பவுல் கொரிந்தியர்களைக் குறிப்பிட்டு "நான் உங்களை ஆவிக்குரியவர்கள் என்று எண்ணி உங்களுடனே பேசக்கூடாமல், மாம்சத்திற்குரியவர்கள் என்று எண்ணி பேசவேண்டியதாயிற்று" (1கொரிந்தியர் 3:1) என மிகுந்த வருத்தத்துடன் கூறினார் .
இத்தனை இழிவான ஆவிக்குரிய நிலையில் இருந்தபோதும், அவர்களோ வேத அறிவிலும், உபதேச பிரசங்கங்களிலும், ஆவிக்குரிய வரங்களிலும் சம்பூரணமுள்ளவர்களாக இருந்தார்கள் என 1கொரிந்தியர் 1:5,7 வசனங்களில் வாசிக்கிறோம். இந்த மூன்று மேன்மையான காரியங்கள் அவர்களிடம் இருந்தபோதிலும், அவர்களோ ஆவிக்குரியவர்களாக இல்லை!!
இவ்வாறு வரம்பெற்ற வல்லமையான பிரசங்கியாயிருந்து, வேதாகம அறிவிலும் பண்டிதம் பெற்று, ஆவிக்குரிய அற்புத வரங்களை கிரியை செய்யும் ஒருவர்கூட "ஆவிக்குரிய மனிதராய்" இல்லாமல் இருக்கக்கூடும் எனப் பகுத்தறியும் திறன் கொண்டவர்கள் இன்றைய விசுவாசிகளில் வெகு சொற்பமானவர்களே இருக்கிறார்கள்! பவுல் குறிப்பிடுவதுபோல், இத்தனை அற்புத ஊழியங்களை கொண்டவர்களும் "முழுக்க முழுக்க மாம்சீகம் கொண்டவர்களாய்" இருந்திட முடியும்!
ஒருவர் பெரிய மாநாட்டுக் கூட்டங்களை (Conference) நன்றாய் நடத்திவிட்டால், ஜனங்களை சுவாரசியப்படுத்துகிறவராய் இருந்துவிட்டால், நயம்பட பிரசங்கிக்கிறவராய் இருந்துவிட்டால்... இதுபோன்றவர்களை "ஆவிக்குரிய மனிதர்கள்" என திரளான விசுவாசிகள் நம்பிவிடுகிறார்கள்.
கள்ளத்தீர்க்கதரிசிகளை, அவர்களின் கனியற்ற குணாதிசயங்களை வைத்து நாம் அடையாளம் காணவேண்டும் என இயேசு மிகத்தெளிவாய் நமக்கு போதித்திருக்கிறார்! (மத்தேயு 7:15-20). அப்படியிருந்தும், இன்று வரங்களையுடைய பிரசங்கிகளைத்தான் ஜனங்கள் மிகுந்த கனத்திற்குரியவர்களாக வைத்திருக்கிறார்கள்! "கிறிஸ்துவுக்கு ஒப்பான ஜீவியமாகிய கனியை" குறித்துசற்றும் அக்கறை கொள்வதேயில்லை!!
ஆண்டவர் இயேசு மேலும் குறிப்பிட்டுக் கூறும்போது, நியாயத்தீர்ப்பின் நாளில் அநேகர் வந்து "ஆண்டவரே, உம் நாமத்தினால் தீர்க்கதரிசனம் உரைத்தோம்! அற்புதங்கள் செய்தோம்! என்று கூறி நிற்பார்கள்" எனக்கூறினார். ஆகிலும் ஆண்டவரோ, "உங்களை நான் அறியேன்" என்றே அவர்களுக்குப் பதில் கூறிவிட்டார் (மத்தேயு 7:22,23) யார் இவர்கள்? அற்புத அடையாளங்களை நிகழ்த்தியவர்கள்! அவைகள் எல்லாம் இருந்தபோதிலும், அவர்களுடைய ஜீவியத்திலோ பாவம் குடிகொண்டிருந்தது! இவை அனைத்தும் நமக்குக் கூறும் பாடம் என்ன? எத்தனை திரளான கிறிஸ்தவ ஊழியம் செய்தாலும், ஆவிக்குரிய அற்புதமான கிரியை நடப்பித்தாலும், அவை யாதொன்றும் ஒரு மனிதனை ஆவிகுரிய மனிதனாய் நிறுத்துவதில்லை என்ற உண்மையையே மிகத் தெளிவாக நமக்கு எடுத்துரைக்கிறது! இன்னமும் கூறவேண்டுமென்றால், ஆவிக்குரிய வரங்களைக் கொண்ட அந்த மனிதனிடம், "மறுபடியும் பிறந்தவர்களுக்குரிய" அடையாளம் கூட இல்லை! ஆகவேதான், இதுப்போன்ற ஜனங்களை "நான் ஒருபோதும் அறியவில்லை" என்றே இயேசு குறிப்பிட்டுக் கூறியுள்ளார்!!
