WFTW Body: 

நமது ஆவிக்குரிய வாழ்வில் நாம் கொண்டிருக்க வேண்டிய முன்னுரிமைகளை குறித்து இந்த ஆண்டில் தீவிரமாக சிந்திப்பது நல்லது. இங்கே உங்களுக்கான சில பரிந்துரைகள். அவற்றை சீரிய முறையில் கவனித்திடுங்கள் - மேலும் அவை அனைத்தும் உங்கள் வாழ்க்கையில் நிறைவேற வேண்டும் என்று ஜெபம் செய்யுங்கள். தேவன் உங்களுக்கு உதவி செய்வாராக!

1. ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குங்கள்: லூக்கா 15-ல் தன்னை முழுமையாய் ஏமாற்றின தன்னுடைய குமாரனுக்குத் தகப்பன் மிகச்சிறந்த அங்கியையே உடுத்துவித்ததாக நாம் கெட்ட குமாரன் கதையிலே வாசிக்கிறோம். இதுதான் சுவிசேஷம் அருளும் செய்தி: வீழ்ச்சி அடைந்தவர்களுக்கும் தேவன் மிகச் சிறந்ததையே தருகிறார். அவர்கள் ஒரு புதிய ஆரம்பத்தை மேற்கொள்ளலாம். ஏனெனில் அவர் ஒருவரையும் விட்டு விடுகிறவரல்ல. கடந்த வருடத்தில் தோல்வியுற்றவர்களுக்கு இது ஒரு மிகப் பெரிய உற்சாகமாகும். உங்கள் தவறுகள், தோல்விகள் எதுவாயிருந்தாலும் சரி, நீங்கள் ஒரு புதிய ஆண்டைத் தொடங்கும்போது, தேவனுடன் ஒரு புதிய அத்தியாயத்தை இப்பொழுதே தொடங்க முடியும்.

2. ஒழுங்கின் கட்டுப்பாட்டிற்குள் இருங்கள்: 2தீமோத்தேயு 1:7-ம் வசனத்தில் பவுல் கூறும்போது “தேவன் நமக்கு பலமும், அன்பும், ஒழுங்கும் நிறைந்த ஆவியைத் தந்திருக்கிறார்” எனக்கூறினார். தேவ ஆவி, நமக்கு பலமும், பிறர்மீது கொண்ட அன்பும், நம்மை ஒழுங்கின் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளவும் திடப்படுத்துகிறது. நீங்கள் பரிசுத்தாவியின் மூலமாய் எத்தனை அனுபவங்கள் பெற்றிருந்தாலும், அவர் உங்கள் நேரத்தையும், பணத்தையும் கட்டுப்பாடான முறையில் செலவழித்திட ஒழுங்கு செய்ய அனுமதிக்கவில்லையென்றால், உங்கள் சம்பாஷணையை திருத்தி ஒழுங்குப்படுத்திட நீங்கள் அனுமதிக்கவில்லை என்றால்..... நீங்கள் தேவன் விரும்புகிறபடி மாறவே இயலாது! சபையின் சரித்திரத்தில் காணும் வல்லமையான தேவ ஊழியர்கள், பரிசுத்தாவியானவர் அவர்களுடைய ஜீவியத்தை திருத்தி ஒழுங்கு செய்திட ஒப்புக்கொடுத்த புருஷர்களாயும் ஸ்திரீகளாயும் இருந்தார்கள். அவர்களுடைய தூங்கும் பழக்கங்கள், உணவு அருந்தும் பழக்கங்கள், மேலும் அவர்களின் ஜெபங்கள், அவர்களின் தேவ வாக்கிய தியானங்கள் ஆகிய யாவற்றிலும் பரிசுத்தாவியின் திருத்துதலின் ஒழுங்கைப் பெற்றார்கள். அவர்களின் பூமிக்குரிய எல்லா விருப்பங்களுக்கும் மேலாக, தேவனையே முதலாவது வைத்திருக்கும்படியும் கண்டித்து திருத்தப்பட்டார்கள். இன்று அநேக கிறிஸ்தவர்கள் பரிசுத்தாவியின் அபிஷேகத்தை பெற்றவுடன், திருப்தியடைந்து, தங்கள் ஜீவியத்தில் சகலமும் சுமுகமாய் நடக்கும் என்றே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த வருடத்தில் உங்கள் ஜீவியத்தில் தேவனுடைய சித்தத்தை நீங்கள் நிறைவேற்ற வேண்டுமென்றால், பரிசுத்தாவியினால் நீங்கள் கண்டிக்கப்பட்டு திருத்தப்பட வேண்டும்!

