WFTW Body: 

ஏசாயா 40-ஆம் அதிகாரத்திலிருந்து தொடங்குகிற, ஏசாயா புத்தகத்தின் பிற்பகுதியானது கிறிஸ்தவர்களுக்கான சில அற்புதமான வாக்குத்தத்தங்களைக் கொண்டுள்ளது. ஏசாயா புத்தகத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன: முதல் உள்ள 39 அதிகாரங்களும் பழைய ஏற்பாட்டின் 39 புத்தகங்களுக்கு ஒத்திருக்கின்றன; அடுத்த 27 அதிகாரங்களும் புதிய ஏற்பாட்டின் 27 புத்தகங்களுக்கு ஒத்திருக்கின்றன. ஏசாயாவின் கடைசி 27 அதிகாரங்களும் அடிப்படையிலேயே புதிய உடன்படிக்கையின் தீர்க்கதரிசனங்களாகும் - அந்த தீர்க்கதரிசனங்களில் பெரும்பாலானவை கிறிஸ்துவை சுட்டிக் காட்டுகின்றன, அவற்றில் பெரும்பாலானவை இயேசுவின் அடிச்சுவடுகளை நாம் பின்பற்றும்படி நமக்குக் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. எனவே ஏசாயா 40 முதல் 66 வரையிலான அதிகாரங்களில் உள்ள சில அற்புதமான வாக்குத்தத்தங்கள் புதிய உடன்படிக்கையில் நமக்கு முக்கியமாக தொடர்புடையவையாக இருக்கின்றன.

ஏசாயா 66:1-2 வசனங்கள், இயேசு கிறிஸ்துவின் மெய்யான சபையைக் கட்டுவதற்கான ஒரு சித்திரமாயிருக்கிறது. பாதாளத்தின் வாசல்கள் ஒருபோதும் அதை எதிர்த்து மேற்கொள்ளுவதில்லை. “வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி; நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் ஸ்தலம் எப்படிப்பட்டது? மனுஷர்களாகிய நீங்கள், மறுபிறப்படைந்த கிறிஸ்தவர்கள் என்று உங்களை அழைத்துக்கொள்ளுகிறவர்களே, எனக்காக எங்கே (எப்படி) தேவனுடைய சபையைக் கட்டப் போகிறீர்கள்?”

இப்படிப்பட்ட ஒருவனையே நான் நோக்கிப் பார்ப்பேன்” என்று தேவன் கூறும்போது, பாதாளத்தின் வாசல்கள் மேற்கொள்ளாத தம்முடைய சபையைக் கட்டுவதற்கு ​​தாம் தயவுடன் நோக்கிப்பார்க்கிற நபர் எப்படிப்பட்டவராயிருப்பார் என்று விளக்குகிறார். அந்த சபை ஆதாமின் வம்சாவழியில் காணப்படும் கோபம், காமவிகாரம், விபச்சாரம், பொய், திருடு மற்றும் பிற மோசமான காரியங்களால் சாத்தான் ஊடுருவ முடியாத சபையாகும்.

"சிறுமைப்பட்டு ஆவியில் நொறுங்குண்டு என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்" (ஏசாயா 66:2). தேவன் தேடும் பிரதானமான தகுதி மனத்தாழ்மையும் நொறுங்குதலும் அல்லது நொறுங்குண்ட ஆவியுமே ஆகும். தங்களைப் பற்றி தாழ்வான சுயமதிப்பீடு கொண்டவர்களை அல்ல, தங்களைப் பற்றி தாழ்ந்த சிந்தையுள்ளவர்களையே தேவன் நோக்கிப் பார்க்கிறார். இயேசுவானவர் தம்மை குறைவாக மதிப்பீடு செய்து (தாழ்வு மனப்பான்மை) கொள்ளவில்லை. அவர் தேவகுமாரன். அவர் தமது சீஷர்களிடம், “நீங்கள் என்னைப் போதகரென்றும் ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான்” (யோவான் 13:13) என்றார். தாம் யார் என்பதில் அவருக்கு எந்த சந்தேகமும் இல்லை. தாம் தேவனுடைய குமாரன் என்பதை அவர் அறிந்திருந்தார். தம்மைப்பற்றி அவருக்கு எவ்வித தாழ்வு மனப்பான்மையும் இல்லை. ஆனால் அவர் மிகுந்த மனத்தாழ்மையைக் கொண்டிருந்தார், அவர் மற்றவர்களை தம்மால் பணிவிடை செய்யப்பட வேண்டியவர்களாகக் கருதினார். மேலும் அவர் அவர்களுடைய கால்களைக் கழுவினார். அவர் யூதாஸ்காரியோத்தின் கால்களைக் கூட கழுவினார் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதுதான் தாழ்மை, இன்னும் சில மணிநேரங்களில் உங்களைக் காட்டிக் கொடுக்கப் போகிறவரின் கால்களைக் கழுவுகிற தாழ்மை. அவருக்கு தம்மைப் பற்றி எவ்வித குறைவான மதிப்பீடும் இல்லை, ஆனால் தாழ்ந்த நிலையை அவர் தெரிந்துகொண்டார். அவர் தம்மைப் பற்றி தாழ்ந்த சிந்தையைக் கொண்டிருந்தார். மற்றவர்களுடனான நமது உறவைப் பற்றி பிலிப்பியர் 2:3ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்” என்று கூறுகிறது. அதுதான் முதன்மையான தரம், நொறுங்குண்ட ஆவியையுடைய நிலை. நாம் இன்னும் கிறிஸ்துவைப் போல மாறவில்லையே என்ற துக்கத்தில் கொண்டுள்ள நொறுங்குண்ட இருதயம். தேவன் இப்படிப்பட்ட நபரையே நோக்கிப் பார்க்கிறார்.

