உங்களுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் வீடியோ டேப்

Article Body: 

ஒரு வீடியோ டேப்பில் பதிவுசெய்த நிகழ்ச்சிகளை ஒரு திரையில் இயக்கினால், நடந்த நிகழ்ச்சிகளை அப்படியே மீண்டும் துல்லியமாகப் பிரதிபலித்துக் காண்பித்துவிடும்!

நாம் அனைவரும் தேவனுக்கு முன்பாக நம்முடைய கணக்குகளைக் கொடுக்க வேண்டிய 'ஒருநாள்' வர இருக்கின்றது என வேதாகமம் கூறுகிறது! நாம் செய்த; பேசிய; சிந்தித்த ஒவ்வொன்றையும் தேவன் எப்படி பதிவுசெய்து வைக்கமுடியும்? என்று நாம் ஆச்சரியப்படக்கூடும்! ஆம், இந்தப் பதிவை ஒவ்வொரு மனிதனுக்குள்ளிருக்கும் வீடியோ டேப் போன்ற ஞாபகசக்தியிலேயே தேவன் வைத்திருக்கிறார்!

ஒருவன் இறக்கும்போது, அவன் தன்னுடைய சரீரத்தை மண்ணுக்கு விட்டுச்சென்றாலும், ஞாபகசக்தியை உள்ளடக்கிய ஆத்துமாவானது மரித்த ஆவிகள் இருக்கும் இடத்திற்கே போகிறது. கடைசியில், இந்த உலக நியாயத்தீர்ப்பின் நாள் வரும்போது, அவனுடைய ஆத்துமா முன்பு பூமியில் சரீரமாக இருந்த அந்த 'மண்ணோடு' இணைக்கப்படும். அப்போது அவன் தன் இயல்பான சரீரத்துடன் எழுப்பப்பட்டு தேவனுக்கு முன்பாக தன் வாழ்க்கையின் முழு கணக்கையும் ஒப்புவிக்கும்படி நிற்பான். அந்நாளில் ஒவ்வொரு மனிதனுக்கும் நியாயத்தீர்ப்பின் முறை வரும். தேவன் அப்போது என்ன செய்வார்? ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் ஞாபகசக்தியின் வீடியோ டேப்பினை அவனவன் பகிரங்கமாய் காணும்படி ஒரு திரையில் இயக்குவார்! அந்த மிகத்துல்லியமான 'காட்சி' குறித்து ஒருவராலும் மறு கேள்வி கேட்கவே முடியாது. ஏனெனில், அவைகள் அனைத்தும் அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த உண்மை நிகழ்ச்சிகள்தான்!!

ஆம்! மனிதர்களின் மேற்பூச்சான ஒழுக்கம், தெய்வபக்தி போன்ற போர்வைகள் அன்று களைந்து எறியப்பட்டு, உண்மையான உள்மனிதன் வெளிப்படுத்தப்படுவான். அந்நாளில் மதம் ஒருவரையும் காப்பாற்றவே முடியாது. ஏனெனில், அவர்கள் எந்த மதப் பழக்க வழக்கங்களை அனுசரித்தவர்களாயினும், "எல்லோரும்" பாவம் செய்தவர்கள் என்று தெளிவாய் புலப்பட்டுவிடும்! ஒருவர் செய்த நற்கிரியைகளோ, அவர்கள் கோவில்களுக்கு கொடுத்த காணிக்கைப் பணமோ அன்று அவர்களை இரட்சிக்க முடியாது.

நம் பாவச்செயல்கள் தேவனின் பார்வையிலிருந்து நிரந்தரமாய்த் துடைத்து அழிக்கப்பட ஒரே ஒரு வழிதான் உண்டு. நம்முடைய நற்கிரியைகள் நாம் செய்த தீயசெயல்களைத் துடைத்து அழிக்க முடியாது, ஒருக்காலும் முடியாது ! .

நாம் செய்த பாவங்களுக்காக, தேவனின் சட்டத்தில் ஒரே ஒரு தண்டனை வரையறுக்கப்பட்டுள்ளது என்று வேதாகமம் கூறுகிறது. அது மரணம்! நம்முடைய பாவத்திற்காக இந்த நித்திய மரணத்தை அடையவே நாம் பாத்திரர்களாய் இருக்கின்றோம்.

