யோகாவும் கிறிஸ்தவமும்!

Article Body: 

யோகா என்பது ஒரு இந்து சாஸ்திர முறையாகும். ஜனங்கள் தங்கள் ஆத்துமாவை “மகா ஆத்துமாவோடு” (Supreme Soul) இணைத்துக் கொள்வதையும், அவர்கள் சித்தத்தை அல்லது அவர்கள் விருப்பத்தை "லோக சித்தத்துடன்" (Cosmic Will) சேர்த்து வைத்துக்கொள்வதுமேயாகும்!

இந்த யோகாவின் அப்பியாசத்திற்கு, மூன்று அம்சங்கள் உண்டு.

1. சரீரப் பயிற்சி அம்சம்,

2. மனதின், தியான அம்சம்,

3. வார்த்தையினால் ஓதும் அம்சம்.

இந்த மூன்று அம்சங்களும் சேர்ந்தே, யோகாவை முழுமைப்படுத்துகிறது. இந்த மூன்று அம்சங்களையும் தனித்தனியாய் ௮றிந்துகொள்வது நல்லது:

1) சரீரப் பயிற்சி அம்சம் :

ஒரு குறிப்பிட்ட விதத்தில் ஒருவர் தன் காலை நீட்டிக் கொள்வதாகும்! அதில், பரிசுத்தமோ அல்லது தீமையோ இருப்பதில்லை. எந்த சரீர பயிற்சியும், நம்மை ஆவிக்குரியவிதமாய் பாதிப்பதில்லை! அது, வேறொரு மார்க்கத்தின் பகுதியாய் இருந்தால் கூட பாதிப்பு ஏற்படுத்தாது. ஆகவே இந்த யோகாவை ஒரு இந்துவோ, அல்லது மூஸ்லீமோ அல்லது புத்த மதஸ்தரோ ஆகியோரில் யார் முதலாவது போதித்திருந்தாலும் அல்லது பரப்பியிருந்தாலும், நம்முடைய சரீரத்தின் அங்கமாகிய தசைகளை தாராளமாய் நீட்டி மடக்கலாம்!

பல வருடங்களுக்கு முன்பு நான் கிரிக்கெட் விளையாண்ட போது, யாரோ சிலர் என் முதுகு தசைகளை இழுத்து வைத்துக்கொள்ள பயிற்சி தந்தார்கள். அந்தப் பயிற்சி மிகுந்த உபயோகமான பயிற்சியாயிருந்தது. அதைக்கொண்டு, என் முதுகு பாதிக்கப்படாமல் கிரிக்கெட் விளையாடிட உதவி புரிந்தது! சில வருடங்களுக்குப் பின்பு, யாரோ சிலர் அந்தப் பயிற்சி “ஒரு யோகா பயிற்சி” என எடுத்துக்கூறினார்கள். இந்த புதிய தகவல், நான் செய்த சரீரப் பயிற்சியை நிறுத்தும்படி எவ்வித உந்துதலையும் எனக்குத் தரவில்லை!

ஆகிலும், வேறுசிலர், இந்த சரீரப் பயிற்சி யோகாவோடு தொடர்புகொண்டிருப்பதினிமித்தம் மன சஞ்சலம் கொண்டிருந்தால், அதை அவர் புறக்கணித்துக் கொள்ளலாம். இதுவும் உண்மைதான்... இயேசு கிறிஸ்துவை தனிப்பட்ட வாழ்க்கையில் அறிந்து கொள்வதற்கு முன்பாக யோகாவில் ஈடுபாடு கொண்டவர்கள், “இந்து சாஸ்திர யோகா பயிற்சிகள்” தங்கள் ஆவிக்குரிய தன்மையை பாதிக்கிறது என்பதை உணர்ந்திருக்கக்கூடும்! எனவே, சிலர் தங்கள் சரீர தசைகளை நீட்டி பயிற்சி செய்வதில் பாதிப்பு ஏதுமில்லை என கண்டிருக்க, மற்றும் சிலர் இந்துமார்க்கத்திற்கு உட்பட்ட யோகாவோடு பல காலம் வாழ்ந்தபடியால், “தான் இனியும் சோதிக்கப்படாதபடி” யோகாவை முற்றிலும் விட்டுவிட தீர்மானிக்கக்கூடும்!