ஏசாயா 66:2-ல், தேவன் ஒரு நபரிடம் தேடும் இரண்டாவது தகுதி என்னவெனில், “என் வார்த்தைக்கு நடுங்குகிறவன்” என்பதாகும். இதனை இயேசுவின் கற்பனைகளோடு தொடர்புபடுத்திப் பார்ப்பது மிகவும் முக்கியமானதாகும். மலைப்பிரசங்கத்தைப் படிக்கும்போது, தேவனுடைய வார்த்தைக்கு நீங்கள் நடுங்குகிறீர்களா? நீங்கள் கோபப்பட்டு, அந்த கோபத்தில் ஒருவரிடம் பேசினால், நீங்கள் நரகத்திற்குச் செல்லும் அளவுக்கு குற்றவாளி என்று கூறும் வார்த்தையைப் பார்த்து நீங்கள் நடுங்குகிறீர்களா? உன் கண் உன்னை இச்சிக்கச் செய்தால், அதைப் பிடுங்கி எறிந்து போடு; உன் கை பாலியல் பாவங்களைச் செய்ய வைத்தால், அதைத் தறித்து எறிந்து போடு; இதனைக் குறித்து தீவிர மனப்பாங்கு இல்லாவிடில் நரகத்தில் தள்ளப்படுவாய் என்ற பாலியல் பாவத்திற்கு எதிரான இந்த தேவனுடைய வார்த்தைக்கு நீங்கள் நடுங்குகிறீர்களா?

பல வருடங்களாக நான் இதைப் பற்றிப் பிரசங்கிப்பதைக் கேட்டவர்களில் கூட, அந்த வார்த்தையைக் கேட்டு நடுங்கும் மிகச் சில கிறிஸ்தவர்களையே நான் கண்டிருக்கிறேன். நான் பொறுப்பில் இருக்கும் சில சபைகளில், 25 வருடங்களாக இந்தப் பாவங்களுக்கு எதிராக நான் பிரசங்கிப்பதைக் கேட்ட ஜனங்கள்கூட, இன்னும் இந்த வார்த்தையைக் கேட்டு நடுங்குகிறது இல்லை என்பதை நான் வருத்தத்தோடு கூறுகிறேன். அநேக கிறிஸ்தவர்களின் நிலை இதுதான்: அவர்கள் இவற்றை அறிந்திருக்கிறார்கள், ஆனால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். பாவத்திலிருந்து நம்மை விடுவிக்க கிறிஸ்து சிலுவையில் செலுத்திய விலைக்கிரயத்தை நீங்கள் காணும்போது, ​​பாவத்தை எப்படி எளிதாக எடுத்துக் கொள்ள முடியும்? நான் அடிக்கடி பாடும் ஒரு பாடல் இவ்விதமாய்க் கூறுகிறது:

சோதிக்கப்படும்போதெல்லாம் என் கண்களைத் திறந்தருளும்,

தேவனே, என் ஆண்டவர் மாத்திரமே

கரங்களை விரித்தவராய் காயப்பட்டு நொறுக்கப்பட்டார்

தாம் உருவாக்கிய இந்த பூமியிலே அவரே இரத்தம் சிந்தினார்

இவையெல்லாம் என்னுடைய பாவங்களேயன்றி

வேறு எந்த பாவமும் இல்லை என்பதை உணரச்செய்யும்

இந்த பிரபஞ்சத்தையே சுமப்பவருக்கு

என்னுடைய பாவத்தின் பாரம் தாங்கக் கூடாததாகவே இருந்தது

என்பதைப் பார்க்கும்படி என் கண்களைத் திறந்தருளும்.