3. தேவனுக்காக அக்கினியாய் இருந்துவிடுங்கள்: ஆனால் தீமாத்தேயுவோ, விசுவாசத்தை விட அதிக மேன்மையானதையும் பெற்றிருந்தான். அவனிடம் ஆவிக்குரிய வரங்கள் இருந்தன. அதைப் பவுல் ஞாபகத்திற்குக் கொண்டு வந்து “நான் உன்மேல் என் கைகளை வைத்ததினால் உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல்மூட்டி எழுப்பி விடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன். பரிசுத்த ஆவியானவர் பயமுள்ள ஆவி அல்ல" என்று பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதினார். அக்கினி தொடர்ந்து எரிந்துகொண்டே இருப்பதற்காக, அந்த தேவவரத்தை அனல்மூட்டி எழுப்பி விடும்படியும் அதனை புதுப்பித்துக் கொள்ளும்படியும் பவுல் தீமோத்தேயுவிடம் வலியுறுத்தினார். பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் இயேசுவே நமக்கு ஞானஸ்நானம் கொடுத்திருந்தாலும் (மத்தேயு 3:11), எல்லா நேரங்களிலும் அந்த அக்கினி எரிந்துகொண்டே இருப்பதற்கு நாமும்கூட ஏதாவது செய்ய வேண்டும். தேவன் அக்கினியை எரியச் செய்கிறார், தேவனுடைய சித்தத்திற்கு எல்லா நேரங்களிலும் முழுமையாக அர்ப்பணித்த ஒரு வாழ்க்கையை எரிபொருளாக நாம் வழங்கிக்கொண்டே இருக்க வேண்டும். தேவன் உங்களை ஒருதரம் அபிஷேகம் செய்தபடியால், “ஒருதரம் அபிஷேகம் செய்யப்பட்டவன் எப்பொழுதும் அபிஷேகத்தில் இருப்பான்” என்று சொல்லி, ஒன்றுமே செய்யாமல் ஓய்வெடுக்கலாம் என்று கற்பனை செய்துகொள்ள வேண்டாம். இது “ஒருதரம் இரட்சிக்கப்பட்டவன் எப்பொழுதும் இரட்சிப்பில் இருப்பான்” என்பதற்கு இணையான தவறான நம்பிக்கையாகும். தேவனால் உண்மையிலேயே அபிஷேகம் பண்ணப்பட்ட ஜனங்கள், ஒரு வருடத்திற்குப் பிறகு ஆவிக்குரிய ரீதியில் செத்தவர்களாய் இருக்கிறதை நான் கண்டிருக்கிறேன். அவர்களுடைய வாழ்க்கையில் அக்கினி போய்விட்டது. உலக ஆசைகளும் பெருமையும் உள்ளே வந்து அக்கினியை வெளியே எடுத்துப் போட்டுவிட்டது. இப்பொழுது அவர்கள் பணத்திற்குப் பின்பாகவும் ஒரு வசதியான வாழ்க்கைக்குப் பின்பாகவும் ஓடி, தேவனுடைய அக்கினியை இழந்து விட்டார்கள். அது வருத்தமாகவும் தேவனுடைய ராஜ்யத்திற்கு மிகப் பெரிய இழப்பாகவும் இருக்கிறது. எனவேதான் பவுல் தீமோத்தேயுவிடம் “உன்மேல் வந்த அக்கினியை நீ புதுப்பித்துக்கொண்டு எரிந்துகொண்டே இருக்கும்படி செய்வாயாக என்றும் இனி அது உன்னைப் பொறுத்தே உள்ளது என்றும் எரிந்துகொண்டே