நீங்கள் மார்க்கபக்திக்கும் ஆவிக்குரிய வாழ்விற்கும் உள்ள வித்தியாசத்தை அறியக் கற்றுக்கொள்ள வேண்டும். மார்க்கபக்தி என்பது பல கிறிஸ்தவ நடவடிக்கைகளில் பங்கேற்பதை உள்ளடக்கியிருக்கிறது. ஆனால் ஆவிக்குரியவராக இருப்பதானது, (எல்லாவற்றையும் பற்றிய) நமது மனப்பான்மையை இயேசு கொண்டிருந்த அதே மனப்பான்மைக்கு மாற்றும்படி பரிசுத்த ஆவியானவரை அனுமதிப்பதாகும் (பிலிப்பியர் 2:5, "கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது…"). ஸ்திரீகள், பணம், ஜனங்கள், சூழ்நிலைகள், பூமிக்குரிய கனம் போன்றவற்றின் மீதான நம்முடைய மனப்பான்மையில் மாற்றம் நிகழவில்லை என்றால், நாம் ஆவிக்குரிய ரீதியில் வளர்ந்து வருகிறோம் என்று நம்பி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக்கூடாது. வெறும் மதச் செயல்பாடுகள் நம்மைப் பரிசேயர்களைப் போல வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளாகவே மாற்றும். தவறான மனப்பான்மைகளிலிருந்து நாம் இரட்சிக்கப்பட, பரிசுத்த ஆவியின் உதவியின் மூலம், நாம் எல்லா வகையிலும் பிரயாசப்பட வேண்டும்.
மார்க்கவாதியாய் இருப்பதற்கும் ஆவிக்குரியவர்களாய் இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. பழைய உடன்படிக்கையின் கீழ், நீதியைப் பின்பற்றிய பலர் மார்க்கபக்திகொண்ட பரிசேயர்களாக மாறினார்கள். அவர்கள் இயேசுவின் மிகப் பெரிய சத்துருக்களாயிருந்தார்கள். இன்றும் கூட, புதிய உடன்படிக்கையின் சத்தியங்களை நியாயப்பிரமாணத்தின் ஆவியில் பெற்றுக்கொண்டு, வெறும் மார்க்கபக்திக்காரர்களாய் மாத்திரம் மாறிட முடியும். அப்படியானால் இன்றும் நாம் தேவனுடைய மிகப் பெரிய சத்துருக்களாக இருப்போம்.
பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவனைப் பிரியப்படுத்துவதைக் காட்டிலும், தேவனுடைய வார்த்தையை உலகக் கல்வியைப் போலப் படிப்பதில் அதிக ஆர்வம் கொண்ட ஒருவர், ஓர் ஆவிக்குரிய கிறிஸ்தவராக அல்லாமல், ஒரு மார்க்கபக்திகொண்ட பரிசேயராக முடிவடையும் ஆபத்தில் இருக்கிறார். பழைய ஏற்பாட்டில் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை தியானிக்கும்படி அவர்களுக்கு கட்டளையிடப்பட்டது (சங்கீதம் 1:2). ஆனால் புதிய ஏற்பாட்டில் நாம் சுவிசேஷங்களில் காணும் கர்த்தராகிய இயேசுவின் மகிமையை தியானிக்க வேண்டும் (2கொரிந்தியர் 3:18). எழுத்து கொல்லும். ஆவியோ உயிர்ப்பிக்கிறது.
தேவனுடைய ராஜ்யமானது சமாதானத்தோடும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷத்தோடுமுள்ள நீதியாயிருக்கிறது (ரோமர் 14:17). மார்க்கபக்தியானது மனுஷீக நீதியைக் கொண்டிருக்கலாம், ஆனால் அது சமாதானத்தையும் சந்தோஷத்தையும் கொண்டிருக்காது. அதில் முறுமுறுப்பும் தர்க்கிப்பும், பயங்களும் கவலைகளும் இருக்கும். உண்மையான கிறிஸ்தவம் என்பது பரிபூரண சமாதானத்தைக் கொண்டுவரும் ஒரு விசுவாசமாகும் - தேவனுடனான சமாதானம் (அனைத்து விஷயங்களிலும் தெளிவான மனசாட்சி), மனிதர்களுடனான சமாதானம் (நம்மைப் பொருத்தவரையில்), மற்றும் உள்ளான சமாதானம் (கவலை மற்றும் பதற்றத்தில் இருந்து விடுதலை). இது பரிபூரண சந்தோஷத்தையும் தருகிறது - எல்லாச் சூழ்நிலைகளிலும் நன்றியும் துதியும் நிரம்பி வழியும் வாழ்க்கை. நாம் இவ்வாறு பாடுகிறோம்:
"தமது சொந்த துக்கங்களுக்காக கண்ணீர் இல்லை அவரிடம்
ஆனால் இரத்த வியர்வையின் துளிகளோ எனது துக்கங்களுக்காகவே"
இப்படித்தான் இயேசு வாழ்ந்தார். அவர் ஒருமுறை கூட தமக்காக வருத்தப்பட்டதேயில்லை. இரத்தம் சிந்திய போதும் சிலுவையைச் சுமந்த போதும், "எனக்காக அழாதீர்கள்" (லூக்கா 23:28) என்று மற்றவர்களிடம் கூறினார். அவரிடம் சுய அனுதாபம் இல்லை. அவர் தமது பிதாவின் முகத்திற்கு முன்பாக வாழ்ந்தபடியால், மற்றவர்களால் மோசமாக நடத்தப்பட்ட போதும் கூட அவர் தொடர்ந்து மகிழ்ச்சியாயிருந்தார். நாமும் அப்படித்தான் இருக்க வேண்டும் - நம் சொந்த துக்கங்களுக்காக நாம் கண்ணீர் சிந்துகிறவர்களாயிருக்கக் கூடாது.
மார்க்கபக்தியானது பல செயல்பாடுகளைக் கொண்டிருக்கலாம். ஆனால் அது பெருமையோடிருந்து மற்றவர்களை அற்பமாக எண்ணுகிறது. நாம் மற்றவர்களை அற்பமாகப் பார்க்கும்தோ அல்லது நமது நீதியைப் பற்றிப் பெருமைப்படும்போதோ, நாம் ஆவிக்குரியவர்களாய் அல்லாமல் மார்க்கவாதிகளாகவே இருக்கிறோம். (தாழ்மை என்பது ஒரு புதிய உடன்படிக்கை நற்பண்பாயிருப்பதால், பழைய ஏற்பாட்டில் அதுபற்றி அதிகம் பேசப்படவில்லை). வேத அறிவில் நாம் வளருகிற எல்லா வளர்ச்சியோடும் சேர்த்து, வெறும் அதிக மார்க்கபக்தி கொண்டவர்களாய்த் தங்கிவிடாதபடி, நாம் அதிக ஆவிக்குரியவர்களாய் மாறுவதை உறுதிசெய்துகொள்ள வேண்டும்.
உங்களைத் துன்புறுத்திய ஒவ்வொருவரையும் மன்னியுங்கள், தேவனுடனும் மனிதர்களுடனும் எல்லாவற்றையும் சரிசெய்யுங்கள், பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படுவதை ஊக்கத்துடன் தேடுங்கள், மேலும் தேவனுடைய கிருபையால் இயேசுவின் மரணத்தின் வழியில் அனுதினம் நடக்கத் தீர்மானியுங்கள். அப்பொழுது நீங்கள் ஓர் ஆவிக்குரிய நபராய் மாறுவீர்கள்.