ஆபிரகாம் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்கு முன்பாக, தனது மகன்மீது அவனுக்கிருந்த அக்கறையைக் குறித்து ஆதியாகமம் 24- ஆம் அதிகாரத்தில் நாம் வாசிக்கிறோம். தன்னுடைய மகனுக்கு ஒரு மணப்பெண்ணைப் பார்த்து வரும்படி தனது வேலைக்காரனை அவன் அனுப்பினான். வேதத்திலே பல திருமணங்களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இரண்டே இரண்டு திருமணங்கள் மட்டுமே தேவனால் ஒழுங்குபடுத்தப்பட்டவை எனத் தெளிவாகக் காண்கிறோம். ஒன்று ஆதாமுடையது. நிச்சயமாகவே ஏவாள் தேவனின் தெரிந்தெடுப்பாகும். இரண்டாவது ஈசாக்கின் திருமணமாகும். ரெபெக்காளும் தேவனுடைய தெரிந்தெடுப்புத்தான். ஜனங்கள் என்னிடத்தில், "நிச்சயிக்கப்பட்டத் திருமணங்களில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?" எனக் கேட்பதுண்டு. அதற்கு நான், "ஆம், தேவனால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் எனக்கு நம்பிக்கை உள்ளது!" எனப் பதிலளிக்கிறேன். தேவனால் ஒருவருடைய பெற்றோர் மூலமாகவோ (ஈசாக்கின் சம்பவத்தைப் போல) அல்லது பெற்றோரின் தலையீடு ஏதுமில்லாமலோ (ஆதாமைப் போல) திருமண ஏற்பாடு செய்ய முடியும். திருமணமானது தேவனால் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்பதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.
நீங்கள் ஒரு தேவபக்தியுள்ள தகப்பனாய் இருந்தால், உங்களது பிள்ளைகளுடைய திருமணங்களைக் குறித்ததான அக்கறை உங்களுக்கு இருக்கும். நீங்கள் ஒரு தேவபக்தியுள்ள தகப்பனை உங்களுடைய வாலிபப் பருவத்திலே பெற்றிருக்கும் பாக்கியம் கிடைத்திருக்குமானால், உங்களுடைய அப்பாவின் புத்திமதியைக் கருத்தாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். அத்தகைய பக்தியுள்ள தகப்பன், நீங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புகிற நபரை "வேண்டாம்" என்று சொல்லிவிட்டால், பொறுத்திருங்கள். தேவன் அந்த இடத்திலே உங்களைச் சோதித்துக் கொண்டிருக்கக்கூடும். உங்களது அப்பா "வேண்டாம்" எனச் சொல்லியது ஒருவேளை ஒரு குறிப்பிட்டக் காலத்திற்கு மாத்திரமே இருக்கலாம். தேவபக்தியான உங்களுடைய அப்பாவின் புத்திமதியை ஏற்றுக் கொள்ள நீங்கள் விருப்பம் உடையவராக இருப்பதை தேவன் பார்த்தவுடன், அவர் தாம் விரும்பிய வாழ்க்கைத் துணையை உங்களுக்குத் தந்தருள்வார்.
ஆபிரகாம் தன்னுடைய மகனாகிய ஈசாக்கிற்கு ஏற்ற மணப்பெண்ணைக் கண்டு, கொண்டுவரும்படிக்குத் தனது வேலைக்காரனை அனுப்பினான். இதை நாம் பிதா தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஒரு மணவாட்டியை ஆயத்தப்படுத்தும்படி பரிசுத்த ஆவியானவரை இப்பூமிக்கு அனுப்பியதற்கு உருவகப்படுத்திக் கூறமுடியும். இந்த உலகத்திலேச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும்போது நடப்பது இதுதான். நீங்கள் அந்த அதிகாரத்தை முழுவதும் வாசித்துப் பாருங்கள். அங்கே சில அழகிய ஒப்புமைகளைப் பார்க்கலாம்.
