வேதப்புத்தகத்தின் ஆரம்பப் பக்கங்களையும் கடைசிப் பக்கங்களையும் ஒப்பிட்டுப்பார்க்கும்போது 'இரண்டு மரங்கள்' அதாவது, ஜீவவிருட்சமும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சமும்..... எருசலேம்! பாபிலோன்! ஆகிய இரண்டுவிதமான அமைப்புகளை அமைத்து விட்டதைப் பார்க்கிறோம்.
மெய்யாகவே ஆவியினால் பிறந்து, தேவனிடத்திலிருந்து, தேவன் மூலமாய், தேவனுக்காகவே உண்டானது என்றென்றும் நிலைத்திருக்கும்! மாறாக, மாம்சத்தினால் பிறந்து, மனிதனிடத்திலிருந்து, மனிதன் மூலமாய், மனிதனுக்காக உண்டானது யாவும் அழிந்துபோகும்!!
இன்றைக்கு நாம் ஆதியாகமத்துக்கும் வெளிப்படுத்தின விசேஷத்திற்கும் நடுவில் உள்ள பக்கங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! நாம் உணருகிறோமோ இல்லையோ, மேற்கண்ட ஏதாவது ஓர் அமைப்பில் தான் நாம் அகப்பட்டிருக்க வேண்டும். ஒன்று, தேவனை உயர்த்தி மகிமைப்படுத்துவதாயும்! மற்றொன்று, மனிதனை உயர்த்தி மகிமைப்படுத்துவதாயும்! இருக்கிறது. அல்லது ஒன்று, கிறிஸ்துவைப் பின்பற்றுகிறது. மற்றொன்று ஆதாமைப் பின்பற்றுகிறது! ஒன்று ஆவியினால் பிழைத்து நடக்கிறது. மற்றொன்று மாம்சத்தின்படி, ஆத்துமாவின்படி பிழைத்து நடக்கிறது!!
இயேசுவும், ஆதாமும், இரண்டு பேருமே தேவனுடைய சத்தத்தைக் கேட்டார்கள். வித்தியாசம் என்னவென்றால், ஒருவர் கீழ்படிந்தார்! மற்றவன் கீழ்படியவில்லை! இந்த வெளிச்சத்தின் விழிப்பைத் தருவதற்காகவே இயேசு சொன்னார்: “ஒருவன் கேட்டு கீழ்ப்படிந்து கன்மலையின் மேல் கட்டுகிறான், அது நித்தியத்துக்கும் அசைக்கப்படாமல் இருக்கிறது. மற்றவனும் கேட்கிறான், ஆனால் கீழ்ப்படியாமல் மணல் மேல் கட்டுகிறான், கடைசியில் அந்த வீடு அழிந்து போகிறது” (மத்தேயு 7:24-27).
இயேசுகிறிஸ்து பேசின இந்த இரண்டு வீடுகளில் ஒன்று, எருசலேமும்! மற்றொன்று, பாபிலோனும் தான்!
இன்றைக்கு விசுவாசத்தால் நீதிமான்களாக்கப்பட்டு, புதிய உடன்படிக்கைக்குள் பிரவேசித்து, இயேசுவின் இரத்தத்தினால் முத்திரையிடப்பட்டு, அவரைப் பின்பற்றி, தேவசித்தத்திற்கு கீழ்ப்படிந்து நடக்கிற வாழ்க்கையை உடையவர்கள்.. முக்கியமாக, மலைப்பிரசங்கத்தில் மத்தேயு 5 முதல் 7-ம் அதிகாரம் வரை சொல்லப்பட்ட கற்பனைகளைக் கைக்கொண்டவர்கள், கன்மலையின் மேல் கட்டப்பட்டவர்களாயும்; எருசலேமில் பங்கு வகிக்கிறவர்களாயும் இருக்கிறார்கள்! நாம் அப்படி இருக்கிறோமா என்பதை அறிந்து கொள்வதற்கு மத்தேயு 5 முதல் 7-ம் அதிகாரம் வரை நாம் கவனமாய் வாசிக்கக்கடவோம்!!
ஆனால், இன்றைய பெரும்பான்மையான அநேகர் மலைப்பிரசங்க வார்த்தைகளைக் கேட்கிறார்கள்.. ஆனால், நீதிமானாவதைக் குறித்தும்! விசுவாசத்தைக் குறித்தும்! கிருபையைக் குறித்தும்! தவறாக விளங்கிக் கொண்டு அதனிமித்தம் உருவான போலியான ஒரு பாதுகாப்பில் இருந்து கொண்டு' இயேசுவின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிய கவனம் செலுத்தாமல், மணலின்மேல் கட்டிய பாபிலோனாய் தேங்கி விடுகிறார்கள்! முடிவில், நித்தியமாய் அழிந்தும் போகிறார்கள்!!
