பரிசுத்த ஆவியானவர் சத்திய ஆவியானவர் என்று அழைக்கப்படுகிறார். “சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்” (யோவான் 16:13) என்று இயேசு கூறினார்.
என் வாழ்க்கையானது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை முற்றிலும் உண்மையுள்ளதாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஏனென்றால் இயேசுவைப் பின்பற்றுவது என்பது அதுதான். இயேசு, “நானே சத்தியம்” என்றார். பல சமயங்களில், கிறிஸ்தவப் போதகர்கள்கூட மற்றவர்களிடம் பேசும்போது தந்திரத்துடன் நடந்துகொள்கிறார்கள். அவர்கள், “நான் இதை இப்படிச் சொன்னால், அது சில சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும், அதனால் நான் தந்திரமாக நடந்துகொள்கிறேன்” என்று கூறுகிறார்கள். இயேசு ஒருபோதும் தந்திரமாக இருக்கவில்லை. அவர் எப்போதும் உண்மையை வெளிப்படையாகவும் நேரடியாகவும் பேசினார். அவர் முரட்டுத்தனமாக நடந்துகொண்டார் என்று நான் கூறவில்லை, நாமும் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளக் கூடாது. ஆனால் இயேசு எந்தவொரு தனிப்பட்ட லாபத்திற்காகவும் தந்திரமாக நடந்துகொள்ளவில்லை. உண்மையைப் பேசும்போது அது கிருபை பொருந்தினதாயும், பிறர் மனதைப் புண்படுத்தாமலும் இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன் (முரட்டுத்தனமாக இருக்கக்கூடாது). நாம் மற்றவர்களிடம் பேசும்போது எப்போதும் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும். ஆனால், இங்கு நான் பேசுவது, உங்களைப் பாதிக்கக்கூடிய உண்மையைப் பேசுவதைப் பற்றித்தான். நம்மைப் பொருத்தவரை நாம் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
பரிசுத்த ஆவியானவர் நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்துகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆதித் திருச்சபையிலே நியாயந்தீர்க்கப்பட்ட முதல் பாவம் பொருளாசை அல்ல, மாறாக நேர்மையின்மையே ஆகும். அப்போஸ்தலர் 5-ஆம் அதிகாரத்தில், பலர் தங்கள் நிலங்களை விற்று, அந்தப் பணத்தை அப்போஸ்தலர்களின் பாதங்களில் கொண்டு வந்து வைத்ததை அனனியாவும் சப்பீராளும் கண்டார்கள் (அப்போஸ்தலர் 4:34-இல் பலர் அப்படிச் செய்தார்கள்). அனனியாவும் சப்பீராளும் முழு இருதயத்தோடு தேவனுக்கு முற்றிலும் அர்ப்பணித்தவர்கள் என்ற நற்பெயரைச் சபையில் பெற விரும்பினார்கள். அதனால் அவர்களும் தங்கள் நிலத்தில் ஒரு பகுதியை விற்றார்கள், ஆனால் மற்றவர்கள் செய்தது போலப் பணத்தின் முழுத் தொகையையும் அப்போஸ்தலர்களின் பாதங்களில் கொண்டு வந்து வைக்கவில்லை. அவர்கள் அந்த நிலத்தை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்று, அதில் 50,000 ரூபாயைத் தங்களிடம் வைத்துக்கொண்டு, மீதமுள்ள 50 சதவீதத்தைச் சபைக்குக் கொடுத்தார்கள் என்று வைத்துக்கொள்வோம். இன்று யாராவது தங்கள் சொத்தை விற்று, அதிலிருந்து கிடைத்த பணத்தில் 50 சதவீதத்தைத் தேவனுக்குக் கொடுத்தால், நீங்கள் அந்த நபரை ஒரு முழு இருதயமுள்ள கிறிஸ்தவர் என்று அழைப்பீர்கள்! ஆனால் அனனியா உயிரிழந்ததற்குக் காரணம் அவன் எவ்வளவு கொடுத்தான் என்பதோ அல்லது எவ்வளவு கொடுக்கவில்லை என்பதோ அல்ல, மாறாக அவன் பொய் சொன்னது தான்.
