நாம், நம்மை குறித்தும்; நம்முடைய உபதேசத்தைக் குறித்தும் எச்சரிக்கையாக இருக்கும்படி கட்டளையிடப்பட்டிருக்கிறோம். அப்பொழுது மாத்திரமே, நம்மையும்; நம் உபதேசத்தை கேட்கிறவர்களையும் இரட்சித்து கொள்ளமுடியும். (1தீமோ 4:16).
நம்முடைய ஜீவியமும், உபதேசமுமே நம்முடைய கிறிஸ்துவ வாழ்க்கையை நிலைநிறுத்த உதவும் இரண்டு கால்களாகும். சாதாரணமாக, மனிதர்களுக்கு இரண்டு கால்களும் சமமான நீளமுடையவைகளாய் இருப்பது போல ஜீவியமும், உபதேசமும் இருக்கவேண்டும். ஆனால் பொதுவாக சொல்வோமாகில், இன்றைய கிறிஸ்துவ உலகின் அதிகமான விசுவாசிகள் இந்த இரண்டில் ஒன்றை மிகைப்படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள்.
உபதேசம் என்று வரும்பொழுது, 2தீமோ 2:15 -ன்படி "சத்தியவசனத்தை நிதானமாய் பகுத்து போதிக்கிறவர்களாய் இருக்கவேண்டும்" என்று கட்டளையிடப்பட்டிருக்கிறோம். ஆனாலும், நம்மில் அநேகர் வேதவாக்கியங்களை கவனக்குறைவாக வாசிப்பதினிமித்தம் உபதேசத்தைப் புரிந்துகொள்வதில் சமநிலையற்றவர்களாகவே காணப்படுகிறோம்.
தேவனைப்பற்றிய சத்தியமானது, ஒரு மனித சரீரத்தைப் போன்றதாகும். அதில் ஒவ்வொரு அவயமும் சரியான அளவில் இருந்தால் மாத்திரமே அது பூரணமாகும். வேதவாக்கியங்களின் எல்லா சத்தியங்களும் ஒரே மாதிரியான முக்கியத்துவம் உடையதாய் இல்லை. உதாரணமாக, அந்நியபாஷையில் பேசுவது பிறரை நேசிக்கவேண்டும் என்ற சத்தியத்தைக் காட்டிலும் முக்கியமானது அல்ல. இந்த இரண்டில் ஒன்றை மிகைப்படுத்தும்பொழுது, நாம் வலியுறுத்துகிற சத்தியம் எப்படி இருக்குமென்றால், பெரிதாய் வளர்ந்து அழகற்று காணப்படும் கண்ணையோ, காதையோ உடைய சரீரம்போன்று இருக்கும்.
இதனிமித்தமே, நாங்கள் விசுவாசிக்கும் சத்தியம் என்ன? என்ற கேள்விக்கு, "நாங்கள் தேவனுடைய வார்த்தையில் (66-புத்தகங்கள் அடங்கிய வேதாகமத்திலும்) கண்டறியும் சத்தியங்களை அப்படியே விசுவாசிக்கிறோம்" என்று கூறுவதுதான் எங்களின் உடனடிபதிலாக இருக்கிறது. அதுவே எங்களின் உண்மையான பதில்! இருப்பினும், இன்று தேவவார்த்தையில் அடங்கியிருக்கும் சத்தியமானது சாத்தான் மற்றும் மனுஷர்களின் தந்திர வஞ்சகத்தினால் புரட்டப்பட்டு, கறைபுரையோடிவிட்டது. எனவேதான் வேதாகமம் பிழையின்றிப் போதிக்கும் சத்தியத்தை (அதுவே நாங்கள் விசுவாசிப்பதும் ஆகும்) விவரித்து விளக்க வேண்டியது மிக அவசியமாகிவிட்டது.
தேவனுடைய வார்த்தையை, கணிதம் மற்றும் அறிவியலைப் போன்று வெறும் மூளை அறிவினால் கற்று அறிந்து கொள்வது என்பது முடியவே முடியாது. பரிசுத்தாவியின் வெளிப்பாட்டின் மூலமாகவே அறிந்து கொள்ளமுடியும். இந்த வெளிப்பாடு, பாலகர்களுக்கு (தாழ்மையுள்ளவர்களுக்கு) அருளப்பட்டிருக்கிறதேயன்றி, பெருமை நிறைந்த கல்விமானகளுக்கு (மத் 11:25) அருளப்படுவதேயில்லை என இயேசு கூறினார். எனவேதான், இயேசுவின் நாட்களில் இருந்த வேதவல்லுனர்களால் அவரின் போதகத்தைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இன்றைய வேதகலா வித்தகர்களின் நிலைமாத்திரம் வேறுபட்டுவிடுமா? இல்லை. அவர்களோடு இவர்களும் ஒரே படகில் பயணம் செய்பவர்களே! எல்லாம் ஒரே காரணத்தினால் ஏற்பட்ட பரிதாபவிளைவே!!
