பணி ஸ்தலத்தில் மெய்க் கிறிஸ்தவர்களாய் இருத்தல்

Article Body: 

“ஒருவனால் ஓர் உலக வேலையில் இருந்து கொண்டே தேவனுக்காக அக்கினியாகவும் இருப்பது சாத்தியமா?”

“அனைத்துக் கிறிஸ்தவர்களுமே, தலைவர்களாகவும் மேய்ப்பர்களாகவும் இருக்கும்படிக்கே அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?”

இக்கேள்விகளுக்கும், இதையொத்தப் பிற கேள்விகளுக்கும், Harvard Business School-ல் MBA பட்டப் படிப்பில் முதலிடத்தில் தேறியவரும், தற்சமயம் ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் மேல் நிலை நிர்வாகியாகப் பணியாற்றி வருபவருமான சஞ்சய் பூணன் என்பவர் தனது சொந்த அனுபவத்தின் வாயிலாக விடை பகருகின்றார்.

முதலில் சில கேள்விகள்…

 • ஒருவனால் ஓர் உலக வேலையில் இருந்து கொண்டே தேவனுக்காக அக்கினியாக இருப்பது சாத்தியமா? அல்லது முழு நேர ஊழியர்களை மட்டும் தான் கர்த்தர் அழைத்துள்ளாரா?
 • ஒரு பெருநிறுவனத்தில் நீங்கள் வேலை செய்வதென்பது சாத்தியந்தானா?
 • ஆண்டவர் உங்களுக்கு முதல் சம்பளத்தைத் தரும் போது, அதை நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
 • அனைத்துக் கிறிஸ்தவர்களுமே தலைவர்களாகவும் மேய்ப்பர்களாகவும் இருக்கும்படிக்கே அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களது உலக வேலையானது ஆவிக்குரிய வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டதும் வேலை சம்பந்தப்பட்டதும் என இரு பிரிவுகளாக உள்ளனவா?
 • நீங்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் இயேசுவின் நண்பராகவும், வாரத்தின் மற்ற நாட்களில் உலகத்தின் நண்பராகவும் இருப்பவரா?

I. தலைவர்களெல்லாம் மேய்ப்பர்களே

 • “அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலத் தொய்ந்து போனவர்களும் சிதறடிக்கப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள் மேல் மனதுருகினார்” (மத் 9:36)
 • அவர்கள் உளவியல் வல்லுனர்களிடத்திலிருந்தும், கள்ளப் போதகர்களிடத்திலிருந்தும் (நவீன கால குறிசொல்பவர்கள்) அசுத்தமான யாவற்றையும் பெறும்படி தேடி அலைகிறார்கள் (சகரியா 10:2)
 • அல்லது கர்த்தர் அவர்களுக்கு ஒரு மேய்ப்பன் என்ற பொறுப்பைக் கொடுத்திருந்தும், அதை அவர்கள் உதறித் தள்ளிவிட்டனரா? (சகரியா 11:17).
 • “மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமில்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளை விட்டு ஓடிப் போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப் பீறி, அவைகளைச் சிதறடிக்கும்” (யோவான் 10:12).
  மதிப்பீடுகள் இலக்குகள் மற்றும் தீர்மானங்கள்

II. என்னுடைய மதிப்பீடுகள்

1. பூமியின் மீது எனது வாழ்க்கை வெறும் புகையே, நான் ஒரு பரலோகக் குடிமகன்

நாளைக்கு உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்குமென உங்களுக்குத் தெரியாது. நீங்கள் கொஞ்சங்காலந்தோன்றிப் பின்பு மறைந்துபோகிற புகையைப் போலிருக்கிறீர்கள் (யாக் 4:13-15).

அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்… அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே… நம்முடைய குடியிருப்போ பரலோகத்தில் இருக்கிறது” (பிலி 3: 18-20).

நீங்களோ ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்… அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர் செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகுங்கள்… என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன் (1பேதுரு 9-12).

2. நான் கையிட்டுச் செய்கின்ற ஒவ்வொன்றிலும் கடினமாய் உழைப்பேன். தேவன் அதை வெற்றியாய் மாற்றித் தருவாரானால், அதில் உண்மையாய் இருக்க தேவையான கிருபைக்காய் ஜெபித்து, தாழ்மையுடன் என்னுடைய முழங்காலில் வீழ்வேன்.