இவர்கள், என் வார்த்தைகளைக் கேட்டவர்கள் என்றே இயேசு சொன்னார். எனவே அவர்கள் புறஜாதியராய் இருக்கமுடியாது. வேதம் வாசித்து சபைக்குப் போய்வந்தவர்கள் தான்! இவர்களுடைய ஒரே பிரச்சனை என்னவென்றால், கீழ்ப்படியவில்லை!! எனவே, “தமக்குக் கீழ்ப்படிகிறயாவருக்கும் வாக்குப்பண்ணின நித்திய இரட்சிப்புக்குப் பாத்திரர்களாய் இவர்கள் இல்லை” (எபி.5:9), இவர்களுடைய விசுவாசம் மெய்யானதாகவும் இல்லை. ஏனென்றால் கீழ்ப்படிதலின் கிரியைகளினால் அது பூரணப்படுத்தப்படவில்லை! (யாக்கோபு 2:22,26).
ஆதாமின் ஆளுகைக்குட்பட்டு, ஆதாமைத் தலையாய் கொண்டவர்கள் அனைவரும், அவனைப்போலவே, வெளிப்படுத்தப்பட்ட தேவ சித்தத்திற்குக் கூட கீழ்ப்படியாமல்தான் இருப்பார்கள்! மேலும், “இயேசுவை ஏற்றுக்கொண்டதினாலே நீங்கள் சாகவே சாவதில்லை” (ஆதியாகமம் 3:4) என்று சாத்தானால் வஞ்சிக்கப்பட்டும் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களே, பாபிலோனில் பொய்யானதொரு பாதுகாப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்!!
அப்படியே கிறிஸ்துவின் ஆளுகைக்குட்பட்டு, கிறிஸ்துவைத் தலையாய் கொண்டவர்கள், தங்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட தேவ சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து, அவர் நடந்தபடியே தானும் நடக்கிறவர்களாய் இருப்பார்கள்! இவர்களே கிறிஸ்துவின் சகோதர சகோதரிகள்! மேலும் எருசலேமிலும் பங்கு வகிப்பவர்கள்!! (1யோவான் 2:6; மத்தேயு 12:50)
மலைப்பிரசங்கத்தின் கடைசியில், இயேசுகிறிஸ்து கூறிய உவமானத்தில் உள்ள சுவாரசியமான விஷயம் என்னவென்றால் புத்தியுள்ளவன் கட்டின வீடும், புத்தியில்லாதாவன் கட்டின வீடும், பெருவெள்ளமும் காற்றும் அடிக்கும் மட்டும், கொஞ்ச காலம் நிலைத்திருக்கத்தான் செய்தது.... இன்றைக்குள்ள பாபிலோனும் எருசலேமும் நிலைத்திருப்பது போலவே! புத்தியில்லாதவன், தன்னுடைய வீட்டின் வெளித்தோற்றத்தைப் பற்றியே அக்கறை செலுத்தினான். அதாவது மனிதர்களுடைய பார்வையில் சாட்சி பெற்றிருந்தான்! புத்தியுள்ளவனோ, தன் அஸ்திபாரத்தின் மேல் முக்கியமாய் அக்கறை செலுத்தினான் (அதாவது இருதயத்தின் மறைவான வாழ்க்கையில் தேவனுக்கு முன்பாக வாழ்ந்தான்).
எருசலேமின் மிளிர்ந்திடும் ஓர் தனித்தன்மை, பரிசுத்தம்! அது 'பரிசுத்த நகரம்' என்றே அழைக்கப்படுகிறது (வெளி 21:2). ஆனால் பாபிலோனோ அதன் “மகாமேன்மையில்” பிரசித்தமாயிருக்கிறது. அது ‘மகா நகரம்' என்றே அழைக்கப்படுகிறது (வெளி 18:10). இவ்வாறு பதினோரு முறை மகா நகரம் என்று வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
மெய்யான பரிசுத்தத்தில் வாழ்பவர்கள், தேவனுக்குக் கீழ்ப்படிந்து, கிருபையினால் விசுவாசத்தைக்கொண்டு கிறிஸ்துவின் சுபாவத்திற்குப் பங்காளிகளானவர்கள் பரம எருசலேமில் கட்டப்பட்டிருக்கிறார்கள்! மாறாக, இவ்வுலகத்தில் உயர்வைத் தேடுகிறவர்களோ, மனிதருடைய சாட்சியையும், அவர்களின் கனத்தையும் தேடி பாபிலோனில் கட்டப்பட்டிருக்கிறார்கள்!!
2000-ம் வருடங்களாக தேவஜனத்துக்கு ஓர் அழைப்பின் சத்தம் கேட்டுக்கொண்டேயிருக்கிறது:
“என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு (பாபிலோனை விட்டு) வெளியே வாருங்கள்” என்ற அழைப்பு! (வெளி 18:4).
காலத்தின் கடைசியை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிற நமக்கு இந்த அழைப்பு மிகவும் அவசர அழைப்பாய் இருக்கிறது!! கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்!!