சபைகளை நடத்தும் தலைவர்களாகிய நாம், “சிலுவையின் பாதையில்” எப்போதுமே நடந்து, நம் சபைகளிலுள்ள பிறருக்கு முன்மாதிரியாய் இருக்க வேண்டும். கிறிஸ்துவைப் போலவே, நாமும் சபையோருக்கு வேலைக்காரராக இருக்க பெரும் வாஞ்சை கொண்டிட வேண்டுமே ஒழிய, அவர்களுக்குத் தலைவர்களாய் இருந்திட விரும்பக் கூடாது. இதை இயேசு கூறும்போது, “இந்த பூமியில் உள்ள இராஜாக்களும், பெரிய மனிதர்களும் ஜனங்களை ஆளுகை செய்கிறார்கள்! நீங்களோ அப்படி இருக்கக்கூடாது. உங்களுக்குள் பெரியவனாய் இருக்க விரும்புகிறவன், உங்கள் வேலைக்காரனாய் இருக்கக்கடவன். எல்லோரையும்விட மேலாய் இருக்க விரும்புகிறவன், எல்லோருக்கும் அடிமையாய் இருக்கக்கடவன்! உங்கள் மத்தியில் மேசியாவாக இருக்கும் நான்கூட, ஊழியம் கொள்ளும்படி வராமல் பிறருக்கு ஊழியம் செய்து உதவிடவே வந்தேன்!” (மாற்கு10:42-45 லிவிங்) என்று கூறினார்.
நமது பதவியையோ அல்லது ‘தலைவர்’ என்ற பட்டத்தையோ நாம் ஒருபோதும் நேசிக்கக் கூடாது (மத்தேயு 26:10). திருச்சபையில் உள்ள மற்ற எந்த சகோதரனையோ சகோதரியையோ விட நாம் பெரியவர்கள் என்று ஒருபோதும் எண்ணிவிடக்கூடாது. உண்மையில், சபையிலுள்ள மற்றவர்களை, நம்மைக் காட்டிலும் முக்கியமானவர்களாகக் கருதவே நாம் கட்டளையிடப்பட்டிருக்கிறோம் – அதிக ஆவிக்குரியவர்களாக அல்ல (அது சாத்தியமற்றது), மாறாக அதிக முக்கியமானவர்களாகக் கருத வேண்டும். (பிலிப்பியர் 2:3).
நாம் மற்றவர்களுக்குத் தலைவராக ஆவதற்கு முன், முதலில் அவர்களுக்கு உடன்-சகோதரனாக இருக்க வேண்டும். அப்போஸ்தலனாகிய யோவான், தனது 95-வது வயதில் சபைகளுக்கு எழுதியபோது, “உங்கள் சகோதரனாகிய யோவான் நான்…” என்று தன்னை அழைத்துக்கொள்கிறார் (வெளி 1:9). துரதிர்ஷ்டவசமாக, அநேகத் தலைவர்கள் தங்களை தலைவர்களாக மட்டுமே கருதுகிறார்கள். நாம் தொடர்ச்சியாய் சாதாரண சகோதரர்களாய் இருந்திட ஆண்டவரிடமிருந்து கிருபையை எப்பொழுதுமே பெற்றுக்கொள்ள அவரைத் தேட வேண்டும். இவ்விதமாய் நாம் வாழ வேண்டுமென்றால், எப்பொழுதுமே தேவனோடு நெருங்கிய முக-முகமான ஓர் உறவில் வாழ வேண்டியது அவசியமாகும்.
தேவன் அளித்திருக்கும் ஆவிக்குரிய அதிகாரத்தை, ஒருபோதும் நாம் மற்றவர்கள் மீது திணிக்கவோ அல்லது மற்றவர்கள் அந்த அதிகாரத்திற்குக் கீழ்ப்படிய வேண்டுமென நிர்பந்திக்கவோ கூடாது! நாம் ஒருபோதும், பிறர் நமக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்று கட்டாயப்படுத்தவோ, சண்டைபண்ணவோ கூடாது (2தீமோத்தேயு 2:24,25). தேவன் நம்மைத் தாங்குவாரென்றால், நாம் ஒருபோதும் நம் ஸ்தானத்தைத் தற்காத்துக்கொள்ளத் தேவையில்லை, தேவனே நம் பட்சத்திலிருந்து நம் அதிகாரத்தை நிலைநிறுத்துவார். இதற்கு மாறாக ஒருவர் தன் அதிகாரத்தை மற்றவர்கள் மீது திணிக்க முயற்சித்தால், அந்த அதிகாரம் தேவனால் தரப்பட்டதல்ல என்பதற்கு 'அதுவே' அடையாளமாயிருக்கிறது.