அவள் தன்னுடைய ஒட்டகங்களுக்குத் தண்ணீர் வார்க்க விருப்பமுடையவளா என்று அறிந்து கொள்வது அந்த வேலைக்காரன் அவளுக்கு வைத்தப் பரீட்சைகளில் ஒன்றாகும். ஒட்டகங்கள் நிறைய தண்ணீர் குடிக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். அந்தப் பெண் கிருபை பொருந்தினவளாகவும், கடின உழைப்பாளியாகவும் இருக்கிறாளா என்று அவன் அவளை இதன் மூலம் சோதித்து அறிய விரும்பினான். ரெபெக்காள் அத்தகையவளாகத்தான் இருந்தாள். அவள் அடக்கமுடையவளாய் இருந்தாள். அவள் கிணற்றண்டையில் இருந்த ஆபிராகாமின் வேலைக்காரரைப் போல முன்பின் தெரியாதவர்களை எல்லாம் நிமிர்ந்துகூடப் பார்க்காதவளாய் இருந்தாள் என்று ஆதியாகமம் 24:16 வாயிலாக நாம் அறிந்து கொள்ளலாம். அவள் குடத்தை நிரப்பிக் கொண்டு வீட்டை நோக்கிக் கிளம்பும் போதுதான், வேலைக்காரன் அவளிடத்திலே வந்து, தனது வேண்டுகோளை விடுத்தான். அத்தகைய மனைவிதான் உங்களுக்கும் வேண்டும்.
இவ்விதமான ஒரு மணவாட்டியைத்தான் பிதாவும் இப்பூமியின்மீது கிறிஸ்துவுக்காகத் தேடுகிறார். தேவன் ஆபிரகாமின் வேலைக்காரனைச் சரியான நபராகிய ரெபெக்காளிடத்திற்குப் போய்ச் சேரும்படிக்கு தேவ வழிநடத்துதலைத் தந்தருளினார். மெசொப்பொத்தாமியாவிற்கும், கானானுக்குமிடையே 700 கி.மீ தூரம் இருந்தது. அது ஒரு நீண்ட, அபாயகரமான பயணமாகவும் இருந்தது. இப்படிப்பட்ட பயணத்தை அந்த வேலைக்காரன் ஏறத்தாழ ஒரு மாத காலமாக ரெபெக்காளுடன் பயணித்து வந்து சேர்ந்தான். கிறிஸ்துவின் மணவாட்டியான நாம், இந்த உலகத்திலே மேற்கொள்ள வேண்டிய பயணத்திற்கு ஒப்புமையாக இது சொல்லப்பட்டுள்ளது.
அந்த நீண்ட பயணத்தின் போது, அந்த வேலைக்காரன் ரெபெக்காளிடத்திலே எதைப் பற்றிப் பேசிக் கொண்டு வந்திருந்திருப்பான் என நினைக்கிறீர்கள்? ஈசாக்கைப் பற்றித்தான் என நான் உறுதிப்படக் கூறுகிறேன். நாம் மேற்கொண்டுள்ள இந்த நீண்ட பயணத்திலே பரிசுத்த ஆவியானவர் எதைப் பற்றிப் நம்முடன் பேசுவார் என எண்ணுகிறீர்கள்? இயேசுவைப் பற்றித்தான். உபதேசத்தைப் பற்றியல்ல, பரலோகத்தைப் பற்றியல்ல, ஆண்டவராகிய இயேசுவைப் பற்றித்தான். ரெபெக்காளும் ஈசாக்கைப் பற்றி மிக உன்னிப்புடன் கேட்டிருந்திருப்பாள் என்று நான் உறுதியாய் நம்புகின்றேன்.
என்னுடைய அற்புதமான இரட்சகரை நான் முகமுகமாய்த் தரிசிக்கிற நாள் வரைக்கும் (ரெபெக்காள் ஈசாக்கை பார்த்தது போல), இந்த நீண்ட பயணத்திலே அவரைப் பற்றி பரிசுத்த ஆவியானவரிடமிருந்து அதிகதிகமாய் அறிந்து கொள்ள விரும்புகிறேன். அதன் பின்பு ஒரு நாளிலே நானும் ரெபெக்காளைப் போலவே, என்னுடைய ஆண்டவரின் கூடாரத்தினுள் நுழைந்து, அவரது மனைவியாவேன். நீங்களும் இந்த ஏக்கத்தைப் பெற்றுள்ளீர்களா?