இரண்டுவித பாவங்கள்!
மனிதன் செய்த முதல் இரண்டு பாவங்கள் வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. முதல் பாவம் ஆதியாகமம் 3 -ம் அதிகாரத்திலும், இரண்டாவது பாவம் ஆதியாகமம் 4 -ம் அதிகாரத்திலும் காண்கிறோம்.
இந்த இரண்டு பாவங்களைச் செய்தவர்களை, தேவன் உடனடியாகவே நியாயந்தீர்த்த முறையிலும், காயீனை நியாயந்தீர்த்த முறையிலும் ஓர் வித்தியாசம் இருப்பதை நாம் காண முடிகிறது!
ஆதாமும், ஏவாளும் ஆதியாகமம் 3 -ம் அதிகாரத்தில் பாவம் செய்தபோது, தேவன் அவர்களை சிறிதேனும்கூட சபித்திடவில்லை. அவர்கள் பாடுபடப்போகும் பூமியை மாத்திரமே சபித்தார். ஆனால், ஆதியாகமம் 4 -ம் அதிகாரத்தில், காயீன் தேவனுக்கு முன்பாக பாவம் செய்தபோது, அவனை அவர் உடனடியாக ‘சபித்தார்’ என வாசிக்கிறோமே! தேவன் மனிதனை சபித்ததாக வாசித்திடும் முதலிடம் இதுதான். இந்த வித்தியாசத்திற்கு என்ன காரணம்? ஆதாமின் பாவத்திற்கும், காயீனின் பாவத்திற்கும் இடையில் காணும் வித்தியாசம் என்ன?
அந்த வித்தியாசம் இதுதான்: ஆதாம் பாவம் செய்தபோது தனக்கு மாத்திரமே அவன் தீங்கிழைத்து கொண்டான். ஆனால், காயீன் பாவம் செய்தபோதோ, தனக்கு மாத்திரமல்லாமல் மற்றொரு மனிதனுக்கும் தீங்கு செய்துவிட்டான்!
நாம் செய்திடும் சில பாவங்கள் நமக்கு மாத்திரமே தீங்கு செய்வதாயிருக்கும். ஆனால், நாம் செய்கிற வேறு சில பாவங்கள் பிறருக்கும் தீங்கிழைத்துவிடுகிறது. தேவனோ, பிறருக்கு தீங்கிழைக்கும் பாவங்களைக் குறித்தே மிகவும் சீரியஸாய் நடவடிக்கை எடுக்கிறார்!
நீங்கள் புகைத்தாலோ அல்லது குடித்தாலோ, அல்லது தீங்கு நிறைந்த போதை மருந்துகளை உட்கொண்டாலோ அல்லது அருவருப்பான பழக்கங்களில் அல்லது சிந்தைகளில் ஈடுபட்டாலோ அல்லது உங்கள் இருதயத்தில் கசப்பை அல்லது கோபத்தை வைத்திருந்தாலோ நீங்கள் உங்களுக்கு மாத்திரமே தீங்கு இழைத்துக்கொண்டீர்கள்! ஆனால், நீங்கள் புறங்கூறி, நிதானமிழந்து கோபப்பட்டு பொறமையினாலோ அல்லது கசப்பினாலோ அல்லது கோபம் அல்லது வெறுப்பினாலோ செயல்பட்டு அல்லது விபச்சாரம் செய்யவோ அல்லது கொலையோ செய்திருந்தால், நீங்கள் இப்போது ‘அந்த’ பிறருக்கும் தீங்கு செய்துவிட்டீர்கள்!
"எந்த செய்தியை கேட்கும்போது நீங்கள் அதிகமாய் அதிர்ச்சி அடைவீர்கள்"? என்ற கேள்வியை உங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள். உங்கள் சபையில் உள்ள ஒரு சகோதரன் குடித்துவிட்டார் என்ற செய்தியா? அல்லது உங்கள் சபையில் உள்ள ஒரு சகோதரன் வேறொரு சகோதரனைக் குறித்து தீமையாய் பேசிவிட்டார் என்ற சேதியா? இந்த கேள்விக்கு நீங்கள் அளிக்கும் பதில், "நீங்கள் பாவத்தை தேவன் காணும்விதமாய் காண்கிறீர்களா அல்லது இல்லையா? என்பதற்கான தெளிவான விடையை உங்களுக்குத் தந்துவிடும்!!
