“தேவபக்தியுள்ள மனிதனுடைய வாழ்க்கை பரவசமானது” (நீதிமொழிகள் 14:14 - Living Bible) என்று வேதம் கூறுகிறது.
நான் என் சாட்சியை உங்களுக்குக் கூறுகிறேன். எனக்கு இப்போது 85 வயதாகிறது; நான் 65 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு மறுபிறப்படைந்த தேவனுடைய பிள்ளையாக இருக்கிறேன். என்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை பரவசமானதாக இருந்து வருகிறது என்பதை நான் நேர்மையாக சாட்சியளிக்க முடியும். நான் பல சோதனைகளைச் சந்தித்திருக்கிறேன்; ஆனால், அவை அனைத்திலும் நான் பரவசமான வழிகளில் தேவனை அனுபவித்திருக்கிறேன். என் வாழ்க்கையின் இன்னும் சிறந்த பகுதி எனக்கு முன்னால் இருப்பதாக நான் விசுவாசிக்கிறேன். தேவனுக்காக வாழவும் அவருக்கு ஊழியம் செய்யவும் நான் உற்சாகமாக இருக்கிறேன். இவ்வுலகில் அவருக்கு ஊழியம் செய்வதே எவரும் செய்யக்கூடிய மிகச்சிறந்த காரியமாகும்.
உலகில் எந்த நபர் மீதும் எனக்கு எந்தக் குறையும் இல்லை. இதுவரை யாரும் எனக்குத் தீங்கு செய்யவில்லை. பலர் என்னைத் துன்புறுத்த முயன்றார்கள், என்னுடைய சக ஊழியர்கள் சிலர் என்னைக் காட்டிக் கொடுத்து, எனக்கு எதிராகத் திரும்பியிருக்கிறார்கள். பல “கிறிஸ்தவர்கள்” என்னைப் பற்றி “கிறிஸ்தவ” இதழ்களிலும், இணையத்திலும் பொய்யான செய்திகளைப் பரப்பினார்கள். மேலும் சிலர் என்னை வழக்குமன்றத்திற்கும் கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால், இவை அனைத்தும் எனக்கு “கிறிஸ்துவின் பாடுகளின் ஐக்கியத்தின்” ஒரு பகுதியாக மட்டுமே இருந்திருக்கின்றன; ரோமர் 8:28-இல் கூறப்பட்டுள்ளபடி, ஒவ்வொருவரும் செய்த அனைத்தும் என் நன்மைக்காக மட்டுமே நடந்திருக்கிறது. எனவே, அவர்கள் அனைவருக்காகவும் நான் உண்மையில் தேவனுக்கு நன்றி கூறுகிறேன்; ஏனென்றால், தேவன் என்னை ஒரு சிறந்த மனிதனாக மாற்ற அவர்களுடைய தீய செயல்களைப் பயன்படுத்தினார்—அவைகளுக்கு நான் இன்னும் அதிகமாய் கிறிஸ்துவைப் போல பிரதியுத்தரம் கொடுக்கும்படி என்னை மாற்றினார். அதுவே அவர்களுடைய தீய செயல்களில் இருந்து வந்த பிரதானமான நன்மையாகும்.
நாம் தேவனுக்குப் பயன்படும் முன், முதலில் நாம் “உடைக்கப்பட” வேண்டும்.
தேவன் பல மனிதர்களையும் நிகழ்வுகளையும் பயன்படுத்தி நமது பெருமையையும், நமது சொந்த திறன்களில் உள்ள நம்பிக்கையையும் உடைத்து, நம் பார்வையில் நம்மை சிறியவர்களாக ஆக்குகிறார்.
தேவன் என் இளமைப் பருவத்தில் என்னை அதிகம் உடைத்தார்; இன்றும் அவர் என்னை உடைத்துக்கொண்டிருக்கிறார். இதுவே கனிகொடுப்பதற்கான வழி. நாம் எவ்வளவு அதிகமாக உடைக்கப்படுகிறோமோ, அவ்வளவு அதிகமாக தேவன் நம்மை மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாகப் பயன்படுத்த முடியும். யாத்திராகமம் 17-இல் பாறை அடிக்கப்பட்ட போது தான் தண்ணீர் ஓட ஆரம்பித்தது என்று வாசிக்கிறோம். இயேசுவை அபிஷேகம் செய்வதற்காக ஒரு பெண் நளதம் என்னும் உத்தம தைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்திருந்தாள். அந்த வெள்ளைக்கல் பரணி உடைக்கப்பட்ட போது தான், அந்தத் தைலத்தின் நறுமணம் வீட்டை நிரப்பியது (மாற்கு 14:3). ஐயாயிரம் பேருக்கு உணவளிக்க, இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்தார். ஆனால், அப்பமானது உடைக்கப்படும் வரை யாரும் புசிக்க முடியவில்லை. இந்த எடுத்துக்காட்டுகள் அனைத்திலும் உள்ள செய்தி என்ன? ‘உடைபடுவது தான் ஆசீர்வாதத்தின் வழி’ என்பதே அந்தச் செய்தியாகும். ஒரு அணுவைப் பிளக்கும் போது, ஒரு நகரம் முழுவதற்கும் மின்சாரம் கொடுக்கும் அளவுக்கு அது வல்லமையை உருவாக்குகிறது! ஒரு அணு மிகவும் சிறியது, அதை நுண்ணோக்கியில் கூட பார்க்க முடியாது. ஆனால், அது உடைக்கப்படும்போது, என்ன அளப்பரிய வல்லமை அதிலிருந்து வெளிப்படுகிறது! இயற்கையிலும் வேதத்திலும் உள்ள செய்தி இதுதான்: தேவனுடைய வல்லமை, உடைபடுவதின் மூலம் வெளியிடப்படுகிறது. வரும் புத்தாண்டில் இந்தச் செய்தி நம் அனைவரையும் கவர்ந்திடட்டும்.