மக்கள் தங்களுடைய பணத்தை அப்போஸ்தலர்களுடைய பாதத்தில் வைக்கும்போது, அவர்களுடன் வரிசையில் நின்று, அவன் அமைதியாக இருந்தான். அவனும் தனது பணத்தை வைத்துவிட்டுச் சென்றான். அவன் அப்படிச் சென்றபோது, “அனனியா, இங்கே திரும்பி வா” என்று பேதுரு அழைத்தான். இந்த மனிதன் பொய் சொல்கிறான் என்பதை உணரும் பகுத்தறிவை தேவன் பேதுருவுக்கு அளித்தார். “இந்த நிலத்தை விற்குமுன்னே அது உன்னுடையதாக இருந்தது. அதை விற்கும்படி யாரும் உன்னைக் கேட்கவில்லை. தேவனுக்கு உன் பணமோ உன் நிலமோ தேவையில்லை. எல்லோரும் தாங்களாகவே விரும்பி கொடுக்கிறார்கள். நீ அதை விற்றபின்பும், அந்தப் பணம் உன்னுடையதாகவே இருந்தது. 50 சதவீதமோ, 10 சதவீதமோ, 1 சதவீதமோ கூட கொடுக்கும்படி யாரும் உன்னைக் கேட்கவில்லை. அப்படியிருக்க, ஏன் இப்படி எண்ணங்கொண்டாய்? நீ தேவனிடத்தில் பொய் சொன்னாய்?” என்று அப்போஸ்தலர் 5:4-இல் பேதுரு அவனிடம் கூறினான். “நான் பொய் சொன்னேனா? நான் தான் என் வாயைத் திறக்கவே இல்லையே! ஒரு வார்த்தையும் பேசவில்லையே!” என்று அனனியா சொல்லியிருக்கலாம். ஆனால், வாயைத் திறக்காமலேயே தேவனிடத்தில் பொய் சொல்ல முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அனனியா மற்றவர்களுடன் வரிசையில் நின்று, தனது பணத்தை அப்போஸ்தலர்களுடைய பாதத்தில் வைத்துவிட்டுச் சென்றான். அவன் தன் வாயைத் திறக்கவே இல்லை, ஆனால் அந்தச் செயலிலேயே ஒரு பொய் இருந்தது. இதுதான் மாய்மாலம், அதாவது நடிப்பது.
நீங்கள் சபை ஐக்கியத்திற்கு வந்து, மற்ற எல்லோரையும் போல முழு இருதயம் கொண்டவன் போல் நடிக்கலாம், ஆனாலும் ஒரு பொய்யனாக இருக்க முடியும். மற்றவர்களைப் போல நீங்களும் முழு இருதயமுடைய நபரைப் போல நடித்து, உண்மையில் நீங்கள் முழு இருதயமுடையவராய் இல்லாவிட்டால், வாய் திறக்காவிட்டாலும் கூட நீங்கள் ஒரு பொய்யன் தான். “என் வெள்ளியையும் பொன்னையும் நீர் எடுத்துக்கொள்ளும்; ஒரு சிறு பகுதியையும் நான் எனக்காக வைத்துக்கொள்ள மாட்டேன்” என்று மற்றவர்களுடன் சேர்ந்து இனிமையான ராகத்திலும் அழகான வார்த்தைகளுடனும் பாடலாம். ஆனால் அதை உண்மையிலே மனதில் அர்த்தப்படுத்தாமல் பாடினால், நீங்கள் ஒரு முழுமையான பொய்யன். கிறிஸ்தவர்களில் பலர் வாரத்தின் மற்ற நாட்களைவிட ஞாயிற்றுக்கிழமைகளில், பாடும் பாடல்களின்மூலம் தேவனிடத்தில் அதிகமான பொய்களைக் கூறுகிறார்கள்! “எனது எல்லாவற்றையும் இயேசுவுக்கே நான் அர்ப்பணிக்கிறேன்” என்று நீங்கள் பாடி, ஆனாலும் நீங்கள் உங்களை அர்ப்பணிக்காதிருந்தால், நீங்கள் ஒரு பொய்யன். ஒரு பிரசங்கியார் உங்களுக்கு இந்த உண்மையைச் சொல்லாமல் இருக்கலாம், ஆனால் நீங்கள் இதைக் கேட்க வேண்டியது அவசியம், ஏனென்றால் இது உண்மை. நீங்கள் மெய்யாகவே உங்கள் அனைத்தையும் கிறிஸ்துக்கு அர்ப்பணித்துவிட்டீர்கள் என்றால், அதைச் சொல்லுங்கள்; இல்லையென்றால், உங்கள் வாயை மூடிக்கொள்ளுங்கள், அல்லது, “ஆண்டவரே, நான் அனைத்தையும் அர்ப்பணிக்க விரும்புகிறேன், ஆனால் நான் இன்னும் அதை முழுமையாகச் செய்யவில்லை” என்று சொல்லுங்கள். அதுவே அதிக நேர்மையானது. மற்றவர்கள் பாடும் ராகத்தோடு அது பொருந்தவில்லை என்றாலும் கவலைப்பட வேண்டாம். நீங்கள் தேவனிடத்தில் நேர்மையாக இருங்கள்.
