"நாங்கள் கிறிஸ்துவின் ஸ்தானாபதிகளாய் (தூதுவர்களாய்) இருந்து, உங்களை வேண்டிக் கொள்ளுகிறோம்" என்று 2கொரி 5:20-ல் நாம் வாசிக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் தூதுவனாக இருப்பது ஒரு மாபெரும் அழைப்பாகும். தேவனுடைய பிள்ளைக்கென்று ஒரு தனிப்பட்ட கௌரவம் உண்டு. ஓர் ஏழ்மையான நாட்டின் தூதுவனாய் இருப்பவனுக்கே ஒரு கௌரவம் உள்ளது. பெரியதும், வலியதுமான நாட்டிற்கு ஒருவன் தூதுவனாய் இருந்தால், அவனுக்குத் தரப்படும் கௌரவமும் அதிகமாகவே இருக்கும். இந்தியாவில் இருக்கும் அமெரிக்கத் தூதரை நினைத்துப் பாருங்கள். உலகிலேயே சூப்பர் பவராகத் திகழும் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறவராக அவர் தன்னை அறிந்திருக்கிறபடியால், அவர் எவ்வளவு கண்ணியமும், கம்பீரமுமாக இங்கே நடந்து கொள்வார் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகின்றதா? மலிவானதும், கௌரவக் குலைச்சலானதுமான எதையுமே அவர் செய்ய மாட்டார். அவர் ஜனங்களிடத்திலே போய் பணம் கேட்டுக் கொண்டிருக்க மாட்டார். தன்னுடைய நாட்டின் மதிப்பைக் குறைக்கும் எதையுமே அவர் செய்ய மாட்டார். அமெரிக்காவின் தூதுவர் உங்கள் வீட்டிற்கு வந்து, அவருடைய நாட்டின் முன்னேற்றத்திற்காக ஏதாவது பண உதவி செய்யும்படி உங்களிடம் கையேந்தி நிற்பதாக உங்களால் கற்பனை செய்ய முடியுமா?
ஒருவேளை கோட்டும்-சூட்டும் போட்ட ஒரு மனிதன் உங்களுடைய வாசற்படிமுன்போ அல்லது தொலைக்காட்சியிலோ தோன்றி, "நான்தான் அமெரிக்காவின் தூதுவர். எங்கள் நாட்டிலே நாங்கள் ஆற்றொணா பணத் தேவையில் இருக்கிறோம். நீங்கள் அன்பளிப்பாக ஒரு நூறு ரூபாய் தர முடியுமா?" என்று கெஞ்சுவதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் என்ன சொல்லுவீர்கள்? நீங்கள் அவரிடத்தில், "நீ ஓர் ஏமாற்றுப் பேர்வழி. நீ அமெரிக்கத் தூதுவன் அல்லன். அமெரிக்கத் தூதுவன் ஒரு போதும் இப்படியெல்லாம் பணம் கேட்க மாட்டான்" என்றுதான் சொல்லுவீர்கள் அல்லவா?
சரி. இப்பொழுது இன்னொரு மனிதன் உங்களுடைய வாசற்படி முன்போ அல்லது தொலைக்காட்சியிலோ தோன்றி, "நான்தான் இயேசு கிறிஸ்துவின் தூதுவன். எங்களுடைய ஊழியத்திற்காக, நாங்கள் ஆற்றொணா பணத்தேவையில் இருக்கிறோம். நீங்கள் அன்பளிப்பாக ஒரு நூறு ரூபாய் தர முடியுமா?" என்று கெஞ்சுவதாக வைத்துக் கொள்வோம். உடனே நீங்கள் அந்த ஆளை நம்பிப் பணத்தைக் கொடுத்துவிடுவீர்கள். ஏன்? ஏனெனில், உங்களைப் பொறுத்தவரை, நீங்கள் அமெரிக்கத் தூதுவனை ஒரு கம்பீரமான மனிதனாகவும், இயேசு கிறிஸ்துவின் தூதுவனையோ ஒரு பிச்சைக்காரனாகவும் கற்பனையிலே வடித்து வைத்து இருக்கிறீர்கள்.
