WFTW Body: 

சாத்தான் இரவும் பகலும் இடைவிடாமல் எல்லா விசுவாசிகளின் மீதும் தேவனுக்கு முன்பாகக் குற்றஞ்சாட்டுகிறான் என்று வெளி 12:10-இல் வாசிக்கிறோம். இது சாத்தான் ஈடுபட்டிருக்கும் ஒரு முழுநேர ஊழியமாகும். மேலும் இந்த ஊழியத்தில் அவனுக்கு அநேக உடன் ஊழியர்கள் இருக்கிறார்கள். விசுவாசிகளின் மத்தியிலும் அவனுக்கு அநேக உடன் ஊழியர்கள் இருக்கிறார்கள் என்பது வருத்தமளிக்கக்கூடிய ஒன்றாயிருக்கிறது. இந்த குற்றஞ்சாட்டும் ஊழியத்தில், சாத்தானுடன் கைகோர்த்து கடினமாக உழைக்கும் விசுவாசிகள் ஏராளம் உண்டு.

ஏதேன் தோட்டத்தில் ஆதாம் பாவம் செய்தவுடன், சாத்தான் தனது “குற்றஞ்சாட்டும் சுபாவத்தை” ஆதாமுக்குக் கொடுத்தான். அதனால்தான், தேவன் ஆதாமிடம் வந்து, விலக்கப்பட்ட கனியை அவன் புசித்தானா என்று கேட்ட போது, அவன் செய்த முதல் காரியம், தன் பாவத்தை ஒப்புக் கொள்வதற்குப் பதிலாக, “அவள் தான் எனக்கு அந்தக் கனியை புசிக்கக் கொடுத்தாள்” (ஆதியாகமம் 3:12) என்று தன் மனைவியின் மீது குற்றஞ்சாட்டினான்.

சிறுவயதிலிருந்தே, நாம் அனைவரும் மற்றவர்களிடம் குறை கண்டுபிடித்து, குற்றஞ்சுமத்தக் கற்றுக் கொண்டிருக்கிறோம். நாம் வளர வளர, பழி சுமத்துகிறதும் குற்றஞ்சாட்டுகிறதுமான இந்த மனப்பான்மை அதிக நுட்பமாகவும் தீய நோக்கத்துடனும் வெளிப்படுகிறது. வருத்தமளிக்கும் உண்மை என்னவென்றால், அநேக விசுவாசிகள் மறுபிறப்படைந்து பல ஆண்டுகளான பிறகும், இந்த குற்றஞ்சாட்டும் மனப்பான்மை அவர்களிடத்தில் காணப்படுகிறது!

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின” என்று 2கொரிந்தியர் 5:17 கூறுகிறது.

நாம் மறுபடியும் பிறக்கும் போது, ​​மற்றவர்கள் மீதான நமது மனப்பான்மை புதிதாக மாற வேண்டும் — அதாவது, நமக்கு விரோதமாகப் பாவம் செய்பவர்களைக் குற்றஞ்சாட்டுவதற்குப் பதிலாக, இயேசுவினிடத்தில் இருந்த பரிந்துபேசும் மனப்பான்மை நமக்கு இருக்க வேண்டும். இருப்பினும், நாம் தேவனுடன் ஒத்துழைத்தால் மட்டுமே அத்தகைய மனப்பான்மை-மாற்றம் நமக்குள் உண்டாகும். ஆதாமிடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட தவறான மனப்பான்மைகள் அனைத்திலிருந்தும் “நமது இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்பட வேண்டும்” என்று பிலிப்பியர் 2:12 நமக்கு அறிவுறுத்துகிறது. “உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்” என்ற இந்தக் கட்டளையை விசுவாசிகள் தீவிரமாக (சீரியஸாக) எடுத்துக்கொள்ளாததினால், அவர்கள் ஆதாமின் பிள்ளைகளைப் போலவே நடந்து கொண்டு, மற்றவர்கள் மீது குற்றஞ்சாட்டுகிறார்கள். தேவனுடைய பிள்ளைகளின் இந்தப் பொல்லாத நடத்தையின் மூலம், கர்த்தரும் அவருடைய சபையும் ஜனங்களுக்கு முன்பாக மிகவும் கெட்ட பெயரைப் பெறுகிறார்கள்.

விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணின் மீது பரிசேயர்கள் குற்றஞ்சாட்டியதைப் பற்றி யோவான் 8:4-இல் வாசிக்கிறோம். அவளுடைய பாவ வாழ்க்கையிலிருந்து அவளை மீட்பதில் அவர்களுக்குச் சிறிதும் அக்கறை இல்லை. அவர்கள் விரும்பியதெல்லாம், தங்கள் சொந்த “நீதியை” வெளிப்படுத்துவதும், அந்தப் பெண் எவ்வளவு கொடிய பாவி என்பதைக் காட்டுவதும் தான். அங்கே நின்று கொண்டு, தங்கள் முற்பிதாவான ஆதாம், ஏவாளிடம் செய்தது போலவே, அந்தப் பெண்ணின் மீது தங்கள் குற்றஞ்சாட்டும் விரல்களை நீட்டினார்கள். அதன்மூலம், குற்றம் சாட்டுபவனாகிய சாத்தானுடன் அவர்கள் தங்கள் உள்ளான இருதயத்தில் ஐக்கியத்தில் இருந்தார்கள் என்பதை வெளிப்படுத்தினார்கள். இதனால் தான் இயேசு பரிசேயர்களிடம், சாத்தான் அவர்களுடைய பிதா என்று கூறினார் (யோவான் 8:44).

இயேசு அத்தகைய பெண்களை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி அல்ல, அவர்களுடைய பாவங்களிலிருந்து இரட்சிப்பதற்காகவே வந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார் என்று யோவான் 3:17-இல், வாசிக்கிறோம்.

குற்றஞ்சாட்டுதலுக்கும் தெய்வீக சீர்திருத்தலுக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. வெளிப்படுத்தின விசேஷம் 2, 3-ஆம் அதிகாரங்களில், ஐந்து சபைகளின் தவறு செய்கிற மூப்பர்களுக்கு தெய்வீக சீர்திருத்தலை அளிக்கும்படி கர்த்தர் யோவானுக்கு அறிவுறுத்தினார். அதேபோல், கொரிந்து, கலாத்தியா, மற்றும் தெசலோனிக்கேயா சபைகளுக்கு தெய்வீக சீர்திருத்தலை அளிக்கும்படி பரிசுத்த ஆவியானவர் பவுலுக்கு அறிவுறுத்தினார். அத்தகைய சீர்திருத்தல் ஓர் ஆவிக்குரிய காரியமாகும். சில சமயங்களில் தேவன் தம்முடைய அபிஷேகிக்கப்பட்ட ஊழியர்களை, தம்முடைய மக்களுக்கு அத்தகைய சீர்திருத்தல்களை அளிக்கும்படி அழைக்கிறார். ஆனால் அத்தகைய சீர்திருத்தல்கள் எப்போதும் அன்புடனேயே வழங்கப்படும்.

குற்றஞ்சாட்டும் மனப்பான்மையை எளிதில் அடையாளம் காணலாம். விரும்பாத ஒருவர் மீது எப்போதுமே ஓர் எதிர்மறையான அணுகுமுறையுடன் குற்றம் சுமத்தப்படுகிறது. நீங்கள் நேசிப்பவர்கள் மீது அப்படி ஒருபோதும் குற்றஞ்சாட்ட மாட்டீர்கள். உதாரணமாக, உங்கள் சொந்தப் பிள்ளைகள் மீது மற்றவர்கள் முன்னிலையில் நீங்கள் ஒருபோதும் குற்றஞ்சாட்ட மாட்டீர்கள். எனவே, ஜனங்கள் மீதான அன்பின் குறைபாடுதான் உங்களுக்குள் இருக்கும் குற்றஞ்சாட்டும் மனப்பான்மையைக் கொண்டு வருகிறது என்பதை நீங்கள் காணலாம்.