ஓர் ஆவிக்குரிய தலைவன் தாக்கப்படும் போதோ அல்லது தூற்றப்படும் போதோ, அவன் தன்னைத் தற்காத்துக்கொள்ளவோ அல்லது தன்னை நியாயப்படுத்தவோ மாட்டான். வேதம் கூறுகிறபடி, “கிறிஸ்துவே உங்கள் மாதிரி! அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்..... அவர் வையப்படும் போது பதிலுக்கு வையவில்லை! அவர் பாடுபடும் போது, அதைத் தவிர்க்க பயமுறுத்தவும் இல்லை! அவரோ, எப்போதும் நியாயமாய்த் தீர்ப்பு செய்கிற தேவனுடைய கரத்திலேயே தம்முடைய காரியத்தை ஒப்புக்கொடுத்தார்” (1பேதுரு 2:21,23 - லிவிங்).
இயேசு, தம் அதிகாரத்தை மனுஷர் மீது நிலைநிறுத்தும்படி ஒருபோதும் அவர்களுடன் போராடவில்லை. தம்மைப் பாதுகாத்து நியாயத்தை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பை தேவனிடமே கொடுத்துவிட்டார்! இந்தப் பாதையிலேதான் சபையிலுள்ள எல்லா தலைவர்களும் நடந்து வரவேண்டும். தேவனுடைய அதிகாரத்திற்குக் கீழ் ஓர் ஆவிக்குரிய தலைவனாய் நீங்கள் வாழ்ந்து வரும்போது, நீங்கள் சகலத்தையும் அவருடைய கரங்களில் ஒப்புவித்துவிட்டு நிம்மதியாய் இருக்கமுடியும். உங்கள் மீது வரும் தூற்றுதலையும், குறைகூறுதலையும், புறங்கூறுதலையும் உங்களால் தாங்கிக்கொள்ள முடியும். அது ஏனென்றால், “அவரே தம்முடைய ஊழியர்களை இது போன்ற தாக்குதல்களிலிருந்தும் பாதுகாத்துக் கொள்வார்” என தேவனுடைய வாக்குத்தத்தம் கூறுகிறது (ஏசாயா 54:17). என் வாழ்வில் இதன் யதார்த்தத்தை நான் மீண்டும் மீண்டும் அனுபவித்திருக்கிறேன். இதுபோன்ற அனுபவங்கள் கிடைப்பது ஆசீர்வாதமானது.
இன்றுள்ள சபைகளில், “ஆவிக்குரிய மனது கொண்ட” தலைவர்களுக்கு பெரும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறபடியால், பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தம்மை நோக்கி வந்த திரளான ஜனங்களைக் கண்ட இயேசு அவர்கள் மீது மிகுந்த மனதுருக்கம் கொண்டு, “இந்த ஜனங்களுடைய பிரச்சனைகள் ஏராளமாயிருக்கிறது! தாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று அறியாதிருக்கிறார்கள். உதவிக்கு எங்கே போவது என தெரியாதிருக்கிறார்கள். 'ஒரு மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலவே' இருக்கிறார்கள்” (மத்தேயு 9:36 - லிவிங்) எனக் கூறினார். அன்றுள்ள அதே நிலைமையே இன்றும் காணப்படுகிறது. ஒரு மேய்ப்பனின் இருதயம் கொண்ட, ஒரு வேலைக்காரனின் ஆவிகொண்ட, தேவனுக்குப் பயந்து, அவருடைய வார்த்தைக்கு நடுங்குகிற புருஷர்களாகிய தலைவர்களே, சபைக்கு அதிகமாய் தேவைப்படுகிறார்கள்.