1963-இல் என் வாழ்விலும் ஊழியத்திலும் தேவையான வல்லமைக்காக நான் தேவனை முதன்முதலில் தேடியபோது அவர் இந்தச் செய்தியால் என்னைப் பற்றிக் கொண்டார். அப்போதே, நான் கப்பற்படையில் இருந்து ராஜினாமா செய்வதற்கு முன்பு, உடைக்கப்படும் வழியே வல்லமையின் வழி என்று தேவன் எனக்குக் காட்டினார். மேலும், இதை என் வாழ்நாள் முழுவதும் மறக்க விரும்பவில்லை. குறிப்பாக இளம் வயதிலேயே இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ளும்படி இளைஞர்களை ஊக்குவிக்க விரும்புகிறேன்.
இரண்டாவதாகத் தேவைப்படுவது, தேவனுடைய வாக்குத்தத்தங்களின் மீது கொள்ளும் ஜீவனுள்ள விசுவாசம்.
எகிப்தில் இருந்த இஸ்ரவேலின் மூப்பர்களுக்கு தேவன் இரண்டு வாக்குத்தத்தங்களை அளித்தார்: “நான் உங்களை (1) எகிப்து தேசத்திலிருந்து வெளியே கொண்டுவந்து, (2) கானானியர்களின் தேசத்திற்கு கொண்டு செல்வேன்” (யாத்திராகமம் 3:17) என்று இரண்டு வாக்குத்தத்தங்களை அங்கு நீங்கள் பார்க்க முடியும். ஆனால், முதல் ஒன்று மட்டும் நிறைவேறியது. இரண்டாவது நிறைவேற்றப்படவில்லை. அந்த மூப்பர்கள் யாரும் கானானுக்குள் நுழையவில்லை; ஏனென்றால், கானானுக்குள் நுழையும் நேரம் வந்தபோது அவர்கள் விசுவாசத்தோடு பதிலளிக்கவில்லை (எண்ணாகமம் 13). நாம் விசுவாசத்தோடு பதிலளிக்கும் வரை தேவனுடைய வாக்குத்தத்தங்கள் நிறைவேறாது. தேவனுடைய வாக்குத்தத்தமும் நம்முடைய விசுவாசமும் இரண்டு மின்சாரக் கம்பிகளைப் போன்றது. அவை ஒன்றையொன்று தொடும்போது தான் (மின்சார சுவிட்சைப் போல) கம்பிகள் வழியாக மின்சாரம் பாயத் தொடங்குகிறது. தேவனுடைய வாக்குத்தத்தங்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டு அதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால், உங்கள் விசுவாசத்தில் கைநீட்டி, “ஆம், அது என் வாழ்வில் நிறைவேறும் என்று நான் நம்புகிறேன்” என்று கூறும்போது தான் அந்த வாக்குத்தத்தம் நிறைவேறும். கானானின் எல்லையில், யோசுவாவும் காலேபும் மட்டுமே தேவனுடைய வாக்குத்தத்தத்தை முழுமையாக நம்பினர். அதனால், அவர்கள் மட்டுமே வாக்குத்தத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் பிரவேசித்தார்கள். அதே நம்பிக்கையுடன், இப்புதிய ஆண்டில் வாக்குத்தத்தத்தம் பண்ணப்பட்ட வெற்றியின் பூமியில் தொடர்ந்து வாழ்வோம்.
இந்த ஆண்டு உங்கள் அனைவருக்கும் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட ஓர் ஆண்டாக இருக்கும்படி நாங்கள் உங்களை வாழ்த்துகிறோம். அதாவது அதிகமான நொறுங்குதலும், தேவன் மீது அதிக விசுவாசமும் உள்ள ஒரு வாழ்க்கையாக இந்த ஆண்டு அமைவதாக.