WFTW Body: 

"அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங்கொடுத்த வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். அல்லாமலும்: மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? அதினோடே யுத்தம் பண்ணத்தக்கவன் யார்? என்று சொல்லி, மிருகத்தையும் வணங்கினார்கள்" என்று வெளி 13:6-ல் நாம் வாசிக்கிறோம்.

இந்த முழு பூமியும் இப்பொழுது சாத்தானை ஆராதிக்கின்றது. ஆதியிலிருந்தே சாத்தானானவன் இதைத்தான் விரும்பினான். தேவனைப் போலாக வேண்டும் என லூசிபர் விரும்பினதை ஏசாயா 14:14 எடுத்துரைக்கின்றது. தேவன் ஏற்கனவே லூசிபருக்கு ஞானம், அழகு, திறமை, இயற்கைக்கு அப்பாற்பட்ட வரங்கள் ஆகிய பலவித அற்புதமான ஈவுகளை வழங்கி இருந்தார். இதற்கு மேல் அவனுக்கு என்ன வேண்டும்? அவன் விரும்பியதெல்லாம் தேவன் ஆராதிக்கப்பட்டது போலவே தானும் ஆராதிக்கப்பட வேண்டுமென்பதுதான். இப்படியாகத்தான் அவன் பிசாசாக உருவெடுத்தான்.

உங்களுக்கு எப்பொழுதெல்லாம் ஜனங்களுடைய பாராட்டின்மீது நாட்டம் வருகிறதோ, அப்பொழுதெல்லாம் சாத்தானிடமிருந்த ஆசை உங்களுக்குள்ளே வந்துவிட்டது என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். மனுஷருடைய கனத்தை நாடுவது பேய்த்தனமான செயலாகும். சாத்தான் விரும்பியது போலவே எல்லாவற்றிற்கும் முடிவிலே, இந்த முழு உலகமும் அவனை நமஸ்கரிப்பதாக நாம் இங்கு காண்கிறோம். தற்சமயம் இந்தக் காரியங்களெல்லாம் சிறிய அளவிலே நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் வரும் நாட்களில் அவை இன்னும் அதிகமாக பரந்து விரியப் போகின்றன.

அவர்கள் சாத்தானை மட்டுமின்றி, அந்திக்கிறிஸ்துவையும் ஆராதித்தார்கள். அந்திக்கிறிஸ்துவை ஆராதிப்பது, அதாவது மனுஷனை ஆராதிப்பதென்பது உலகெங்கும் பரவலாகக் காணப்படுகின்றது. அவர்கள், "இந்த மிருகத்திற்கு ஒப்பானவன் யார்?" என்று சொல்லி அந்திக்கிறிஸ்துவை வணங்கினார்கள். நாம் தேவனைப் பார்த்து, "எங்கள் தேவனே, உமக்கு நிகரானவர் யார்?" என்று சொல்லி ஆராதிப்பதைப் போலவே, ஜனங்கள் எல்லாரும் அதே வார்த்தைகளைச் சொல்லி சாத்தானையும், அந்திக் கிறிஸ்துவையும் வழிபடுகின்றனர். ஜனங்கள் அந்திக்கிறிஸ்துவை, "அந்திக்கிறிஸ்து" என்னும் பெயராலேயே அழைப்பதில்லை. அவர்கள் அவனை ஒரு மரியாதைக்குரிய பெயரிட்டே அழைப்பார்கள்.

"பிள்ளைகளே, இது கடைசி காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறான் என்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசி காலம் என்று அறிகிறோம். அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து போனார்கள் (சபை நடுவிலிருந்து பிரிந்து போனார்கள்)" என 1யோவான் 2:18-ன் வாயிலாக நாம் வாசித்தறிகிறோம். முதல் நூற்றாண்டு சபையிலிருந்த ஜனங்களிடத்தில் அந்திக்கிறிஸ்துவின் ஆவி இருந்ததை இது நமக்குப் போதிக்கின்றது. இதே மாதிரியான ஜனங்கள் நம்முடைய நாட்களிலும் கிறிஸ்தவத்திலே உள்ளனர். அந்திக்கிறிஸ்துவின் ஆவியைப் பெற்ற ஜனங்கள் அரசியல் உலகத்திலும், தொழில்முனைவோர் உலகத்திலும், புறஜாதி மத வட்டாரத்திலும், "கிறிஸ்தவ சபைகள்" என்று அழைத்துக் கொள்ளுகிறவர்கள் மத்தியிலும் காணப்படுகிறார்கள்.

அந்திக்கிறிஸ்து ஆவியின் அடையாளம் என்ன? பல அடையாளங்களைச் சொல்லலாம். இவற்றில் முதன்மையான அடையாளமாக, அவர்கள் மற்றவர்களால் பாராட்டப்படுவதையும், உயர்த்தப்படுவதையும் விரும்புபவர்களாக இருப்பார்கள் என்பதைச் சொல்லலாம். இதை வேறு விதத்தில் சொன்னால், மனுஷரிடமிருந்து ஆராதனையைப் பெற்றுக் கொள்ளுவதற்கு இது ஒப்பானது எனலாம். ஒருவருக்கொருவர் கனத்தைத் தேடுகிற விஷயத்திற்கு எதிராகப் போராடாத எந்த ஒரு சபையும், அதி விரைவிலேயே அந்திக்கிறிஸ்துவின் ஆவியின் ஆளுகைக்கு இரையாவது நிச்சயம்.