இந்த நித்திய மரணமாகிய தண்டனையிலிருந்து நம்மைக் காக்கவே, தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து பரலோகத்திலிருந்து இம்மண்ணுலகுக்கு மனிதனாக வந்து, 2000 வருடங்களுக்கு முன் எருசலேம் பட்டணத்திற்கு வெளியே, மனுக்குலத்தின் பாவத்திற்குரிய தண்டனையை தன்மேல் ஏற்றுக்கொண்டு சிலுவையில் மரித்தார். கல்லறையில் வைத்து அடக்கம் பண்ணப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, அவர் மரித்தோரிலிருந்து உயிருடன் எழுந்து வந்து, உண்மையாகவே தான் தேவகுமாரன் என்றும் நிரூபித்தார். இவ்வாறு மனிதனின் மிகப்பெரிய எதிரியான மரணத்தை இயேசு ஜெயித்தார். அவர் உயிர்த்தெழுந்து பரத்திற்கு செல்லும்போது, தான் மீண்டும் பூமிக்கு குறிப்பிட்ட வேளையில் எல்லா மனிதரையும் நியாயம் தீர்க்கும்படி வருவேன் என்றும் வாக்களித்தார், இவ்வாறு வாக்களித்து, 2000 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆம்! அவர் இந்தப் பூமிக்கு வரும் காலம் மிகவும் சமீபித்துவிட்டது!!

இவ்வுலக வரலாற்றில் மனிதவர்க்கத்தின் "பாவங்களுக்கென்று மரித்த" ஒரே ஓருவர் இயேசு கிறிஸ்துவே! மேலும் மரித்தோரிலிருந்து மீண்டும் உயிர்த்தெழுந்தவரும் அவர் ஒருவரே! இந்த இரண்டு காரியங்களிலும் அவர் ஒப்பற்றவராய் இருக்கிறார்.

இன்று நாம் 'உண்மையாகவே' நம்முடைய பாவங்களை விட்டு விலகி, மனம் திரும்ப வேண்டும். மேலும், அவர் நம்முடைய பாவங்களுக்காக மரித்து, உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசித்து, இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனிடம் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும். இவ்வாறு செய்தால் மாத்திரமே, நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு "அவை" நமக்குள் இருக்கும் வீடியோ டேப்பிலிருந்து அழிக்கப்பட முடியும். இயேசு கிறிஸ்து சிலுவையில் சிந்திய இரத்தம் நம் பாவங்களைக் கழுவி நீக்கிவிடும் என வேதாகமம் கூறுகிறது. பிறகு தேவனின் பிள்ளையாக ஓர் தூய்மையான வாழ்க்கையை நீங்கள் வாழலாம்!

மனித வர்க்கத்திற்கென்று இந்த ஒரே வழியான இரட்சிப்பைத்தான் தேவன் நியமித்திருக்கிறார். அதை இப்பொழுதே பெற்றுக் கொள்ளுங்கள். இச்சத்தியங்களை அறிந்திருப்பதினாலும் பாவிகளுக்கென்று வைக்கப்பட்டிருக்கும் 'அக்கினிக்கடலில்' தள்ளப்படும் நித்திய நியாயத்தீர்ப்பின் அபாயத்தை உணர்ந்திருப்பதினாலும் ஒவ்வொருவரையும் அன்பாய் எச்சரிக்க வேண்டியது எங்களது கடமையாய் இருக்கிறது.

இனியும் காலந்தாழ்த்தாமல், 'இன்றே' நீங்கள் சரியான தீர்மானத்தை எடுங்கள். அதன்மூலம் தேவன் உங்களுக்கு நித்திய சுகவாழ்வைக் கொடுத்து ஆசீர்வதிப்பாராக!

தேவன் அருளிய இச்செய்தியை, உண்மையான அன்பினால் நிறைந்து உங்களுக்கு வழங்குகின்றோம்.