இருக்கும்படி நீ செய்யாவிட்டால் அது அணைந்து போய்விடும் என்றும் ஒரு நல்மனசாட்சியை காத்துக்கொள்வதின் மூலமாகவும், தேவனுடைய வார்த்தையைக் கற்றுக்கொள்வதின் மூலமாகவும், தன்னைத்தானே தாழ்த்துவதின் மூலமாகவும், முழு இருதயத்தோடும் தேவனைத் தேடுவதின் மூலமாகவும், பண ஆசை இல்லாதவனாய் இருப்பதின் மூலமாகவும், மற்றவர்களோடு வாக்குவாதம் செய்யாதவனாய் இருப்பதின் மூலமாகவும், அந்த அக்கினியை அவித்துப்போடுகிற எந்தவொன்றிலிருந்தும் விலகுவதின் மூலமாகவும் அந்த அக்கினியை எரிந்துகொண்டே இருக்கும்படி செய்யமுடியும் என்றும்” கூறினார்.

4. ஆவிக்குரிய முன்னேற்றம் அடைவதில் உறுதியாக இருங்கள்: எபிரேயர் 6:1-3-ம் வசனங்களில் பூரண வளர்ச்சி நோக்கி முன்னேறும்படி இந்த புத்தக ஆக்கியோன் வலியுறுத்துகிறார். நீங்கள் 10,000 மீட்டர் மலை உச்சிக்கு செல்லும் முதிர்ச்சி நோக்கி முன்னேறிச் செல்பவர்களாக எண்ணிக் கொள்ளுங்கள். அந்த உச்ச ஸ்தலத்திற்கு ஏற்கெனவே இயேசு சென்றுவிட்டார். நாம் மறுபடியும் பிறந்தபோது, அந்த மலையின் அடிவாரத்திலிருந்தே துவங்கினோம். நம்முடைய இலக்கோ, உயரம் எவ்வளவாய் இருந்தாலும், இயேசுவை பின்பற்றி மலை உச்சியை அடையும் ஒரே நோக்கமேயாகும்! இவ்வாறு முன்னேறிச் செல்கின்ற நாம், நம்முடைய இளைய சகோதரர்களையும் சகோதரிகளையும் பார்த்து “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறது போல, என்னைப் பின்பற்றுங்கள்” என நீங்கள், இப்போது 100 மீட்டர்தான் உயர ஏறி இருந்தாலும், மற்றவர்களுக்கு தாராளமாக அழைப்பு தரலாம் (1கொரிந்தியர் 11:1). ஆவிக்குரிய தன்மை என்பது, ஏதோ ஒருமுறை தேவனைச் சந்திப்பதின் மூலமாக வருவதில்லை. அது சுய சித்தத்தை வெறுத்து தேவனுடைய சித்தத்தைச் செய்கிற வழியை, தொடர்ச்சியாக நாளுக்கு நாள், வாரங்கள் தோறும் ஒவ்வொரு வருடமும் தெரிந்தெடுப்பதினால் வரும் விளைவாகும். தம்முடைய சுய சித்தத்தைத் தொடர்ச்சியாக வெறுத்ததினால் மாத்திரமே இயேசு ஒரு ஆவிக்குரிய மனிதர் ஆனார். அவ்வாறு நம்முடைய சுய சித்தத்தை வெறுப்பதே நம்மையும் ஆவிக்குரியவர்களாக்கும். “இவைகளில் நிலைத்திரு (மிகுந்த பிரயாசப்படு)” (1தீமோத்தேயு 4:15) என பவுல் தீமோத்தேயுவை ஏவுகிறார். ஒரு தொழிலதிபர் பணம் சம்பாதிக்கவும், தன்னுடைய தொழிலை விருத்தியாக்கவும் மிகுதியாய்ப் பிரயாசப்படுகிறான். நீங்கள் உங்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கையைக் குறித்து