யோகாவில், இந்து சாஸ்திரம் பின்னணியிலிருப்பதை அறியாதவர்கள், “இந்த கிறிஸ்தவர்கள் ‘யோகா பயிற்சியை' ஏன் எதிர்க்கிறார்கள்?” என்றே வியப்புடன் பார்க்கிறார்கள். மேற்கத்திய நாடுகளில் அறிமுகப்படுத்தப்படும் “ஆரம்ப யோகா பயிற்சிகள்" அவிக்குரிய தொடர்பு இல்லாததைப்போல் தோன்றக்கூடும்! ஆனால், நீங்கள் தொடர்ந்து யோகா பயிற்சியில் ஆழமாய் போகும்போது, அந்த பயிற்சிக்குப் பின்னால் மறைந்திருக்கும் முடிவான நோக்கத்திற்குள் நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் நெருங்கிச் சென்று விடுவீர்கள்!

ஆரம்ப நிலையில் “மூச்சு பயிற்சி” தீங்கற்றதைப்போல் தோன்றினாலும், அவைகள் யோகாவிற்குள் உங்களை இழுத்துச் செல்லும் படிக்கட்டுகளேயாகும்?! இந்த பயிற்சியின் முழு நோக்கமே, ஒரு தனி மனிதனை “லோக சித்தத்துடன்” (Cosmic Will) இணைப்பதேயாகும்.

2. தியானம் :

யோகாவில் அறிமுகப்படுத்தப்படும் தியானம், வேதப்புத்தகத்தில் கற்றுக்கொடுக்கப்படும் தியானத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாகும். ஒருவன் தியானிக்கும்போது, தன் மனதில் உள்ள எல்லா சிந்தைகளையும் (நன்மையானாலும் தீமையானாலும்) அவைகள் அனைத்தையும் தள்ளி ‘வெறுமையாக்க வேண்டும்’ என யோகா, ஜனங்களுக்குப் போதிக்கிறது. இதுபோன்ற வழியில் ஒரு கிறிஸ்தவன் தியானிப்பதில்லை! வேதப்புத்தகமோ, தேவனுடைய வார்த்தைகளையே இரவும் பகலும் தியானிக்க வேண்டுமென போதிக்கிறது!

ஆகவே, ஒரு கிறிஸ்தவனாய் இருக்கும் நான், என் மனதை ‘வெறுமையாக்கிக் கொள்ள’ ஒருபோதும் நாடுவதில்லை. அதற்குப் பதிலாக என் மனதை தேவனுடைய வார்த்தையினால் நிரப்பிக் கொள்ளவே பேரார்வம் கொண்டிருக்க வேண்டும்.

என் மனதிலுள்ள நன்மையும் தீமையுமான எல்லா சிந்தைகளையும் வெறுமையாக்கி காலி செய்வதற்குப் பதிலாக, என்னுடைய மனதை தேவனுடைய வாக்குதத்தங்களால் என்னை நிரப்பிக்கொள்ள வேண்டும். உதாரணமாய் “அன்புள்ள தேவன், எவ்வளவாய் என்னை நேசிக்கிறார்” போன்ற வாக்குதத்தங்கள்! (சங்கீதம்.139:17,18; ஏசாயா.49:15-16; எரேமியா 31:3-4; ரோமர் 5:8; ரோமர் 8:31-39). நான் 'தேவனுடைய தயவில்' மூழ்கி தியானிக்கையில், நான் இன்னமும் அவருக்கு கீழ்ப்படிந்து, என்னுடைய தீய பழக்கங்களை மாற்றி கொள்ளலாம் எனவும், அவருடைய மிகப்பெரிய அன்பை என் சிந்தையில் எவ்வாறு பிரதிபலிக்கலாம் எனவும் தியானம் கொள்கிறேன்!

மாறாக, யோகா அறிமுகப்படுத்தும் ஓர் சமாதானம், முழுவதும் காலியாக்கப் பட்ட சிந்தையின் 'வெறுமையிலிருந்து' தோன்றிடும் சமாதானமாகவே இருக்கிறது! இயேசு கிறிஸ்து வழங்கும் சமாதானம், முற்றிலும் வேறுபாடு கொண்டதாகும். அவர் அளிக்கும் சமாதானம், பரிசுத்தாவி நம்மோடு வாசம் செய்வதில் தோன்றி, அவர் நம்மை தம்முடைய அன்பினால் நிறைப்பதிலிருந்து வழிந்தோடும் சமாதானமாகும் (யோவான் 14:26,27; ரோமர் 5:5; ரோமர் 14:17).