நீங்கள்…. எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள் (கொலோ 3:24).

அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும்…. (1தெச 4:11). என்பதை உங்கள் இலட்சியாயமாக்கிகொள்ளுங்கள்

...நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். ஆகையால் ஏற்ற காலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள் (1பேதுரு 5:5,6).

3. மற்றவர்கள் தேவனை மகிமைப்படுத்தும்படியாக, நான் குன்றின் மேலிட்ட விளக்காகவும், உணவில் கரையும் உப்பாகவும் இருந்து, என்னுடைய நடத்தையை மிகச் சிறந்ததாகக் காத்துக் கொள்வேன்.

நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப் போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது. நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்க மாட்டாது. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடி வைக்காமல், விளக்குத்தண்டின் மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும். இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது (மத் 5:13-16).

வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத் 5:20).

4. பரிசுத்த ஆவியின் நடத்துதலுக்கேற்ப திறந்த மனமுடையவனாய், அவருடைய வழிகாட்டுதலின்படி, பேசவும், நடக்கவும் என்னை ஒப்புக் கொடுப்பேன்.

பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார் (யோவான் 14:26).

சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்து கொண்டு, புத்திசொல்லு (1தீமோ 4:2).

குறிப்பு: இன்னும் இது தொடர்பாக வேறு சில மதிப்பீடுகளையும் அறிந்து கொள்ள, Pat Gelsinger என்னும் வலைதளத்தைப் பார்க்கவும் .

5. தேவன் எனக்குத் தந்த விதையிலே நான் உதாரத்துவமாய் இருப்பேன்

விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப் பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச் செய்வார். தேவனுக்கு எங்களால் ஸ்தோத்திரமுண்டாவதற்கு ஏதுவாயிருக்கும் மிகுந்த உதார குணத்திலே நீங்கள் எவ்விதத்திலும் சம்பூரணமுள்ளவர்களானீர்கள் (2கொரி 9:10,11).

தசம பாகத்தின் நோக்கம்: எப்பொழுதும் தேவனுக்கு முதலிடம் கொடுப்பதாகும் (உபா 14:22,23). உற்சாகமாய்க் கொடுங்கள்: உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார் (2கொரி 9:7).

எல்லாவற்றையும் கொடுங்கள்: உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான் (லூக் 14:33).

6. நான் ஒன்றையும் சுயம்நிறைந்த இலட்சியத்தோடு செய்திடமாட்டேன்.

உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமை பாராட்டாதிருங்கள்; சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய் சொல்லாமலுமிருங்கள். இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கி வருகிற ஞானமாயிராமல், லௌகீக சம்பந்தமானதும், ஜென்ம சுபாவத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது. வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு (யாக் 3:14-16).

அதினிமித்தமே நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியிராமற்போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம். ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்பட வேண்டும் (2கொரி 5:9,10).

அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலை செய்யவும் வேண்டுமென்று உங்களுக்குப் புத்தி சொல்லுகிறோம் (1தெச 4:11).

7. நான் ஒரு பணியாள் - தலைவனாக இருப்பேன். நான் என் சுய மகிமையைத் தேட மாட்டேன். அதற்குப் பதிலாக தேவனுடைய மகிமையைத் தேடுகிறவனாய், என்னைச் சுற்றியுள்ள, எனக்கு மேலுள்ள, எனக்குக் கீழுள்ள யாவரையும் பாராட்டி, உற்சாகப்படுத்தி, முன்னேற்றுவேன்.

ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக. கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது; அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத் தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரண பரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார் (பிலி 2:3-8).

சகோதரரே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்தி சொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள் (1தெச 5:14).

நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்தும்படிக்கு, பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ்செய்வாராக (ரோமர் 15:5,6).

8. நான் என் வார்த்தைகளிலும், செய்கைகளிலும் ஜாக்கிரதையாய் இருப்பேன்.

உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னைத் தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும் (யாக் 1:26).

புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்து கொள்ளுங்கள் (1பேதுரு 2:12).

