்காரன், பிலிப்பி பட்டணத்தின் சபையில் இப்பொழுது ஒரு மூப்பராக ஒருவேளை இருக்கலாம். “இந்த மனுஷன் சிறைச்சாலையில் சந்தோஷமாயிருந்ததை நான் பார்த்தேன்.” என்று பவுலைக் குறித்து அவர் ஜனங்களுக்குச் சொல்லியிருக்க கூடும். கர்த்தருக்குப் பிரயோஜனமாக செலவழித்த ஒரு வாழ்க்கையிலிருந்து பவுலின் சந்தோஷம் வெளிப்பட்டது. கர்த்தர் உங்களுக்கு ஆரோக்கியத்தையும், பெலனையும் கொடுத்த நாட்களில், அவருக்கு ஊழியஞ்செய்ய, அதாவது அவருடைய இராஜ்ஜியத்திற்காக ஜனங்களைச் சேர்க்கவும், அவருடைய சபையை கட்டவும், உங்களுடைய வாழ்நாட்களை செலவழித்தீர்கள் என்ற உண்மையே, உங்களுடைய வாழ்க்கையின் முடிவிற்கு நீங்கள் வரும்பொழுது உங்களுக்கு சந்தோஷத்தைக் கொண்டுவரும். இப்பொழுதே இதை சிந்தியுங்கள், அப்பொழுது உங்களுடைய வாழ்க்கையின் முடிவிற்கு நீங்கள் வரும்பொழுது, தேவன் உங்களுடைய வாழ்க்கையைக் கொண்டு செய்த காரியங்களுக்காகப் பவுலைப்போல அவருக்கு நன்றி சொல்லுவீர்கள்.