WFTW Body: 

"நான் பிற தேசத்தாரை மட்டுமல்ல, யூதேயாவின் மேலும், எருசலேமின் மேலும் என் கையை நீட்டி, பாகாலை வழிபடுகிறவர்களில் மீதியுள்ளவரை அழிப்பேன். ஏனெனில், அவர்கள் கூரையின் மீது நின்று சூரியன், சந்திரன், நட்சத்திரங்களை வணங்குகிறார்கள். கர்த்தரை வழிபடுகிறோம் என்று அவர்கள் உரிமை பாராட்டுகிறார்கள்; ஆனால் மோளோகைப் பணிந்து கொள்ளுகிறார்கள்" என்று கர்த்தர் சொல்லுவதாக செப்பனியா 1;4,5 வசனங்களில் பார்க்கிறோம். கானானியர், இஸ்ரவேலரைத் தங்களுடைய மட்டத்திற்கு இழுத்துச் செல்வதில் வெற்றி கண்டுவிட்டனர். மெய்யான தேவனை வெளிப்படுத்தும்படிக்கு, இஸ்ரவேலர் கானானுக்குச் சென்றனர். ஆனால் அவர்களோ இஸ்ரவேலரை தங்களது மட்டத்திற்கு இழுத்துவிட்டார்கள்.

நீங்கள் ஒரு மேஜையின் மீது நின்றுகொண்டு, ஒருவரை மேல் நோக்கி இழுக்க, அவரும் உங்களை கீழ் நோக்கி இழுக்க நேர்ந்தால், அவருக்கு உங்களை கீழ் நோக்கி இழுப்பதுதான் சுலபமாகும். யூதாவுக்கு நேர்ந்தது இதுதான். கானானியருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என தேவன் யூதேயாவை எச்சரித்திருந்தார். ஆனால் அவர்கள் கீழ்ப்படியவில்லை. இதனால் ஏற்பட்ட விளைவு என்ன? கானானியர் யேகோவாவைப் பணிந்து கொள்ளும்படி யூதாவால் செய்ய முடியவில்லை. ஆனால் கானானியரோ, யூதாவைத் தங்கள் மட்டத்திற்கு கீழே இழுத்து வந்துவிட்டார்கள். யூதா பாகாலையும், சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் பணிந்து கொள்ள ஆரம்பித்து விட்டது.

ஒரு சபையானது தனது ஆராதனையை "இந்தியமயமாக்க" முற்பட்டால், அதற்கும் இதே கதிதான் உண்டாகும். அவர்கள் வெகு சீக்கிரத்திலேயே, கிறிஸ்தவத்தில் இல்லாத விக்கிரகாராதனை முறைமைகளில் சென்று முடிவடைகிறார்கள். ஒரு "கிறிஸ்தவ" பாதிரியார் எழுதிய புத்தகத்தின் அட்டையில் ஏழுதலைகள் கொண்ட பாம்பின் கீழ் இயேசு அமர்ந்திருப்பது போல ஒரு படம் வரையப்பட்டிருந்ததை நான் பார்த்தேன். அந்த பாம்பானது பரிசுத்தாவியின் ஏழுமடங்கைக் குறிப்பதாக அர்த்தமாம்!! "இந்தியமயமாக்குதலின்" விளைவு இப்படித்தான் இருக்கும். மற்ற சபைகளில், உலகமானது கிறிஸ்தவர்களைக் கீழ்நோக்கி இழுத்துக் கொண்டிருக்கிறது.

