அப்போஸ்தலர் 2-ஆம் அதிகாரத்தில், பரிசுத்த ஆவியானவருக்காக 120 பேர் காத்திருந்தார்கள். ஆனால் அவர்கள் அதற்காக எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்பது பற்றி இயேசு எதுவும் அவர்களுக்கு முன்கூட்டியே எதுவும் சொல்லவில்லை. வெறும் பத்து நாட்கள்தான் என்று அவர்களுக்கு முன்னதாகவே சொல்லப்பட்டிருந்தால், சற்று இலகுவாக இருந்திருந்திருக்கும். பொதுவாக நாம் ஏதாவது ஒரு காரியத்திற்காகக் காத்திருக்க வேண்டுமென தேவன் விரும்பும்போது, நாம் எவ்வளவு காலம் பதிலுக்காகக் காத்திருக்க வேண்டும் என்பதை அவர் நமக்குச் சொல்வதில்லை. நாம் விசுவாசத்தினாலே பிழைக்க வேண்டுமென தேவன் விரும்புகிறார். ஏனெனில் நாம் ஆவிக்குரிய ரீதியில் வளருவதற்கு அது ஒன்றுதான் வழியாகும். காத்திருத்தல் என்பது நம்முடைய விசுவாசம் வலுப்படுப்படுவதற்கான ஒரு வழியாகும். காத்திருப்பதற்கானக் காலக் கெடு நமக்குத் தெரிந்திருக்குமானால், விசுவாசத்திற்கு அங்கு வேலையிருக்காது. எல்லாம் முடிந்த பிறகுதான், நாம் பின்னோக்கிப் பார்த்து, "நான் மூன்று நாட்கள் (அல்லது மூன்றாண்டுகள்)" இதற்காக காத்திருக்க வேண்டியிருந்தது என்று சொல்ல முடியும்.
காத்திருந்த அந்தச் சீஷர்களிடம் நீங்கள் சென்று, "நீங்கள் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டதை எவ்வாறு அறிந்து கொள்வீர்கள்?" என்று கேட்டிருந்தால், அவர்கள், "நாங்கள் அந்நிய பாஷையில் பேசுகிறோம்" என்பதைப் பதிலாகச் சொல்லியிருந்திருக்க மாட்டார்கள். தாங்கள் வல்லமையைப் பெற்றுக் கொள்வோம் என்பதாக இயேசு சொன்னார் என்பதைத்தான் சொல்லியிருந்திருப்பார்கள். ஒருவேளை நீங்கள், "நான் அந்த வல்லமையைப் பெற்றுள்ளேன் என்பதை எங்ஙனம் அறிந்து கொள்வது?" எனக் கேட்கலாம். நாம் பாவ மன்னிப்பைப் பெற்றுக் கொண்டதை தேவன் நமக்கு எப்படி உறுதிப்படுத்தினாரோ, அது போலவே இதையும் உறுதிப்படுத்துவார். நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று நம்முடைய ஆவியில் சாட்சி பகருகின்ற அதே பரிசுத்த ஆவியானவர், நாம் வல்லமையைப் பெற்றிருக்கிறோம் என்பதற்கும் சாட்சி பகருவார். இவ்விரு முக்கிய விஷயங்களையும் உங்களுக்கு உறுதிப்படுத்தித் தரும்படி தேவனிடம் கேளுங்கள். எனவே அவர்கள் வல்லமையைப் பெறும்படிக்குக் காத்திருந்தனர். அவர்கள் வல்லமையைப் பெற்றுக் கொண்டவுடன், அவர்கள் அறியாத பாஷைகளில் பேசும் வரத்தையும் பெற்றுக் கொண்டனர். அந்நிய பாஷையில் பேசுகிறோம் என்று சொல்லுகிறவர்கள் மத்தியிலே, வல்லமை காணப்படாமல் இருப்பது, இன்றைய சோகமாகும். அந்நிய பாஷையைக் காப்பியடித்துப் பேசிவிடலாம். ஆனால் பாவத்தை மேற்கொள்ளுகிற வல்லமையையும், கிறிஸ்துவுக்காகத் திட சாட்சியாய் நிற்கும் வல்லமையையும் அப்படிக் காப்பியடித்துவிட முடியாது.
