WFTW Body: 

“அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து, ‘பரிசேயர் இந்த வசனத்தைக் கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறிவீரா?’ என்றார்கள். இயேசு பிரதியுத்தரமாக, ‘அவர்களை விட்டு விடுங்கள்’ என்றார்" (மத்தேயு 15:12-14).

தங்கள் பெற்றோரை அவமதிக்கும்படி ஜனங்களுக்குக் கற்பித்ததற்காக பரிசேயர்களை இயேசு திருத்தியபோது அவர்கள் இடறலடைந்தார்கள். யாதொரு கடிந்து கொள்ளுதலையோ அல்லது யாதொரு திருத்துதலையோ ஒரு மூத்த சகோதரன் மூலமாய் ஆண்டவர் தரும் போது, பரிசேயர்கள் மிக எளிதில் இடறலடைந்துவிடுவார்கள். நம் கிறிஸ்தவ ஜீவியத்திலுள்ள நர்சரிபள்ளி (மழலைப்பள்ளி) பாடங்களில் ஒன்று ‘இடறலடைவதிலிருந்து' ஜெயம் பெறுவதாகும். நீங்கள் திருத்தப்படும்போது இடறலடைவதிலிருந்து முற்றிலுமாய் விடுதலை பெற வேண்டும் என்ற நாட்டம் உங்களுக்கு இல்லையென்றால், பரிசேயத்துவத்திலிருந்து எக்காலத்தும் விடுதலை பெற உங்களுக்கு நம்பிக்கையே இல்லை.

சிறிய திருத்துதல்களைக்கூட ஏற்றுக்கொள்ள மனதில்லாமல் அவ்வளவாய் இடறலடைந்து சபையை விட்டே சென்று விட்ட ஜனங்களை எங்களுடைய சபையில் அறிந்திருக்கிறேன். அவர்கள் இன்று வனாந்தரத்தில் அலைந்து கொண்டிருக்கிறார்கள், இவர்கள் நித்தியமான இழப்பிற்கு உள்ளாவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளது. உங்களுக்குக் கொடுக்கப்பட்ட சில திருத்துதல்கள் நிமித்தம் நீங்கள் இடறலடைந்தால், பரிசேயர்களைப் போலவே நீங்களும் நரகத்திற்குச் செல்லக்கூடும் என்று நான் உறுதியுடன் கூறிட முடியும்.

"அவர்களைத் தனியே விட்டுவிடுங்கள்” என்று இயேசு தம்முடைய சீஷர்களிடம் கூறினார். இடறலடைந்த பரிசேயர்களுக்குப் பின்பாக நாம் சென்று, அவர்களை மீண்டும் சபைக்குக் கொண்டுவர முயற்சிக்கக் கூடாது. நாம் ஆண்டவருக்கு கீழ்ப்படிந்து, அவர்களைத் தனியே விட்டுவிட வேண்டும். ஒருவேளை அவர்கள் மனந்திரும்பினால் கர்த்தரிடத்திற்கும் சபைக்கும் திரும்பி வரலாம். வேறு எந்த விதத்திலும் அல்ல.

2தீமோத்தேயு 3:1-4-ல் நான்கு வகையான பிரியர்கள் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காண்கிறோம்: தற்பிரியர்கள், பணப்பிரியர்கள், சுகபோகப்பிரியர்கள் மற்றும் தேவப்பிரியர்கள். இந்த நான்கு விதமான பிரியர்களில், ஒருவரே சரியானவர். ஒரு உண்மை கிறிஸ்தவன் தேவப்பிரியனாய் இருக்க வேண்டும். ஆனால் அவன் தேவப்பிரியனாய் இல்லாவிட்டால், அவனது உரிமை, நற்பெயர், கனம் போன்றவைகளை நாடி தற்பிரியனாய் இருப்பான்.

அதற்கு ஒரு நிரூபணம் நாம் எளிதில் இடறலடைகிறோம். தன்னை தானே நேசிப்பவன் மட்டுமே இடறலடைவான். தன்னை நேசிக்காமல், தேவனை மட்டும் நேசிப்பவன், வேறொருவர் சொல்லும் காரியத்திற்காகவோ சொல்லாத காரியத்திற்காகவோ, அல்லது மற்றொரு நபர் செய்த காரியத்திற்காகவோ செய்யாத காரியத்திற்காகவோ, எதற்குமே ஒருபோதும் இடறலடையமாட்டான்.

நாம் மனம் புண்படுவதால் இடறலடைகிறோம். யாரோ ஒருவர் நம்மை நடத்தும் விதத்தினாலோ அல்லது நம் முதுகுக்குப் பின்னால் நம்மைக் குறித்து யாரோ சொன்னதைக் கேட்டதாலோ நம் சுய-வாழ்க்கை புண்படுகிறது. நாம் அவ்வளவு அதிகமாய் நம்மை நேசிக்கிறோம்!