அப்போஸ்தலராகிய யோவான், பவுல் ஆகியோரைப் போன்ற தம்முடைய உண்மையுள்ள ஊழியர்களிடம் மட்டுமே தெய்வீக சீர்திருத்தலின் ஊழியமானது கர்த்தரால் ஒப்படைக்கப்படுகிறது. கர்த்தர் எல்லோரையும் அத்தகைய ஊழியத்திற்கு அழைப்பதில்லை. எனவே கவனமாக இருங்கள். நீங்கள் ஒரு “குற்றஞ்சாட்டும் ஊழியத்தில்” ஈடுபட்டுக்கொண்டு, ஆனால் ​​தெய்வீக சீர்திருத்தலின் ஊழியத்தைச் செய்வதாக எண்ணி உங்களை நீங்களே எளிதில் ஏமாற்றி கொள்ளக்கூடும்.

நீங்கள் இந்தக் குற்றஞ்சாட்டும் மனப்பான்மையைத் தக்க வைத்துக் கொண்டிருந்தால், பரிசேயர்களை எதிர்த்தது போலவே கர்த்தர் உங்களையும் எதிர்ப்பார். குற்றஞ்சாட்டும் ஊழியம் சாத்தானுடைய ஊழியமாகும்; விசுவாசிகளாகிய நாம் அதில் சிறிதும் பங்குகொள்ளக் கூடாது.

முதலாவதாக, சாத்தானும் அவனுடைய பிசாசுகளும், நம் உடன் விசுவாசிகளிடம் நாம் காணும் ஏதேனும் ஒரு தவற்றிற்காக அவர்கள் மீது குற்றஞ்சாட்டும்படி தொடர்ந்து நம்மைத் தூண்டும் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். மேலும், அவர்கள் மீது குற்றஞ்சாட்டும்படி உங்களைத் தூண்டுவதற்காக, அந்தப் பிசாசுகள் உங்கள் உடன் விசுவாசிகளிடம் உள்ள பல தவறுகளை உங்களுக்குக் காண்பிக்கும். இந்தச் சோதனைக்கு நீங்கள் இடங்கொடுத்தால், சாத்தானின் சக்திகளின் தாக்கங்களுக்கு உங்களை நீங்களே உட்படுத்திக் கொள்கிறீர்கள். அநேக விசுவாசிகள் பல்வேறு நோய்களால் அவதிபடுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஓர் அறுவை சிகிச்சை நிபுணர் ஒரு நோயாளியின் சரீரத்தில் உள்ள புற்றுநோய் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் முழுமையாக அகற்றுவது போலவே, நம் வாழ்விலிருந்து இந்தக் குற்றஞ்சாட்டும் மனப்பான்மையை முழுமையாக அகற்றுவதில் நாம் முற்றிலும் இரக்கமற்றவர்களாக இருக்க வேண்டும். 'குற்றஞ்சாட்டும் மனப்பான்மை' என்பது எந்தவொரு புற்றுநோயையும் விட மிகவும் மோசமானது என்பதை நாம் தெளிவாகப் பார்க்க வேண்டும்.

மற்றவர்களிடம் குறை கண்டுபிடிக்கும் இந்தக் கொடிய பழக்கத்தை நாம் அனைவருமே பிறந்ததிலிருந்தே பெற்றிருக்கிறோம். மற்றவர்களைப் பற்றி அவர்கள் இல்லாதபோது குறைசொல்லியும், ஏதேனும் ஒரு குறையைக் கண்டுபிடித்து அவர்கள் மீது குற்றஞ்சாட்டியும் அநேக ஆண்டுகள் செலவழித்து விட்டோம்.

இறுதியாக: பாவம் இல்லாதவர்களுக்கு மட்டுமே மற்றவர்கள் மீது கல்லெறிய உரிமை உண்டு என்று இயேசு பரிசேயர்களிடம் சொன்னதை நாம் நினைவில் கொள்வோம். எனவே, நம்மில் எவருக்கும் யார்மீதும் குற்றஞ்சாட்ட தகுதி இல்லை.

ஆண்டவர் நம் யாவரையும் இந்த சாத்தானின் ஆவியிலிருந்து முழுமையாக விடுவிப்பாராக.

ஆமென்.