இந்த எடுத்துக்காட்டைக் கவனியுங்கள்: நீங்கள் ஒரு கணனி (வல்லமை) வாங்கக் கடைக்குப் போகிறீர்கள். ஒவ்வொரு கணனிக்கும் ஒரு CD (அந்நிய பாஷைகள்) இலவசமாகக் கொடுக்கப்படுவதாக அந்தக் கடைக்காரன் உங்களிடம் சொல்லுகிறான். நீங்கள் CD வாங்குவதற்காக அக்கடைக்குச் செல்லவில்லை. கணனி வாங்கத்தான் சென்றீர்கள். ஆனால் அந்த CD உங்களுக்கு இலவசமாகக் கொடுக்கப்படுவதால், நீங்கள் கணனி, CD ஆகிய இரண்டையுமே வாங்கிக் கொள்ளுகிறீர்கள். இப்போது உங்களது நண்பர் ஒருவர் உங்களிடத்திலிருக்கும் CD-ஐப் பார்த்துவிட்டு, அந்தக் கடைக்குச் செல்கிறார். திரும்பி வரும்போது வெறும் இலவச CD-ஐ மட்டுமே வாங்கி வருகிறாரென்றால், அது எவ்வளவு மதியீனமாக இருக்கும்!! வல்லமையைப் பெறாமல், வெறும் அந்நியபாஷையின் வரத்தை மாத்திரமே பெறுகிறவர்களை நாம் இப்படித்தான் சித்தரிக்க முடியும்.
பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாயொரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பினதாகவும், ஒவ்வொருவருவர் தலையின் மேலும் அக்கினிமயமான நாவுகள் போல பிரிந்திருக்கும் நாவுகள் வந்து அமர்ந்ததாகவும் வாசிக்கிறோம். இவையாவும் வெளிப்பிரகாரமானவைகளாகும். அவர்கள் அபிஷேகத்தையும் வல்லமையையும் பெற்றுக் கொண்டதுதான் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும். இயேசு அபிஷேகிக்கப்பட்ட போது, இந்த வெளிப்பிரகாரமானவைகள் வேறாக இருந்தன. அவருடைய விஷயத்தில், காற்றோ, அக்கினியோ காணப்படாமல், ஒரு புறாவும், ஒரு சத்தமும் மாத்திரமே இருந்தன. ஆனால் அவர் பெற்ற அதே வல்லமையையும், அபிஷேகத்தையும் தான் அப்போஸ்தலர்களும் பெற்றனர். இயேசுவானவர் எப்படி "பரிசுத்த ஆவியினாலும், வல்லமையினாலும் அபிஷேகிக்கப்பட்டாரோ" (அப் 10:38), அதே போலத்தான் நாம் அனைவரும் அபிஷேகிக்கப்பட வேண்டும். உடல்சார்ந்த, உணர்வுசார்ந்த அனுபவங்கள் நம் ஒவ்வொருவருக்கும் வேறுவேறாக இருக்கலாம். யாரேனும் உங்களுக்கு ஒரு விலையுயர்ந்த வைர மோதிரத்தைப் பரிசாக அளிப்பார்களானால், அந்த மோதிரமானது கசகசவென்ற தாளில் சுற்றப்பட்டிருந்ததா அல்லது ஒரு அட்டைத் தாளில் சுற்றப்பட்டிருந்ததா அல்லது ஒரு பளபளக்கும் வனப்புமிகு வண்ணத்தாளில் சுற்றப்பட்டிருந்ததா என்பதெல்லாம் ஒரு காரியமாய் இருக்கப் போவதில்லை. குழந்தைகள்தான் காற்று, அக்கினி, சத்தம், கிளுகிளுப்பூட்டும் உணர்ச்சிகள் போன்ற வெளிப்பிரகாரமான விஷயங்களில் அதிக ஈடுபாடு கொள்வார்கள். வயது வந்தவர்களோ பரிசுப் பொருளான அபிஷேகம், பரிசுத்த ஆவியின் வல்லமை ஆகியவற்றின் மீதே நோக்கமாய் இருப்பார்கள். ஜனங்கள் தாங்கள் பெற்ற பரிசுப் பொருளைச் சுற்றியிருந்த காகிதத்தைப் பற்றி சாட்சி பகருவதும், மேன்மை பாராட்டுவதுமாய் இருந்தால், அவர்கள் இன்னும் குழந்தை-கிறிஸ்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