ஒரு கிறிஸ்தவன் தேடுவது “தேவ சமாதானமேயாகும்!” அது, மனுஷீக முயற்சியால் கண்டடையும் சமாதானமோ அல்லது இளைப்பாறுதலோ அல்ல!

3. வார்த்தையினால் ஓதுவது :

அர்ப்பணிக்கப்பட்ட கிறிஸ்தவ ஜீவியத்தில், யோகா கற்றுத்தரும் யாதொரு வார்த்தை கூறி ஓதும் பழக்கத்திற்கு இடமில்லை! யோகாவில் காணப்படும் அடிப்படையான ஓதுதல் “ஓம்” என்ற வார்த்தையேயாகும். இதுவே இந்துமார்க்கத்தில் காணப்படும் ”தெய்வ தியானத்திற்குரிய” மிக உயர்ந்த அவர்களின் வெளிப்பாடாகும். 'ஓம்' என ஓதி அமைதி பெறுவது, வெறும் வார்த்தை தொகுப்பு அல்ல! மாறாக, ‘நிஜமற்ற ஓர் தேவனை’ ஆராதித்து தொழுவதாகும். இவ்வாறு இருக்கும் இந்து மார்க்கத்தைப் போலவே புத்த மார்க்கமும், ஜைன மார்க்கமும் 'ஓதுவதால் பெற்றிடும்' ஓர் இளைப்பாறுதலையும், மன ஆறுதலையும் கற்பிக்கிறது.

இதுபோன்ற நிலை கிறிஸ்தவர்களுக்கு இல்லை! நாம் இயேசுவின் நாமத்தைக் கூட ஒதுவதில்லை! ஏனெனில், இயேசு கிறிஸ்துவின் நாமம் ஓர் மந்திரமல்ல. நாம் கர்த்தருடைய ஜெபத்தை 10-முறை திரும்பத் திரும்ப உச்சரிப்பதினிமித்தம் 'பாவமன்னிப்போ அல்லது பாவத்திலிருந்து விடுதலையோ' நாம் கண்டடைய முடியாது!

மேலும், நாம் அர்த்தமில்லாமல் திரும்பத் திரும்ப செய்திடும் ஜெபங்களைகூட இயேசு வலிமையாய் தடை செய்தார் (மத்.6:7,8). ஏன் அவ்வாறு தடை செய்தார்? ஏனென்றால், நாம் தேவனோடு வாழ்கிறோம், அந்த தேவன் நம் பரலோக தகப்பனாயிருக்கிறார்! எனவே, பரமண்டலத்திலிருக்கும் நம் பிதாவோடு 'திரும்பத் திரும்ப உச்சரிக்கும் மந்திரம்' சிந்தைக்கு தெளிவில்லாத ஓர் நூதன தொடர்பேயாகும்! நாமோ எல்லா பயத்திலிருந்தும் விடுதலையாகி, தேவனை நம் அன்புள்ள பரம தகப்பனாய் பெற்றிருக்கும் பாதுகாப்பில் ஜீவிக்கிறோம்! சர்வ வல்ல தேவனை நாம் நெருங்கி சென்று “அப்பா!" என கூப்பிடும் பாக்கியத்தையும் பெற்றிருக்கிறோம்! (ரோமர் 8:15,16).

குழுவோ, அரசோ நடத்தும் யோகா பாடங்களைக் குறித்த என் கருத்து என்ன?

ஒரு குழுவோ அல்லது அரசோ நடத்தும் யோகா வகுப்புகளை நான் தவிர்த்திட தீர்மானித்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு:

1)இந்த யோகா வகுப்புகளில் உள்ள ஆசிரியர்கள், யோகாவோடு இணைந்து ஆழமாய் செல்லுகிறபடியால், யோகா தத்துவத்தோடு தங்களையும் ஒரு பங்காய் இணைத்து கொள்கிறார்கள். அதாவது, தங்கள் முழுமையையும் ‘லோக சித்தத்திற்கே’ (Cosmic Will) இணைந்து கொள்ள நாடுகிறார்கள். ஆகவே, அவர்களுடைய போதகங்களுக்கு என்னை ஒப்புகொடுத்து கீழ்ப்படியும்போது, அவர்களின் போதகங்கள் 'கிறிஸ்துவின் சிந்தைக்குரிய போதகங்களை' விட்டு விலக, என்னை நடத்திவிடும்!

