“பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளையும், சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும் நீ என் நாமத்தைப் பற்றிக்கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடிகொண்டிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாமலிருந்ததையும் அறிந்திருக்கிறேன்….” என்று வெளி 2:12-17 வசனங்களில் வாசிக்கிறோம்.
பெர்கமு பட்டணம் மிகவும் பொல்லாததாக இருந்ததால், சாத்தானின் பூமிக்குரிய தலைமையகம் அங்கே இருந்ததாக ஆண்டவர் கூறுகிறார். இது வெளி 2:13-இல் இரண்டு முறை குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் அந்தப் பட்டணத்தின் நடுவிலேயே கர்த்தர் தம்முடைய சபையை வைத்திருந்தார்.
“நீங்கள் குடியிருக்கிற இடத்தை அறிந்திருக்கிறேன்” என்று கர்த்தர் அவர்களிடம் கூறுகிறார். நாம் எங்கு வாழ்கிறோம், எந்த சூழ்நிலையில் வாழ்கிறோம் என்பதை அவர் சரியாக அறிந்திருக்கிறார். நாம் குடியிருக்கும் இடத்திலேயே சாத்தான் அவனுடைய பூமிக்குரிய சிங்காசனத்தைக் கொண்டிருந்தாலும், அவர் நம்மைப் பரிசுத்தமாகவும் ஜெயங்கொள்கிறவர்களாகவும் வைத்திருக்க முடியும். ஆவியின் பட்டயத்தால் நாமும் ஜெயிக்க முடியும்.
எந்த ஒரு விளக்குத்தண்டும், தான் பிரகாசிக்க முடியாதபடி தனது சுற்றுப்புறம் மிகவும் இருட்டாக இருக்கிறது என்று ஒருபோதும் குறை கூறுவதில்லை. ஒரு விளக்குத்தண்டின் பிரகாசத்திற்கும் அதன் சுற்றுப்புறத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதன் வெளிச்சம், அதிலுள்ள எண்ணெயின் அளவை மட்டுமே சார்ந்திருக்கிறது.
எந்தவொரு ஸ்தல-சபையிலும் காரியம் அப்படித்தான் இருக்கிறது. சுற்றுப்புறம் தீமையானதாக இருக்கலாம். அந்தப் பட்டணத்தில் சாத்தானுடைய சிங்காசனம் இருக்கலாம். ஆனால் சபையானது பரிசுத்த ஆவியின் எண்ணெயால் நிறைந்திருந்தால், அங்கு ஒளி அதிகமாகப் பிரகாசிக்கும். இன்னும் சொல்லப்போனால், சுற்றுப்புறம் எவ்வளவு அதிகமாக இருளாக இருக்கிறதோ, எந்த விளக்கும் அவ்வளவு அதிகமாகவே பிரகாசிக்கும்! நட்சத்திரங்கள் பகலில் அல்ல, இரவில் தானே காணப்படுகின்றன.
உபத்திரவங்களின்போதும் தம்முடைய நாமத்தை உறுதியாகப் பற்றிக்கொண்டதற்காகவும், விசுவாசத்தை மறுதலியாமல் இருந்ததற்காகவும் கர்த்தர் இந்தச் சபையைப் பாராட்டுகிறார். தனது விசுவாசத்திற்காக உயிரைக் கொடுத்த உண்மையுள்ள சாட்சியான அந்திப்பாவை அவர் விசேஷமாகக் குறிப்பிடுகிறார்.
அந்திப்பா, தனியாக நிற்க வேண்டியதாயிருந்தாலும் தேவனுடைய சத்தியத்திற்காகத் தனியாக நின்றவர்; அவர் மனிதர்களைப் பிரியப்படுத்த முயன்றவர் அல்ல, மாறாகத் தனது விசுவாசத்தில் உறுதியாக நின்ற ஒரு மனிதர். தேவனை அறிந்தவர்கள், தாங்கள் விசுவாசிப்பதை தங்களைச் சுற்றியுள்ள மற்றவர்கள் எத்தனை பேர் விசுவாசிக்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. தேவைப்பட்டால், உலகம் முழுவதிலுமுள்ள அனைவருக்கும் எதிராகக் கர்த்தருக்காகத் தனியாக நிற்கத் தயாராக இருப்பார்கள். அந்திப்பா அப்படிப்பட்ட ஒரு மனிதர். அதன் விளைவாக, அவர் கொல்லப்பட்டார்.