ஜனங்கள் நம்முடைய ‘ரசிகர்களாய்' மாறிவிடுவதற்கு ஒருபோதும் அனுமதித்துவிடக்கூடாது. அப்படி இல்லையென்றால், அவர்கள் ஒருபோதும், தங்கள் தலையாகிய கிறிஸ்துவோடு ஒரு தனிப்பட்ட உறவுகொண்டு வளர்ந்திட முடியாது. நாம் ஒருவரையும் நம்மோடு இணைத்துவிடக்கூடாது. அதற்குப் பதிலாக, ஒவ்வொருவரும் தேவனுடைய முகத்துக்கு முன்பாக வாழும்படி மாத்திரமே ஊக்குவிக்க வேண்டும். அவர்கள் செய்கிற எந்த விஷயத்திலும் “நம்முடைய அங்கீகாரத்தை” தேடக்கூடாது. நம்மோடு யாராவது ஒட்டிக்கொள்வதுபோல் தோன்றினால், அதுபோன்ற ஒருவரை உடனே உதறி விடவேண்டும். நாம் ஒருவருக்கு ஆலோசனைகூறும்போது, அதை அவர் மறுப்பதற்கும் சுயாதீனம் தரவேண்டும். நம்முடைய ஆலோசனையைப் புறக்கணிக்கவோ அல்லது அவர் விரும்புகிறவிதமாய் அந்தக் காரியங்களை சுதந்திரமாய் செய்திடவோ விட்டுவிட வேண்டும். அச்சமயத்தில், அவர் ஏதாவது தவறு செய்துவிட்டால், நாம் துரிதமாய் அவருக்கு உதவி செய்ய வேண்டும்; அப்படி இல்லாமல் “நான் உங்களுக்கு ஏற்கெனவே சொன்னேன் அல்லவா?” என்று ஒருபோதும் கூறிடக் கூடாது. அவ்விதமாகத் தான் ஒரு மெய்யான ஆவிக்குரிய தலைவன் நடந்துகொள்வான்.
ஆவியினால் நிறைந்து;.... தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள் (எபேசியர் 5:18,21).
இயேசு, 30 ஆண்டுகளாகத் தமது பூமிக்குரிய சூழ்நிலைகளுக்கும், பூமிக்குரிய பெற்றோரின் அதிகாரத்திற்கும் கீழ்ப்படிந்த விதத்தில் நமக்கு முன்மாதிரியாக இருக்கிறார். இந்த விஷயங்களில் அவர் உண்மையுள்ளவராக இருந்த பின்னரே, அவருடைய பிதா அவர் ஞானஸ்நானம் எடுத்த போது, “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்” என்ற நற்சான்றிதழை அவருக்கு அளித்தார். தலைவர்களான நாமும் அந்த வழியில்தான் செல்ல வேண்டும்.
“உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச்செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே” (எபிரெயர் 13:17) என வேதாகமம் கூறுகிறது. மேலும் அந்தக் கட்டளையானது தலைவர்களுக்கும் பொருந்தும். தேவன் நமக்கு வைக்கும் சூழ்நிலைகளுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும்; உலகிலும் சபையிலும் அவர் நம்மீது வைக்கும் யாதொரு அதிகாரத்திற்கும் நாம் கீழ்ப்படிய வேண்டும். அப்போது நாமும் “நாம் அவருக்குப் பிரியமானவர்கள்” என்றதொரு சாட்சியை தேவனிடத்திலிருந்து பெறலாம்.
நாம் மூப்பர்களாய் இருப்பதினிமித்தம் மற்றவர்கள் நமக்கு அடங்கியிருக்க வேண்டும் என்று ஒருபோதும் நிர்ப்பந்திக்கக் கூடாது. அப்படிச் செய்வது, நாம் மெய்யாகவே தேவனை அறியாத நம்முடைய 'பாதுகாப்பற்ற தன்மையையே' சுட்டிக்காட்டுகிறது. ஏனென்றால், ஜனங்கள் தமக்கு அடங்கியிருப்பதற்கும் அல்லது தமக்கு விரோதமாய் முரட்டாட்டம் செய்வதற்கும் தேவனே சுயாதீனம் கொடுத்திருக்கிறார்; ஆகவே, நாம் தேவனை விட பெரியவர்களல்லவே. எனவே மூப்பர்களாயிருப்பவர்கள், யாரிடமிருந்தும் 'அடங்கியிருத்தலை' நிர்ப்பந்திக்கக் கூடாது. நாம் ஊழியம் செய்ய அழைக்கப்பட்டிருக்கிறோமே அல்லாமல், அடங்கியிருத்தலை நிர்ப்பந்தம் செய்வதற்கு அல்ல.