ஒரு மனிதனை, எவ்வித குணாதிசயங்கள் அவனை ஆவிக்குரியவனாக உருவாக்குகிறது என்பதை அறிந்துக்கொள்ள, நாம் முதலாவது சாத்தான் பெற்றிருக்கும் எல்லா திறமைகளையும் ஒன்றன்பின் ஒன்றாய் எழுதிப்பார்த்து தெளிவடைவது நல்லது! அப்போதுதான், நாம் மெச்சிக்கொண்ட யாதொரு வரங்களும் "ஆவிக்குரிய மெய்யான அடையாளங்கள் இல்லை" என்ற உண்மையை நாம் கண்டுகொள்ள முடியும்!
உதாரணமாய் இன்றைய "பல்வேறு ஊழியக்கிரியைகளை" எடுத்துக்கொள்வோம். இவ்விஷயத்தில் சாத்தான் எவ்வாறிருக்கிறான்? இந்த சாத்தானோ இரவும் பகலும் கிரியை நடப்பிக்கும் முழுநேர ஊழியக்காரனாகவே இருக்கிறான்! (வெளி 12:9,10). இவன் ஒருநாள் கூட விடுமுறை எடுப்பதில்லை! யாரை குற்றம் சாட்டலாம் என ஜனங்களை சதா தேடி சுற்றி அலைகிறான்! இவனுடைய இந்த ஊழியத்திற்கு 'ஏராளமான உடன் ஊழியர்களும்' அவனுக்குத் துணை நிற்கிறார்கள்! இயேசுவினிடத்திலேயும் கூட வேத வாக்கியங்களை வைத்து மடக்குவதற்கு அவனிடம் ஏராளமான வேத அறிவு குவிந்திருந்தது! இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட பல வரங்கள் பெற்றிருந்தான்! துடிப்பான வைராக்கியம் பெற்றவன்! திரளான ஜனங்கள் அவனைப் பின்பற்றுகிறார்கள்! திரளான ஜனக்கூட்டத்தின்மீது அவனுக்கு அதிகாரம் உண்டு. இவை அத்தனையும் இருந்தபோதும், இந்த சாத்தானோ ஒரு துளிகூட ஆவிக்குரியவன் அல்லவே அல்ல!
ஒரு மனிதனை "மெய்யான ஆவிக்குரியவனாய்" மாற்றுபவைகள் எவை என்பதை கீழ்காணும் மூன்று குணாதிசயங்கள் நமக்கு தெளிவுப்படுத்துகின்றன.
ஆம், ஒரு ஆவிக்குரிய மனிதன் இந்த "மூன்று திசைகளையும்" இடைவிடாது தொடர்ந்து காண்பவனாகவே இருக்க வேண்டும்!
1.மேல் திசை: தேவனையும் கிறிஸ்துவையும் பற்றிய தியானமும், ஆராதனையும் நிறைந்தவனாய் இருப்பான்.
2. உள் திசை: கிறிஸ்துவைப்போல் அல்லாத தன் அந்தரங்க ஜீவியத்திற்காய் இடைவிடாது மனந்திரும்புவான்!
3. வெளி திசை: சுற்றியுள்ள மற்ற ஜனங்களுக்கு எவ்வாறு உதவி செய்யலாம்? அவர்களை எவ்வாறு ஆசீர்வதிக்கலாம்? என்றே தொடர்ச்சியாக நாடுவான்!
