WFTW Body: 

ரோமர் 7:14-25, பூரணராகும்படி நாடுகிறவர்களுக்கு ஒரு முக்கியமான வேதப்பகுதியாகும். அங்கே, மறுபடியும்-பிறந்த கிறிஸ்தவனான தன் அனுபவத்தைத் தான் பவுல் பேசுகிறார்; ஏனென்றால், “உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன்” (ரோமர் 7:22) என்று மனம் மாறாத ஒருவர் கூறமாட்டார்.

பவுல் ரோமருக்கு எழுதின நிருபமானது, “இரட்சிப்பு உண்டாவதற்கு சுவிசேஷம் தேவபெலனாயிருக்கிறது” (ரோமர் 1:16) என்பதை முதல் அத்தியாயத்திலிருந்து வரிசை முறையில் விவரிக்கிறது. 3,4 & 5-வது அத்தியாயங்களில் விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதலைக் குறித்துப் பேசிய பின்னர், 6-வது அத்தியாயத்தில் பாவத்தின் மேல் ஜெயத்தைக் குறித்துப் பேசுகிறார். மேலும் பவுல் 7-ம் அத்தியாயத்தில் அடுத்த நிலையைக் குறித்துத் தொடர்கிறார். அந்த நிலையைக்குறித்துப் பேசுகையில், அவர் தன் வாழ்க்கையின் மனம் மாறாதிருந்த காலகட்டத்திற்குச் செல்லவில்லை. இல்லை. சுவிசேஷத்தைக்குறித்த தன்னுடைய விளக்கத்தை அவர் தொடர்கிறார். இப்பொழுது, பூரணராகும்படி விரும்புகிற ஒருவரின் உள்ளான ஜீவியத்தின் போராட்டத்தைக் குறித்துப் பேசுகிறார். இதற்குப்பின், தன்னுணர்வோடு (consciously) தேவனுடைய சித்தத்தை மட்டும் செய்ய அவர் தெரிந்தெடுத்துவிட்டார். அவர் ஜெயத்தை வாஞ்சிக்கிறார்; மேலும் தேவைப்படும் நேரத்தில் அவருக்கு உதவும்படியாக கிருபையைப் பெற்றுக்கொள்கிறார். ஆனாலும் இரண்டு காரியங்களை அவர் காண்கிறார்: (i) கவனமாயிராத தருணத்தில், ஏற்கெனவே வெளிச்சம் பெற்ற பகுதியில் இன்னமும் தான் விழுவதையும் (தன்னுணர்வுள்ள பாவம்); (ii) சில நேரங்களில் கிறிஸ்தவத் தரத்திற்கு குறைவாய் இருப்பதையும், அதை விழுந்தபின்னர் உணர்வதையும் (விழுமுன் வெளிச்சம் பெற்றிராத ஒரு புது பகுதி - தன்னுணர்வற்ற பாவம்) காண்கிறார்.

முழுமையான பூரணத்தில் விருப்பம் இல்லாத ஒருவன் இப்படிப்பட்டப் போராட்டத்தைக் கொண்டிருக்க மாட்டான், ஏனெனில் அவன் ரோமர் 5-ல் நிறுத்திவிட்டான். பாவத்தின் மேல் முழுமையான ஜெயத்தை நாடுகிறவனே (ரோமர் 6:14), இந்தப் போராட்டத்தைக் கொண்டவனாய், “நிர்ப்பந்தமான மனுஷன் நான்! திரும்ப திரும்ப ஆவிக்குரிய மரணத்தைக் கொண்டுவரும் இந்தப் பாவசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?” (ரோமர் 7:24) என்று தனக்குள்ளே கூறிக்கொள்வான்.

இப்படிப்பட்ட போராட்டம் இருப்பதை ஒத்துக்கொள்ளாத எவரும் தன் உள்ளான ஜீவியத்தைக்குறித்து நேர்மையற்றவர்களாய் இருக்கிறார்கள். பெலவீனமான நேரத்தில் நாம் விழுந்துவிட்ட போதும், - அந்தக் காரியமானது நாம் அதிலிருந்து மனந்திரும்பி, அதை விட்டுவிட்டு, கிறிஸ்து தம்முடைய இரத்தத்தால் நம்மைக் கழுவும்படி விண்ணப்பம்பண்ண வேண்டிய பாவமே என்பது உண்மையாயிருந்தாலும், - அதை நாம் தன்னுணர்வோடு தெரிந்துகொள்ளவில்லை என்பது நமக்கு மிகுந்த நம்பிக்கையைக் கொடுக்கிறதாயிருக்கிறது. அதற்குப் பின்னர் நாம் கொள்ளும் வருத்தம் அதைத் தெளிவாகக் காட்டுகின்றது. அப்படிப்பட்ட பாவங்களை நாம் தொடர்ந்து வெறுக்கிறவர்களாகவும் அவற்றுக்காகத் துக்கிக்கிறவர்களாகவும் இருக்கிறபடியால், ஒரு நாள் அவை எல்லாவற்றிலிருந்தும் நாம் ஜெயத்தையும் பெறுவோம்.

ரோமர் 7-ஐ கவனமாய் வாசித்து, அதில் உங்களுக்கு வெளிச்சம் தரும்படி தேவனிடத்தில் கேளுங்கள். ரோமர் 7:1-13, நியாயப்பிரமாணம் நமக்கு வழிகாட்டியாக இருப்பதிலிருந்து நாம் விடுதலை பெறுவதைக்குறித்துப் பேசுகிறது. தேவனுடைய கற்பனைகளின்மீது சட்டரீதியான மனப்பாங்கைக் கொண்டிராமல், நியாயப்பிரமாணத்தை விட ஓர் உயர்ந்த தரத்தில் வாழ இப்போது நாம் கிறிஸ்துவோடு திருமணம் செய்யப்பட்டிருக்கிறோம். நாம் “பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி” ஊழியஞ்செய்கிறோம் (ரோமர் 7:6).

தங்களுடைய போராட்டங்களைக்குறித்து நேர்மையற்றவர்களாய் இருப்பவர்களுக்கு ஜெயம் இல்லை. ரோமர் 7-ஐ சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்பது காரியம் அல்ல, ஆனால், ஒருவர் தனது போராட்டங்களைக்குறித்து முழு நேர்மையாய் இருக்கவேண்டியதே பிரதானமான காரியமாயிருக்கிறது. தங்களது உள்ளான போராட்டங்களைக்குறித்து நேர்மையற்றிருப்பவர்களைத் தவிர்க்கும்படி நான் உங்களை வலியுறுத்துகிறேன் - அவர்கள் மாய்மாலக்காரர்கள். நீங்கள் பகுத்தறிகிறவர்களாய் இருக்கவேண்டும். சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் (ஞானமாயும்) புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் (தீங்குவிளைவிக்காதவர்களாயும்) இருங்கள். தேவன் நம்மிடம் எதிர்பார்க்கும் மிக முக்கியமான காரியம் நேர்மை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதுவே தூய்மைக்கான முதல் படி.