9. நான் மற்றவர்களின் ஆலோசனையை அடிக்கடி நாடுவேன். தேவபக்தியுள்ளவர்களை என்னுடைய கதாநாயகனாய் வைத்துக் கொள்வேன்.

ஆலோசனையில்லாமல் எண்ணங்கள் சித்தியாமற்போகும்; நல்ல ஆலோசனைகளைப் பெற்று, அவை வெற்றியடைகின்றனவா எனக் கவனியுங்கள் (நீதி 15:22).

தேவபக்தியுள்ளவர்களை என்னுடைய கதாநாயகனாய் வைத்து, அவர்களை என்னுடைய வீட்டிற்கு அழைப்பேன் (சங் 101:6).

10. தற்போதுள்ள நிலையிலேயே திருப்தி கண்டு, அதிலேயே நீடித்திருக்க விரும்பாமல், ஒரு தலைகீழ் மாற்றத்தை நாடி, கர்த்தருக்கென்று அக்கினியாய் இருக்க விரும்புவேன்.

நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டாதபடிக்கு கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன் (ரோமர் 15:21).

உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்தி பண்ணிப்போடுவேன் (வெளி 3:15,16).

நான் அத்தகைய ஜனங்களோடு இருப்பதை ரசித்து மகிழ்கிறேன். ஏனெனில் கிறிஸ்துவுக்குள் ஓர் அற்புதமான வாழ்வு இருப்பதை நான் அவர்களுக்குக் காண்பிக்க விரும்புகிறேன். அது நமக்கிருக்கும் மற்ற விருப்பங்களுடன், நம்மை வழிநடத்தி, நம்முடைய பயன்பாட்டையும், சந்தோஷத்தையும் அதிகரிக்க முடியும். அது நம்மைப் படைத்தவருக்கு நம்மை முற்றிலுமாய் அர்ப்பணிக்கும் ஒரு வாழ்க்கையாகும். அன்பான பரமத் தகப்பனுக்கு அடங்கி வாழும் வாழ்க்கையானது ஓர் அற்புதமான வாழ்க்கை என்பதை என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு நான் காட்ட விரும்புகிறேன்.

III. உங்களுடைய மதிப்பீடுகள் என்னென்ன?

 • நீங்கள் எந்த 5 மேலான நோக்கங்களுக்காக நிற்கிறீர்கள்?
 • உங்களுடைய வேலை ஸ்தலத்திலே, இப்பூலோகத் தரத்தின்படி, நீங்கள் வெற்றியடைந்தவரா, இல்லையா என்பதையெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாமல், கிறிஸ்தவ மதிப்பீடுகளின்படி உங்களால் வாழ முடியுமா?
 • இந்த 2008-ஆம் ஆண்டிலே நீங்கள் எந்தப் பகுதியிலே மாறுவதற்கு கர்த்தர் உங்களுக்கு உதவ வேண்டுமென அவரிடத்திலே ஜெபிக்கப் போகிறீர்கள்?

IV. குறிக்கோள்கள்: அவை யாவை?

மற்றவர்களுக்குப்பிரசங்கம் பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன் (1கொரி 10:27).

இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார் (2தீமோ 5:8).

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான் (யாக் 1:12).

இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும் துன்பப்பட வேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள். அழிந்து போகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப் பார்க்கிலும் விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும் (1பேதுரு 1:6,7)

இப்பூமியிலே கடினமாய் உழைப்பதற்காக (உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய் ஆதி 3:19) நாம் படைக்கப்பட்டிருக்கிறோம் என்று நான் விசுவாசிக்கிறேன். நாம் கிறிஸ்தவர்களாக இருப்பதால், நாம் ஒன்றும் செய்யாமல், சும்மா உட்கார்ந்து கொண்டு, ஓர் எளிதான வாழ்க்கை வாழும்படி தேவன் வைக்கவில்லை. மற்றவர்களைப் போலவே நாமும் கடினமாய் உழைத்துத்தான் ஆக வேண்டும். வேலைக்கு அதற்குரிய இடத்தைத் தந்து, நம்முடைய வேலையிலே ஒரு நிறைவையும், திருப்தியையும் காண வேண்டும்.

V. உங்களுடைய குறிக்கோள்கள் எவை?

ஒரு கிறிஸ்தவனின் குறிக்கோள்கள் எதுவாயிருக்க வேண்டும்?