ஒரு ஆவிக்குரிய மனிதன் பரத்தின் மேலானவைகளைக் கண்ணோக்குவான்!
"தேவனை ஆராதிக்கிறவர்களாகவே" பிரதானமாய் ஆண்டவர் நம்மை அழைத்திருக்கிறார். தேவன் மீது பசியும் தாகமும் கொண்ட மனிதர்களாய் இருந்திட வேண்டும்! ஆகவே, ஒரு ஆவிக்குரிய மனிதன் தேவனை இடைவிடாது ஆராதிப்பவனாயிருப்பான்! அவனுக்குள்ள ஒரே ஒரு விருப்பம் "தேவன் மாத்திரமே" ஆகும்! இந்தப் பூமியிலோ அல்லது பரலோகத்திலோ 'தேவனை காட்டிலும்' யாதொன்றையும் அல்லது யாதொருவரையும் அவன் விரும்பவே மாட்டான் (சங்கீதம் 73:25). 'தேவனைக்காட்டிலும்' பணம் அவனுக்குப் பெரிதானதாகத் தோன்றுவதே இல்லை! ஒரு மான் நீரோடையை வாஞ்சித்து தவிப்பதைப் போலவே ஒரு ஆவிக்குரிய மனிதன் தேவன் மீது வாஞ்சித்து தவிப்பான். கடும் வறட்சியினால், தாகம்கொண்ட ஒரு மனிதன் தண்ணீருக்காக தவித்துக் கதறுவதைப் போலவே, இவன் தேவன் மீது தாக வாஞ்சை கொண்டிருப்பான்!
தன்னுடய சுகத்தையும் சொகுசையும்விட ஒரு ஆவிக்குரிய மனிதன் தேவனுடைய ஐக்கியத்தையே மேலாக எண்ணி வாஞ்சிப்பான்! தன்னோடு தேவன் ஒவ்வொரு நாளும் பேசுவதைக் கேட்பதற்கு மிகுதியான வாஞ்சை கொண்டிருப்பான்!
இதற்கு மாறாக, பணத்தையும் தங்களது சொகுசையும் ஆராதனை செய்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏதாகிலும் ஒன்றைக் குறித்து "எப்போதும்" குறை சொல்பவர்களாகவே இருப்பார்கள். ஆனால், ஆவிக்குரிய மனிதனோ தேவனை மாத்திரமே நாடுகிறபடியால், தேவன் அவனோடு எப்போதும் இருப்பதினிமித்தம் அவனுக்கோ யாதொரு குறைச் சொல்லும் இருப்பதில்லை! மேலும், தனக்கு நேரிடுகிற எல்லா சுழ்நிலைகளிலும் தேவனுடைய பலத்த கரத்தை காண்கிறபடியால், அவருடைய கரத்தில் மகிழ்ச்சியுடன் எப்போதும் அடங்கியிருப்பான்!! ஒரு ஆவிக்குரிய மனிதன் தேவனோடு தொடர்ச்சியான தொடர்பு உடையவனாக இருக்கிறப்படியால், அவனது வாழ்வை நடத்திச் செல்வதற்கு இனி யாதொரு சட்டதிட்டங்களும் அவனுக்கு அவசியமாய் தோன்றுவதில்லை! ஜீவ விருட்சமாகிய தேவனை அவன் கண்டுகொண்டபடியால் நன்மை தீமை அறியதக்க விருட்சத்தை அவன் மனம் நாடுவதில்லை! கிறிஸ்துவினிமித்தம் கொண்ட அன்பின் தியானத்தில் ஈர்க்கப்பட்டதினிமித்தம், இரண்டாந்தரமான உலக காரியங்களுக்கு அவன் வழி தவறிச் செல்வதில்லை. இந்த ஆவிக்குரிய மனிதன் இயேசுவை நோக்கிப் பார்த்து, வருடத்திற்கு வருடம் தன் ஆண்டவரைப்போலவே மறுரூபம் அடைவான்!!
