WFTW Body: 

புதிய ஏற்பாட்டில் மையப் பொருளாக வைத்து அநேகக் காரியங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் பரிசுத்த ஆவியானவரைப் பற்றிச் சொல்லப்படுவதும் ஒன்றாகும். இதைப் போலவே ஏசாயா 40-66 அதிகாரங்களிலும் பரிசுத்த ஆவியானவர் ஒரு முக்கியமான மையப் பொருளாக வைத்துச் சொல்லப்படுகிறார்.

"இதோ நான் ஆதரிக்கிற என் தாசன்" (ஏசாயா 42:1). உண்மையான தேவ ஊழியன் தேவனாலேதான் ஆதரிக்கப்படுகிறானேயன்றி, பணத்தாலோ, ஸ்தாபனங்களாலோ, மனித பிரதிநிதிகளாலோ அல்ல. கர்த்தர் மட்டுந்தான் நம்மை எல்லாக் காலங்களிலும் ஆதரிக்க வேண்டும். மனுஷர் நமக்குச் சன்மானங்களைக் கொடுக்கலாம். ஆனால் நாமோ மனிதரையோ பணத்தையோ சார்ந்துவிடக் கூடாது, "ஆதரித்தல்" என்ற வார்த்தையானது, நாம் எதன்மீது சார்ந்திருக்கிறோம் என்பதைக் குறிக்கிறது. நாம் கர்த்தரை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும். நாம் எந்தவித உதவியும் இல்லாத இடத்திற்கு வரும்போதுதான், அவர் தம்முடைய ஆவியை நம்மேல் வைக்கிறார்.

"அவர் கூக்குரலிடவுமாட்டார், அதை வீதியில் கேட்கப்பண்ணவுமாட்டார்" என்று ஏசாயா 42:2-ல் எழுதப்பட்டுள்ளது. இந்தப் பகுதியானது, "...அவருடைய சத்தத்தை ஒருவனும் வீதிகளில் கேட்பதுமில்லை… நெரிந்த நாணலை முறிக்காமலும்…" என்று மத்தேயு 12:19,20-ல் தொடர்கிறது.

தன்னுடைய வாழ்க்கையைத் தாறுமாறாக்கிப் போட்ட மனுஷனை ஆண்டவர் சோர்வடையச் செய்யாமல், அவனை உற்சாகப்படுத்தி, அவனைக் குணமாக்குகிறார் என்பதே இதன் பொருளாகும். ஆண்டவர் மங்கியெரிகிற திரியை அணைப்பதில்லை. அதற்குப் பதிலாக அதைத் தீண்டிவிட்டு எரியப்பண்ணுகிறார். பலவீனமான விசுவாசிகளுக்கு உதவி செய்யவே தேவன் ஆசைப்படுகிறார். சோர்ந்து போய், மன உளைச்சலுக்குட்படுகிறவர்களின் ஆவியை உற்சாகமூட்டி அவர்களுக்கு உதவி செய்வதற்கே அவர் ஆர்வம் காட்டுகிறார்.

கர்த்தருடைய உண்மையான ஊழியனும் இந்த உற்சாகப்படுத்தும் ஊழியத்தையே உடையவனாயிருப்பான். அவன் மன அழுத்தத்திற்குட்பட்டவர்கள், துவண்டு போனவர்கள், நம்பிக்கையை இழந்து போனவர்கள், வாழ்க்கையில் வெறுப்புற்றவர்கள் ஆகியோரின் ஆவியைத் தூக்கி விடுகிறவனாயிருப்பான். நாம் எல்லாருமே இந்த ஊழியத்தை வாஞ்சிப்போமாக. ஏனெனில் எல்லா இடங்களிலும் இதுவே ஜனங் களுடைய தேவையாய் இருக்கிறது.

ஏசாயா 42:6-8: "…நீர் குருடனுடைய கண்களைத் திறக்கவும்… நான் நீதியின்படி உம்மை அழைத்தேன்.. ". இது ஒரு பெரிய ஊழியமாகும். ஆனால் எப்பொழுதும் ஒன்றை நினைவில் நிறுத்துங்கள்: " 'நான் என்னுடைய மகிமையை வேறொருவனுக்கும் கொடேன்' என்று கர்த்தர் சொல்லுகிறார்" (ஏசாயா 42:8). நம்முடைய ஊழியத்திலே நமக்கென்று யாதொரு மகிமையையும் எடுத்துக்கொள்ளக் கூடாது. புகழையோ, மகிமையையோ நமக்கென்று எடுத்துக் கொள்ளுவது மிக, மிக சீரியஸான குற்றமாகும். அது பணத்தைத் திருடுவதை விட மோசமான செயலாகும். தேவன் உங்களையும், உங்களுடைய ஊழியத்தையும் வல்லமையாய்ப் பயன்படுத்தலாம். ஆனால் அவர் தம் மகிமையை வேறொருவனுக்கும் கொடார். நீங்கள் தேவனுடைய மகிமையைத் தொட ஆரம்பித்தால், கர்த்தருடைய ஊழியக்காரர் அநேகர் அழிக்கப்பட்டதைப் போலவே நீங்களும் உங்களை அழித்துக் கொள்வீர்கள். ஜனங்களுக்கு முன்பாக உங்களை நீங்களே உயர்த்த ஆரம்பித்து, கர்த்தரிடத்திலே ஜனங்களை நடத்தாமல், உங்களிடத்திலே இழுத்துக் கொண்டு, தேவன் செய்த காரியத்துக்கு நீங்கள் புகழை எடுத்துக் கொள்கிறவர்களாய் இருந்தால், நீங்கள் அபாயகரமான இடத்திலே நிற்கிறீர்கள். இப்படித்தான் ஆயிரமாயிரம் பேர்கள் தங்கள் வாழ்க்கையில் தேவனுடைய அபிஷேகத்தை இழந்துள்ளார்கள்.