நீங்கள் பாவம் செய்து, ‘உங்களுக்கு மாத்திரமே’ தீங்கு செய்திடும் எல்லாப் பாவங்களையும் சற்று எண்ணிப்பாருங்கள். அவைகள் ஏராளமாய் இருக்கிறதல்லவா? ஆனால், அவையாவும் ஆதாமின் பாவ ரகத்திற்குள்ளாகவே அடங்கிவிடும். இப்போது, நீங்கள் ‘பிறருக்கு’ தீங்கு செய்யும் பாவங்களையும் எண்ணிப்பாருங்கள். இந்தப் பாவங்களும் ஏராளமாகவே இருக்கிறது! ஆனால், இவைகளோ காயீனின் பாவ ரகத்திற்குள்ளாக வருவதை நாம் காண்கிறோம் அல்லவா?
இயேசு, பரிசேயர்களைப் பிரதானமாய் கண்டனம் செய்ததற்கு காரணம், அவர்களுடைய பாவங்கள் மற்றவர்களையும் பாதித்ததினிமித்தமேயாகும். இதற்கு நேர்மாறாக, விபசாரத்தில் பிடிப்பட்ட பாவியாகிய ஸ்திரீயோ தனக்கு மாத்திரமே தீங்கு செய்தவளாய் காணப்பட்டாள் (யோ 8:1-11). ஒருவேளை, விபச்சாரம் செய்யும்படியான இக்கட்டான சூழ்நிலைக்குள் அவள் தள்ளப்பட்டிருக்கவோ அல்லது அச்சுறுத்தப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபட்டிருக்கவோ ஆளாயிருக்கக்கூடும். அவளுடைய பின்னணி நமக்குத் தெரியாது! ஆனால் இயேசுவோ, அவளுடைய பாவத்திற்குரிய பின்னணிக்கு கரிசனை காட்டி அவளை முற்றிலும் மன்னித்து இரக்கம் பாராட்டினார். ஆனால், அவளுடைய விபச்சாரத்தின் நிமித்தம் அவளை குற்றம் சாட்டிய சுயநீதி கொண்ட பரிசேயர்களையே அதிக குற்றமுள்ளவர்களாய் இயேசு பார்த்தார். ஏனென்றால், வாடகை வீட்டில் குடியிருந்த ஏழை விதவைகள், உரிய நேரத்தில் வாடகை தராததால் அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றும் கடின மனதிற்கே இதை நாம் ஒப்பிடலாம். இதைத்தான் இயேசுவும் ஒப்பனையாகக் கூறி பரிசேயர்களைப் பெருமளவில் கடிந்து கொண்டார் (மத் 23:14). இப்போது விளங்குகிறதா? அவர்களுடைய பாவம் மற்றவர்களுக்கும் தீங்கு செய்தது!
உரிய நேரத்தில் வாடகை தராத ஏழை விதவைகளை வீட்டை காலி செய்யும்படி விரட்டியது "சட்டபூர்வமாய்" சரி என்று நாம் கூறலாம். ஆனால், "நீதியின்படி" அந்த செயல் தவறானதும், தீமையும் நிறைந்ததாகும்!!
சில சூழ்நிலைகளில் நம் செயல், சட்டப்பூர்வமாய் சரியாக இருக்கலாம். ஆனால், நாம் பிறருக்கு தீங்கு செய்வதாய் அந்த செயல் இருக்குமென்றால், நாம் தேவனுடைய பார்வையில் மிகப்பெரிய தவறு செய்தவர்களாகவே நிற்க வேண்டியதாயிருக்கும். ஒரு உத்தமமான கிறிஸ்தவன், தேவன் அவனுக்கு இரக்கமாய் இருப்பதுப்போலவே பிறரிடத்திலும் இரக்கமாய் இருப்பான். தங்களுக்கு பிறர் பாவம் செய்ததினிமித்தம் அவர்களுக்கு இரக்கம் பாராட்டாதவர்கள் மீது கடைசி நாளின் நியாயத்தீர்ப்பும் "இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பாகவே" அவர்களுக்கு வந்து சேரும்.