ஒரு ஆவிக்குரிய மனிதன் தொடர்ச்சியாக தன்னைத் தாழ்த்துவான். ஆகவே, தேவனும் அந்த மனுஷனை தொடர்ச்சியாக உயர்த்துகிறார்! அவ்வாறு உயர உயர உயர்த்தப்பட்டு, தேவனோடு கொண்ட உறவில், அவரிடத்தில் அதிகமாகக் கிட்டிச் சேருகிறான். இவ்வாறு, பரலோக வாழ்வின் மெய்யான ருசியைக் கண்ட இவன், தன் சகல நற்கிரியைகளையும் மனுஷர் கண்களுக்கு எப்போதும் மறைவாகவே செய்திட நாடுவான்!
ஒரு ஆவிக்குரிய மனிதன் உள்ளான தன் அந்தரங்கங்களைக் கண்நோக்குவான்
பரத்தின் மேலானவைகளில் கண்ணோக்கமாய் இருப்பவன், நிச்சயமாய் உள்ளான தன் அந்தரங்கங்களைக் காண்பதற்கும் நடத்தப்படுவான்! தேவனுடைய மகிமையைக் கண்ட ஏசாயா "உடனடியாகவே" நீசப்பாவியாகிய தன் அந்தரங்கத்தையும் கண்டுவிட்டான் (ஏசாயா 6:1-5). இதேப் போலவே, யோபுவுக்கும், பேதுருவுக்கும், யோவானுக்கும் சம்பவித்தது! (யோபு 42:5,6 லூக்கா 5:1 வெளி 1:17). நாம் தேவனுடைய பிரசன்னத்தில் தொடர்ச்சியாக வாழ்ந்து வந்தால், நம் ஜீவியத்தில் கிறிஸ்துவைப்போல் அல்லாத ஏராளமான நீசத் தன்மைகளை நாம் கண்டுகொள்ளமுடியும். இவ்வாறு, ஆவிக்குரிய மனிதன் தன் ஜீவியத்தில் மறைந்திருக்கும் பாவங்களைக் குறித்து தொடர்ச்சியான வெளிச்சத்தைப் பெற்றுக்கொண்டே இருப்பான்!
"பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுது கொள்ளுங்கள்" (சங்கீதம் 29:2) என்றே நமக்கு கட்டளையிடப்பட்டிருக்கிறது. இந்த பரிசுத்தத்தின் அலங்காரமில்லாமல் அல்லது ஆடையில்லாமல் இருப்பது, ஆண்டவருக்கு முன்பாக "நிர்வாணமாய்" நிற்பதற்கு ஒப்பானதேயாகும்! ஆகவேதான், ஆவிக்குரிய மனிதன் தேவனுக்கு முன்பாகவும் மனுஷருக்கு முன்பாகவும் தன் மனசாட்சியை எப்போதும் சுத்தமுள்ளதாக வைத்திருக்க நாடுவான் ( அப் 24:16 ). ஒரு வியாபாரி அதிக பணம் சம்பாதித்திட தன்னால் இயன்ற முயற்சிகளை செய்வதுப்போல, ஆராய்ச்சி செய்திடும் ஒரு விஞ்ஞானி புதிய கண்டுபிடிப்புகளுக்காக தன்னால் இயன்ற முயற்சிகளைச் செய்வதுப்போல, ஆவிக்குரிய மனிதனும், தன் மனசாட்சியை எப்போதும் சுத்தமுள்ளதாய் காத்துக்கொள்ள, தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வான்!
ஒரு ஆவிக்குரிய மனிதன், மற்ற விசுவாசிகள் தங்கள் ஜீவியத்தில் ஒரு பொருட்டாய் எண்ணாத பகுதிகளிலும் வெளிச்சம் பெற்றவனாய் தன்னை கழுவிக் கொண்டு, தொடர்ச்சியாக தன்னை நியாயந்தீர்த்து வாழ்ந்திடுவான்!
ஒரு ஆவிக்குரிய மனிதன், தான் தேவனுக்கு வலிமையுள்ளவனாக விளங்குவதற்குத் தடையாய் நிற்கும் அநேக காரியங்களுக்கு, தன் உள்ளான ஜீவியத்தில் ஒவ்வொரு நாளும் மரித்திட வேண்டும் என்ற உண்மையை உணர்ந்தவனாக இருப்பான்!ஆகவே, அவனுடைய ஜீவியப்பாதை அனுதினமும் சிலுவை சுமக்கும் பாதையாய் மாறி "தன் சரீரத்தில் இயேசுவின் மரணத்தை எப்போதும் சுமந்து திரியும்" நிலைக்கு வந்துவிடுவான் ( 2கொரிந்தியர் 4:10 ).
