பவுல் எழுதின நிருபங்களில் மிகவும் அதிக ஆவிக்குரிய கடிதம் எபேசியருக்கு எழுதின நிருபமாகும். அந்நாட்களில் எபேசுப் பட்டணத்தில் உள்ள சபை மேன்மையான ஆவிக்குரிய நிலையில் இருந்தது என்பதை இது குறிக்கிறது. அது ஒரு நல்ல சபை. பவுல் அங்கே திருத்துவதற்கென்று ஒன்றுமே இல்லை. பூலோகத்தில் ஒரு பரலோக வாழ்க்கை வாழ்வதைக் குறித்து எபேசியருக்கு எழுதின நிருபம் கையாளுகிறது. ஒரு சபையும் ஒரு கிறிஸ்தவனும் பரலோக-சிந்தை (Heavenly-minded) உடையவர்களாக இருந்தால் மட்டுமே தங்களுடைய ஊழியத்தை இப்பூமியில் நிறைவேற்ற முடியும். நீங்கள் எவ்வளவு அதிகமாய் பரலோக-சிந்தை உடையவர்களாக இருக்கிறீர்களோ, அவ்வளவாய் தேவன் உங்களுக்கென்று வைத்திருக்கும் நோக்கத்தை இப்பூமியில் நிறைவேற்ற முடியும். நீங்கள் எவ்வளவு அதிகமாய் பூலோக-சிந்தை (Earthly-minded) உடையவர்களாக இருக்கிறீர்களோ, (‘நான் மரிக்கும்போது பரலோகத்திற்குச் செல்லுவேன்’ என்று நீங்கள் சொன்னாலும் கூட) அவ்வளவாய் தேவனுடைய நோக்கங்களை இப்பூமியில் நிறைவேற்றப் பிரயோஜனமற்றவர்களாக இருப்பீர்கள். உங்கள் குடும்பம் பரலோக-சிந்தை கொண்ட குடும்பமாக இருந்தால் மட்டுமே, தேவன் வைத்திருக்கிற ஊழியத்தை உங்களுடைய குடும்பத்தால் நிறைவேற்ற முடியும். "உங்களுடைய பூலோக நாட்கள் பூமியின்மேல் பரலோகம் இருக்கும் நாட்களைப் போல இருக்க வேண்டும் (உபாகமம் 11:18 KJV மொழிபெயர்ப்பு)" என்பதே நம்மைக் குறித்து கர்த்தருடைய சித்தமாக இருக்கிறது. பழைய உடன்படிக்கையின் கீழ் இது சாத்தியமில்லை. ஆனால் புதிய உடன்படிக்கையின் கீழ் நாம் எப்படி அவ்வாறாக வாழ முடியும் என்பதை எபேசியருக்கு எழுதின நிருபம் நமக்குச் சொல்லுகிறது.
"நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்" என்று எபேசியர் 1:3 கூறுகிறது. இந்த ஆசீர்வாதங்கள் அனைத்தும் பொருள் (Material) சார்ந்த ஒன்று அல்ல, அவைகள் ஆவிக்குரியது என்பதைக் கவனியுங்கள். பழைய உடன்படிக்கையின்கீழ் இஸ்ரவேலருக்கு பூமிக்குரிய ஆசீர்வாதங்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை உபாகமம் 28 -ல் நாம் பார்க்கலாம். கிறிஸ்து கொண்டுவந்த கிருபையை, மோசே கொண்டுவந்த நியாயப்பிரமாணத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது இதுதான். எபேசியருக்கு எழுதின நிருபத்தில் இருக்கிற இந்த வசனத்தைப் போலப் பழைய ஏற்பாட்டில் ஒரு வசனம் இருந்திருந்தால், அது இவ்வாறாக இருந்திருக்கும்: "சர்வவல்லமையுள்ள தேவனுக்கு (நம்முடைய பிதாவுக்கு அல்ல) ஸ்தோத்திரம்; அவர் மோசேக்குள் பூலோகத்திலே பொருள் வகைக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். ஆகவே சரீர சுகத்தையும், பொருள் வகை ஆசீர்வாதங்களையும் பிரதானமாய் தேடுகிற விசுவாசிகள் அனைவரும், உண்மையிலேயே, பழைய உடன்படிக்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், அத்தகைய "விசுவாசிகள்" இஸ்ரவேலர்கள், கிறிஸ்தவர்கள் அல்ல. அவர்கள் மோசேயைப் பின்பற்றுகிறவர்கள், கிறிஸ்துவினுடையவர்கள் அல்ல.