நம்முடைய ஆத்தும வல்லமையான நம் ஆள்த்துவத்தின் மேன்மையைக் கொண்டும், யாரையும் நமக்கு அடங்கியிருக்கச் செய்யாதவர்களாய் இருப்பதற்கு கவனம் கொள்ளவேண்டும். ஒரு வலிமையான மனம் கொண்ட மூப்பர், தன்னுடைய ஆள்த்துவ வல்லமையைப் பயன்படுத்தி, சபையிலுள்ள சிலரிடம் “ஒரு வசீகர பிடிப்பை” வைத்திருக்க முடியும்! இதுபோன்ற அனைத்தும் ஆத்துமத்திற்குரியதும், தீமையுமாகும். எல்லா ஆத்தும-வல்லமையும் மரணத்திற்கு ஊற்றப்பட வேண்டும். சபையிலுள்ள நம்முடைய ஜனங்கள், நம்முடைய கருத்துக்களுக்கு மாறுபடுவதற்கு விடுதலை கொண்டிருக்க வேண்டும்! ஒருவராகிலும் நம்மைக் குறித்த யாதொரு பயமும் கொண்டிருக்கக்கூடாது. பேதுரு தம்மைக் கடிந்துகொள்வதற்கும் இயேசு அனுமதித்திருந்தார் (மத்தேயு 16:22). சபையிலுள்ள சகோதரர்கள் உங்களைக் கடிந்துகொள்வதற்கு விடுதலையாய் உணருகிறார்களா என்று உங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள். அப்படிப்பட்ட விடுதலை அவர்களுக்கு இல்லையென்றால், உங்கள் சுயத்தை உயர்த்தும் பெருமையிலிருந்து நீங்கள் விடுபட உங்கள் இரட்சிப்பு நிறைவேற பிரயாசப்பட வேண்டும்; இயேசு இப்பூமியில் வாழ்ந்தபோது அவர் எப்படியிருந்தாரோ அப்படியே நீங்களும் இருப்பதற்கு உங்களைத் தாழ்த்த வேண்டும்.
சகோதர சகோதரிகள் ஏராளமான சட்டதிட்டங்களின் பாரத்தின் கீழ் வாழும்படியான ஒருவித பிரமாணத்துவ சர்வாதிகாரத்தோடு நாம் ஒருபோதும் சபையை நடத்தக் கூடாது. அப்படி இருந்தால், அந்த சபை ஒரு பிரமாணத்துவ 'ஜனசங்கமாக' (club) மாறி, உண்மையான தெய்வபயம் கொண்ட சகோதர சகோதரிகள் ஒரு வீட்டிலிருக்கும் உணர்வை அடையாமல் போய்விடுவார்கள். அதற்கு மாறாக, எல்லாவற்றிற்கும் 'ஆமாம்' கூறி நமக்கு உடனே கீழ்ப்படிகிறவர்கள், சபையில் ஒரு வல்லமையைப் பெற்றுவிடுவார்கள்! அது தீமை.
நம் சபைகளில் அநேக பிரமாணங்களை ஏற்படுத்தி, நாம் பிறரிடம் பரிசுத்தத்தை உருவாக்கிட முடியாது. நாம் தேவனுடைய வார்த்தையையே பிரசங்கித்திட வேண்டும், ஆனால் ஒரு குறிப்பிட்ட மாதிரியை வைத்து, அதைப்போலவே ஒத்து இருப்பதற்கு நாம் ஜனங்களைக் கட்டாயப்படுத்தக்கூடாது. ஒரு தனிப்பட்ட உணர்த்துதல் இல்லாமல், நம்மைப் பிரியப்படுத்துவதற்கு மாத்திரமே ஜனங்கள் ஏதாவது செய்தால், அவர்களுடைய செய்கைகள் அனைத்தும் வெறும் செத்த கிரியைகளாகவே இருக்கும்! அந்த கிரியைகள் மனுஷருடைய கண்களுக்கு ‘நீதியுள்ளதாக' தோன்றினாலும், அவை யாவும் செத்த கிரியைகளே ஆகும்.
மனுஷரைப் பிரியப்படுத்தவும் அவர்களைக் கவரவும் செய்யப்படும் கிரியைகள் யாவும் செத்த கிரியைகளே. செத்தகிரியை எதுவும் தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஆண்டவரை மாத்திரமே பிரியப்படுத்தும்படி செய்யப்படும் கிரியைகளையே தேவன் ஏற்றுக்கொள்கிறார். இதுபோன்ற சிறந்த கிரியைகளைச் செய்வதற்கு சகோதர சகோதரிகளை நாம் நடத்த விரும்பினால், அன்று ஆதாமையும் ஏவாளையும் ஏதேன் தோட்டத்தில் தேவன் சுயாதீனமாய் விட்டு விட்டதைப்போலவே, அவர்களுக்கும் சுயாதீனம் தரப்பட வேண்டும். மெய்யான பரிசுத்தம், தெய்வ பயத்தினால் மாத்திரமே பூரணப்பட முடியும் (2கொரிந்தியர் 7:1). சபைத் தலைவர்களுக்கு பயப்படுவதினால் அல்ல!