ஏசாயா 42:19: "என் தாசனையல்லாமல் குருடன் யார்? நான் அனுப்பிய தூதனையல்லாமல் செவிடன் யார்? என்னுடனே சமாதானத்தைக் காத்துக்கொள்ளுகிறவனையே அல்லாமல் குருடன் யார்? கர்த்தருடைய ஊழியக்காரனையல்லாமல் அந்தகன் யார்?" இந்த வசனம் இயேசுவை மட்டுமே குறிப்பிட்டுச் சொல்லுவதாக ஒன்றாம் வனத்தில் சொல்லப்படுவதால், அது நம்மைக் குழப்புவது போலத் தெரிகிறது (1-ஆம் வசனத்திலிருந்து நாம் பார்க்கிறபடியே).

இதனுடைய அர்த்தம் என்ன? கர்த்தருடைய ஊழியக்காரன் தான் காண்கிறதும், கேட்கிறதுமான அநேகக் காரியங்களுக்கு குருடனாகவும், செவிடனாகவும் இருக்கிறான். அவன் அநேகக் காரியங்களைக் கண்டாலும், அவற்றை உற்றுக் கவனிப்பதில்லை (ஏசாயா 42:20). அவன் யாரிடத்தில் என்ன பாவம் உள்ளது என்று அறியச் சுற்றித் திரிவதில்லை. அவன் ஜனங்களை அவர்கள் சொல்லும் எந்தக் காரியத்திலே சிக்க வைக்கலாம் என்ற எண்ணத்துடன் அவர்களைக் கவனித்துக் கேட்பதில்லை. பரிசேயர்கள்தான் அப்படி யிருந்தார்கள். இயேசுவை அவர் சொல்லுகிற எந்தக் காரியத்திலே சிக்கவைத்து குற்றப்படுத்தலாம் என்று நோட்டம் விட்டுக் கொண்டிருந்தனர். துரதிர்ஷ்டவசமாய் அநேகக் கிறிஸ்தவர்களும் கூட ஒரு நபரை அவருடைய எந்த வார்த்தையை கொண்டு குற்றப்படுத்தலாம் என்றே காத்திருக்கிறார்கள். பெரும்பாலும் அந்த நபரின் ஊழியத்தின் மீது பொறாமை கொண்டே அப்படிச் செய்கிறார்கள். நீங்கள் அப்படி இருக்க வேண்டாம்.

நீங்கள் உங்களைச் சுற்றிக் கேட்கின்ற, பார்க்கின்ற அநேகக் காரியங்களுக்குச் செவிடராகவும், குருடராகவும் இருந்து விடுங்கள். உங்களுக்கு விரோதமாக யாரோ ஒருவர் பொய்யாய் குற்றம் சாட்டுவதைக் கேட்டு விட்டீர்களா? நீங்கள் செவிடராய் இருந்திருந்தால், அதைக் கேட்டிருக்கமாட்டீர்களே. ஆகவே "செவிடராய்" இருந்து விடுங்கள்! கவர்ச்சியான பெண்களுக்கு முன் கர்த்தருடைய ஊழியக்காரன் "குருடனாய்" இருப்பது நல்லதில்லையா? உங்களுக்குக் கண்கள் உண்டு; ஆனால் நீங்கள் காண்பதில்லை. நீங்கள் "குருடர்கள்"! உங்களுக்குச் செவிகள் உண்டு; ஆனால் நீங்கள் கேட்பதில்லை! ஏனெனில் நீங்கள் உங்கள் கண்கள் கண்டபடியும், காதுகள் கேட்டபடியும் ஒன்றையும் நியாயந்தீர்ப்பதில்லை. இப்படித்தான் இயேசு வாழ்ந்தார்; இப்படித்தான் நாமும் வாழவேண்டும் (ஏசாயா 11:3).