WFTW Body: 

நீங்கள் ஒரு தேவபக்தியுள்ள நபராக இருக்க முடிவு செய்தால், உங்கள் எதிர்கால வாழ்க்கையின் ஒவ்வொரு அடியும் தேவனால் வழிநடத்தப்படும். தேவனை கனப்படுத்துபவன் எவனோ அவனே தன் வாழ்க்கையில் மிகச்சிறந்ததைப் பெறுகிறான் - புத்திசாலியோ, பணக்காரனோ, மேதையோ அல்லது வாழ்க்கையில் அதிர்ஷ்டமான உயர்வைப் பெறுபவனோ அல்ல. நாம் தேவபக்தியை நம் வாழ்க்கைமுறையாகத் தேர்ந்தெடுக்காதபோது, எதிர்காலத்தைப் பற்றிய அனைத்து பாதுகாப்பின்மையும் வருகிறது. ஆகவே எல்லா நேரங்களிலும் தேவனை கனப்படுத்தவேண்டும் என்று முடிவு செய்யுங்கள். அப்பொழுது அவர் உங்களுக்கு ஆவிக்குரிய விதத்தில் மிகச்சிறந்ததை அளிப்பார், அதே நேரத்தில் இந்த உலகத்தில் நமக்கு பொருளாதார மற்றும் சரீரப்பிரகாரமான தேவை அனைத்தையும் அருளுவார். என் வாழ்வின் கடந்த 50 வருடங்களில் இது உண்மை என்று நான் கண்டிருக்கிறேன். தேவன் உங்களை சகலவற்றிலும் - உங்கள் கல்லூரி படிப்பு காரியம் மற்றும் தொழில்துறையை தேர்ந்தெடுக்கவேண்டிய விஷயம் முதல், வேலை காரியம் மற்றும் அதன்பிறகு திருமண காரியம் ஆகிய சகலவற்றிலும் – வழிநடத்துவார். அதற்கு நீங்கள் இப்பொழுது ஒரே ஒரு தீர்மானத்தை எடுத்து அதிலே எப்போதும் நின்றால் போதும்: அது, "நான் எல்லாவற்றிலும் தேவனை கனப்படுத்தி, ஒரு தேவபக்தியுள்ள நபராக இருப்பேன்" என்பதே.

சிறிய விஷயங்களில் உண்மையாக இருக்க வேண்டும் என்பது தான் அதன் பொருள். உங்களுக்குச் சொந்தமில்லாத எதையும் எடுத்துக்கொள்ளாதீர்கள் - ஒரு நபரிடமிருந்தோ அல்லது ஒரு வீட்டிலிருந்தோ அல்லது கல்லூரியிலிருந்தோ அல்லது ஓர் அலுவலகத்திலிருந்தோ அல்லது எங்கிருந்தும் - மலிவானதொரு பேனாவையோ அல்லது பென்சிலையோ கூட எடுத்துக்கொள்ளக்கூடாது. சிறிய விஷயங்களில் கூட யாரையும் ஏமாற்றாதீர்கள். மற்றும் உங்கள் பள்ளி நாட்களில் நாங்கள் உங்களுக்குக் கற்பித்தது போல, உங்கள் தேர்வில் சிறிது கூட ஏமாற்றாதீர்கள். ஏமாற்றி தேர்ச்சி பெறுவதை விட தோல்வி அடைவது மேலானது. ஏமாற்றி பணக்காரனாக இருப்பதை விட ஏழையாக இருப்பதே மேல். உங்கள் மனதை அசுத்தப்படுத்தும் புத்தகங்களைப் படிப்பதையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதையும் நிறுத்துங்கள். எல்லா விஷயங்களிலும் உங்கள் மனச்சாட்சியை முற்றிலும் தூய்மையாக வைத்திருங்கள். ஒவ்வொரு சந்ததியிலும், இப்படி வாழ்பவர்கள், அதிக பணவீக்கம் மற்றும் பொருளாதார மந்தநிலை காலங்களிலும் கூட தங்கள் வாழ்வில் தேவனுடைய மிகச்சிறந்ததைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