அப்படியானால், தேவன் இன்று விசுவாசிகளைப் பொருள் ரீதியாக ஆசீர்வதிப்பதில்லை என்று பொருள்படுத்தலாமா? அப்படி அல்ல. பொருள் ரீதியாகவும் அவர் நம்மை ஆசீர்வதிக்கிறார் - ஆனால் ஒரு வித்தியாசமான வழியில் அவர் அதைச் செய்கிறார். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் தேவனுடைய நீதியையும் அவர்கள் தேடும்பொழுது, பூமிக்குரிய தேவைகளெல்லாம் அவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. பழைய உடன்படிக்கையின் கீழ், ஜனங்கள் இந்த பூமிக்குரிய காரியங்களை - அதாவது அநேகப் பிள்ளைகள், திரளான ஆஸ்தி, நிறைய பணம், பகைவர்மீது வெற்றி, பூமிக்குரிய கனம், பூமிக்குரிய பதவி போன்றவைகளை மாத்திரமே நாடித் தேடி, அவைகளில் ஏராளமானவைகளைப் பெற்றார்கள். ஆனால் புதிய உடன்படிக்கையின் கீழ், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையே - அதாவது ஆவிக்குரிய பிள்ளைகள், ஆவிக்குரிய செல்வம், ஆவிக்குரிய கனம், ஆவிக்குரிய வெற்றிகள் (இந்த வெற்றிகள் யாவும் சாத்தான் மீதும், மாம்சத்தின் மீதும்தான்; பெலிஸ்தரின் மீதும், சக மனுஷர் மீதும் அல்ல) போன்ற ஆசீர்வாதங்களையே நாம் நாடி தேடுகிறோம். தேவ சித்தத்தை நாம் செய்வதற்கு வேண்டிய ஆரோக்கியம் பணம் போன்ற நம்முடைய பூமிக்குரிய தேவைகளெல்லாம் நமக்குக் கூடக்கொடுக்கப்படும். எந்த அளவிற்கு நமக்குப் பணம் இருந்தால், அது நம்மைப் பாழ்ப்படுத்தாது என்று தேவன் நினைக்கிறாரோ, அந்த அளவிற்கு மட்டுமே அவர் நமக்குப் பணத்தைக் கொடுப்பார். பழைய உடன்படிக்கையின் கீழ், தேவன் சில ஜனங்களை கோடீஸ்வரர்களாக ஆக்கியிருக்கலாம். ஆனால் அது நம்மை பரத்துக்குரியவைகளைத் தேடுவதிலிருந்து தடுத்து நிறுத்தி, நம்மை அழித்துவிடும் என்பதற்காக அவர் இன்று நமக்கு அப்படிச் செய்கிறதில்லை.
