யாக்கோபு 1:12-15 -ஆம் வசனங்களில், சோதனையைக் குறித்தும், பாவத்தைக் குறித்தும் அப்போஸ்தலன் பேசுகிறார். நீங்கள் சோதனையில் தொடர்ந்து வெற்றிவாகை சூடிக் கொண்டே இருப்பீர்களானால், ஒரு நாளிலே ஜீவக் கிரீடத்தைப் பெறுவீர்கள் என்று அவர் அங்கே குறிப்பிடுகின்றார். தேவன், தம்மிடத்தில் அன்புகூருகிற யாவருக்கும் அதை வாக்குத்தத்தம் பண்ணுகிறார். நாம் கர்த்தரிடத்தில் அன்பாயிருந்தால், பாவத்தின் எல்லா சோதனைகளையும் எதிர்த்துப் போராடுவோம் என்பதையே இது நமக்குப் போதிக்கின்றது.
உங்களுக்கு ஏதாவதொரு சோதனை ஏற்படும்போது, "தேவனே, ஏன் இந்தச் சோதனையை எனக்கு அனுப்பினீர்?" என்று கேட்காதீர்கள். தேவன் ஒருபோதும் அதை அனுப்பவில்லை. தேவன் ஒருவரையும் சோதிப்பதில்லை. "சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் ஒருவரையும் சோதிக்கிறவரல்ல" (யாக்கோபு 1:13).
அப்படியானால், உங்களைச் சோதிப்பது யார்? சாத்தான்தான் உங்கள் மாம்சத்தின் இச்சைகளின் மூலமாகச் சோதிக்கிறான். நாம் நம்முடையக் குழந்தைப் பருவத்திலிருந்தே, நம்முடைய மாம்சத்தின் இச்சைகளில் ஈடுபாடு கொண்டிருந்த காரணத்தினால், அந்த இச்சைகளின் மூலமாக சாத்தானால் இப்பொழுது நம்மைச் சோதிக்க முடியும். ஒரு நாடு போரில் ஈடுபட்டிருக்கும் போது, அந்நாட்டின் எதிரி அவனுடைய ஏவலாளிகளை (agents) இரகசியமாக இந்த நாட்டுக்குள் ஊடுருவச் செய்து, நாட்டுக்குள்ளே பேரழிவை உண்டாக்குவான். இப்போது அந்நாடானது இருமுனைத் தாக்குதல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்; நாட்டிற்கு வெளியிலிருந்து தாக்குதல் நடைபெறும் சமயத்தில், உள்ளுக்குள் ஊடுருவியுள்ள இரகசிய ஏவலாளிகளும் தாக்குதல் தொடுப்பார்கள். சாத்தானும் இதையேதான் செய்கிறான். நாம் நமக்குள்ளிருக்கும் சாத்தானின் ஏவலாளிகளை அடையாளம் காண வேண்டும். நம்முடைய மாம்சத்தில் குடிகொண்டிருக்கும் தேவபக்தியில்லாத இச்சைகள் எல்லாம் சாத்தானுக்குச் சாதகமானவைகளாகும். நாம் அவற்றை அழிக்க வேண்டும். உங்களுக்குள்ளே இருக்கும் எதிரியின் ஏவலாளிகளை நீங்கள் சாகடிப்பவர்களாய் இருந்தால், யுத்தகளத்திலே, உங்களால் சாத்தானை எதிர்கொள்ளும் வலிமையைப் பெற முடியும். தவறான ஆசைகளுக்கு உங்களது மனது இசைந்து கொடுக்க நீங்கள் அனுமதிக்கும் போதுதான், நீங்கள் பாவம் செய்கிறீர்கள். அதுவரைக்கும் உங்களுக்கு உண்டாகும் சிந்தனையானது வெறும் சோதனை மட்டுந்தான். உதாரணமாக, நீங்கள் சாலையில் நடந்து போகும்போது, ஏதாவது ஒன்றைப் பார்த்துச் சோதிக்கப்படுகிறீர்கள். அது பாவமன்று. அது வெறும் சோதனைதான். ஆனால் நீங்கள் அதை இன்னொரு முறை பார்க்கும் போது பாவம் செய்கிறீர்கள். முதல் பார்வை சோதனை; இரண்டாம் பார்வை பாவம். முதல் பார்வையை நம்மால் தவிர்க்க இயலாது. ஏனெனில் நாம் நம்மைச் சுற்றிலும் தீமை நிறைந்த ஓர் உலகத்திலே வசித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அந்தத் தீமையுடன் ஒத்துப் போவதா, வேண்டாமா என்பதை நம்மால் தீர்மானிக்க முடியும்.
