எழுதியவர் :   சகரியா பூணன் வகைகள் :   திருச்சபை தலைவர்
WFTW Body: 

நாம் வெளி 2 மற்றும் 3 அதிகாரங்களில் கர்த்தரால் கடிந்து கொள்ளப்பட்ட ஐந்து தூதர்கள் மற்றும் சபைகளின் நிலவரத்தைக் கவனித்துப் பார்க்கும்போது, அது கீழ்நோக்கிப் போய்க் கொண்டிருந்ததைக் காண முடியும்:

1. எபேசுவிலே, கர்த்தர் மேலிருந்த ஆதி அன்பை இழந்துவிட்ட நிலை காணப்பட்டது. கிறிஸ்துவின் மேலுள்ள தியானத்தை நாம் பறிகொடுத்துவிட்டால், அது கீழ்நோக்கிய பயணத்தின் முதலாவது அடியை எடுத்து வைத்து விட்டதற்குச் சமமாகும். இன்னும் கொஞ்சங்கழித்து, அது நம்மை நம்முடைய சகவிசுவாசிகள் மேலுள்ள அன்பையும் இழந்துவிடும் நிலைக்கு நடத்தி விடும்.

2. பெர்கமுவிலே, பிலேயாமின் போதகத்தின் மூலம் உலகமானது சூழ்ச்சியாக நுழைந்து விட்டது. எபேசுவிலே சபைக்கு வெளியிலேவைக்கப்பட்டிருந்த நிக்கொலாய் மதஸ்தர் இங்கு வல்லமையுடன் விளங்கினர். கிறிஸ்துவின் மேலுள்ள தியானம் தணிகின்ற மாத்திரத்திலே, சபைக்குள்ளே உலகமானது நுழைந்து, தலைமைக்குரு என்னும் பதவி தோன்றி சபையை ஆட்டுவிக்கிறது. கீழ்மட்டத்திலிருந்து, மேல்மட்டம் வரையுள்ள பலதரப்பட்ட மதம் சார்ந்த படிநிலைகள் உருவாகி சபையின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ளும் போது, அங்கு பாபிலோன் வெகு எளிதிலே கட்டப்பட்டு விடும்.

3. தியத்தீராவிலே, உலகமானது முழுவதுமாய் ஆக்கிரமித்ததின் விளைவாக மத சம்பந்தப்பட்ட வேசித்தனமானது கட்டுக்கடங்காமல் போய்விட்டது. ஒரு ஸ்திரீயானவள் சபையிலே செல்வாக்குப் பெற்றவளாய், பொய்யான கிருபையையும், போலியான ஆவிக்குரிய வரங்களையும் (விசேஷமாய் தீர்க்கதரிசன வரம்) அதிகாரப்பூர்வமாய் தெரிவித்துக் கொண்டிருந்தாள்.

4. சரிதையிலே, மாய்மாலத்தைக் காண்கிறோம். அங்கு பாவம் மூடப்பட்டு, தேவனுடைய அபிப்ராயத்தைக் காட்டிலும் மனுஷரின் அபிப்ராயம் முக்கியப்படுத்தப் பட்டிருந்தது. சபையின் தூதன் ஆவிக்குரிய உறக்கத்தில் மூழ்கிவிட்டான் (அதாவது ஆவிக்குரிய உண்மைகளுக்கு விழிப்பில்லாமல் போய்விட்டான்). பக்தியின் வேஷமானது, கர்த்தர் காண்கிற ஆவிக்குரிய மரணத்தை மனுஷக் கண்களால் காணப்பட முடியாதபடிக்கு மறைத்து விட்டது.

5. லவோதிக்கியாவிலே, சரீரமானது மரித்துப் போனது மட்டுமின்றி, அழுகி நாற்றமெடுக்கத் தொடங்கும் அளவுக்கு காரியங்களெல்லாம் தரம் கெட்டுவிட்டிருந்தன. வெதுவெதுப்பான நிலையும், ஆவிக்குரிய பெருமையுமே இம்மரணத்திற்கான காரணங்களாகும். மேலுள்ள நான்கு சபைகள் ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு நல்ல காரியத்தையாகிலும் கர்த்தரால் காணமுடிந்தது. ஆனால் லவோதிக்கியாவிலோ அவரால் ஒன்றைக் கூட காணமுடியவில்லை.