இதன் விளைவு என்ன? சத்தியத்தின் மேலுள்ள அன்பை ஏற்றுக்கொள்ளாதவர்களைப் பற்றி 2தெசலோனிக்கேயர் 2:10 கூறுகிறது. சத்தியத்தைப் பேசுவதை விடச் சத்தியத்தை நேசிப்பது மேலானது. என்னால் உண்மையைப் பேச முடியும், ஆனால் அதைவிட உயர்ந்த நிலை சத்தியத்தை நேசிப்பதாகும். சத்தியத்தைப் பேச வேண்டும் என்ற ஒரு தீவிரமான ஏக்கம் எனக்கு இருக்கிறது. ஆகவே நான் சத்தியத்தை நேசிக்கிறேன், எனக்குள் எந்த ஒரு பொய்யும் இருக்க நான் ஒருபோதும் விரும்பவில்லை. எல்லாப் பொய்களிலிருந்தும் இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின் மேலுள்ள அன்பை நாம் அங்கிகரிக்காவிட்டால், அதன் விளைவாக தேவனே நம்மை வஞ்சிப்பார் என்று 2தெசலோனிக்கேயர் 2:12 நமக்குக் கூறுகிறது. புதிய ஏற்பாட்டில் உள்ள மிகவும் பயமளிக்கக்கூடிய வசனங்களில் இதுவும் ஒன்றாகும்.
அன்பு நண்பரே, நீங்கள் சத்தியத்தை நேசிக்கவில்லை என்றால், நான் உங்களிடம் வெளிப்படையாகச் சொல்கிறேன்: சர்வவல்லமையுள்ள தேவன் உங்களை வஞ்சிப்பார். சாத்தான் ஒரு வஞ்சகன். உங்கள் இச்சைகள் உங்களை வஞ்சிக்கின்றன. உங்கள் இருதயம் வஞ்சகமானது. அதற்கும் மேலாக, வஞ்சகத்திலிருந்து உங்களைப் பாதுகாக்கும் ஒரே நம்பிக்கையான சர்வவல்லமையுள்ள தேவனே உங்களை வஞ்சிக்க முடிவு செய்தால், உங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. தேவன் நீங்கள் பொய்யை நம்பும்படி செய்வார் என்று 2தெசலோனிக்கேயர் 2:12 கூறுகிறது. நீங்கள் மறுபடியும் பிறக்காதபோது, நீங்கள் மறுபடியும் பிறந்ததாக உங்களை நம்ப வைப்பார். நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படாதபோது, நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பதாக உங்களை நம்ப வைப்பார். ஏன்? ஒரே ஒரு காரணத்திற்காகத் தான்: நீங்கள் சத்தியத்தின் மேலுள்ள அன்பை அங்கிகரியாமற்போனபடியால் தான்.
வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முதல் பாவம் எது என்று உங்களுக்குத் தெரியுமா? அது ஒரு பொய். சாத்தான் ஏவாளிடம், “நீங்கள் சாகவே மாட்டீர்கள்” என்று பொய் சொன்னான் (ஆதியாகமம் 3:4). வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முதல் பாவம் அதுதான் - ஒரு பொய்.
வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடைசி பாவம் எது? நீங்கள் வேதாகமத்தின் கடைசி அதிகாரத்தைப் பார்த்தால், குறிப்பிடப்பட்டுள்ள கடைசி பாவமும் பொய் தான் என்பதை அறிவீர்கள். பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் பரிசுத்த நகரத்திற்குப் புறம்பே இருப்பார்கள் என்று வெளி 22:15 கூறுகிறது. எனவே வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முதல் பாவமும் கடைசி பாவமும் பொய் தான். ஆதித் திருச்சபையில் நியாயந்தீர்க்கப்பட்ட முதல் பாவமும் பொய் தான். சத்தியத்தின் மேலுள்ள அன்பை அங்கிகரிக்காதவர்களையே தேவன் வஞ்சிக்கிறார்.
நாம் இதைத் தீவிரமாக எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம். “உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்” (மத்தேயு 5:37). இது நம்மை வஞ்சனையிலிருந்து பாதுகாக்கிறது. “நானே வழி” என்று இயேசு கூறினார். அதை நாம் அனைவரும் பாராட்டுகிறோம். இயேசுவே வழியும் ஜீவனுமாய் இருக்கிறார் என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், “நானே சத்தியம் - நானே உண்மை” என்றும் அவர் கூறினார் (யோவான் 14:6).