அதேசமயம், புத்தியிலோ குழந்தைகளாய் இராதேயுங்கள் என்றும் கட்டளையிடப்பட்டிருக்கிறோம் (1கொரி 14:20).
ஆகவே, முழுமையாக பரிசுத்தாவியானவருக்கு ஒப்புகொடுத்த மனமே, தேவனுடைய வார்த்தையை நன்கு அறியும்.
தேவன், தம்முடைய எல்லாப்பிள்ளைகளும் தங்களுடைய எல்லா வழிகளிலிருந்தும், முழுமையாக விடுதலையாக வேண்டுமென்று விரும்புகிறார். ஆனால், அநேக விசுவாசிகள் பலவிதமான கட்டுகள், பாவபழக்கங்கள் மற்றும் மனித பாரம்பரியங்களினாலும் கட்டப்பட்டிருக்கிறார்கள். அதற்கு முக்கியகாரணம் அவர்கள் தேவனுடைய வார்த்தையை கவனக்குறைவாக வாசிப்பதேயாகும்.
நாம் எவ்வளவு அதிக உற்சாகத்தோடு தேவனுடைய வார்த்தையை அறிந்துக் கொள்கிறோமோ அவ்வளவு அதிகமான சத்தியம் நம்முடைய வாழ்வின் பல்வேறு பகுதிகளிலிருந்து, நம்மை விடுவிக்கிறதாய் உள்ளது (யோவான் 8:32).
அநேகவிசுவாசிகள், பணத்தை முதலீடு செய்கிற காரியம் வரும்போது, அதிக கவனத்தோடு செய்கிறார்கள். ஆனால், வேதவாக்கியங்களை படிப்பது என்று வரும்பொழுது மிகவும் கவனக்குறைவாக இருக்கிறார்கள். இது தேவனைக்காட்டிலும் பணத்தையே அவர்கள் அதிகமாக மதிப்பதை காட்டுகிறது. அப்படிப்பட்டவர்கள் தேவனுடைய வார்த்தையை அறிந்துக் கொள்வதிலிருந்து எளிதாக விலகிப் போவார்கள்.
மேலும், வேதவாக்கியங்கள் அனைத்தும் நம்மைத் "தேறினவர்களாய்" அல்லது "பூரணர்களாய்" உருவாக்கும்படியே அருளப்பட்டிருக்கிறது என 1தீமோ 3:16,17-ல் வாசிக்கிறோம். எனவே, இந்தக் கிறிஸ்துவ பூரணமாகுதலில் அக்கறையற்றவர்கள் தேவனுடைய வார்த்தையைச் சரியாகப் புரிந்து கொள்ளவே முடியாது (யோவான் 7:17).
ஆம்! கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். தனக்குப் பயப்படுகிறவர்களுக்கு மாத்திரமே, தேவன் தமது இரகசியத்தை வெளிப்படுத்துகிறார் (சங் 25:14).
தேவனைக் குறித்த சத்தியம்
தேவன் ஒருவரே என்றும், இந்த ஒரே தேவனுக்குள் மூன்று நபர்கள் இருக்கிறார்கள் என்றும் சத்தியவேதம் போதிக்கிறது.
இலக்கங்களை இம் மண்ணுலகம் தனக்குச் சொந்தமாய் வகுத்தபடியாலும், தேவன் ஆவியாயிருக்கின்றபடியாலும், ஒரு சிறு பாத்திரம், சமுத்திரத்தின் நீரைக் கொள்ளாததுப் போல நம் குறைந்த அறிவினால் இச்சத்தியத்தைப் பூரணமாக அறிந்துக்கொள்வது சாத்தியமில்லை.
ஒரு நாய் 1x1x1=1 என்ற பெருக்கல் கணக்கை புரிந்து கொள்ள முடியாததுப்போல நாமும் தேவன் மூன்று நபர்களாய் இருந்தும் ஒரே தேவனாய் இருப்பதை விளங்கிக் கொள்ளமுடியாது. ஒரு நாய் வேறொரு நாயை மாத்திரமே புரிந்துக் கொள்ளமுடியும். அதினால் மனிதனை முழுமையாக புரிந்து கொள்ளமுடியாது. அதுப்போலவே, தேவன் இருக்கிற வண்ணமாகவே அவரை விளங்கி கொள்ள வேண்டுமென்றால், மனிதயுக்தியினால் அல்ல அப்படிசெய்தால் நம்மைப்போல மனிதனால் மாத்திரமே விளங்கிக் கொள்ளமுடியும். ஆனால், நம் வேதாகமத்தில் சொல்லப்பட்ட தேவன் நம் புத்தி, யுக்தி இவைகளுக்கு எல்லாம் அப்பால் இருப்பதே மெய்யான சத்தியம்.