துருதிருஷ்டவசமாக, இன்றைய கிறிஸ்தவ சபைகள் இந்த இரண்டுவித பாவங்களில் காணப்படும் வித்தியாசத்தை இன்னமும் காணாமலேதான் இருக்கிறது. எனவேதான், ஒரு விசுவாசி குடித்துவிட்டார் என்ற சேதியே திரளான விசுவாசிகளை இன்று அதிர்ச்சிக்குள்ளாக்குவதாய் இருக்கிறது. பிறரிடம் நிதானம் இழந்து கோபப்படுவதைவிட, புகைப்பிடிப்பதையே கொடிய பாவமாய் பெரும்பாலான விசுவாசிகள் கருதுகின்றனர்!!
இந்த இரண்டுவிதமான பாவங்களும் தேவனுக்கு கனவீனத்தையே உண்டாக்குகிறது. ஆனால், தேவன் காயீனை சபித்ததின்மூலம், அவர் எந்த ரக பாவத்தை அதிகமாய வெறுத்தார் என்பதை நமக்கு வெளியரங்கமாக்கிவிட்டார்.
புறங்கூறி, அதன்மூலம் ஒருவரது கண்ணியத்தை சீரழித்த ஒரு சகோதரனையோ, அல்லது ஒரு சகோதரியையோ "அவர்கள் அப்பம் பிட்கக்கூடாது" என ஒரு சபை தடை செய்ததாக இதுவரை நான் கேள்விப்படவேயில்லை. ஆனால், ஒரே ஒருமுறை குடித்துவிட்டான் என கேள்விப்பட்டவுடன், அதுப்போன்ற விசுவாசியை கிட்டத்தட்ட எல்லா சபையுமே அவனை அப்பம் பிட்பதற்கு தடை செய்கிறது. இந்த செயல் எதை நிரூபித்துக் காட்டுகிறது. இதுப்போன்ற சபைகள், தேவனுடைய மனதை அறிந்து கொள்ளும் இணக்கத்திலிருந்து வெகுதூரம் விலகி நிற்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. இந்த இருவித விசுவாசிகளுமே அப்பம் பிட்கத் தடை செய்யப்பட வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், எந்த வேற்றுமையும் இல்லாமல் இந்த இரண்டாவது ரக நபர்மேல் மாத்திரமே ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது ஏன்?
ஒரு மனுஷனுடைய பணத்தைத் திருடுவதற்கும், ஒரு மனுஷனுடைய கண்ணியத்தைத் திருடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறதா? ஒன்றை நாம் திருடு என அழைக்கிறோம். மற்றொன்றை நாம் புறங்கூறுதல் என்று அழைக்கிறோம். ஆனால் இந்த முதலாவதைவிட இரண்டாவது செயலே மகா மோசமானதாகும். ஏனெனில், ஒரு மனுஷனுடைய கண்ணியமே பணத்தைக் காட்டிலும் அதிக மதிப்புடையதாகும்! ஆனால், இந்த உண்மையை எத்தனை விசுவாசிகள் உணர்ந்திருக்கிறார்கள்?
நீங்கள் ‘பிறருக்கு தீங்கிழைத்த பாவங்கள் யாவும் வேறு எந்தப் பாவங்களையும்விட அதிகக் கொடியதென உணருங்கள்! இந்த உணர்வைப் பெற்றபின், புகைப்பவர்களையும், குடிப்பவர்களையும், போதை மருந்திற்கு அடிமையானவர்களையும் நீங்கள் கண்டால், "அவர்கள் யாவரும் உங்களைக் காட்டிலும் சிறந்த ஜனங்கள்" என்பதை தாழ்மையுடன் ஒத்துக்கொள்ளுங்கள்!
கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன்!!
இரண்டுவித ஆசீர்வாதங்கள்!
"ஆபிரகாமின் ஆசீர்வாதத்தை" நமக்குத் தந்தருளும்படியே பரிசுத்தாவியின் வரம் அருளப்பட்டதென வேதாகமம் எடுத்துரைக்கிறது (கலா 3:14). தேவன் ஆபிரகாமை ஆசீர்வதித்தபோது, "நான் உன்னை ஆசீர்வதித்து.... நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்" (ஆதி 12:3,4) என்றே கூறினார்.