ஒரு விசுவாசி, அவிசுவாசியைத் திருமணம் செய்யும்போது நிகழும் காரியமும் இப்படித்தான் இருக்கும். அந்த அவிசுவாசி தன்னுடைய மட்டத்திற்கு விசுவாசியை கீழ்நோக்கி இழுத்து வந்து விடுவார். திருமண சமயத்தில் பெரும்பாலான கிறிஸ்தவர்களிடத்தில் நடைமுறையில் இருக்கும் வரதட்சணை கேட்கிற விஷயமானது, அஞ்ஞானிகளின் கலாச்சாரமாகும். வரதட்சணை முறையானது, பெண்களை வியாபார சரக்குகளாக நடத்துவது போல இருப்பதால், தேவன் அதை வெறுக்கிறார். தீர்க்கதரிசிகள் இதற்கு எதிராக நின்றபடியால், மதத்தலைவர்கள் அவர்களை வெறுத்தார்கள். இன்றைக்குள்ள நிலைமையும் அது போலவேதான் உள்ளது. இந்தியாவில் இன்று இந்த வரதட்சணைக்கு எதிரான ஓர் நிலைப்பாட்டை எடுக்கிற சபையைக் காண்பது அபூர்வமாகவே இருக்கின்றது. கிறிஸ்தவர்கள் உலகத்தின் கீழ்த்தரமான இடத்திற்கு நேராய் இழுத்து வரப்பட்டு விட்டார்கள். அவர்கள் பயன்படுத்தும் நாமமோ இயேசுவின் நாமமாகும். ஆனால் வாழும் வாழ்க்கையோ சுற்றியிருக்கிற உலகத்தாரைப் போன்றதாகவே உள்ளது.

"அந்நாளிலே நான் தலைவர்களையும், அஞ்ஞானிகளின் கலாச்சாரத்தைப் பின்பற்றின யாவரையும், பணத்தை நேசித்து, தங்களது வீடுகளைக் கொள்ளையினால் நிரப்பின யாவரையும் தண்டிப்பேன்" (செப் 1:8,9). தலைவர்களாய் இருப்பவர்கள்தான் அஞ்ஞானிகளின் கலாச்சாரத்தைப் பின்பற்றி, பணத்தை நேசித்து, தங்களது வீடுகளைப் பணத்தினால் நிரப்பினவர்கள். பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகள் அனைவருமே, தேவ ஜனங்களின் தலைவர்களுக்கு எதிராகவும், அவர்களது பண ஆசைக்கு எதிராகவும் எப்பொழுதுமே குரல் கொடுத்தார்கள். ஏனெனில் தலைவர்கள்தான் முதலாவதாகத் தவறிழைத்தவர்கள். எனவே அவர்களெல்லாம், தீர்க்கதரிசிகளுக்கு "வேதபுரட்டர்" என்னும் பட்டத்தைச் சூட்டி, அவர்களை உபத்திரவப்படுத்தினார்கள். தேவன் இன்று ஒரு தீர்க்கதரிசியை சபைக்கு அனுப்புவாரானால், அத்தீர்க்கதரிசியானவனும், பாஸ்டர்கள், பிஷப்களுக்கு எதிராகவும், அவர்கள் செய்து கொள்ளும் சமரசங்களுக்கு எதிராகவும், அவர்களுடைய பண ஆசைக்கு எதிராகவுமே பேசுவான். பின்பு பாஸ்டர்கள் அவருக்கு "வேதபுரட்டர்" என்னும் பட்டத்தைச் சூட்டி, அவரை அவர்களுடைய மேடையில் ஏறத் தடை செய்து, அவரை உபத்திரவப்படுத்துவார்கள். பழைய ஏற்பாட்டில் வாழ்ந்த ஒவ்வொரு தீர்க்கதரிசியும் உபத்திரவப்படுத்தப்பட்டார். தப்பியவர் எவருமிலர். ஸ்தேவான் யூதத் தலைவர்களைப் பார்த்து, "உங்கள் மூதாதையர் உபத்திரவப்படுத்தாத ஒரு தீர்க்கதரிசியின் பெயரையாவது உங்களால் சொல்ல முடியுமா?" என்று கேட்டான் (அப் 7:52). அவர்களால் ஒரு பெயரைக் கூடச் சொல்ல முடியவில்லை. அப்படியானால் ஏன் எல்லா தீர்க்கதரிசிகளுமே உபத்திரவப்படுத்தப்பட்டனர்? ஏனென்றால் அவர்கள் அந்த தலைவர்களின் பாவங்களை வெளியரங்கப்படுத்தினர்.