இவ்விதம் வாழ்வது என்றால் நீங்கள் ஒருபோதும் வீழ்ச்சியடையவே மாட்டீர்கள் அல்லது தோல்வியடையவே மாட்டீர்கள் என்று பொருளாகாது. ஆனால் ஒவ்வொரு முறை தோல்வியடையும் போதும் நீங்கள் துயரமடைய வேண்டும். நீங்கள் 1000-வது முறையாக எந்தப் பகுதியில் தோல்வியடைந்தாலும் (ஆவிக்குரிய காரியத்தில் அல்லது படிப்பு காரியத்தில்), நீங்கள் எழுந்து ஓடுவதைத் தொடர வேண்டும். உங்கள் கடந்தகால தோல்விகள் உங்களைப் பின்தொடர்ந்து துன்புறுத்த அனுமதிக்கக் கூடாது. தோல்வி பயம் என்பது அடிக்கடி பின்தொடரும் ஒரு பயம், அதை நீங்கள் உதறிவிட வேண்டும். கடந்த கால தோல்விகளைப் பற்றிய எண்ணங்கள் உங்கள் மனதில் வரும்போதெல்லாம் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் சித்தத்தை செயல்படுத்தி அவற்றை நிராகரிப்பதுதான். இதைச் செய்வதில் நீங்கள் உண்மையாக இருந்தால், சில காலத்திற்குப் பிறகு, இதுபோன்ற சிந்தனைகள் அரிதாகவே தோன்றும் - இறுதியாக முற்றிலும் நின்றுவிடும். ஒவ்வொரு எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துவது என்பது இதுதான் (2கொரிந்தியர் 10:5).

இவ்வாறு, நீதிமான்களுக்கு சகலமும் நன்றாகவே நடக்கும் என்பதற்கும், தம்மை கனப்படுத்துவோரை தேவன் கனப்படுத்துவார் என்பதற்கும், நம்பிக்கையற்ற தலைமுறையினருக்கு நீங்கள் ஓர் உயிருள்ள நிரூபணமாக இருக்க முடியும். உங்கள் புத்திசாலித்தனத்தினாலோ அல்லது உங்கள் சாதனைகளாலோ இந்த உலகைக் கவருவதை விட, இந்த உலகில் நீங்கள் தேவனுக்கு அப்படிப்பட்ட உயிருள்ள சாட்சியாக இருக்கவேண்டும் என்று உங்கள் முழு இருதயத்தோடு ஏங்குங்கள். வீட்டுக்கு வெளியே சென்று ஈடுபடும் விளையாட்டு அல்லது பொழுதுபோக்கு நடவடிக்கைகள் (outdoor activities) உங்கள் வாழ்க்கையில் ஒருபோதும் உங்கள் தேவனாக மாறிவிடாதபடிக்கும் கவனமாக இருங்கள்.

தேவனுடைய விருப்பமெல்லாம், உங்கள் முழு வாழ்க்கையும், பாவத்தின் மீது கொள்ளும் வெற்றியையும் சுயத்திற்கு மரிப்பதையும் (முதலாவது இதன் யதார்த்தத்தை நீங்களே அனுபவித்திருப்பதன்மூலம்) பற்றிய சுவிசேஷத்தை அறிவிப்பதாக இருக்க வேண்டும்; நீங்கள் கிறிஸ்துவின் சரீரத்தில் தேவன் நியமித்த ஊழியத்தை நிறைவேற்ற வேண்டும் (அது எதுவாக இருந்தாலும்); உங்களுடைய சொந்த வாழ்க்கையின் தேவைக்காக ஓர் உலக வேலையின் மூலம் சம்பாதித்து - வேறு எவரையும் சார்ந்து இருக்காமல், உங்கள் சொந்த செலவில், பவுலைப் போல கர்த்தருக்கு சேவை செய்ய வேண்டும் என்பதாகவே இருக்கிறது. இதைத்தான் உலகம் பார்க்க வேண்டும், இதுவே உங்கள் அனைவரையும் குறித்த எனது மிகப்பெரிய ஏக்கமாயிருக்கிறது. முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தொடர்ச்சியாக தேடுபவர்கள் மாத்திரமே இயேசு திரும்பி வரும்போது வருத்தப்பட மாட்டார்கள் என்பதை நான் அறிந்திருக்கிறேன்.