நம் ஸ்தலத்திலுள்ள ஊழியத்தில் சிலரை தேவன் எழுப்பி, நம்மை விட அவர்கள் மீது சகோதரர்கள் அதிக நம்பிக்கை வைத்திருந்தால், அதை தேவனுடைய கிரியையாகவே ஏற்றுக்கொண்டு, “அபிஷேகம் நிறைந்த அந்த சகோதரர்களுக்கு” சபையில் முக்கியத்துவம் அளித்து, நம்முடைய ஸ்தானத்தை அவர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், நாம் தேவனிடமே போராடுவதற்கு ஒப்பாகும்!
நீங்கள் ஓர் அன்பான பூமிக்குரிய தகப்பனாயிருந்தால், உங்கள் பிள்ளைகள் உங்களைவிட மேலான கல்வியைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று நிச்சயமாய் விரும்புவீர்கள். ஒரு மெய்யான ஆவிக்குரிய தகப்பன், தன் ஆவிக்குரிய பிள்ளைகள் தன்னை விட ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர்ந்து வருவதையே நாடுவான்! பிறர்மீது அது போன்ற வாஞ்சை உங்களுக்கு இராவிட்டால், நீங்கள் ஓர் ஆவிக்குரிய தகப்பன் அல்ல. இந்நிலையில், நீங்கள் மூப்பராயிருப்பதற்கும் தகுதியற்றவர். அப்படி இருந்தால், உங்களுடைய ஸ்தலத்தில் கிறிஸ்துவின் சரீரம் கட்டப்படுவதற்கு நீங்களே இடையூறாய் இருந்துவிடுவீர்கள்.
சர்வாதிகார மனப்பான்மை கொண்டவர்களாகவும், சபையிலுள்ள தங்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மீது பாரபட்சம் காண்பிக்கிறவர்களாகவும் இருக்கும் தலைவர்கள், இப்படிப்பட்ட தங்கள் பாவ நடக்கைக்குரிய தேவனுடைய நியாயத் தீர்ப்பிலிருந்து நீங்கிவிட்டதாக எண்ணிக்கொண்டிருக்கலாம். ஆனால், ஆண்டவரோ சகலத்தையும் கவனத்துடன் நோக்கி, எல்லா விஷயங்களையும் துல்லியமாகக் குறிப்பெடுத்து வைத்திருக்கிறார். காலம் நிறைவேறும் போது, அப்படிப்பட்ட உண்மையற்ற தலைவர்களை அவர் மிகக் கடுமையாக நியாயந்தீர்ப்பார். அந்நாளில் அவர் ஒரு மாய்மால மூப்பனையோ அல்லது தன் மந்தையை ஆளுகை செய்யும் மூப்பனையோ அல்லது கடினமாய் அவர்களை நடத்தும் மூப்பனையோ தேவன் தப்பவிடுவதில்லை என்று எல்லாரும் கண்டுகொள்வார்கள். தேவனிடத்தில் பட்சபாதமே இல்லை! ஆகவே, “தன்னை நிற்கிறவன் என்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாய் இருக்கக்கடவன்” (1கொரிந்தியர்10:12).
“தேவன் அசைத்து, அசைவுள்ளவைகளை நீக்கிப்போட்டு, அசையாதவைகளை நிலைத்திருக்கும்படி செய்வார்” என்று எபிரெயர் 12:26-28 கூறுகிறது.
நம்மைச் சுற்றியுள்ள கிறிஸ்தவ உலகத்தில், வல்லமையான பிரசங்கிகள் பாவத்தில் விழுவதையும், புதிய ஏற்பாட்டு மாதிரியைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் சபைகள் பிளவுபட்டு, அசைக்கப்படுவதையும் காண்கிறோம். இவ்வாறு உலகமும் ஒத்தவேஷமும் ஒரு பக்கமாகவும், பிரமாணத்துவமும் பரிசேயத்துவமும் மற்றொரு பக்கமாகவும் இருக்கும் கிறிஸ்தவ உலகில் எங்கு பார்த்தாலும் அசைவுண்டாயிருக்கும் இந்த காலத்தில், அசைவில்லாத கிறிஸ்துவின் சரீரத்தை நாம் கட்டுவது எப்படி? ஆம் “நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறபடியால்…, நாம் பயத்தோடும் பக்தியோடும்” தேவனை சேவிப்பதன் மூலமாகவே அது சாத்தியம் (எபிரெயர் 12:28,29).
நம் வாழ்வின் இறுதிவரையில், எல்லா நேரங்களிலும் நாம் தாழ்மையின் பாதையில் நடப்போமாக. ஆமென்.