மேலுள்ள சபைகளின் தூதர்களில் ஒருவருக்குக் கூட தங்களுடைய சொந்த வாழ்க்கையைக் குறித்தோ அல்லது சபையின் உண்மையான நிலையைக் குறித்தோ எதையுமே அறிந்து கொள்ளக் கூடாமற் போய்விட்டது. அவர்கள் அனைவரும் தங்களைப்பற்றி உயர்வான எண்ணமுடையவர்களாய் மாறி அதிலே திளைத்திருந்தனர். அவர்கள் எல்லாரும் மற்றவர்களுக்குப் பிரசங்கிப்பதற்காக பிரசங்கங்களைத் தயாரித்துக் கொண்டிருந்தபடியால், ஆண்டவர் தங்களோடு தனிப்பட்ட விதமாய் என்ன பேசுகிறார் என்று கவனித்துக் கேட்பதற்கு நேரமில்லாமல் போய்விட்டது. அவர்கள் தங்களுடைய சொந்த வாழ்க்கையில் என்ன தேவை என அறிந்து கொள்ளுவதைவிட, பிரசங்கிப்பதிலே அதிக ஆர்வம் கொண்டு விட்டார்கள். ஒரு நபர் தூதனாய் மாறியவுடன், இனிமேல் தனக்கு எவ்வித சரிப்படுத்தலும் தேவையில்லை என்ற கற்பனையில் மிதப்பது அவனுக்கு மிக எளிதில் சம்பவிக்கிற காரியமாகும். "இனி ஆலோசனையைக் கேளாத கிழவனும் மூடனுமாகிய ராஜாவைப்பார்க்கிலும், ஏழையும் ஞானியுமாகிய இளைஞனே வாசி" (பிர 3:14) என்று வேதம் கூறுகிறது.

இந்த ஐந்து சபைகளிலுமிருந்த தூதர்கள் அனைவரும் இந்தக் கிழ ராஜாவைப் போன்றவர்கள் ஆவர். அவர்களது வார்த்தைகள் நீண்ட காலமாய் சட்டமாய் மாறிவிட்டிருந்தன. அவர்கள் தாங்களும் எந்த விஷயத்திலும் தவறிழைக்க ஏதுவானவர்கள்தான் என்று கற்பனைகூட செய்யமுடியாத எல்லைக்குப் போய்விட்டிருந்தனர். அவர்களுடைய வஞ்சிக்கப்பட்ட நிலையானது அவ்வளவாய் இருந்தது. தேவனுடைய அபிஷேகத்தைத் தங்களுடைய வாழ்க்கையில் இழந்து போவது ஒரு போதும் சாத்தியமில்லை என்ற கற்பனை கோட்டையைக் கட்டினார்கள். அவர்களுடைய மேட்டிமையான மனோபாவத்தால், ஆவிக்குரிய செவிடராகி விட்டார்கள்.

தேவனிடத்திலே பட்சபாதமும் இல்லை; அவருக்கென்று விசேஷித்த விருப்பத்துக்குரியவர்கள் என்று எவரும் இருப்பதும் இல்லை. அப்போஸ்தலனாகிய பவுல் கூட, தான் ஒழுங்கு நிறைந்த கட்டுப்பாடான வாழ்க்கை வாழாத பட்சத்திலே ஆகாதவனாய் மாறி வீழ்ச்சி அடைய நேரிடும் என்பதைத் தெளிவாய் உணர்ந்திருந்தார் (1கொரி 9:27). பவுல் தீமோத்தேயுவிடம், "உன்னைக் குறித்தும் உபதேசத்தை குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்" (1தீமோ 4:16) என்று கூறினார். தீமோத்தேயுவுக்கு, அவனுடைய சொந்த வாழ்க்கையைக் குறித்து முதலாவது எச்சரிக்கையாயிருக்க வேண்டியிருந்தது. அப்பொழுதான் அது அவனுக்குக் கிறிஸ்துவைப் போலல்லாத எல்லாக் காரியங்களிலிருந்தும் இரட்சிப்பை அனுபவிக்கச் செய்து, பின்பு மற்றவர்களையும் அந்த வாழ்க்கைக்கு நேராக நடத்துவது அவனுக்குச் சாத்தியமானதாய் இருக்க முடிந்தது. ஆண்டவர் இந்த வழியைத்தான் அவருடைய தூதர்கள் எல்லாருக்கும் ஒவ்வொரு சபையிலும் நியமித்திருக்கிறார். பவுல் எபேசு சபை மூப்பர்களிடம் அவர்களுடைய சொந்த வாழ்க்கையைக் குறித்து முதலாவது எச்சரிக்கையுடனும், பின்பு மந்தையிலுள்ளவர்களைக் குறித்து எச்சரிக்கையுடனும் இருக்கும்படி சொன்னார் (அப் 20:28).

கர்த்தரின் தூதனாயிருக்கும் ஒவ்வொருவனுடைய கடமையும் இதுதான்: தன்னுடைய சொந்த வாழ்க்கையைச் சகலவிதப் பரிசுத்தத்தோடு காத்துக் கொள்வதும், ஆவியின் அபிஷேகத்தின் கீழ் தன்னைத் தொடர்ச்சியாய் காத்துக்கொள்வதுமேயாகும். "உன் வஸ்திரங்கள் எப்பொழுதும் வெள்ளையாயும், உன் தலைக்கு எண்ணெய் குறையாததாயும் இருப்பதாக" (பிர 9:8).