நாம் இங்கே யாரைப் பற்றிப் பேசுகிறோம்? அவிசுவாசிகளையா? இல்லை! சிலுவையை எடுத்துக்கொண்டு சுயத்தை மரணத்திற்கு உட்படுத்துவது என்றால் என்ன என்பதை ஒருபோதும் புரிந்து கொள்ளாத "விசுவாசிகள்" என்று அழைக்கப்படுபவர்களைப் பற்றி பேசுகிறோம். ஏனென்றால், கடைசி நாட்களில் சிலுவையைக் குறித்தும் சுய ஜீவியத்திற்கு மரிப்பதைக் குறித்தும் மிகக் குறைவாகவே பிரசங்கிக்கப்படும். இன்று பெரும்பாலான சபைகளிலும் கிறிஸ்தவ தொலைக்காட்சியிலும் இது கிட்டத்தட்டக் கேள்விப்படாத காரியமாகிவிட்டது. சுயத்திற்கு மரிப்பதைக் குறித்து பிரசங்கம் இல்லாதபோது, ​​​​பல கிறிஸ்தவர்களின் வாழ்க்கையில் சுயம் செழித்தோங்க போகிறது. சுயத்தை நேசித்தால் இயேசுவைப் பின்பற்ற முடியாது என்பதை அறியக்கூட மாட்டார்கள். தங்கள் சுயத்தையும் நேசித்துக்கொண்டு இயேசுவையும் பின்பற்றலாம் என்றே நினைப்பார்கள். மனம் புண்பட்டு இடறலடைந்ததாலும் கூட அது ஒரு கொடிய பாவம் என்பதை உணராமல் இருக்கும் திரளான கிறிஸ்தவர்களைப் பாருங்கள்.

"சரிதான், ஆனால் ஒருவர் அந்த கொடூரமான காரியத்தை எனக்குச் செய்தாரே, ஆகையால் நான் மனம் புண்பட எனக்கு உரிமை உண்டு!" என்று நீங்கள் சொல்லலாம். சரியாகச் சொன்னீர்கள்! ஏனென்றால் நீங்கள் ஒரு அவிசுவாசி! நீங்கள் இயேசுவின் சீஷன் அல்ல, ஆகையால் தான் மனம் புண்பட உங்களுக்கு உரிமை உண்டு என்று நினைக்கிறீர்கள். நீங்கள் இயேசுவின் சீஷனாக இருந்தால், மனம் புண்பட உங்களுக்கு உரிமை இல்லை. இயேசுவைப் பிசாசுகளின் தலைவன் என்று அழைத்தபோதும், அவருடைய முகத்தில் எச்சில் துப்பியபோதும், எல்லா வகையான தீய செயல்களையும் அவருக்குச் செய்தபோதும் அவர் ஒருபோதும் மனம் புண்படவில்லை.

இயேசுவின் சீஷனாக இருப்பதின் அர்த்தம் என்ன? கடைசி நாட்களில் சிலுவையை எடுத்துக்கொண்டு அவரைப் பின்பற்றப்போகும் கிறிஸ்தவர்கள் மிக மிகக் குறைவே. ஆகவே, உண்மையான கிறிஸ்தவனாக இருப்பது மிகவும் கடினமாக இருக்கும், ஏனென்றால் நம்மைச் சூழ்ந்திருக்கும் ஜனங்கள் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்றும், ஆவியானவரால் நிறைந்திருக்கிறோம் என்றும், அந்நிய பாஷைகளில் பேசுகிறோம் என்றும் கூறிக்கொள்வார்கள், ஆனால் மனம் புண்பட்டு இடறலடைகிறார்கள் அல்லது அவர்கள் பெயர் புழுதியில் இழுத்துச் செல்லப்பட்டதால் (மோசமாகப் பேசப்பட்டதால்) தொந்தரவடைகிறார்கள்.

“பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” என்று ஜெபிக்க இயேசு நமக்குக் கற்றுக் கொடுத்தார். உங்கள் சொந்த பெயரை மறந்து விடுங்கள் என்பதே அதன் பொருளாகும்! ஆனால் கடைசி நாட்களில், தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கும் பலரும் கூட, தங்கள் பெயரைப் பற்றி அதிக அக்கறை காண்பிக்கப் போகிறார்கள். உதாரணமாக, இன்று உலகில் இயேசுவின் நாமம் எவ்வளவு கனவீனமடைகிறது தெரியுமா? இருப்பினும், தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கும் பெரும்பாலான மக்களை இது தொந்தரவு செய்கிறதில்லை. ஆனால், அவர்களின் பெயரை யாரேனும் ஒருமுறை கூட சேற்றிலே இழுத்துவிட்டால் (கனவீனப்படுத்தினால்), அது அவர்களை மிகவும் தொந்தரவு செய்துவிடும். அல்லது அவர்களின் அழகான சிறிய மகளின் பெயர் தூசியில் இழுக்கப்பட்டால் (கனவீனப்படுத்தப்பட்டால்), அது அவர்களை மிகவும் அதிகமாய் தொந்தரவு செய்துவிடும். ஆனால் இயேசுவின் நாமம் தேசம் முழுவதும் அவமதிக்கப்பட்டாலும் அது அவர்களைக் கொஞ்சம்கூட தொந்தரவு செய்யாது. அப்படிப்பட்டவர்கள் இயேசுவின் சீஷர்கள் என்று நினைக்கிறீர்களா? இல்லை! அதற்கு வெகு தொலைவில் இருக்கிறார்கள்! ஆனால் அவர்கள் சபைகளில் அமர்ந்திருந்து. மறுபிறப்பு அடைந்ததாகவும் ஆண்டவரை நேசிப்பதாகவும் கூறுவார்கள்.

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை, மேலிருந்து கீழ்வரை தங்களையே நேசித்துக்கொண்டு, இன்னும் தங்களை இயேசுவின் சீஷர்கள் என்று நினைக்கச் செய்து இவர்களைப் பிசாசு வஞ்சிக்கிறான். இது பிசாசு செய்த ஆச்சரியமான செயல்.

ஆனால், நான் உங்களை எச்சரிக்க மட்டுமே முடியும். நீங்களே சுயத்தை நேசிப்பதிலிருந்து விடுபட விரும்பவில்லை என்றால், அதிலிருந்து உங்களை யாராலும் மாற்ற முடியாது!