இயேசு தமது பிரசங்கத்திலே, குடிகாரர்களுக்கும், கொலைகாரர்களுக்கும், விபச்சாரிகளுக்கும் விரோதமாகவோ அல்லது அவருடைய காலத்திலே பிறரை ஏமாற்றிப் பிழைத்த ஆயக்காரர்களுக்கு விரோதமாகவோ எப்போதாவது பேசியதை நம்மால் காண முடிகின்றதா? இல்லை. அவர் அவர்களுக்கு எதிராக ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. "நான் பாவிகளைத் தேடி இரட்சிக்கவே வந்தேன்" என்றுதான் அவர் சொன்னார். ஆனால் வேதங்களைச் சுமந்து கொண்டு, கூட்ட அரங்குகளிலே பிரசங்கித்து விட்டு, பணத்தை நேசிப்பவர்களாயும், மாய்மாலமான வாழ்க்கை வாழுகிறவர்களாயும் இருந்த மதத் தலைவர்களை அவர் கொஞ்சமும் ஈவிரக்கமின்றி விளாசினார். அதனால் அவர்கள் அவரைக் கொன்றுவிட்டனர். நீங்கள் இந்த மெய்யான இயேசுவையும், மெய்த் தீர்க்கதரிசிகளையும்தான் பின்பற்றுகிறீர்களா? அல்லது உலகத்தனமான கிறிஸ்தவ தலைவர்களுடன் நெருக்கமாக இருந்து, அவர்களுடன் விருந்துண்ணுகிற கள்ளத் தீர்க்கதரிசிகளையும், "வேறொரு இயேசுவையும்" பின்பற்றுகிறீர்களா? நியாயத்தீர்ப்பானாது முதலில் தலைவர்களின் மீதுதான் வந்து கொண்டு இருக்கின்றது.

"அக்காலத்திலே தங்களுடைய பாவங்களிலே திருப்தியுற்று, கர்த்தர் எதுவும் செய்யமாட்டார் என்ற எண்ணத்தில், அவரிடத்திலே அலட்சியமாய் நடந்து கொள்ளுகிறவர்களைக் கண்டுபிடித்து தண்டிப்பதற்கு, நான் விளக்கைக் கொளுத்தி, இருள் அப்பின எருசலேமின் மூலை முடுக்கெல்லாம் அவர்களைத் தேடுவேன்" என்று கர்த்தர் சொன்னார் (செப் 1:12). இன்றும்கூட, சொகுசாய் வாழ்ந்து கொண்டு, பிரசங்கத்தின் மூலமாக ஐஸ்வரியவான்களாகி, கர்த்தருடைய கற்பனைகளுக்கு அலட்சியம் காட்டும் தலைவர்கள் சபையில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் தாங்கள் பெற்றிருக்கும் பட்டங்களும், பதவிகளுமான "இயக்குனர்," "தலைமை பாஸ்டர்," "பிஷப்" முதலியவற்றை நேசிக்கிறார்கள். கர்த்தர் ஒரு நாள் இவர்களையெல்லாம் வெளியரங்கப்படுத்துவார்.

ஒரு சபையானது எப்பொழுதெல்லாம் ஆவிக்குரிய சரிவைச் சந்திக்கின்றதோ, அப்பொழுதெல்லாம் அது சொகுசும், கஷ்டமின்மையும், வசதியும், தேவையுள்ள மக்களிடத்திலே அலட்சியப் போக்கும், ஜெபமின்மையுமான வாழ்க்கையை நோக்கியே நகர ஆரம்பிக்கின்றது. அநேக இளம் பிராயத்தினர் மிக்க வைராக்கியத்தோடும், தியாகத்தோடும், ஜெபத்தோடும், ஆழ்ந்த வேத வாசிப்போடும் கர்த்தருக்கு ஊழியம் செய்யத் தொடங்கினர். 30 ஆண்டுகள் கழிந்தவுடன், அவர்கள் குளிர்ந்து போய், "ஐஸ்வரியத்தின் வஞ்சனையினால் நெருக்கிப் போடப்பட்டுவிட்டனர்." நீங்கள் மாம்சத்தின் ஆசைகளுக்கு விரோதமானப் போராட்டத்திலே உண்மையற்றவர்களாய் மாறினாலோ அல்லது கிறிஸ்தவ வட்டாரத்தில் காணப்படும் சீரழிவிற்கு விரோதமாக நிற்கத் தவறினாலோ, நீங்களும் உங்களைச் சுற்றியுள்ள சீர்கெட்ட தலைவர்களைப் போலவே ஆகி விடுவீர்கள். நீங்கள் மிகுந்த உண்மையுடன் ஆரம்பித்தவர்கள்தான். ஆனால் இப்பொழுதோ ஞாயிறு காலைகள்தோறும் பிரசங்கத்தைச் செய்து, கட்டுகட்டாகப் பணத்தைக் குவித்து, ஆடம்பரத்திலே திளைத்து, அபிஷேகத்தை இழந்து போனவர்களாய் ஒரு தொழில்ரீதியான பிரசங்கியாக மாறி இருப்பீர்கள். செப்பனியாவின் காலத்திலே இது நடந்தது; இன்றைக்கும் நடந்து கொண்டு இருக்கின்றது.