மனுஷரின் கனத்தைத் தேடுகிறதான ஆசையானது நமது மாம்சத்திலே காணப்படுகிறது. பாராட்டப்பட வேண்டுமென்ற ஆசை, இன்னொருவரின் அங்கீகாரத்தையும், துதி பாடலையும் பெற வேண்டுமென்ற ஏக்கம் ஆகியவையெல்லாம் ஒரு விதை அல்லது குழந்தைப் பருவம் என்பதாகக் கொள்ளலாம். இப்பருவத்திலிருந்துதான் மனுஷரின் கனத்தைத் தேடுகிறதான ஆசை உற்பத்தியாகிறது. இப்படியாக உற்பத்தியான இந்த ஆசையானது மற்றவர்களின் ஆராதனையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற வாஞ்சையோடுதான் நிறைவடைகிறது. இதுதான் அந்திக்கிறிஸ்துவின் ஆவியாகும். சர்ப்பத்தின் முட்டை நமக்குள்ளே இருப்பதைக் கண்டவுடனேயே நாம் அதை நொறுக்கி அழித்துவிட வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால், என்றாவது ஒரு நாள் அதிலிருந்து ஒரு சர்ப்பம் பொரித்து வெளியில் வந்துவிடும். இந்த ஆவியானது உயர்மட்டத் தூதர்களாய் இருந்தவர்கள் மத்தியிலேயே வெளிப்பட்டதாகக் காண்கிறோம். அப்படியானால், அது நம் மத்தியில் இருப்பவர்களிடத்திலிருந்தும் வெளிப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? காதுள்ளவன் கேட்கக் கடவன்.

இப்பூமி முழுவதும் ஒரு நாளிலே அந்திக்கிறிஸ்துவைப் பின்பற்றிச் செல்லும் என்று நமக்குச் சொல்லப்பட்டுள்ளது. இந்த உலகம் கிறிஸ்துவைப் பின்பற்றவில்லை. "அவனை அகற்றும்; அவனைச் சிலுவையில் அறையும்" என்றேக் கூக்குரலிட்டது. ஆனால் அவர்கள் அந்திக்கிறிஸ்துவைப் பின்பற்றுவார்கள். ஏனெனில் பண்டைய கள்ளத் தீர்க்கதரிசிகளைப் போலவே அவனும் அவர்களிடத்திலே மிக இனிமையான வார்த்தைகளையேப் பேசுவான்.

கிறிஸ்துவின் ஆவி நமக்கு மனிதரிடமிருந்து நிந்தையையும், பரிகாசத்தையும், எதிர்ப்பையும் கொண்டுவரும். கிறிஸ்தவர்கள் இவ்வுலகிலே பிரபலமாக வேண்டுமென்று விரும்பினால், அவர்கள் அபாயகரமான தளத்திலிலே நிற்கிறார்கள் என்றுதான் அர்த்தம். அந்தத் தளமானது அந்திக்கிறிஸ்துவுக்குச் சொந்தமானதாகும். ஜனங்கள் தம்மை ராஜாவாக முடிசூட்ட விரும்புகிறார்கள் எனக் கேள்விப்பட்டு இயேசு பரவசமாகிவிடவில்லை. மனுஷரின் அபிப்ராயங்களெல்லாம் குப்பைக் கூடைக்குள் வீசியெறியப்பட வேண்டியவைகள் என்பதை இயேசு நன்றாகவே அறிந்திருந்தார். எனவே இயேசு அவர்களைத் திரும்பிப் பார்த்து, "நீங்கள் உங்களுடைய தகப்பன், தாயையும், சகோதரன், சகோதரியையும், மனைவி, பிள்ளைகளையும், சொத்துக்களையும், சொந்த ஜீவனையும் வெறுக்க வேண்டும்" ( லூக் 14:26-33) என்று சொன்னார். இதைக் கேட்ட அநேகர் இடறுகிற அளவிற்கு அவைக் கடினமான வார்த்தைகளாக இருந்தன. இன்றும் கிறிஸ்துவின் மெய்யான சபை அதே வார்த்தைகளையேப் பிரசங்கிக்கிறது. அப்பிரசங்கமானது, கிறிஸ்துவின் நாட்களில் எப்படி அநேகரை இடறச் செய்ததோ, அதைப் போலவே இன்றும் ஜனங்களை இடறச் செய்யக்கூடிய கடின வார்த்தைகளாகவே உள்ளது. இதினிமித்தம் கிறிஸ்துவின் நிந்தை நம்மீது சுமத்தப்படுகிறது. இப்படியாகத்தான் நாம் அந்திக்கிறிஸ்துவின் ஆவியிலிருந்து பாதுகாக்கப்படுகிறோம். ஆனால் பாபிலோனிய கிறிஸ்தவமோ இச்செய்திகளையெல்லாம் பிரசங்கிப்பதில்லை. அதனால் அது மனுஷனால் கனப்படுத்தப்படுகிறது. இப்படியாக அந்திக்கிறிஸ்துவின் ஆவி வெளிப்படுவதற்கு அது பாதை அமைத்துக் கொடுக்கின்றது.