WFTW Body: 

நம் ஆண்டவர் கொடுத்திருக்கும் ஒவ்வொரு கட்டளைக்கும் கீழ்ப்படிந்து அதைக் கைக்கொள்ளும்படி சீஷர்கள் கற்பிக்கப்பட வேண்டும் என மத்தேயு 28:20 நமக்குக் கூறுகிறது. இதுவே சீஷத்துவம் நடத்திடும் உன்னத பாதையாகும். மத்தேயு 5,6,7 அதிகாரங்களை மட்டுமே வாசித்து அதில் இயேசு கொடுத்திருக்கும் சில கட்டளைகளை முதலாவதாகப் பாருங்கள். ஏனெனில், இந்த மூன்று அதிகாரங்களுக்குக் கீழ்ப்படிவதற்குக் கூட இன்றைய திரளான விசுவாசிகள் அக்கறையற்று இருக்கிறார்கள்! ஆம், ஒரு சீஷன் எப்போதும் கற்றுக்கொள்பவனாகவும் பின்பற்றுபவனாகவும் இருக்கிறான்!!

இன்று நம் தேசத்தின் மிகப்பெரிய தேவை யாதெனில், “தேவனுடைய முழு ஆலோசனைகளையும்” பிரகடனம் செய்திட ஆழமான அழைப்பு பெற்ற ஜனங்களேயாகும்! இவர்கள், இயேசு கட்டளையிட்ட எல்லா கட்டளைகளுக்கும் தாங்களும் கீழ்ப்படிந்து, அந்த அனைத்து கட்டளைகளையும் கைக்கொள்ளும்படி மற்றவர்களுக்கும் போதித்திட பேரார்வம் கொண்டிருத்தல் வேண்டும்! ஆம், அப்போது மாத்திரமே கிறிஸ்துவின் சரீரம் கட்டப்பட முடியும்!!

யார் இயேசுவின் சீஷர்கள்? என்ற கேள்விக்கு, “ஒருவரிலொருவர் அந்த சீஷர்கள் அன்புகூருவார்கள்” என்ற அடையாளத்தையே இயேசு பதிலாகக் கூறினார் (யோவான் 13:35). இயேசு கூறிய இந்த அடையாளமே மிகவும் முக்கியமானது! ஆகவே, இயேசுகிறிஸ்துவின் சீஷர்களை அவர்களுடைய பிரசங்கத் திறமையை வைத்தோ, அவர்களது பாடும் திறனை வைத்தோ, அல்லது அவர்கள் “அந்நியபாஷை பேசுவதை” வைத்தோ அல்லது அவர்கள் கூட்டங்களுக்குக் கிரமமாக வேதாகமத்தைத் எடுத்துக்கொண்டு செல்வதை வைத்தோ அல்லது கூட்டங்களில் அவர்கள் இடும் ஆரவார சத்தத்தை வைத்தோ நாம் அடையாளம் கண்டுகொள்ள முடியாது!! ஆம், ஒருவரை ஒருவர் நேசிக்கும் ஊக்கமான அன்பை வைத்தே இயேசுவின் சீஷர்களை நாம் இனம் காணமுடியும்!

எனவே தான், சுவிசேஷக் கூட்டங்கள் மூலமாய் கிறிஸ்துவினிடத்தில் கொண்டு வரப்பட்ட ஜனங்கள், ஒருவரை ஒருவர் அன்புகூர்ந்து வாழும் சீஷர்களைக் கொண்ட ஒரு சபையாக அந்த ஸ்தலத்தில் கட்டப்படுவதற்கு நடத்தப்பட வேண்டும். ஆகிலும், இன்று அநேக இடங்களில் காணப்படும் துயரம் யாதெனில், இவர்கள் வருடந்தோறும் சுவிசேஷக் கூட்டங்களை நடத்திக் கொண்டேயிருக்கிறார்கள்; ஆனால், இவைகளில் உள்ள ஒரு சபையாவது, “இந்த சபையிலுள்ளவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடமாட்டார்கள் அல்லது ஒருவரையொருவர் புறங்கூற மாட்டார்கள், அதற்கு மாறாக, இவர்கள் எப்போதும் ஒருவரிலொருவர் அன்புகூர்ந்து வாழ்வார்கள்” என கூறும்படியாய் இல்லை என்பதுதான்!

மேற்கூறியதற்கு ஒப்பான ஜெய வாழ்க்கையை புதிதாய் மனந்திரும்பிய விசுவாசிகளால் இன்னமும் வாழ முடியவில்லை என்பதை நாம் விளங்கிக்கொள்ள முடிகிறது! ஆனால், நம் தேசத்திலுள்ள சபைகளில் உள்ள மூப்பர்களிடத்திலும், கிறிஸ்தவத் தலைவர்களிடத்திலும்கூட சண்டையும், முதிர்ச்சியில்லா ஜீவியமும் காணப்பட்டால் அதைக் குறித்து நாம் என்னவென்று சொல்வது?

இந்த இழிவான நிலைமை, இயேசு நம்மிடம் ஒப்படைத்த மாபெரும் சுவிசேஷக் கட்டளையின் மிகமுக்கியமான இரண்டாவது கட்டளையாகிய “சீஷராக்குங்கள்! - பின்பு, இயேசுவின் போதனைகள் அனைத்திற்கும் பூரண கீழ்ப்படிதலுக்குள் நடத்துங்கள்!!” (மத்தேயு 28:19,20) என்ற கட்டளை எவ்வளவாய் உதாசீனம் செய்யப்பட்டுள்ளது என்பதைக் காட்டும் தெளிவான நிரூபணமாயிருக்கிறது!!