அவர் மனிதனைப் பிரியப்படுத்துபவராக இருந்திருந்தால், மரணத்திலிருந்து தப்பித்திருக்கலாம். தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்திற்காக அவர் சமரசம் செய்யாமல் நின்றதால் அவர் கொல்லப்பட்டார். மக்கள் அவரை குறுகிய மனப்பான்மை கொண்டவர் என்றும், பிடிவாதமானவர் என்றும், ஒத்துப்போக முடியாதவர் என்றும், பைத்தியக்காரர் என்றும் அழைத்திருக்கலாம். ஆனால் அது அவருக்கு எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை. அவர் தனது ஆண்டவருக்கு உண்மையாகவே நின்றார்; எல்லாப் பாவங்களுக்கும், உலகப்பிரகாரமான காரியத்திற்கும், ஒத்த வேஷத்திற்கும், தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமைக்கும், பிசாசுக்கும் எதிராக நின்றார். சாத்தானின் ராஜ்யத்திற்கு ஓர் அச்சுறுத்தலாக இருந்த மனிதன் அவர்.
ஒருவேளை அந்திப்பா பெர்கமுவில் இருந்ததால்தான் சாத்தான் தன் சிங்காசனத்தை அங்கே வைக்க முடிவு செய்திருக்கலாம். சாத்தானே அந்திப்பாவுக்குப் பயந்திருந்தான் என்றால், அவன் எப்படிப்பட்டதொரு மனிதனாக இருந்திருக்க வேண்டும்!
இன்று உலகின் ஒவ்வொரு பகுதியிலும் அந்திப்பாவைப் போன்றவர்கள் தேவனுக்குத் தேவை. நம்முடைய விசுவாசத்திற்காக நாம் ஒரு விலைக்கிரயம் செலுத்த வேண்டிய காலம் விரைவில் வருகிறது. நம்மைச் சுற்றியுள்ள பாபிலோனியக் கிறிஸ்தவம் முழுவதும் சமரசம் செய்து அந்திக்கிறிஸ்துவுக்கு அடிபணிவார்கள். அந்திப்பாவைப் போல அந்த நாளில் நாம் உறுதியாக நிற்போமா? அல்லது நம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும்படிக்கு சாத்தானுக்கு முன் முழங்கால்படியிடுவோமா? தேவனுடைய சத்தியத்திற்காக நம் உயிரை இழப்பது தகும் என்று நாம் உறுதியாக நம்புகிறோமா?
இன்று, தேவன் நம்மைச் சிறுசிறு சோதனைகள் மூலம் சோதிக்கிறார். இந்தச் சிறிய சோதனைகளில் நாம் உண்மையுள்ளவர்களாக இருந்தால்தான், எதிர்காலத்தில் வரவிருக்கும் பெரிய சோதனைகளிலும் நாம் உண்மையுள்ளவர்களாக இருக்க முடியும். நீங்கள் குடியிருக்கும் பட்டணத்திற்கே சாத்தான் தன் சிங்காசனத்தை மாற்ற வேண்டிய அளவுக்கு அவன் உங்களைத் தன் ராஜ்யத்திற்கு ஓர் அச்சுறுத்தலாகக் கருதவேண்டும்.
சோகமான விஷயம் என்னவென்றால், அந்திப்பா மரித்தபிறகு, பெர்கமுவில் இருந்த திருச்சபை ஆவிக்குரிய ரீதியில் தோல்வியுற்றுப் போனது. அந்திப்பா உயிருடன் இருந்தபோது திருச்சபையின் தூதராக (செய்தியளிப்பவராக) இருந்திருக்கலாம். அவர் மரித்தபிறகு, வேறு யாரோ ஒருவர் பொறுப்பேற்றார், திருச்சபை கீழ்நோக்கிச் சென்றது. பல திருச்சபைகளின் சோகமான வரலாறு இதுதான்.