ஒரு குழந்தை கருத்தரிப்பதை இதற்கு ஒப்பிட்டுக் கூறலாம். பரிசுத்த ஆவியானவர் இந்த உதாரணத்தைத்தான் பயன்படுத்தியிருக்கிறார். உங்களுடைய மாம்சத்திலுள்ள தீமையான ஆசையுடன் நீங்கள் இசைந்து கொடுப்பது, ஒரு பெண் பால்ய உறவு கொள்ளும்படி தன்னுடைய உடலை ஒருவனுக்கு ஒப்புக் கொடுப்பதைப் போன்றதாகும். பின்பு கருத்தரிப்பு நிகழ்கின்றது. ஆனால் அதேசமயம் அவள் அவனுக்கு மறுப்புத் தெரிவிப்பாளானால், கருத்தரிப்பு உண்டாக வாய்ப்பில்லாமல் போய்விடுகின்றது. அதைப் போலவே, நீங்களும் அந்தச் சோதனையை நிராகரித்துவிட்டு, அந்தத் தீமையான ஆசையுடன் உங்களுடைய மனம் ஒன்றிப்போக அனுமதிக்கவில்லையெனில், பாவம் உண்டாவதில்லை.
"உங்களுடைய தலைக்கு மேலே பறவைகள் பறப்பதை உங்களால் தடுக்க முடியாது; ஆனால் உங்களுடைய தலைமேல் அவைக் கூடு கட்டுவதை உங்களால் தடுக்க முடியும்" என்று யாரோ ஒருவர் சொல்லியிருக்கிறார். தலைக்குமேல் பறக்கும் பறவைகளை சோதனைகளாகச் சொல்லலாம். அவையனைத்தும் உங்களுடைய மனதிற்குள் வரும் பலவிதமான மோசமான ஆசைகளாகும். நீங்கள் அவற்றையெல்லாம் உடனடியாக அப்புறப்படுத்திவிட்டால், அவை பாவமாக மாறுவதில்லை. சோதனைகள் என்ற அளவிலேயே முடிந்து விடுகின்றன. ஆனால் நீங்கள் அந்த மோசமான சிந்தனைகளை ஒரு சில நொடிகள் ரசித்துவிட்டாலும், "பறவைகள்" உங்களுடைய மனதிலே கூடுகட்ட அனுமதித்துவிட்டீர்கள் என்பதாகத்தான் அர்த்தம். இப்பொழுது நீங்கள் பாவம் செய்துவிட்டீர்கள்.
சாத்தானானவன் வனாந்திரத்திலே இயேசுவின் மனதிலும் பலவிதமான சிந்தனைகளைக் கொட்டி, அவரைச் சோதித்தான். ஆனால் இயேசுவோ அவற்றையெல்லாம் நிராகரித்துவிட்டார். இப்படியாக அவர் பாவம் செய்யவில்லை. எனவே உங்களுடைய மனதிற்குள் சிந்தனைகள் வந்து கொண்டிருக்கின்றன என்பதற்காக நீங்கள் அதைரியப்பட வேண்டாம். அவையனைத்தும் வெறும் சோதனைகள்தான். நீங்கள் அவற்றை ரசித்து, ஏற்றுக் கொள்ளும்போதுதான், அவை பாவமாக மாறுகின்றன. கருத்தரிப்பு உண்டாகும்போது மட்டுமே பாவம் பிறக்கின்றது என்று நாம் அறிந்து கொள்வது, நமக்கு மிகவும் விடுதலை அளிப்பதாக உள்ளது. கருத்தரிப்பு இல்லாமல், குழந்தையும் கிடையாது. பாவத்தின் இறுதி விளைவு ஆவிக்குரிய மரணமாகும் (யாக்கோபு 1:15). நாம் இதைக் குறித்து வஞ்சிக்கப்பட்டு விடக்கூடாது (யாக்கோபு 1:16).