இந்தப் புதிய உடன்படிக்கைக் காலத்திலே, நம்முடைய சரீரத்தின் உறுப்புகளிலே தேவன் மிக முக்கியமாகப் பயன்படுத்தப் போகும் உறுப்பு நம்முடைய நாவுதான் என்பதைக் குறிப்பிட்டுக் காட்டுவதற்காகத்தான், ஒவ்வொருவரின் தலைமீது அக்கினிமயமான நாவுகள் வந்து அமர்ந்தது. அந்த நாவானது எப்போதுமே அக்கினிமயமாகவும், பரிசுத்த ஆவியின் முழுக் கட்டுப்பாட்டுக்குள்ளும் இருக்க வேண்டும். இது அந்நிய பாஷை அடையாளத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது. தேவன் உங்கள் நாவைக் கொண்டு பிறரை ஆசீர்வதிக்க விரும்புகிறார். நீங்கள் ஒரு பிரசங்கியாய் இருந்தால் மட்டுமல்ல, உங்களுடைய சாதாரண உரையாடல்கள் மூலமாகவும் தினந்தோறும் தேவன் அப்படிச் செய்ய விரும்புகிறார். ஆனால் இது போல நடக்க வேண்டுமானால், நீங்கள் உங்களுடைய பேச்சு முழுவதையும், ஒரு நாளின் 24 மணி நேரமும், ஒரு வாரத்தின் 7 நாட்களும் பரிசுத்த ஆவியின் ஆளுகைக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும். அப்போஸ்தலருக்குள்ளே ஆவியானவர் வாசம் பண்ணினதினால் ஏற்பட்ட ஓர் அற்புதமான விளைவை, நாம் 2:14-ல் பார்க்கிறோம். "பதினொருவராலும் தாங்கப்பட்ட பேதுரு, எழுந்து நின்று" (MSG) என்று வாசிக்கிறோம். தம்முடைய வாழ்நாள் முழுவதிலும் இயேசுவால் சாதிக்க முடியாத ஒன்று, கடைசியாக இங்கு சாதிக்கப்படுகின்றது: பன்னிரெண்டு பேரும் ஒரே சரீரமாய் உள்ளனர். பிரசங்கிப்பதினால் உண்டாகும் கனத்திற்கு அவர்கள் போட்டியிடவில்லை. பேதுரு பேசும்போது, அவர்கள் அனைவரும் 100% அவனுக்குப் பின்னாலிருந்து அவனைத் தாங்கினர். பரிசுத்த ஆவியானவர் வந்தவுடன் அவர்கள் செய்யப் போகும் பெரிய கிரியைகள் என இயேசு குறிப்பிட்டது இதுதான். பரிசுத்த ஆவியானவர் அவர்களை ஒரே சரீரமாக ஞானஸ்நானம் கொடுத்திருந்தார்.
பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்டது, யோவேலினால் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதல் என 2:17-ல் பேதுரு கூறுகிறார். இப்போது எல்லாப் புருஷரும், ஸ்திரீகளும் பரிசுத்த ஆவியானவர் தங்கள்மேல் ஊற்றப்பட்டவர்களாய், தீர்க்கதரிசனம் சொல்ல முடியும். பழைய உடன்படிக்கையின் கீழ், ராஜாக்களுக்கும், ஆசாரியர்களுக்கும் மாத்திரமே இது ஒதுக்கப்பட்டிருந்தது. புது உடன்படிக்கையின் கீழ் நாம் எல்லாருமே ஆவியைப் பெற்றுக் கொள்ள முடியும். இது எவ்வளவு பிரம்மாண்டமான கனத்துக்குரிய விஷயம் என்பதை நாம் காண வேண்டியது அவசியமாகும்.