இந்தப் பிரபஞ்சத்தைத் தமது தோளில் சுமக்கக்கூடிய என் ஆண்டவருக்கு, என் பாவத்தின் சுமையைத் தாங்க முடியவில்லை என்பதை எனக்கு நினைவூட்டுவதற்காக நான் பலமுறை இந்தப் பாடலைப் பாடுகிறேன். என்னுடைய பாவம் அவரைக் கல்வாரி சிலுவையில் நசுக்கியது -- ஆம், இதுதான் பாவத்தின்மீது மிகப்பெரிய வெறுப்பை எனக்கு தந்திருக்கிறது, தேவனுடைய வார்த்தைக்கு என்னை நடுங்கச் செய்கிறது. மேலும் இதுவே கண்களினால் இச்சிப்பது என்பது எய்ட்ஸ் அல்லது புற்றுநோயை விடக்கொடியது என்று கிறிஸ்தவர்களுக்கு அறிவுறுத்தவும், அதனை அவர்களுக்குப் படிப்பிக்கும்படியும் என்னை பாரப்படுத்துகிறது.

நீங்கள் அதைப் புரிந்துகொள்ளும் நாளில், இந்தப் பாவங்களை நீங்கள் தீவிரமாக எதிர்த்துப் போராடுவீர்கள். எய்ட்ஸ் கிருமியினால் பாதிக்கப்பட்ட ஊசிகளைக்கொண்டு நீங்கள் முட்டாள்தனமாக விளையாட மாட்டீர்கள். ஏன் அவற்றைப் பற்றி இவ்வளவு கவனமாக இருக்கிறீர்கள், ஆனால் எய்ட்ஸை விட கொடியதான ஒன்றைப் பற்றி இன்னும் கவனமாக இல்லை? ஏன் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்: பாவமானது எய்ட்ஸ் மற்றும் புற்றுநோயை விட கொடியது என்று நீங்கள் நம்பவில்லை. எனவே நீங்கள் தேவனுடைய வார்த்தைக்கு நடுங்குவதில்லை. இதை நான் நம்பக் கற்றுக்கொண்டேன், அதனால்தான் கோபம், ஸ்திரீகளை இச்சிப்பது, விவாகரத்து போன்ற பாவங்களில் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன். பரலோக ராஜ்யத்தில் நுழைய, நமது நீதி வேதபாரகர்கள் மற்றும் பரிசேயர்களின் நீதியை விட அதிகமாக இருக்க வேண்டியிருக்கிறது.

இதை தீவிர ஜாக்கிரதையாக எடுத்துக் கொள்ளும் கிறிஸ்தவர்களும் இதை தீவிரமாகப் பிரசங்கிக்கும் பிரசங்கிமார்களும் மிகச் சிலராக இருப்பதையே நான் காண்கிறேன். மலைப்பிரசங்கத்தில் கூறப்பட்டவை நம் வாழ்வில் இருக்க வேண்டிய நமக்குத் தேவையான அடிப்படைக் காரியங்களாகும். “வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத்தேயு 5:20) என்றே இயேசு கூறினார்.

இதை நான் முழு மனதுடன் நம்புகிறேன். பத்துக் கட்டளைகளைக் காட்டிலும் மேலான ஒரு நீதியின் தரத்தை கிறிஸ்தவர்கள் காண்பிக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். விக்கிரகாராதனை என்பது மரத்தாலும் கல்லாலுமான சிலைகளுக்கு முன்பாக வணங்குவது மட்டுமல்ல. அது என்னுடைய இருதயத்தில் தேவனைத் தவிர வேறு ஏதோ ஒன்றுக்கு இடம் கொடுப்பதாகும். ஓய்வுநாளை ஆசரிப்பது என்பது ஓய்வுநாளில் வேலை செய்யாமல் இருப்பதல்ல; அது உள்ளார்ந்த ஜீவியத்தில் இளைப்பாறுதலுள்ள ஒரு வாழ்க்கை. விபச்சாரம் என்பது வெறும் உடல் ரீதியான விபச்சாரம் மட்டுமல்ல; அது கண்களால் இச்சிப்பதுமாகும். கொலை என்பது ஒருவரைக் கொல்வது மட்டுமல்ல; அது கோபமும் கூட. இவ்விதமாக நாம் அவரது அனைத்து கட்டளைகளையும் கருத வேண்டும்.

தேவன் தம்முடைய சபையைக் கட்ட நம்மைப் பயன்படுத்தும்படியாய், தேவனுடைய வார்த்தைக்கு நடுங்கக் கற்றுக்கொள்வோம். தேவன் தம்முடைய வீட்டைக் கட்ட எத்தகைய நபரைத் தேடிக் கண்டுபிடித்து பயன்படுத்துவார் என்பதை ஏசாயா 66:1-2-ல் நாம் பார்த்தோம். தேவன் நமக்கு உதவி செய்வாராக.