இம்முழு அண்டசராசரத்திலும் ஒரேயொரு சூப்பர் பவர்தான் உண்டு. அது சர்வ வல்லமையுள்ள தேவனின் ராஜ்ஜியமாகும். அமெரிக்காவின் தூதுவனால் இப்பூமிக்குரிய மிகப் பெரும் சூப்பர் பவரைத் தான் பிரதிநிதித்துவப்படுத்த முடியும். ஆனால் நான் இம்முழு அண்டசராசரத்தின் மிகப் பெரிய சூப்பர் பவரின் தூதுவன் என்பதை மிகத் தாழ்மையுடன் தெரிவிக்கிறேன். இயேசுவின் எந்த ஓர் உண்மைச் சீஷனும் இப்படித்தான் இருப்பான். அப்படிப்பட்ட தூதுவனின் கம்பீரத்துடன் வலம் வருபவர்தானா நீங்கள்? தொலைக் காட்சியிலும், சபைக் கூட்டங்களிலும், விண்ணப்பக் கடிதங்கள் மூலமாகவும் கிறிஸ்தவ ஊழியர்கள் பணத்துக்காக யாசிக்கிறார்கள். இதினிமித்தம், இயேசு கிறிஸ்துவின் நாமமானது கண்ணியக் குறைவாகவும், மிக மலிவாகவும் மகிமைக் குலைச்சலாகின்றது. இதைக் காணும் போது என்னுள்ளம் வலியினால் துடிக்கின்றது. "நான் பசியாயிருந்தால் உனக்குச் சொல்லேன்; பூமியும் அதன் நிறைவும் என்னுடையவைகளே" (சங்கீ 50:12) என்று கர்த்தர் சொல்லுகிறார். அது போலவேதான் தேவனுடைய மெய்யான ஊழியனும், "நான் பசியிலும், தேவையிலும் இருந்தாலும், உங்களுக்குச் சொல்ல மாட்டேன். இம்முழு பூவுலகிற்கும் சொந்தக்காரரான எனது எஜமானிடம் மட்டும்தான் சொல்லுவேன்" என்றுதான் சொல்லுவான்.
ஒரு தூதுவன் தனது தாய் நாட்டுடன் இடையறா தொடர்புடையவனாகவே இருப்பான். ஒரு நாள்கூட அவன் தன் தாய் நாட்டுடன் தொடர்பற்றிருக்க மாட்டான். இது போல வாழும்படிக்குத்தான் நாமும் அழைக்கப்பட்டிருக்கிறோம். ஒருவேளை தேவனுடைய ஊழியர்கள் சைக்கிளில்தான் போக முடியும் என்ற அளவிற்குத் தரித்தரராய் இருக்கலாம். அப்படி இருந்தாலும் அவர்கள் தங்களை இம்முழு அண்டசராசரத்திலும் சூப்பர்பவராய்த் திகழும் தேவ ராஜ்ஜியத்தின் தூதர்கள் என்று பறைசாற்றி கம்பீரத்தோடு பீடுநடை போடுகிற நாளை நாம் என்று காண்போமோ என்று என் உள்ளம் ஏங்குகின்றது. ஆனால் இது போன்ற எத்தனை கிறிஸ்துவ ஊழியர்களை நீங்கள் சந்தித்திருக்கிறீர்கள்? பெருவாரியான கிறிஸ்தவ ஊழியர்கள் பணக்காரர்களின் பின்னால் அலையும் கௌரவப் பிச்சைக்காரர்களாகவே உள்ளனர். இது மிகவும் துக்ககரமான விஷயமாகும்.
நீங்கள் ரயிலில் பயணிக்கும் போதும், பேருந்தில் பயணிக்கும் போதும், அல்லது வேறெங்கு செல்வதாயிருந்தாலும், நீங்கள் இயேசு கிறிஸ்துவின் தூதுவர் என்பதை உங்களுடைய நினைவிலிருந்து நீக்க வேண்டாம்.