கருத்துள்ளவராய் இருந்தால், வேத வாக்கியங்களைப் படிப்பதற்கு மிகுந்த பிரயாசப்படுகிறவராகவும், பரிசுத்த ஆவியானவரின் வரங்களையும், உங்களுடைய வாழ்க்கையிலுள்ள அசுத்தமான யாவற்றிலிருந்தும் உங்களைச் சுத்திகரித்துக் கொள்வதையும் நாடுகிறவர்களாகவும் இருப்பீர்கள். “அவற்றில் மெய் மறந்திருங்கள்” என ஒரு மொழிபெயர்ப்பு கூறுகின்றது. நீங்கள் இவற்றில் மெய் மறந்து இருந்தால், நீங்கள் தேறுகிறது யாவருக்கும் தெரிய வரும். நாமும் இயேசு கிறிஸ்துவிலும், அவருடைய வார்த்தையிலும் மெய்மறந்து இருப்போமானால், இவ்வுலகத்தின் சோதனைகளெல்லாம் நம்மை அவ்வளாய் ஈர்க்காது. இவ்வுலகத்தார் இன்று விரட்டிப் பின்தொடருகிற பல காரியங்களை நாம் பின்தொடர மாட்டோம். இவ்வாறு நீங்கள் “மெய்மறந்து” வாழும்போது, நீங்கள் தொடர்ச்சியாய் முன்னேறுவீர்கள். ஒவ்வொரு வருடமும் ஒரு சிறந்த கிறிஸ்தவனாகவும், கர்த்தருக்கு மிகவும் பயனுள்ள ஊழியக்காரனாகவும் மாறுவீர்கள்.

5. ஓர் ஜெயவானாய் இருங்கள்: எபிரேயர் 12:1-3-ம் வசனங்களில் விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம். அவரை நோக்கிப் பார்த்தே நாம் இந்த ஓட்டத்தை ஒடுகிறோம்! நாம் வெறுமனே நிற்பது அல்ல! விசுவாச ஓட்டத்தில், நீங்கள் சும்மா நின்று விட இயலாது. காலம் மிக குறுகியதாயிருக்கிறபடியால், நாம் ஓட வேண்டியதாயிருக்கிறது! நீங்கள் கீழே விழுந்தாலும், துரிதமாய் எழுந்து ஓட்டத்தை தொடருங்கள். இந்த பந்தய சாலையில் ஓடிய அநேகர் விழுந்திருக்கிறார்கள், ஆனால் உடனே எழுந்து ஓட்டத்தை தொடர்ந்தபடியால் 'முதலாவதாக ஓடி' ஓட்டத்தை முடித்தார்கள். ஆகவே நீங்கள் கர்த்தரோடு இசைந்து நடந்து வரும் ஜீவியத்தில், சில சமயங்களில் தடுமாறி விழுவதைக்குறித்து, ஒருபோதும் அதைரியம் அடையாதீர்கள். தடுமாறிய இடத்திலேயே நின்று விடாமல், உடனே எழுந்து நில்லுங்கள், உங்கள் பாவங்களை அறிக்கை செய்து தொடர்ந்து ஓடிக்கொண்டே இருங்கள். சிலுவையை சகித்து, தன் ஜீவியத்தின் கடைசி வரை ஓடிய இயேசுவை நோக்கிப் பாருங்கள். அநேக எதிரிகள் சூழ்ந்து உங்களை எதிர்க்கும் போது, அநேக எதிர்ப்புகளால் வந்த விரோதங்களைச் சகித்த அவரையே முன் வைத்து வாழுங்கள் (எபிரேயர் 12:3), நீங்கள் பாவத்தை எதிர்த்துப் போராடுகையில், இரத்தம் சிந்தும் அளவிற்கு இன்னமும் எதிர்த்துப் போராடவில்லை (எபிரேயர் 12:4). ஆனால் இயேசுவோ, பாவத்தை எதிர்த்து