 • முதலாவது தேவனுடைய இராஜ்யத்தைத் தேட வேண்டும்
 • நம்முடைய வாழ்க்கையில் இயேசுவை ஆண்டவராக ஏற்றுக் கொள்ள வேண்டும்
 • என்னை உயரே எடுத்துச் செல்லும் கர்த்தாவே (இந்த கார்போரேட் உலகத்தின்படியல்ல). “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?” (மத் 16:26).

உங்களுடைய உலக வேலையில் நீங்கள் குறிக்கோள்களைக் கொண்டிருக்கலாமா?

 • ஆண்டவர் அதை எந்நேரத்திலும் மாற்றலாம் என்று அவருக்குக் கீழ்ப்படுத்தி இருக்க வேண்டும்
 • உங்களுடைய முதலாளிகளின் இருதயங்கள் கர்த்தருடைய கைகளில் உள்ளன. “இராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப் போலிருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி திருப்புகிறார்” (நீதி 21:1).

VI. என்னுடைய குறிக்கோள்கள்

தேவன் எனக்கு ஏராளமான வரங்களைத் தந்திருப்பதாக நான் தனிப்பட்ட விதத்தில் விசுவாசிக்கிறேன். அவற்றில் சிலவற்றை நான் கீழே குறிப்பிடுகிறேன். (இவற்றைக் குறித்து நான் மேன்மை பாராட்டவில்லை. வெறும் உண்மைகளாக மாத்திரம் பார்க்கிறேன்).

 • இயேசுவை என்னுடைய வாழ்க்கையில் முழுமையாகவும், தொடர்ச்சியாகவும் ஆண்டவராக வைத்துக் கொள்வது
 • என்னுடைய மண வாழ்க்கைக்கு, வேதத்திலுள்ள மண வாழ்க்கைகளை முன்மாதிரியாக வைத்துக் கொள்வது
 • தரத்திலும், அளவிலும் என்னுடைய நேரத்தை குடும்பத்திற்காகச் செலவழிப்பது. என்னுடைய பிள்ளைகளுக்கு அவர்கள் நடக்க வேண்டிய வழியைப் போதித்து, அவர்கள் இயேசுவின் சீஷர்களாய் மாற வேண்டுமென ஜெபிப்பது
 • தேவனுடைய வார்த்தையில் தொடர்ச்சியாய் இருப்பது; வேத வாக்கியங்களை இயன்ற அளவு மனனம் செய்வது; பரிசுத்த ஆவியுடன் இசைந்திருப்பது
 • கிரமமாய் உபவாசித்து ஜெபிப்பது; கிரமமாய் உண்டு உடற்பயிற்சி செய்வது
 • தேவ ஜனங்களுக்குத் தாராளமாய், தடையின்றி கொடுப்பது
 • வாராந்திர வேத பாடத்தின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்பது
 • எப்பொழுதும் கற்றுக் கொண்டே இருக்க நாடுவது; பிறர் என்ன கற்றுக்கொள்ள வேண்டுமென போதிப்பது
 • கர்த்தர் அனுமதிக்கிற பிரகாரம் என்னுடைய வேலையை நல்ல முறையில் செய்வது
 • என்னுடைய கிறிஸ்தவ மற்றும் உலக வேலை வாழ்க்கையில் தேவன் எனக்குக் கற்றுத் தந்தவற்றை ஆராய்ந்து, அவற்றை ஒரு புத்தகமாக எழுதுவது

VII. தீர்மானங்கள் – நாம் இவற்றைத் தொடர்ச்சியாய்ச் செய்து கொண்டிருக்கிறோம்

1. பரத்திலிருந்து வரும் ஞானமும், பூமியிலிருந்து உண்டாகும் மதியீனமும் எதிரானவை (யாக் 3:13-18).

 • அது சுத்தமுள்ளதாயும், சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமுள்ளதாயும், மாயமற்றதாயுமிருக்கிறது.

2. ஆடுகளுக்குள்ளே ஓநாய். சர்ப்பங்களைப் போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப் போலக் கபடற்றவர்களும் (மத்10:16).

3. மாம்சத்தின் கிரியைகளும், ஆவியின் கனியும் (கலா 5:19-24).

 • அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்

VIII. நிதி விஷயங்கள்

1. பணத்தை நேசிக்கிறவர்கள் லோத்து, கேயாசி, பிலேயாம், தேமா ஆகியோரின் வழியில் நடக்கின்றனர்.

ஐஸ்வரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிது. ஐஸ்வரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் (மத் 19:23,24).

2. இரு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய நம்மால் இயலாது (லூக் 16:13).

எந்த ஊழியக்காரனாலும் இரண்டு முதலாளிகளுக்கு ஊழியஞ்செய்ய இயலாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக் கொண்டு மற்றவனை அசட்டை பண்ணுவான், தேவனுக்கும் வங்கிக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது.

3. “பணம் என்று வரும்போது, கிறிஸ்தவ ஸ்தாபனங்கள் எல்லாமே ஒரே மாதிரியாகத்தான் உள்ளன” என்று வால்ட்டேர் சொன்னார் .

4. யாரெல்லாம் இப்பூமியிலே பணத்தைத் தங்கள் காலின்கீழ் கொண்டு வருகிறார்களோ, அவர்களுக்காகவே பரலோகம் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளது.

5. பணத்தையும், பூமிக்குரிய சொத்தையும் நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம்?

 • இயேசு மிகுதியான திராட்சை ரசம் உண்டுபண்ணினார் என்றாலும், அவர் 40 நாட்கள் உபவாசமிருந்தார்.
 • நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷ குமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை (லூக் 9:58).

6. தேவன் உங்களுக்கு அதிகமாய்க் கொடுத்திருந்தால், அதை மற்றவர்களை ஆசீர்வதிக்கப் பயன்படுத்துங்கள்.

7. பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் தங்களுடைய வீட்டை பவுலுக்கும், சபைக்கும் திறந்துகொடுத்தார்கள்.

“என் உடன் வேலையாட்களாகிய பிரிஸ்கில்லாளையும் ஆக்கில்லாவையும் வாழ்த்துங்கள். அவர்கள் என் பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள்; அவர்களைப் பற்றி நான் மாத்திரமல்ல, புறஜாதியாரில் உண்டான சபையாரெல்லாரும் நன்றியறிதலுள்ளவர்களாயுமிருக்கிறார்கள். அவர்களுடைய வீட்டிலே கூடிவருகிற சபையையும் வாழ்த்துங்கள்” (ரோமர் 16:3-5).

8. ஸ்திரீகளும் இயேசுவை ஆதரித்தனர் (லூக் 8:1-3).

 • ஏழு பிசாசுகள் நீங்கின மகதலேனாள் என்னப்பட்ட மரியாள்,
 • ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாள்,
 • சூசன்னாள் இன்னும் அநேக ஸ்திரீகள்.

9. அரிமத்திய ஊரானாகிய யோசேப்பு என்னும் சீஷன் (மத் 27:57-60).

 • துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக் குழியை நியமித்தார்கள் (ஏசா 53:9). ஆனால் அவரோ தமது மரணத்திலே ஓர் ஐஸ்வரியவானோடு இருந்தார்.

குறிப்பு: இக்குறிப்பிட்ட தலைப்பின் கீழ் இன்னும் அதிகமாக அறிய விரும்பினால், சகரியா பூனன் எழுதிய Practical Discipleship என்னும் நூலின் 3-ஆம் அத்தியாயத்தை வாசிக்கவும்.

IX. நேரம், அழுத்தம் என்பனவற்றின் மேலாண்மை

1. நாம் சும்மா இருக்கும் நேரத்தில் என்ன செய்கிறோம்? எறும்பினிடத்தில் போய் கற்றுக் கொள்ளுங்கள் (நீதி 6:6-11)

