WFTW Body: 

அநேகர் கோபம், பண ஆசை, பிறருடைய கனத்தைத் தேடுதல், சத்துருக்களைப் பகைத்தல், அப்பட்டமாகப் பொய் சொல்லுதல் போன்றவற்றைப் பாவமாகக் கருதாததைப் போலவே, கவலைப்படுதலையும் ஒரு பாவமாகக் கருதுவதில்லை.

அநேகர் இதுபோன்ற காரியங்களைப் பலவீனம் என்றே அழைக்கிறார்கள். நீங்கள் அதை ஒரு “பலவீனம்” என்று அழைக்கும் வரை, அதிலிருந்து ஒருபோதும் விடுதலை பெற மாட்டீர்கள். இயேசு நம்மைப் பலவீனங்களிலிருந்து இரட்சிக்க வராமல், அவர் நம்மைப் பாவத்திலிருந்து இரட்சிக்கவே வந்தார். நாம் ஒரு காரியத்தைப் பாவம் என்று அறிக்கையிட்டால், இயேசு அதிலிருந்து நம்மை இரட்சிப்பார். ஆனால் நீங்கள் அதற்கு இன்னும் ஒரு நயமான பெயரைச் சூட்ட முயன்றால், அதிலிருந்து ஒருபோதும் விடுதலை பெற மாட்டீர்கள். பாவத்தை உங்களால் நினைக்க முடிந்த மிக மோசமான பெயரால் அழையுங்கள் — இச்சையை “விபச்சாரம்” என்றும், கோபத்தை “கொலை” என்றும், பண ஆசையை “தேவ பகை” என்றும் அழையுங்கள். அப்படிச் செய்யும்போது அந்தப் பாவத்திலிருந்து விடுதலை பெறுவீர்கள், ஏனென்றால் அது எவ்வளவு பெரிய தீமை என்பதைக் கண்டுவிட்டீர்கள்.

எய்ட்ஸையும் புற்றுநோயையும் ஒரு இருமல் சளியைப் போல சாதாரணமாகக் கருதினால், நீங்கள் அந்த நோய்களை சீரியஸாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள். மேற்குறிப்பிடப்பட்ட பாவங்களுக்கு விரோதமாக இயேசு மிகவும் கடுமையாகப் பேசியிருந்தபோதிலும், அநேகர் அந்தப் பாவங்களை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். நான் அவர்களைக் குறை கூறவில்லை, ஏனென்றால் அவர்களுடைய தலைவர்களும் போதகர்களும் இந்த விஷயங்களை அவர்களுக்குக் கற்பிக்கவில்லை என்றுதான் கூறுவேன். தேவனுடைய முழு சத்தியத்தையும் பிரசங்கித்து, மனிதர்களின் கனத்தைத் தேடாத கிறிஸ்தவப் பிரசங்கிகளும் போதகர்களும் மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள். யாருடைய பணத்தையும் விரும்பாமல், தேவனுடைய மக்களை ஆவிக்குரிய வாழ்க்கைக்கு நேராக வழிநடத்தும்படிக்கு சத்தியத்தைப் பேச விரும்பும் பிரசங்கிகள் மிகச் சொற்பமே. இது உங்கள் பணத்தை விரும்பாமல், உங்களை சுகத்திற்கு வழிநடத்துவதில் ஆர்வம் காட்டும் ஒரு மருத்துவரைப் போன்றது. அப்படிப்பட்ட பிரசங்கிகள் மிகச் சிலரே இருக்கிறார்கள்.

கவலையை ஒரு பலவீனம் என்றும் ஜனங்கள் கூறுகிறார்கள். அது வெறும் பலவீனம் மட்டுமல்ல.

மத்தேயு 6:25-34-இல், அண்ட சராசரத்தின் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, “கவலைப்படாதீர்கள்” என்று மூன்று முறை கூறுகிறார். வெறும் பத்து வசனங்களுக்குள், ஆண்டவர் மூன்று முறை “கவலைப்படாதீர்கள்” என்று கூறுகிறார். கொலை செய்யாதீர்கள், விபசாரம் செய்யாதீர்கள், களவு செய்யாதீர்கள் என்று நமக்குக் கட்டளையிட்ட அதே ஆண்டவர்தான் இவர். இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பாருங்கள்: “கொலை செய்யாதீர்கள், விபசாரம் செய்யாதீர்கள், களவு செய்யாதீர்கள், கவலைப்படாதீர்கள்.” இவற்றில் பாவமல்லாதது எது? “நான் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறைதான் கவலைப்படுகிறேன்” என்று நீங்கள் சொல்லலாமா? அது, “நான் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறைதான் கொலை செய்கிறேன்” அல்லது “நான் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறைதான் விபசாரம் செய்கிறேன், அடிக்கடி செய்வதில்லை” என்று சொல்வதைப் போல இருக்கிறது.