ஆவிக்குரிய மனிதன் எந்த மனுஷனுக்கு முன்பாகவும் தன்னைத் தாழ்த்துவதற்கு எந்த ஒரு மனிதனிடத்தில் மன்னிப்பு கேட்பதற்குத் ஆயத்தமுள்ளவனாய் இருப்பான்! அந்த நபர் வயது முதிர்ந்தவராயிருந்தாலும் அல்லது அவனைக் காட்டிலும் வயதில் இளையவராயிருந்தாலும் சரி! ஏனெனில், அவன் தன் மனைவியிடமோ, தன் சகோதரனிடமோ அல்லது யாதொரு அயலானிடமோ, ஏதாவதொரு வகையில் பாதிக்கும்படி நடந்திருந்தால், அவனுடைய ஜெபத்தையும், ஊழியத்தையும் ஒருபோதும் தேவன் அங்கீகரித்திட மாட்டார் என்பதை அறிந்திருக்கிறான். எனவே, யாராகிலும் ஒருவருக்குத் தான் தீங்கு செய்துவிட்டதாக உணர்ந்துவிட்டால், "பலிபீடத்தில் உடனடியாக தன் காணிக்கையை வைத்துவிட்டு, அந்த நபரோடு ஒப்புரவாகி, பின்பு திரும்பி வந்து, தன் பலியை தேவனுக்குச் செலுத்துவான்" (மத்தேயு 5:23,24).
ஒரு ஆவிக்குரிய மனிதன் வெளியரங்கமானவைகளையும் கண்ணோக்குவான்
மேலானவைகளையும், உள்ளான அந்தரங்கங்களையும் கண்ணோக்கிப் பார்த்து வாழ்ந்த ஒருவன், "தானாகவே" வெளியரங்கமாய் உள்ளவைகளையும் கண்ணோக்கிப் பார்த்து ஜீவிப்பான்!
ஒரு ஆவிக்குரிய மனிதன், "தேவன் ஒருவனை ஆசீர்வதித்திருப்பதின் நோக்கம், அவன் பிறரை ஆசீர்வதிக்க வேண்டும் என்பதுதான்!" என்ற உண்மையை அறிந்திருப்பான். தேவன் அவனுக்கு அதிகமாய் மன்னித்திருக்கிறபடியால், தனக்கு தீமை செய்த அனைவரையும் மகிழ்ச்சியுடன் உடனடியாக மன்னித்துவிடுவான்! தேவன் அவனுக்கு மிகுந்த நல்லவராக இருந்தபடியால் அவனும் பிறருக்கு நல்லவனாகவே இருப்பான்! அவன் தேவனிடம் இலவசமாய் பெற்றபடியால், மற்றவர்களுக்கும் தான் பெற்ற நன்மைகளை இலவசமாய் கொடுப்பான்!
ஒரு ஆவிக்குரிய மனிதன் மற்றவரின் நலன் மீது மிகுந்த கரிசனை கொண்டிருப்பான். இழந்தவர்கள் மீதும் துயர் நிறைந்த மானிடர் மீதும் அவன் எப்போதும் மனதுருக்கம் நிறைந்தவனாக இருப்பான்! நல்ல சமாரியன் உவமையில் காணும் லேவியனும், ஆசாரியனும் தேவை நிறைந்த ஒரு சகோதரனைப் புறக்கணித்துச் சென்றுவிட்டது போல், அவனால் செய்ய முடியாது ( லூக்கா 10:30-37 ).