பாவம் செய்தவர்களை, "பாதையைத் தேடி அலையும் குருட்டு மனிதர்கள்" எனக் கர்த்தர் வருணிக்கிறார் (செப் 1:17). தலைவர்களே குருடர்களாகிவிட்ட பிறகு, அவர்களைப் பின்பற்றுகிறவர்கள் சாக்கடையிலே விழுவதைத்தான் எதிர்பார்க்க முடியும்.

"கர்த்தர் உங்களை இரட்சிக்கும்படியாய் கெஞ்சுங்கள். தாழ்மையாய் இருப்பவர்களே, இன்னும் அதிகமான தாழ்மையை நாடுங்கள்" என்று செப்பனியா சொல்கிறார் (செப் 2:3). "இன்னும் அதிகமான தாழ்மையை நாடுங்கள்"- இது எப்படிப்பட்டதான வார்த்தை என்று பாருங்கள். தாழ்மையுள்ளவர்களை தேவன் ஆசீர்வதிக்கிறார் என்பதை செப்பனியா அறிந்திருந்தார். பாபிலோனின் பெருமை ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் எருசலேமில் மீதியானவர்களின் தாழ்மை இருந்தது.

காயீன், ஆபேல் காலந்தொட்டே, பாபிலோன், எருசலேம் என்னும் இரு வகையான நீரோட்டங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. பாபிலோன் என்பது ஒரு சீர்கெட்ட, மதவாத அமைப்பாகும். எருசலேம் என்பது தேவனுடைய மெய்யான சபையாகும். சபையின் குணாதிசயம் என்பது தாழ்மைதானே தவிர, அற்புதங்களும், அடையாளங்களும், ஆச்சரியங்களுமன்று. அவர்கள் இன்னும் அதிகதிமான தாழ்மையைத் தேடுவதிலே ஒருநாளும் சலிப்படைவதில்லை.

அப்படியானால் மீதியானவர் கூட்டத்தைச் சார்ந்தவர்களுக்கு உண்டாகக் கூடிய அபாயம் எதுவாக இருக்க முடியும்? தங்களை மற்ற சபைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து, தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்று சொல்லக்கூடிய அபாயம் அவர்களுக்கு ஏற்படலாம். நீங்கள் இப்படி நினைக்க வேண்டுமென்றுதான் பிசாசு உங்களிடத்தில் மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கிறான். ஏனெனில், அப்படி நீங்கள் நினைக்க தொடங்கியவுடனே தேவன் உங்களது எதிராளியாகிவிடுவார் என்றும், நீங்கள் யாரை அலட்சியம் பண்ணினீர்களோ அவர்களைப் போலவே மாறி விடுவீர்கள் என்பதையும் அவன் நன்கு அறிந்து வைத்திருக்கிறான். மீதியானவர்களாய் இருப்பவர்கள் எவ்வளவு துரிதமாக பாபிலோனின் அங்கமாக மாற முடியும் என்பதைப் பாருங்கள். ஆகவே தாழ்மையைப் பின்தொடருங்கள். உங்களது முகத்தை எப்பொழுதுமே புழுதியில் வைத்திருங்கள். ஒருபோதும் உங்களைப் பிறரோடு ஒப்பிடாதீர்கள். இயேசுவோடு மாத்திரமே உங்களை ஒப்பிட்டுக் கொள்ளுங்கள். இந்த நாட்களிலும் மீதியானவர்களான தேவ ஜனங்களைச் சார்ந்த யாவருக்கும் நான் சொல்லுகின்ற புத்திமதி இதுதான்.