2 கொரிந்தியர் 6:3-10 வசனங்களில், பவுல் தான் ஒரு கிறிஸ்துவின் தூதுவனாக நடந்து கொண்டவிதத்தைப் பற்றி இப்படியாக விவரிக்கிறார்: "இந்த ஊழியம் குற்றப்படாதபடிக்கு, நான் யாதொன்றிலும் இடறல் உண்டாக்கவில்லை. மிகுந்த பொறுமையிலும், உபத்திரவங்களிலும், நெருக்கங்களிலும், இடுக்கண்களிலும், அடிகளிலும், காவல்களிலும், கலகங்களிலும், பிரயாசங்களிலும், கண்விழிப்புகளிலும், உபவாசங்களிலும் என்னை தேவ ஊழியக்காரனாக விளங்கப்பண்ணுகிறேன். சில சமயங்களில் நாங்கள் பிறரிடமிருந்து கனத்தைப் பெற்றுக் கொள்ளுகிறோம்; சில சமயங்களில் கனவீனத்தைப் பெறுகிறோம். எங்களைச் சிலர் பாராட்டுகிறார்கள்; சிலர் குற்றப்படுத்துகிறர்கள். சிலர் எங்களைப் பற்றி நல்ல விதமாய்ப் பேசுகிறார்கள்; சிலர் எங்களைப் பற்றித் தீமையாய்ப் பேசுகிறார்கள். ஆனால் இவையெல்லாவற்றிலும் நாங்கள் எங்களை இயேசு கிறிஸ்துவின் தூதுவராக விளங்கப்பண்ணுகிறோம். சிலர் எங்களை தேவனுடைய ஊழியர் என்று அழைக்கிற அதே வேளையில், வேறு சிலரோ எங்களை எத்தர் என அழைக்கின்றனர். நாங்கள் உலகத்தால் அறியப்படாதவர்களாக இருந்தாலும், தேவ ஜனங்களால் நன்றாய் அறியப்பட்டவர்களாய் இருக்கிறோம். சாகிறவர்கள் எனப்பட்டாலும், உயிரோடிருக்கிறோம். நாங்கள் பல்வேறு உபத்தரவங்களினூடே கடந்து போனாலும், தேவனுடைய வேளை வருமுன்னர் மரிப்பதில்லை என்பதை அறிந்திருக்கிறோம். நாங்கள் தேவனால் சிட்சிக்கப்பட்டாலும், இன்னும் மரித்துவிடவில்லை. நாங்கள் அடிக்கடி துக்கமடைகிறோம். அத்துக்கம், மற்றவர்கள் எங்களைக் காயப்படுத்துகிறார்கள் என்பதற்காக அல்ல. அநேகர் பாவத்திலே அழிந்து போவதினிமித்தமும், அநேக விசுவாசிகள் இன்னும் மனுஷீகமாய் நடக்கிறார்களே என்ற அக்கறையினிமித்தமும் அப்படி ஆதங்கமடைறோம். ஆனாலும் எங்களுடைய சந்தோஷம் கர்த்தருக்குள் உள்ளபடியால், நாங்கள் எப்பொழுதும் மகிழ்ந்து களிகூருகிறோம். நாங்கள் உலகப் பொருளைப் பெற்றிருப்பதில் தரித்தரராய் இருந்த போதிலும், அநேகரை ஆவிக்குரிய ரீதியில் ஐஸ்வரியவான்களாக மாற்றுகிறோம். ஒருவிதத்திலே நாங்கள் ஒன்றும் இல்லாதவர்களாய் இருந்தாலும், இன்னொரு விதத்திலே எல்லாவற்றையும் உடையவர்களாய் இருக்கிறோம். ஏனெனில், நாங்கள் வானத்தையும் பூமியையும் உடையவர்களாய் இருக்கிறோம். எல்லாமே எங்களுடைய கைக்குள் அடக்கமாய் இருக்கின்றது. எங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் தேவன் எங்களுக்குத் தருகிறார். வங்கிக் கணக்கிலே எங்களுக்கு நிறைய பணம் இல்லாதிருக்கலாம், நாங்கள் அன்றாட காய்ச்சிகளாக இருக்கலாம். ஆனால் தேவன் எங்களைப் பொறுப்பெடுத்துக் கொள்ளுகிறார்." பவுல் இப்படித்தான் வாழ்ந்தார். "செழிப்பின் சுவிசேஷத்தை" அவர் ஒருபோதும் விசுவாசிக்கவில்லை.