நாம் ஏன் சில பாவங்களை மட்டும் சீரியஸாக எடுத்துக்கொள்கிறோம், மற்றவற்றை சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை? ஏனென்றால் உங்கள் போதகர்கள் உங்களுக்கு அதைக் கற்பிக்கவில்லை. பயம் என்பது ஒரு பலவீனம் அல்ல, கொலை ஒரு பாவம் என்பது போல பயம் என்பது ஒரு பாவம். எது பாவம் என்று நமக்கு எப்படித் தெரியும்? அதைச் செய்யக்கூடாது என்று தேவன் சொன்னால், அது ஒரு பாவம். உங்கள் மனைவி ஒரு மோசமான பெண்ணாக இருந்தாலும், அவளை நேசிக்க வேண்டும் என்று தேவன் சொல்லியிருந்தால், நீங்கள் அவளை நேசிக்க வேண்டும். மேலும், ஒன்றைச் செய்யக்கூடாது என்று தேவன் சொல்லியிருந்தால், அது தீமை என்று நீங்கள் நினைக்காவிட்டாலும், அதைச் செய்யக்கூடாது - அது தீமைதான். விபச்சாரம் கெட்டது என்று நான் நினைப்பதினால் அல்ல; தேவன், “அதைச் செய்யாதே” என்று சொல்லியிருக்கிறார். “கவலைப்படாதே, பயப்படாதே” என்று அவர் சொல்லியிருக்கிறார். தேவன் “செய்யாதே” என்று சொன்ன காரியங்களை நான் தீமையாகப் பார்க்க விரும்புகிறேன்.

தேவனோடு எனக்கு இருக்கிற ஐக்கியத்தை கவலை அழிக்கிறது. தேவன் என்மீது அக்கறை காட்டவில்லை என்று கவலை சொல்கிறது. அது தேவனை அவமானப்படுத்துதல் ஆகும். குப்பைத் தொட்டிகளில் இருந்து சாப்பிடும் ஒரு நான்கு வயதுக் குழந்தையைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்? நம் நாட்டில் அதுபோன்ற குழந்தைகள் அநேகர் உண்டு. துரதிர்ஷ்டவசமாக, அவர்கள்மீது அக்கறை காட்டும் பெற்றோர்கள் அவர்களுக்கு இல்லை. நம்முடைய பரலோகத் தகப்பன் அப்படிப்பட்டவரா? நம்முடைய பரலோகத் தகப்பன் நம்மீது அக்கறை காட்டவில்லையா? குப்பைத் தொட்டிகளில் இருந்து சாப்பிடும் அந்தக் குழந்தைகளின் தகப்பன்மார்களின் வரிசையில் நம்முடைய பரலோகத் தகப்பனையும் சேர்ப்பது அவரை அவமானப்படுத்துவதாகும். இந்தக் குழந்தைகளுக்கு அடுத்த வேளை உணவு எங்கிருந்து வரும் என்று தெரியாது, ஆகவே கவலைப்படுவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு, ஏனென்றால் அவர்களுடைய பூமிக்குரிய தகப்பன்மார்கள் அவர்கள்மீது அக்கறை காட்டவில்லை. ஆனால் உங்களுக்கு ஒரு பரலோகத் தகப்பன் இருந்தும் நீங்கள் கவலைப்பட்டால், உண்மையில் உங்கள் பரலோகத் தகப்பனும் அதே வகையில் தான் இருக்கிறார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்.

ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?” (மத்தேயு 6:25). லூக்கா ஆகாயத்துப் பறவைகளின் உதாரணத்தை எடுத்துக்கொள்கிறார் -- அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; செத்த பறவையை சாலையில் எத்தனை முறை பார்த்திருக்கிறீர்கள்? செத்த பறவையை சாலையில் பார்ப்பது மிகவும் அரிதான காட்சி. என் வாழ்நாள் முழுவதும் செத்த பறவையை சாலையில் பார்த்த எண்ணிக்கையை என் விரல்களால் எண்ணிவிடலாம் என்று நினைக்கிறேன். பறவைகள் பட்டினி கிடப்பதை எங்கே பார்த்திருக்கிறீர்கள்? அது மிகவும் அரிதான காரியம். பூமியில் கோடிக்கணக்கான பறவைகள் உள்ளன, அவை விதைக்காமலும், அறுக்காமலும் இருந்தாலும், உணவுக்காக அங்கேயும் இங்கேயும் அலைய வேண்டியிருந்தாலும் அவற்றுக்கு உணவு கிடைக்கிறது. அவற்றுக்கு யார் உணவளிப்பது? உங்கள் பரலோகத் தகப்பன் அவற்றுக்கு உணவளிக்கிறார் என்று இயேசு சொன்னார். அவர் அவைகளுடைய பரலோகத் தகப்பன் அல்ல; அவர் உங்களுடைய பரலோகத் தகப்பன். அவர் அந்தப் பறவைகளைப் படைத்தவர், அவற்றுக்கு உணவளிக்கிறார். ஆனால் உங்களைப் பொருத்தவரை, அவர் உங்கள் சிருஷ்டிகர் மட்டுமல்ல; அவர் உங்கள் தகப்பன். இந்தப் பறவைகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?