வீழ்ச்சியடைந்த மனிதனை சாத்தானின் கட்டுகளிலிருந்து விடுதலை செய்து அவனுக்கு உதவி செய்யவும், அவனை ஆசீர்வதிக்கவும், அவனைத் தூக்கி நிலைநிறுத்தவும் தேவன் எப்போதும் கரிசனை கொண்டவராகவே இருக்கிறார். இதே போன்ற கரிசனையை ஆவிக்குரிய மனிதனும் பெற்றிருப்பான். ஒரு ஆவிக்குரிய மனிதன் தன் எஜமானனைப் போலவே "ஊழியம் கொள்ளாமல் ஊழியம் செய்திடவே" நாடுவான். சாத்தானின் கட்டுகளிலிருந்து ஜனங்களை விடுதலையாக்கி, அவர்களுக்கு நன்மை செய்கிறவராக இயேசு சுற்றித்திரிந்தார் (அப் 10:38). ஆவிக்குரிய மனிதனும் அவ்வாறாகவே நன்மை செய்கிறவனாகவே எப்போதும் திகழ்வான்!!
ஒரு ஆவிக்குரிய மனிதன், தான் பிறருக்குச் செய்திடும் ஊழியத்திற்காக அவர்களிடமிருந்து யாதொரு பணத்தையோ அல்லது கனத்தையோ தனக்கு ஆதாயமாக ஒருபோதும் தேடமாட்டான். அவன் தேவனைப்போலவே, தன் ஜீவியத்தின் மூலமாகவும், ஊழியத்தின் மூலமாகவும் பிறரை ஆசீர்வதிப்பது ஒன்றையே நாடுவான். ஒருவரிடமிருந்தும் தனக்கென பரிசுப்பொருளையோ அல்லது காணிக்கையையோ அவன் எதிர்பார்த்திட மாட்டான். ஏனெனில், தன் ஒவ்வொரு தேவைக்கும் தேவனை மாத்திரமே அவன் நம்பியிருப்பான்!"பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் உபதேசங்கள்" என்ற தலைப்பு கொண்ட புத்தகம் நமக்கு எடுத்துச் சொல்லும் செய்தி யாதெனில்: "விசுவாசிகளே, உங்களிடம் ஏதாகிலும் ஒரு விதத்தில் தங்களுக்கென பணத்தை கேட்கும் எந்த பிரசங்கியைக் குறித்தும் எச்சரிக்கையாய் இருங்கள்! ஏனெனில், அது போன்றவர்கள் நிச்சயமாய் கள்ளத் தீர்க்கதரிசிகளேயாவர். இவ்வாறு, இயேசு கற்பித்த சத்தியங்களை நாம் நன்கு அறிந்தவர்களாய் இருந்தால் மாத்திரமே ஏராளமான கள்ளத்தீர்க்கதரிசிகளிடமிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்!
மெய்யாகவே, ஒரு ஆவிக்குரிய மனிதன் இவ்வாறு மேலான கண்ணோட்டத்தையும், உள்ளான கண்ணோட்டத்தையும், வெளியரங்கமான கண்ணோட்டத்தையும் உடையவனாக இருப்பான். அவன் வெறும் மேலானவைகளை மாத்திரமே கண்ணோக்குகிறவனாக இருந்தால், நடைமுறைக்கு ஒவ்வாத கிறிஸ்தவனாய் புறக்கணிக்கப்படுவான்! "பூமியின் நடைமுறை உபயோகத்திற்கு பயனற்ற பரலோக சிந்தையானது, நடைமுறைக்கு பிரயோஜனமற்றது!" என்றே உலகம் பழிக்கும்! அதுப்போலவே, நம்முடைய உள்ளானவைகளை மாத்திரமே கண்ணோக்குகிறவர்களாய் இருந்தால், நாம் வெகு சிக்கிரத்தில் மனசோர்வுற்று தைரியமற்றவர்களாய் மாறிடமுடியும்! அது போலவே, வெளியரங்கமானவைகளில் மாத்திரமே அக்கரை கொண்ட கிறிஸ்தவனாக இருந்தால், நம்முடைய சகல ஊழியங்களிலும் யாதொரு வல்லமையும் இருக்காது! யாதொரு பலனும் இருக்காது!
ஆகவேதான், ஒரு ஆவிக்குரிய மனிதன் மேற்கண்ட மூன்று திசைகளிலும் தொடர்ச்சியான கண்ணோக்குடையவனாய் திகழ்கிறான்! இவ்வாறு ஒன்றோடோன்று இணைந்து சமநிலைக்காணும் இடத்தைக் கண்டடைந்து, ஆவிக்குரியவர்களாய் மாற தேவன் நமக்கு அருள்புரிவாராக!