இந்த ஆசீர்வாதத்தில் இரு பகுதியிருப்பதைப் பாருங்கள்! 1. நான் உன்னை ஆசீர்வதிப்பேன். 2. நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். இதுவே, நாம் பரிசுத்த ஆவியினால் நிரப்படும்போது நமக்குள் நிகழும் சம்பவமாகும். இன்றோ, திரளான விசுவாசிகள் "தாங்கள் ஆசீர்வதிக்கப்படும் பொருட்டே" பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட விரும்புகிறார்களே அல்லாமல், "மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாய் இருந்திட வேண்டும்" என்பதற்காக அல்லவே அல்ல!! இந்த காரணத்தினிமித்தமே இன்றைய கிறிஸ்தவத்தில் "பரிசுத்தாவியின் அபிஷேகம்" என்ற பெயரில் ஏராளமான போலி அனுபவங்கள் தாண்டவமாடுகின்றன!!
பரிசுத்த ஆவியின் வல்லமை, நம்மை அவரைப்போலவே, "மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாய்" இப்பூமியின் கடைசி பரியந்தமும் அவருடைய சாட்சிகளாய் மாற்றிவிடும் என்று இயேசு கூறினார் (அப் 1:8). இதுவே, இந்த பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உன்னால் ஆசீர்வதிக்கப்படும்" என கூறப்பட்ட "ஆபிரகாமின் ஆசீர்வாதமாகும்" (ஆதி 12:3). இப்பூமியின் கடையாந்தரங்களில் வசிக்கும் குடும்பங்களும் ஆபிரகாம் மூலமாய் ஆசீர்வதிக்கப்படும்... அதுப்போலவே, நாம் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும்போது, இப்பூமியின் கடையாந்தரங்களில் வசிக்கும் குடும்பங்களும் "நம்மூலமாய்" ஆசீர்வதிக்கப்படும்!!
நாசரேத்தூர் ஜெப ஆலயத்தில், தான் கர்த்தருடைய ஆவியினால் நிரப்பப்படுவதையும், அதன் விளைவாய் தன்னிலிருந்து புரண்டோடும் ஆசீர்வாதங்களையும் யூதர்களுக்கு சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டு, இருதயம் நருங்குண்டவர்கள் குணமாகி, சிறைப்பட்டவர்கள் விடுதலையடைந்து, குருடர்களுக்குப் பார்வையும் நொறுங்குண்டவர்களுக்கு விடுதலையும் அறிவிக்கப்பட்டு, தேவனுடைய ஆசீர்வாதங்கள் சிறியோர் முதல் அனைவருக்கும் உண்டாயிருக்கும்" (லூக்கா 4:19,19 - Living Bible) என்றே கூறினார். அபிஷேகத்தினால் விளைந்த ஒவ்வொன்றும் "மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாகவே" இருப்பதை நீங்கள் கவனித்தீர்களா? இதை ஆமோதிப்பதைப் போலவே, கொர்நேலியு வீட்டில் பேதுரு கூறிய "நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார்... அவர் நன்மை செய்கிறவராயும், பிசாசின் வல்லமையினால் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்" (அப் 10:38) என்ற வார்த்தைகளும் இருந்தன! இந்த வசனத்திலும் "மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாயிருப்பதையே" மீண்டும் வலியுறுத்தப்பட்டிருப்பதைப் பாருங்கள்!!
தன்னுடைய சீஷர்கள், பரிசுத்த ஆவிக்காக தங்கள் பரமபிதாவை வேண்டிக்கொள்ளும்படி இயேசு கற்றுத் தந்தபோது, அதை ஓர் உவமான ஒப்புகையோடுதான் விவரித்தார் (லூக்கா 11:5-13). அந்த உவமையில் காணும் மனிதன், தன்னிடம் வழிப்பிரயாணமாய் வந்த ஒருவனைப் போஷித்திட அப்பங்கள் பெற்றுக்கொள்ளும்வரை, எவ்வாறு தன் அண்டை வீட்டானின் கதவைத் தொடர்ச்சியாய் தட்டினான் எனக் கூறினார். இந்த உவமையின் முக்கிய பாடம் யாதெனில், நாமும் பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கு எவ்வாறு விடாப்பிடியாய் கேட்க வேண்டும் என்பதேயாகும். இதை லூக்கா 11:13 - வசனம் நமக்குத் தெளிவுப்படுத்துகிறது!