2) என் ஜீவ காலமெல்லாம் 'ஒரு கிறிஸ்தவனாய் வாழுவேன்' என உரைத்த எனது சாட்சியைக் குறித்து நான் கவனமாயிருக்கிறேன். யோகாவிற்கும் இந்து மதத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பை அறியாத அநேக கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு முன்பாக, நான் யோகா பயிற்சி வகுப்புகளுக்குச் சென்றால், அந்த கிறிஸ்தவர்கள் இடறலடைவார்கள். ஆகவே, நான் அவர்களுக்கு மாதிரியாய் இருக்க வேண்டுமென்பதை 1கொரிந்தியர் 8:9 கூறுகிறது! “இதைக் குறித்து உங்களுக்கு உண்டாயிருக்கிற 'சுயாதீனம்' எவ்விதத்திலும் பலவீனருக்கு தடுக்கலாகாதபடிக்கு பாருங்கள்” என்பதேயாகும். அது எப்படி இருக்கக் கூடுமென்றால் “நான் பயத்திற்கு கீழ்ப்பட்டு வாழவில்லை. நான் ஏற்கெனவே குறிப்பிட்டபடி என் சரீர தசைகளை இழுத்துவைக்கும் பயிற்சி, எவ்விதத்திலும் யோகாவோடு தொடர்புடையதல்ல! அதை என் சொந்த பயனுக்காக பயிற்சி செய்திட முழு விடுதலை பெற்றிருக்கிறேன். இதன் மூலமாய் ‘ஆவிக்குரிய பாதிப்பு’ எனக்கு ஏற்பட்டு விடுமோ? என்ற எதிர்மறையான யாதொரு பயமும் எனக்கு இல்லை!” என்பதேயாகும்.

முடிவாக, 1 கொரிந்தியர் 8 -ம் அதிகாரத்தில் ஓர் ஆவிக்குரிய தாற்பரியம் இருப்பதை நான் காண்கிறேன். இங்கு பவுல் இரண்டு ரகமான ஜனங்களோடு இடைப்பட்டு பேசுகிறார். ஒரு ரகத்தினர் விக்கிரகங்களுக்கு முன்பாக படைக்கப்பட்ட இறைச்சியை புசிப்பது முற்றிலும் பாவமானது என கூறும் ரகத்தினர்! இரண்டாவது ரகத்தினரோ “அது ஒன்றும் பாவமில்லை!” என மறுக்கும் ரகத்தினர்!

இது விஷயத்தில் நான் முழுவதுமாய் அறிந்து கொண்ட விசேஷம் என்னவெனில்: முன்பு தங்கள் ஜீவியத்தில் விக்கிரகங்களுக்கு மாமிசத்தை படைத்தவர்கள், அது, எவ்வளவு பெரிய பாவச் செயல் என்பதை அறிந்திருப்பார்கள்! ஆனால் இப்போதோ, 'அதைப் புசிப்பதில்' அவர்கள் ஆட்சேபனை கொள்ளவில்லை! இங்கு பவலுக்கும்கூட விக்கிரகங்களுக்கு படைத்ததை புசிப்பதில் தனக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லை என்றே கூறுகிறார் (ரோமர்.14:14). இவ்வாறு ‘வித்தியாசமான கண்ணோட்டத்தோடு’ ஒன்றைப் பற்றிக்கொள்ள சுயாதீனம் இருப்பதையும், இன்னும் அதிகமாய் சில விஷயங்களை மறுப்பதற்குகூட சுயாதீனம் இருப்பதையும் நன்றாய் அறிந்தவனாய், அதையே என் வழிகாட்டியாகவும் வைத்து “யோகாவும் கிறிஸ்தவனும்” என்ற தலைப்பில் என்னுடைய சிந்தைகளை வெளிப்படுத்த நான் முயற்சித்துள்ளேன்!

இந்த சாராம்சங்களை கீழ்கண்ட வசனத்தோடு முடிக்கிறேன்: “ஆவியின் சிந்தையோ (எல்லா விஷயங்களிலும்) ஜீவனும் சமாதானமுமாம்!” (ரோமர் 8:6). ஆகவே 'தேவ சமாதானமே' நம் ஜீவியத்தை ஆளும் முடிவான எல்லையாயிருக்கிறது! (கொலோ. 3:15).

(பதிப்புரிமை - சகரியா பூணண்) இந்த செய்தியின் யாதொரு பகுதியையும் ஆசிரியரின் அனுமதி இல்லாமல், எந்த ஒரு மாற்றமும் செய்திடக்கூடாது.)