இரத்தம் சிந்தி' போராடினார். அதாவது பாவத்தைக் குறித்த அவருடைய மன நிலையானது “நான் பாவம் செய்வதை விட, என் உயிரையே அல்லது இரத்தத்தையே சிந்துவதற்கு ஆயத்தம்” என்ற மனநிலை கொண்டிருந்தார். இதே மனநிலையை நீங்களும் கொண்டிருந்து நான் பாவம் செய்வதை விட சாவது மேல்!” என நீங்கள் வாழ்ந்து விட்டால், நீங்களும் ஜெயித்து வாழ்வீர்கள்! ஒரு பொய் சொல்வதற்கு நீங்கள் சோதிக்கப்படும் போது 'நான் அந்தப் பொய்யை சொல்வதை விட சாவதே மேல்' என நீங்கள் உறுதி பூண்டால், நீங்களும் ஒரு ஜெயம் கொண்ட வீரன்! அதிக பணம் சம்பாதிப்பதற்கு 'சிறிதளவு ஏமாற்றும்படி நீங்கள் சோதிக்கப்பட்டால் அந்த சமயத்தில் “சிறிதளவு ஏமாற்றுவதை விட, நான் மரிப்பதே மேல்!” என நீங்கள் உறுதி பூண்டால், நீங்களே ஜெயம் பெற்றவர்! ஒரு அழகிய ஸ்திரீயை இச்சிக்கும்படி நீங்கள் சோதிக்கப்பட்டால் “அந்தப் பெண்ணை இச்சிப்பதைவிட நான் சாவது மேல்” என நீங்கள் கூறினால், நீங்கள் ஒரு ஜெயவான்! ஜெயித்து வாழும் வாழ்க்கைக்கு, இதுவே இரகசியமாகும்.

6. தேவனுடைய அன்பில் பாதுகாப்பாக இருங்கள்: தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; என்று செப் 3:17-ல் சொல்லப்பட்ட வார்த்தையை இவ்வாறு பொழிப்புரை செய்யலாம் “அவர் இப்பொழுதும் அன்பிலே உங்களுக்காக மௌனமாகத் திட்டம் தீட்டுகின்றார்”. உங்கள் வாழ்க்கைகுள் வருவதற்கு தேவன் அனுமதிக்கும் ஒவ்வொரு விஷயமும் உங்களுக்காக அன்பில் திட்டமிடும் இதயத்திலிருந்து வருகிறது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு சோதனையும் பிரச்சனையும் இறுதியில் நன்மைக்காக திட்டமிடப்பட்டுள்ளார். நாம் ரோமர் 8:28-ம் வசனத்தை விசுவாசித்துவிட்டால், இனி ஒருபோதும் ஜனங்களுக்காக பயப்படமாட்டோம்! அல்லது சூழ்நிலைகளுக்காக பயந்திட மாட்டோம்! இவ்வாறு இந்த பூமியில் வாழும்வரை அச்சமின்றி வாழ்வோம். ஏதேனும் விபத்து ஏற்படுமோ? புற்று நோயால் மரித்துவிடுவோம் என்ற பயமோ, அல்லது கிறிஸ்துவர்களுக்கு விரோதமான தீவிரவாதிகளால் தாக்கப்படுவோமோ? அல்லது, இதுபோன்ற யாதொன்றைக் குறித்தும் நாம் இனி அஞ்சி வாழ வேண்டியதில்லை! அது ஏனென்றால், நம்முடைய பரமபிதா சர்வவல்லமை பொருந்தியவராய் ஒவ்வொரு மனிதனையும் தனது ஆளுகையில் வைத்திருக்கிறார்.

ஆவிக்குரிய முன்னேற்றம் அடைய உண்மையிலே ஆசீர்வதிக்கப்பட்ட வருடமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.