பழைய ஏற்பாட்டிலுள்ளவர்கள் சத்தியத்தைப் பெற முடியவில்லை. பத்சேபாளினிடத்தில் பாவம் செய்த பிறகு, சங்கீதம் 51:6-இல் தாவீது, தனது பாவத்தை அறிக்கை செய்கிறான், “ஆண்டவரே, நீர் உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர் என்பதை நான் உணர்கிறேன், அது என்னிடத்தில் இல்லை. நான் ஒரு மாய்மாலக்காரன். என்னால் கோலியாத்தைக் கொல்ல முடியும், பெலிஸ்தியர்களைத் தோற்கடிக்க முடியும், ஆனால் என் இருதயத்தில் நான் ஒரு மாய்மாலக்காரன். நான் பத்சேபாளினிடத்தில் பாவம் செய்து, அதை மறைப்பதற்காக, முதலில் அவளுடைய கணவனை அன்றே அவளுடைய படுக்கைக்கு அனுப்ப முயன்றேன். அதில் நான் வெற்றி பெறவில்லை. பிறகு நான் அவளுடைய கணவனை ஒழித்துவிட்டு அவளை மணந்தேன். ஆண்டவரே, நீர் உள்ளத்தில் உண்மையை விரும்புகிறீர் என்பதை நான் உணர்கிறேன். அது என்னிடத்தில் இல்லை” என்று கூறுகிறான். ஆனால், பரிசுத்த ஆவியானவர் மூலமாக நாம் இன்று பெற்றுக்கொள்ளக்கூடிய அற்புதமான காரியங்களில் ஒன்று நம்முடைய உள்ளத்தில் இருக்கக்கூடிய உண்மை ஆகும். சத்திய ஆவியானவர் நம்முடைய உள்ளத்திலும் நம்முடைய வாழ்விலும் நம்மை உண்மையுள்ளவர்களாக மாற்றுவார்.
சீயோன் மலையில் ஆட்டுக்குட்டியானவருடன் நிற்கும் சிலரைப் பற்றி வெளிப்படுத்தின விசேஷம் 14-ஆம் அதிகாரம் கூறுகிறது. ஆட்டுக்குட்டியானவர் எங்கே சென்றாலும் அவரைப் பின்தொடரும் ஜெயங்கொண்ட ஒரு குழுவினரைப் பற்றி வெளி 14:4 கூறுகிறது. அவர்களைக் குறித்த ஒரு தன்மை என்னவென்றால், “அவர்களுடைய வாயில் கபடம் (பொய்) காணப்படவில்லை” (வெளி 14:5). மனிதர்கள் பிறந்ததிலிருந்தே பொய்யர்களாக இருக்கிறார்கள். இதை நாம் சங்கீதம் 58:3-இல் வாசிக்கிறோம். ஆனால், இதோ ஒரு குழுவினர், அவர்கள் பொய்யிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்; அதனால் அவர்களுடைய முழு வாழ்க்கையிலும் ஒரு பொய்கூட காணப்படுவதில்லை. அவர்கள் இயேசுவைப் போலவே சத்தியத்தால் நிறைந்தவர்களாகிவிட்டார்கள்! நான் உங்களை உற்சாகப்படுத்த விரும்புகிறேன்: நாம் எல்லாவிதமான பொய்களிலிருந்தும் நாம் நம்மைச் சுத்திகரித்துக்கொள்ள வேண்டும்.
உண்மையைப் பேசுவதற்காக நீங்கள் ஒரு விலைக்கிரயம் கொடுக்க நேர்ந்தாலும், நீங்கள் உண்மைக்காக நின்று, உங்கள் வாழ்க்கையிலிருந்து பொய்யை முற்றிலுமாக நீக்க முடிவு செய்தால், நிச்சயமாக உங்கள் வாழ்க்கை நூறு சதவீதம் தூய்மையாக இருக்கும். உங்களால் தேவனை தரிசிக்க முடியும். இன்று கிறிஸ்தவ உலகில் பரவி வரும் எந்தவொரு வஞ்சனையாலும் நீங்கள் ஒருபோதும் வஞ்சிக்கப்பட மாட்டீர்கள். நீங்கள் சத்தியத்தை அறிந்துகொள்வீர்கள், ஏனென்றால் தேவனே உங்களுக்குச் சத்தியத்தைக் காண்பிப்பார், உங்கள் ஆவிக்குரிய நிலையைப் பற்றி நீங்கள் ஒருபோதும் வஞ்சிக்கப்பட மாட்டீர்கள்.