மாபெரும் சுவிசேஷக் கட்டளையின் முதல் பகுதி (மாற்கு 16:15) மாத்திரமே வழக்கமாய் எல்லா இடங்களிலும் வலியுறுத்தப்படுகிறது. அதன்படி, சுவிசேஷ ஊழியமும் அதை கர்த்தர் அடையாள அற்புதங்கள் மூலமாய் உறுதிபடுத்துவது மாத்திரமே இன்று முக்கிய இடத்தை வகிக்கிறது!

ஆனால், மத்தேயு 28:19,20 வசனங்களின் வலியுறுத்தலோ “சீஷத்துவத்தைப்” பற்றியதாய் இருக்கிறது. அதாவது, இயேசுவின் கட்டளைகள் அனைத்திற்கும் முழுமையாய் கீழ்ப்படிந்து அதன்மூலம் வெளிப்படுத்தும் ஒரு சீஷனின் மகிமையான ஜீவியம்!! இன்றைய திரளான கிறிஸ்தவர்களோ சுவிசேஷத்தின் முதல் பகுதியில் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வெகு சிலரே, இரண்டாவது பகுதியாகிய “சீஷத்துவ வாழ்க்கையில்” ஆர்வம் கொண்டிருக்கிறார்கள்! இருப்பினும் இரண்டாம் பகுதியில்லாமல் முதல் பகுதி மாத்திரமே கொண்ட சுவிசேஷம் “அரைகுறையான .... உபயோகமற்ற பாதி மானிட உடலுக்கே” ஒப்பாயிருக்கிறது. ஆனால், இதை இன்று எத்தனை பேர் தெளிவுறக் கண்டிருக்கிறார்கள்?!

இயேசு தம் ஊழியத்தில் சுவிசேஷ ஊழியத்தோடு குணமாக்கும் ஊழியத்தையும் செய்தபடியால், அவரைத் திரளான ஜனங்கள் பின்பற்றினார்கள். அதேசமயம், அவர்களிடத்தில் அவர் திரும்பிப் பார்த்து “சீஷத்துவத்தையும்” போதித்தார் (லூக்கா 14:25,26). இவ்வாறு, இயேசுவைப் போலவே இன்றைய சுவிசேஷகர்கள் தாங்களே இப்பணியை செய்வார்களா? அல்லது இந்த சுவிசேஷகர்கள் ஆரம்பித்த பணியை நிறைவு செய்வதற்கு அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், போதகர்கள், மேய்ப்பர்களின் ஒத்தாசையையாவது நாடுவார்களா?

இன்றைய பெரும்பாலான பிரசங்கிகள் “சீஷத்துவத்தின் செய்தியைப்” பிரகடனம் செய்திடத் தயங்குவது ஏன்? ஏனென்றால், இச்செய்திகள் அவர்களுடைய சபையில் உள்ள ஜனங்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிடும், அவ்வளவுதான்!! ஆனால், சீஷத்துவத்தின் செய்தியைப் பிரசங்கிப்பதன்மூலம் தங்கள் சபைகளுடைய ஆவிக்குரிய தரமோ இப்போது அதிகமாய் உயர்ந்துவிடும் என்பதைக் காணத் தவறுகிறார்கள்!!

திரளான ஜனங்களுக்கு சீஷத்துவத்தை இயேசு பிரசங்கித்தபோது, அந்தச் செய்திகள் அத்திரள் கூட்டத்தை வெறும் 11-சீஷர்களாகச் சுருங்கச் செய்துவிட்டது (யோவான் 6:2-ம் வசனத்தை யோவான் 6:10-ம் வசனத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள்). இன்னும் பலர், இச்செய்திகள் மிகவும் கடினமானது எனக் கூறி விலகிச் சென்றுவிட்டார்கள்! (யோவான் 6:60,66). இவ்வாறெல்லாம் சம்பவித்தாலும், இயேசுவோடு இணைந்திருந்த அந்த 11-சீஷர்களைக் கொண்டுதான் தேவன் தமது நோக்கத்தை இவ்வுலகில் வல்லமையாய் நிறைவேற்றி முடித்தார்!!

இன்று இந்தப் பூமியில் “கிறிஸ்துவின் சரீரமாய்” திகழ்ந்திடும் நாம், அன்று முதலாம் நூற்றாண்டில் அப்போஸ்தலர்கள் துவக்கிய அதே ஊழியத்தையே நாமும் இப்போது செய்திட வேண்டும்! ஆம், ஜனங்கள் கிறிஸ்துவண்டை நடத்தப்பட்ட பின்பு அவர்கள் சீஷத்துவத்திற்கும், கீழ்ப்படிதலுக்கும் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்!! அப்போது மாத்திரமே “கிறிஸ்துவின் சரீரம்” கட்டப்பட முடியும்.

ஜீவனுக்குப் போகிற வழி மிகவும் குறுகலானது, அதைக் கண்டுபிடிப்பவர்கள் வெகு சிலரே!

கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்!!