இருப்பினும், நாம் இங்கு கவனிக்க வேண்டிய மற்றொரு உண்மை யாதெனில், அந்த மனிதன் தனக்காக அப்பங்கள் பெறும்படி செல்லாமல், பிறருக்காகவே சென்றான் என்பதுதான்! வேறொருவருடைய தேவையே, அவனை அண்டைவீட்டிற்குச் செல்ல உந்தியது!
தன் அண்டை வீட்டானிடமிருந்து அப்பங்களைப் பெற்றுத் தன் வழிப்போக்கனை போஷித்து முடிந்ததும், அவன் நிம்மதியாக தூங்கச் சென்றிருப்பானென்றே நான் கருதுகிறேன்! மாறாக, தான் பிறருக்காகச் செய்த நற்கிரியைகளை எல்லாம் "அறிக்கை மூலமாய்" அங்குமிங்கும் சென்று பறை சாற்றியிருக்க மாட்டான்!! "தான் வழிப்போக்கனுக்கு நடுராத்திரியில் அப்பங்கள் தருவதை" புகைப்படம் எடுத்து அதன் பிரதிகளை சுற்றியுள்ள மக்களுக்கு எல்லாம் காண்பித்திருப்பானா? என்பதை என்னால் சற்றும் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை!!
இருப்பினும், இன்றைய பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இந்த அவலத்தைதான் இன்றும் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆம், தாங்கள் தேவனுக்கு ஊழியம் செய்வதை மக்கள் மனதில் பதிப்பதற்காகவே தாங்கள் செய்த நற்கிரியைகளை இவர்கள் விளம்பரப்படுத்துகிறார்கள்! ஆனால், இயேசுவோ, நம் வலதுகை செய்வதை இடதுகை கூட அறியக்கூடாது என்றல்லவா நமக்கு கூறியுள்ளார்!!
தேவன் நம்மை ‘அளவில்லாது’ ஆசீர்வதிக்கவே விரும்புகிறார். ஆனால், நாமோ, வெறும் நீர்த்தேக்க தொட்டியாகவோ அல்லது குளமாகவோ மாறிவிட தேவன் விரும்பவேயில்லை. மாறாக, ஜீவத்தண்ணீர் கொண்ட நதிகள் புரண்டோடும் "வாய்க்கால்களாக" நாம் இருந்திடவே அவர் விரும்புகிறார் (யோ 7:37-39). அந்த நதிகள் மறைவாகவும், அமைதியாகவும் தேவனுடைய மகிமைக்காக மாத்திரமே புரண்டோட அவர் விரும்புகிறார்!!
புதிய ஏற்பாட்டின் நிருபங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு ஆவியின் வரங்களும் "மற்றவர்களை" ஆசீர்வதிப்பதற்கென்றே தரப்பட்டதாகும் (1கொரி 12; ரோமர் 12; எபேசியர் 4). நம் சுய பக்தி விருத்திக்காகத் தரப்பட்ட அந்நியபாஷையின் வரத்தின் நோக்கம்கூட, நாம் எப்போதும் ஆவிக்குரிய புத்துணர்ச்சி பெற்று, தேவனுடைய "தொடுதலைப்" பெற்று அதன்மூலம், நாம் ‘பிறருக்கு’ இன்னும் அதிக நேர்த்தியாய் ஊழியம் செய்யும்படிக்கேயாகும்!
தங்களின் சொந்த ஆசீர்வாதங்களாகிய சரீர சுகம், பொருளாதார ஐசுவரியம், தங்களை பரவசமடைய செய்யும் மங்கள காரியங்கள்.... போன்றவைகளையே ‘பிரதானமாய்’ தேடுபவர்கள் யாராயிருந்தாலும், அவர்கள் தேவனுடைய நோக்கம் இன்னது என்பதை ஒரு துளியும் அறியாதவர்களேயாவர்! இப்படிப்பட்டவர்கள், அவருடைய மேஜையிலிருந்து விழும் "சிறுசிறு அப்பத் துணிக்கைகளே" ஆவார்கள்!
விசுவாசிகளாகிய நாம் பெற்ற அழைப்போ, இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதேயாகும்! தான் மாத்திரம் ஆசீர்வதிக்கப்படுவதற்காக அவர் இந்த பூமிக்கு வராமல், ‘மற்றவர்களை’ ஆசீர்வதிக்கும்படியே அவர் வந்தார்!
கேட்பதற்கு காதுள்ளவன் எவனோ அவன் கேட்கக்கடவன்!!