பவுல் இயேசு கிறிஸ்துவின் ஸ்தானாபதியாயிருந்தார் (2 கொரி 5:20). இயேசு கிறிஸ்துவின் ஸ்தானாபதியாய் இருப்பதற்கு 12 அடையாளங்கள் உள்ளன. உங்களுடைய வாழ்க்கையில் இந்த அடையாளங்களைக் குறித்து யோசித்துப் பாருங்கள்.
1. அவர் தேவனால் அழைக்கப்பட்டார் (2 கொரி 1:1). "தேவனுடைய சித்தத்தினாலே இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலன் ஆனார்." அவர் தானாக வரவில்லை. தேவன் அவரை அழைத்தார். இது மிக முக்கியமானதாகும். தேவன் அழைக்காத ஓர் ஊழியத்திற்குள் நீங்கள் போக வேண்டாம்.
2. அவர் முழுக்க, முழுக்க உண்மை உள்ளவராக இருந்தார் (2 கொரி 1:12). தேவன் நம்மிடமிருந்து எதிர்பார்க்கும் மிக முக்கியமான காரியங்களுள் ஒன்று நேர்மை அல்லது உத்தமமாகும். நீங்கள் பல பலவீனங்களை உடையவராக இருக்கலாம். ஆனால் உங்களிடத்தில் நேர்மையும், உத்தமும் இருக்குமானால், உங்களால் கர்த்தருடைய ஊழியனாய் நிலைத்திருக்க முடியும்.
3. அவர் பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்பட்டவராக இருந்தார் (2 கொரி 1:22). நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறாமல், வேறு என்ன தகுதிகளைப் பெற்றவராய் இருந்தாலும், அதையெல்லாம் வைத்துக் கொண்டு தேவனுக்கு ஊழியம் செய்ய முயலாதீர்கள். அந்தப் பக்கமே திரும்பிப் பார்க்காதீர்கள். வேறு ஏதாவது வேலையை நோக்கி நடையைக் கட்டுங்கள்.
4. அவர் யாருக்கு ஊழியம் செய்தாரோ அவர்களை மிகவும் நேசித்தார் (2 கொரி 2:4). "உங்கள் மேல் நான் வைத்த அன்பின் மிகுதியை நீங்கள் அறியும்படிக்கே."
5. அவர் தேவனையே முழுமையாகச் சார்ந்து கொண்டார் (2 கொரி 3:5). "எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது." அவர் மனித ஏதுக்கள் எதையுமே சார்ந்திருக்கவில்லை. அவர் ஒருவேளை ஜனங்கள் கொடுத்ததைப் பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் மனுஷீகமான எதையுமே அவர் சார்ந்திருக்கவில்லை. அவர் தேவனையே முற்றிலும் சார்ந்திருந்தார்.
6. அவர் மனந்தளரவே இல்லை (2 கொரி 4:1). "இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம் பெற்றிருப்பதால் சோர்ந்து போகிறதில்லை; நாங்கள் விட்டுவிடுவதில்லை." ஊழியத்திலே நீங்கள் அநேகந் தடவை விட்டுவிடும்படிக்குச் சோதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் பவுலோ மனந்தளர்ந்து ஊழியத்தை விட்டுவிடவில்லை.
7. அவர் மற்ற ஜனங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கினார் (2 கொரி 6:3,4). "எவ்விதத்தினாலேயும் எங்களைத் தேவஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறோம்." அவர் தன்னுடைய வாழ்க்கையின் மூலமாகவும், பலதரப்பட்டச் சூழ்நிலைகளிலே தான் நடந்து கொண்ட விதத்தினாலும் அவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.
8. அவர் ஒருவரையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை (2 கொரி 7:2). அவர் யாதொருவனையும் தன்னுடைய வேலைக்காரனாகப் பாவித்து, அதையும் இதையும் செய்வதற்குப் பயன்படுத்தவில்லை. ஜனங்களின் உபசரிக்கிறதான நல்ல குணத்தை அவர் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளவில்லை.
9. அவர் பணத்தை ஞானமாகக் கையாண்டார் ( 2கொரி 8:20,21; 11:19). பண விஷயத்தில் அவர் யாருக்கும் பாரமாக இருக்கவில்லை. பணத்தைப் புழங்குவதிலே மிக ஜாக்கிரதை உள்ளவராயிருந்தார். யாரெல்லாம் தன்னுடைய ஊழியத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் எனக் கருதினாரோ, அவர்களிடத்திலிருந்து அவர் பணத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை.
10. தேவன் வரைந்த எல்லைக் கோட்டிற்குள்ளேயே அவர் தங்கியிருந்தார் (2 கொரி 10;13).
11. வெளிப்பிரகாரமான எல்லா உபத்திரவங்களையும் அவர் சந்திக்க மனதுடையவராயிருந்தார் (2 கொரி 11:23-33). அது மட்டுமின்றி அவர் மாம்சத்தில் ஒரு முள்ளுடன் பாடுபடவும் விருப்பமாயிருந்தார் (2 கொரி 12:9,10). தேவன்தான் இப்படிப்பட்ட உபத்திரவத்தை எல்லாம் அனுமதித்தார்; அவரும் அதை ஏற்றுக் கொண்டார்.
12. அவர் விசுவாசிகளைப் பூரணத்தை நோக்கி நடத்த வேண்டும் என்ற ஏக்கம் கொண்டிருந்தார் (2 கொரி 13:9). "நீங்கள் பலமுள்ளவராய் இருக்கையில், நாங்கள் சந்தோஷப்படுகிறோம். மேலும் நீங்கள் பூரணமாக வேண்டுமென (நற்சீர் பொருந்தும்படி) விண்ணப்பம் பண்ணுகிறோம்."
இப்படிப்பட்டவர் தான் பவுல் அப்போஸ்தலன். நாமும் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி, அவரைப் போலவே கர்த்தருக்கு ஊழியம் செய்வோமாக.