சபையில் பக்திவைராக்கியம் இல்லையேல், தேவ சமாதானமும் இல்லை!

எழுதியவர் :   சகரியா பூணன்
Article Body: 

தேவனுடைய உயர்ந்த பரிசுத்தத்தை ஆதாமும் ஏவாளும் மீறியப் போது, அவர்கள் ஏதேனை விட்டு துரத்தப்பட்டார்கள். பிறகு தேவன், ஜீவவிருட்சத்தை "ஓர் சுடரொளிப்பட்டயத்தை" வைத்து சேராபீன்களை கொண்டு காத்துக்கொண்டார். ஒரு சபையில் இருக்கும் மூப்பர்கள் இந்த சேராபீன்களைப் போலவே பட்டயத்தை சுழற்றி, "திவ்விய ஜீவியத்திற்கு ஒரே வழி, மாம்சத்திற்கு ஏற்படும் மரண வழியேயாகும்"! என்பதை சபையில் எக்காளமிட்டு முழங்க வேண்டும்! ஆம், அந்த பட்டயத்தினூடாகச் சென்றே நாம் தேவனோடு ஐக்கியப்படும் பாதைக்கு திரும்பி வர முடியும்!

"இந்தப்பட்டயத்தின் சுழற்சி இல்லாததினாலேயே இன்று அநேக சபைகளில் ஒத்தவேஷக்காரர்கள் நிறைந்திருக்கிறார்கள்! இதனிமித்தம் கிறிஸ்துவின் சரீரமாய் திகழ வேண்டிய பாக்கியமும் சபைகளில் இல்லாதுப் போய்விட்டது"!

இஸ்ரவேலர்கள் ஒரு சமயம் மோவாபிய குமாரத்திகளோடு வேசித்தனம் செய்தார்கள் என எண்ணாகமம் 25:1 -ல் வாசிக்கிறோம். அது மாத்திரமல்லாமல், ஒரு இஸ்ரவேலன் ஒரு மோவாபிய ஸ்திரீயை இஸ்ரவேலரின் கூடாரத்திற்கே அழைத்து வந்துவிட்டான் (எண்ணாகமம் 25:6). இஸ்ரவேல் தேசம் முழுவதும் அழியவேண்டிய அந்நாளில், ஒரே ஒரு ஆசாரியனான "பினெகாஸ்" இஸ்ரவேலை இரட்சித்தான். அவன் தேவனுடைய கனத்தைக் குறித்து அத்தனை வைராக்கியம் கொண்டவனாய், அந்த இஸ்ரவேலனின் கூடாரத்திற்கு ஓடிச் சென்று அவனையும், அந்த ஸ்திரீயையும் தன் ஈட்டியின் ஒரே வீச்சினால் உருவக் குத்திப் போட்டான் (எண்ணாகமம் 25:7,8). இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, தேவன் தன் உக்கிரத்தை நிறுத்தி வாதையைத் திருப்பிக் கொண்டார் (எண்ணாகமம் 25:11). இருப்பினும், ஏற்கனவே 24000 ஜனங்கள் வாதையினால் செத்துப் போனார்கள். வாதையின் உக்கிரம் அத்தனை வேகமாய் பரவியநிலையில், அங்கே "ஒரே ஒரு சேராபீன்" (பினெகாஸ்) தன் பட்டயத்தை வீசியிருக்காவிட்டால், அன்று அந்த வாதை இஸ்ரவேல் கூடாரம் முழுவதையும் கொன்று அழித்திருக்கும்! இப்போது சொல்லுங்கள்: ஒவ்வொரு சபையிலும் "பட்டயத்தை ஏந்திய ஒரு சேராபீன்" எத்தனை மதிப்பு நிறைந்தவன் என்பதை உங்களால் காண முடிகிறதா?

இன்றும், இந்த வாதை கிறிஸ்துவ உலகத்தில் வேகமாக பரவி வருகிறது. ஏனென்றால், பட்டயத்தை சுழற்றக்கூடிய பினெகாஸுகள் சபைகளில் இல்லை!

"ஏராளமான மூப்பர்களும், பிரசங்கிகளும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவர்களாய் மாறி "மீதியானியர்களிடம் அன்புக்கூரும்படியே" தொடர்ச்சியாய் ஊக்குவித்து வருகிறார்கள்! "சபையில் இப்படியெல்லாம் பட்டயத்தை வீசக்கூடாது" என்பதற்கு ஒரு நூறு வாதங்களை பிசாசு நமக்கு முன் வைப்பான். தன் வாதத்திற்கு ஆதரவாய் இயேசுவுக்கு கோடிட்டதைப் போல நமக்கும் வேத வசனத்தையே கோடிட்டுக் காட்டுவான்!"