"ஆவிக்குரிய ஆசீர்வாதம்" என்று எபேசியர் 1:3 -ல் உள்ள சொற்றொடரை, "பரிசுத்த ஆவியானவரின் ஆசீர்வாதம்" என்று மொழிபெயர்க்கலாம். பரிசுத்த ஆவியானவரின் ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் தேவன் ஏற்கனவே நமக்கு கிறிஸ்துவுக்குள் தந்துவிட்டார். இயேசுவின் நாமத்தில் அவைகளை நாம் சுதந்தரித்துக் கொள்ள வேண்டியதுதான். சாலையோரத்தில் ஒரு பிச்சைக்காரி உட்கார்ந்து பிச்சை எடுப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அச்சமயத்தில் அவ்வழியே சென்ற ஒரு பணக்கார இளவரசன், அவளை மணமுடிக்கத் தீர்மானித்து, அவளுடைய வங்கிக்கணக்கில் கோடிக்கணக்கான ரூபாயைப் போடுகிறான். அந்தக் கணக்கிலிருந்து அவள் எப்பொழுது வேண்டுமானாலும் சுதந்திரமாகப் பணம் எடுத்துக் கொள்ளலாம். எவ்வளவு அதிர்ஷ்டசாலியான பெண் அவள்! ஒரு சமயத்தில் சில நாணயங்களுடன் கூடிய ஒரு சிறிய டப்பா தவிர அவளிடம் வேறு எதுவும் இல்லை. ஆனால் இப்போது அவள் மிகச்சிறந்த ஆடைகளை அணிந்து பிரமாண்டமான பாணியில் (Style) வாழுகிறாள். இளவரசனின் கையொப்பமிட்ட பல வெற்று காசோலைகள் அவளிடத்தில் இருக்கிறபடியால், அவள் எவ்வளவு பெரிய தொகையையும் வங்கியிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். ஆவிக்குரிய ரீதியில் சொல்வோமானால், நம்மைக் குறித்த சித்திரமும் இதுதான். நாம் இப்போது பரலோக வங்கிக்குச் சென்று பரிசுத்த ஆவியானவரின் ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் உரிமையுடன் எடுத்துக் கொள்ள முடியும். ஏனென்றால் கிறிஸ்துவின் நாமத்தில் அவை யாவும் நம்முடையவைகள் ஆகும். நாம் கிறிஸ்துவுடன் திருமணப் பந்தத்திலே நிலைத்திருந்து, "ஆண்டவரே, இப்பூமியிலே நான் என் வாழ்நாள் முழுவதும் உமக்கு மணவாட்டியாக உண்மையுடன் நடந்து கொள்ள விரும்புகிறேன்" என்று நம்மால் சொல்லக் கூடுமானால், பரத்திலுள்ள அத்தனையும் கிறிஸ்துவுக்குள் நம்முடையது தான். பரிசுத்த ஆவியானவரின் ஒவ்வொரு ஆசீர்வாதமும் நம்முடையது தான். எந்தவொரு ஆசீர்வாதத்திற்கும் நாம் பாத்திரவான்கள் என்று தேவனிடம் சொல்லி அவரை நம்ப வைக்க முயற்சிக்க வேண்டியதில்லை - ஏனென்றால் அவைகளில் ஒன்றையும் பெற்றுக் கொள்வதற்கு நாம் பாத்திரவான்கள் அல்ல. அந்தப் பிச்சைக்காரி அவ்வளவு செல்வத்தையும் இலவசமாய் பெறுவதற்குத் தான் பாத்திரவான் என்று சொல்வதாக உங்களால் கற்பனை செய்ய முடியுமா? இல்லவே இல்லை. தேவனுடைய இரக்கத்தினாலும், கிருபையினாலுமே நாம் எல்லாவற்றையும் பெற்றுக் கொள்ளுகிறோம். கிறிஸ்துவுக்குள் அவைகள் எல்லாமே நமக்கு இலவசமாக அருளப்பட்டிருக்கிற படியால்தான், பரலோகத்தில் உள்ள ஒவ்வொன்றையும் நாம் எடுத்துக்கொள்ளலாம். உபவாசத்தினாலும் ஜெபத்தினாலும், நம்மால் அவற்றையெல்லாம் சம்பாதிக்க முடியாது. அநேகர் இந்த வழியில் பரிசுத்த ஆவியானவரின் ஆசீர்வாதங்களைச் சம்பாதித்துக் கொள்ள முயற்சிப்பதினால் தான், அவர்களால் ஒன்றையும் பெற இயலாமற் போய்விடுகிறது. அவைகளை நம்மால் அவ்வாறாகப் பெற்றுக் கொள்ள முடியாது. கிறிஸ்துவினால் உண்டாகும் தகுதியினால் மட்டுமே நாம் அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும்.