சோம்பேறியான முட்டாளே, எறும்பைக் கவனித்துப் பார்; அதைக் கூர்ந்து கவனி; அது உனக்கு ஒன்றிரண்டு காரியங்களையாவது போதிக்கட்டும். அது என்ன செய்ய வேண்டுமென்று அதற்கு யாரும் சொல்லத் தேவையில்லை. கோடைகாலம் முழுவதிலும் உணவைச் சேகரிக்கிறது; அறுப்புக் காலத்தில் தானியத்தைச் சேமித்து வைக்கிறது. நீ எவ்வளவு நேரம் சோம்பேறியாய் இருந்து, எதுவும் செய்யாமல் இருப்பாய்? எவ்வளவு நேரமாய் படுக்கையிலேயே இருப்பாய்? இப்படிப் புரண்டு ஒரு தூக்கம், அப்படிப் புரண்டு ஒரு தூக்கம்; இங்கே ஒரு நாளைக் கழிப்பது; அங்கே ஒரு நாளைக் கழிப்பது. சாவகாசமாய் உட்கார்ந்திருக்கிறாய். இதுபோல இருந்தால், அடுத்து என்ன வரும் தெரியுமா? இதுதான்: அசுத்தமான, மிகு பரிதாபமான வாழ்க்கையை நீ எதிர்நோக்கலாம்; வறுமையானது உன் வீட்டின் நிரந்தர விருந்தாளியாகிவிடும்!

2. அழுத்தத்தின்கீழ் இருக்கும்போது:

தீவிரமான அழுத்தத்தின் கீழ், சொப்பனங்களை வியாக்கியானம் பண்ண வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில், உதவிக்காக தேவனிடத்தில் ஜெபித்த யோசேப்பு, தானியேல் ஆகியோரைப் போல நாமும் ஜெபிக்க முடியும்.

3. மத்தேயு 11:28,29:

நீங்கள் களைப்படைந்தவர்களா, நொந்து போனவர்களா, ஒடுங்கிப் போனவர்களா, என்னிடத்தில் வாருங்கள். நீங்கள் என்னோடு வாருங்கள்; அப்போழுது உங்களுடைய வாழ்வை மீண்டுமாய்ப் பெற்றுக் கொள்வீர்கள்.

மெய்யாக இளைப்பாறுவது எப்படி என்று நான் உங்களுக்குக் கற்றுத் தருகிறேன். என்னுடன் நடந்து, என்னுடன் பணியாற்றுங்கள். நான் செய்வதைக் கவனியுங்கள்.

நிர்பந்தமில்லா கிருபையின் சுரங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். பாரமானதையோ, பொருந்தாத ஒன்றையோ உங்கள்மீது சுமத்த மாட்டேன்.

என்னுடன் தோழமை கொள்ளுங்கள்; நீங்கள் விடுதலையாய், இலகுவாய் வாழக் கற்றுக் கொள்வீர்கள்.

X. இயேசுவையே தெரிந்து கொள்வேன்

பொன் வெள்ளியை விட இயேசுவையேத் தெரிந்து கொள்கிறேன்;
அளப்பரிய செல்வத்தை விட அவருடையவனாய் இருப்பதையே தெரிந்து கொள்கிறேன்.
வீடு நிலங்களை விட இயேசுவையே தெரிந்து கொள்கிறேன்;
ஆணி கடாவின அவரது கரத்தால் வழிநடத்தப்படுவதைத் தெரிந்து கொள்கிறேன்.

பல்லவி
மாபெரும் சாம்ராஜ்யத்தின் பேரரசனாய் இருப்பதை விட
பாவத்தின் கோரப்பிடியில் இருப்பதை விடவும்
இவ்வுலகம் இன்று எனக்குத் தரும் எதை விடவும்
இயேசுவையே நான் தெரிந்து கொள்கிறேன்

விண்ணதிரும் மானிடக் கரவொலியை விட இயேசுவையே தெரிந்து கொள்கிறேன்;
அவருடைய பணிக்கு உண்மையுள்ளவனாய் இருப்பதைத் தெரிந்து கொள்கிறேன்;
உலகளாவிய கீர்த்தியைவிட அவரையே தெரிந்து கொள்கிறேன்;
அவரது பரிசுத்த நாமத்திற்கு உண்மையாய் இருப்பதைத் தெரிந்து கொள்கிறேன்.

அரிய வகை லீலிப் பூக்களிலும் அவர் சிறந்தவராம்;
தேனடையிலிருந்து வடியும் தேனிலும் தித்திப்பானவராம்;
எனது பசியுற்ற ஆவியின் தேவை அவரேயாம்;
இயேசுவையே நான் தெரிந்து கொள்கிறேன், அவரே நடத்தட்டும்.

(ரியா F. மில்லர்)