பட்டயத்தை வீசியபடியால், இந்த பினெகாஸுக்கு தனிப்பட்ட விதத்தில் என்ன லாபம் கிடைத்தது? ஒன்றுமில்லை! இதற்கு மாறாக "தான் அன்பும் தயவும் கொண்டவன்" என்ற தன் நற்பெயரையே இழக்கத்தான் வேண்டியிருந்தது.

மேலும், கொல்லப்பட்ட மனுஷனின் உறவினர்கள், நண்பர்களின் கோபத்திற்கும், அவர்கள் புறங்கூறுதலுக்கும் இவன் ஆளாக வேண்டியிருந்தது! இவையெல்லாம் ஒரு பொருட்டாயில்லாமல், தேவனுடைய நாமத்தின்மீது கொண்ட கனமும் மகிமையுமே பினெகாஸை செயல்படுத்திட உந்தித் தள்ளியது! பினெகாஸின் இந்த ஊழியத்திற்கு "என் வைராக்கியத்திற்கு இனணயான பக்தி வைராக்கியம் கொண்டிருந்தான்" என்ற அங்கீகாரத்தை தேவன் அவனுக்குத் தந்தார் (எண்ணாகமம் 25:11).

ஆம், எல்லாவற்றிற்கும் முடிவில் தேவனுடைய அங்கீகார முத்திரையே ஏற்புடையதாயிருக்கிறது! பினெகாஸைக் குறித்து ஆண்டவர் தொடர்ந்துக் கூறுகையில், "அவன் தன் தேவனுக்காக வைராக்கியம் காண்பித்தபடியால் இதோ, என் சமாதானத்தின் உடன்படிக்கையை அவனுக்கு கட்டளையிடுகிறேன்" (எண்ணாகமம் 25:12,13) என்றார். இதற்கு முந்தைய அதிகாரத்தில் லேவியர்கள் தங்கள் பட்டயத்தை வீசியபடியால், அவர்களுக்கும் தன் சமாதான உடன்படிக்கையை தேவன் தந்தார் என்பதைக் கண்டோம்! (மல் 2:4,5).

"இன்று அநேக சபைகள் "தேவனுடைய பட்டயத்தின் வழியில் செல்லாமல் மனுஷருக்கேற்ற சமாதானத்தின் வழியை நாடுகிறபடியால், அந்தோ! சபைகளில் "தேவசமாதானம்" இல்லை. இதன் விளைவாக சுயத்தின் ஆக்கிரமிப்பும், வாக்குவாதங்களுமே அங்கு நிலவுகிறது. சுய வாழ்வை அழித்திடும் பட்டயத்தின் (சிலுவையின்) மூலமாகவே "கிறிஸ்துவின் சமாதானம்" நம் வீட்டிற்குள்ளும், நம் சபைக்குள்ளும் வந்திட முடியும்!"

இன்று சபையை தூய்மையுள்ளதாக பாதுகாக்க வேண்டுமென்றால், அங்குள்ள தலைவர்கள் "கர்த்தருடைய நாமத்தை கனப்படுத்துவதற்குரிய" வைராக்கியத்தினால் பற்றி எரிகிறவர்களாய் இருக்க வேண்டும். "இவன் தயவுள்ளவன் அன்புள்ளவன்" என்ற தற்புகழ்ச்சியை தூக்கியெறிந்து, தேவனுடைய நாமத்திற்குரிய மகிமை ஒன்றின் மீதே அக்கறைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

தேவனுடைய நாம மகிமையின் மேல் கொண்ட தீராத வாஞ்சையே, காசுக்காரர்களையும், புறா விற்கிறவர்களையும் ஆலயத்திலிருந்து விரட்டும்படி இயேசுவை உந்தியது! ஆம், தேவனுடைய வீட்டைக் குறித்த பக்தி வைராக்கியம் அவரைப் பட்சித்தது (யோவான் 2:17). நாம் யாவரும் கிறிஸ்துவைப்போல மாற வேண்டிய சுபாவத்தில் பிரதான பங்கே இதுதான்! ஆனால், பிரபல்யத்தை இழந்து "தவறாய் புரிந்துக் கொள்ளப்படும் இந்தக் கிறிஸ்துவைப் போலாகும்" குணாதிசயத்தில் யார் மெய்யான ஆர்வம் கொண்டிருப்பார்கள்?"