நான் ஒருமுறை மிகவும் சுவாரஸ்யமான ஒரு சிறு கவிதையைப் படித்தேன். அது தங்களுக்குள் பேசிக் கொள்ளும் இரண்டு சின்னஞ்சிறு பறவைகளைப் பற்றியது. வண்ணத்திக்குருவி சிட்டுக்குருவியிடம், “இந்தக் கவலைமிகுந்த மனிதர்கள் ஏன் இவ்வளவாய் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டும் கவலைப்பட்டுக்கொண்டும் இருக்கிறார்கள் என்பதை நான் உண்மையிலேயே தெரிந்துகொள்ள விரும்புகிறேன்,” என்றது. அதற்குச் சிட்டுக்குருவி, “நண்பா, உன்னையும் என்னையும் கவனித்துக்கொள்ளும் பரலோகத் தகப்பன் அவர்களுக்கு இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன்,” என்றது.

இது வெறும் ஓர் அழகான கதை மட்டுமல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நம்முடைய ஒவ்வொரு கவலையையும் தேவன் பொருட்படுத்துவதில்லை என்று நாம் நினைப்பது, அவரை அவமானப்படுத்துவதாகும்.

இதற்குத் தீர்வு என்ன? நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டாம் என்று பிலிப்பியர் 4:6-இல் வேதாகமம் கூறுகிறது. அது ஒரு திட்டவட்டமான கூற்று, “ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டாம்.” ஆனால் கவலைக்கான காரணத்தைக் குறித்து நாம் ஏதாவது செய்ய வேண்டும். ஒருவேளை நீங்கள் இப்போது ஏதேனும் ஒரு பிரச்சனையைச் சந்தித்துக் கொண்டிருக்கலாம், அது எப்படி முடியப்போகிறது என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். நீங்கள் என்ன செய்ய வேண்டும்? ஒன்றும் செய்ய வேண்டாம் என்று தேவன் சொல்லவில்லை; அதைக் குறித்து ஜெபிக்கச் சொல்கிறார். விண்ணப்பித்தல் என்றால், தேவனிடம் ஒரு குறிப்பிட்ட கோரிக்கையை வைப்பதும், பிரச்சனை என்ன என்பதைத் துல்லியமாகச் சொல்வதுமாகும். விண்ணப்பித்த பிறகு, ஸ்தோத்திரத்தோடே ஜெபத்தை முடிக்க மறக்காதீர்கள். நன்றி செலுத்துதல் என்பது, ‘பிதாவே, என் ஜெபத்தைக் கேட்டதற்காகவும், என்மேல் அக்கறை கொண்டிருப்பதற்காகவும் உமக்கு நன்றி’ என்று சொல்வதாகும். தேவனுக்கு நன்றி செலுத்துவது ஒரு ரசீதைப் போன்றது -- என் கடிதம் தேவனுடைய பிரசன்னத்தை அடைந்து, அவர் அதைப் பெற்றுக்கொண்டார் என்பதற்கான ஒரு ஒப்புதல் -- “என் ஜெபத்தைக் கேட்டதற்காக உமக்கு நன்றி” என்று நான் சொல்லும்போது இதைத்தான் சொல்கிறேன்.

நீங்கள் இந்த இரண்டு காரியங்களையும் செய்யும்போது, ​​பிலிப்பியர் 4:7 கூறுவது போல, “எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” (காத்துக்கொள்ளும் என்பது ஒரு இராணுவ வார்த்தை -- ஒரு கோட்டையைப் போலக் காத்துக்கொள்ளும்).

கவலைப்படாமல் இருப்பது என்பது நாம் கீழ்ப்படிய வேண்டிய ஒரு கட்டளை. நான் கவலையிலிருந்து விடுபடும்போது, ​​அநேகமான மனச்சோர்விலிருந்தும் விடுபடுவேன். இது நாம் எடுத்து வைக்க வேண்டிய ஓர் அற்புதமான படியாகும்.