வேதாகமத்தின் முதல் வசனமே இச்சத்தியத்தை தெளிவுபடுத்துகிறது. அவ்வசனத்தில் தேவன்" என காணும் வார்த்தையானது பன்மைச் சொல்லாக எபிரேய பாஷையில், "எலோஹிம்" என்று எழுதப்பட்டுள்ளது. இதே பதமானது ஆதியாகமம் 1:26-ல் "நாம்" "நமது" என்ற வார்த்தைகளுக்கும் உபயோகிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இதைக் குறித்த வெளிச்சம், புதிய ஏற்பாட்டில் மிகத் தெளிவாய் பிரகாசிக்கின்றது. அதில், இயேசு தண்ணீர் ஞானஸ்நானம் எடுத்தபோது, பிதா (வானத்திலிருந்து உண்டான சத்தம்), குமாரன் (இயேசுகிறிஸ்து), பரிசுத்தாவியானவர் (புறாவைப் போன்ற வடிவம்) ஆகிய மூவருமே இருந்தனர் (மத் 3:16,17).
இயேசுவே, பிதா; குமாரன்; பரிசுத்தாவியாய் இருக்கிறார் என்று சொல்பவர்கள், இயேசுகிறிஸ்து பூமியில் வாழ்ந்தபோது, சுயசித்தத்தை மறுதலித்து பிதாவின் சித்தத்தை எப்படி பூமியில் நிறைவேற்றி முடித்திருக்க முடியும் என்பதை விவரிக்க முடியாதவர்களாய் இருக்கிறார்கள். யூனிட்டேரியன்கள் தேவன் ஒரு நபரே என்றும், தாங்கள் இயேசுவின் நாமத்தில் மாத்திரமே ஞானஸ்நானம் கொடுப்பதின் மூலம் மனிதனாய் வந்த இயேசுகிறிஸ்துவை மறுதலிக்கிறவர்களாயும் இருக்கிறார்கள்.
கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனே குமாரனையும், பிதாவையும் உடையவன். பிதாவையும், குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திகிறிஸ்து என்று வேதம் சொல்கிறது (1யோவான் 2:22; 2யோவான் 9).
கிறிஸ்தவர்களின் ஞானஸ்நானத்தில், இயேசு பிரத்தியேகமாகக் குறிப்பிட்டு, பிதா; குமாரன்; பரிசுத்தாவியாகிய இணைந்த மூன்று நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுங்கள் என கட்டளையிட்டார் (மத் 28:19). ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவையே குமாரன் என சொல்லப்பட்டுள்ளது (அப் 2:38).
கிறிஸ்துவைக் குறித்த சத்தியம்
இயேசுகிறிஸ்து தேவனாயிருந்தார் என்றும்; நித்தியகாலமாய் தேவனுக்குச் சமமாகவே இருந்தார் என்றும்; இவ்வுலகத்திற்கு அவர் வரும்போதோ தேவனுக்குச் சமமாயிருந்த தன் ஸ்தானத்தை தனக்குத்தானே வெறுமையாக்கினவராய் வந்தார் எனவும்; சத்தியவேதம் நேர்த்தியாய் போதிக்கின்றது (யோவான் 1:1; பிலி 2:6,7).
இதை நிரூபிக்க கீழ்கண்ட சில உதாரணங்களை கவனிப்போம். தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்பட முடியாதவர் (யாக் 1:13) என்று இருக்கும்போது, இயேசுவானவரோ சோதிக்கப்பட்டார் (மத் 4:1-10) என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். தேவன் சகலத்தையும் அறிந்திருந்தார். ஆனால் இயேசுவோ, தாம் பூமியில் இருந்த நாட்களில் தம்முடைய இரண்டாம் வருகையை குறித்த நாளையோ அல்லது நாழிகையையோ அறியாதிருந்தார் (மத் 24:36). மற்றும் அத்திமரத்தினிடத்தில் கனியைத்தேடி போனார் (மத் 21 :19). அவர் ஒருவேளை தேவனுக்குரிய வல்லமையை பிரயோகித்து தாம் தூரத்திலிருந்தபோதே கனி இல்லை என்பதை அறிந்திருக்ககூடும். தேவனுடைய ஞானமானது மாறாததாயும், நித்தியமானதாயும் இருந்தபோதிலும் அவர் ஞானத்திலே விருத்தி அடைந்தார் என்று இரண்டுமுறை கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை பற்றி எழுதப்பட்டிருப்பதை நாம் காணலாம் (லூக் 2:40,52).
மேற்கண்ட இவ்வசனங்கள் அனைத்தும் இயேசுகிறிஸ்து இந்த பூமிக்கு வந்தபோது தேவனுடைய சகல வல்லமைகளையும் தானே வெறுமையாக்கினவராய் வந்தார் என்பதை குறிப்பிடுகிறது.
இயேசுவானவர், தேவனுக்குரிய அந்தஸ்துகளையும்; விசேஷித்த உரிமைகளையும் துறந்தவராய் இவ்வுலகத்திற்கு வந்தபோது கூட அவரின் "ஆள் தன்மையில்" அவர் தேவகுமாரனாகவே இருந்தார். அவர் தேவனாக இல்லாமல் இருந்துவிடுவது, அவரால் ஒருக்காலும் முடியவே முடியாது. ஓர் ராஜா தன் ராஜ உரிமைகளை இழந்து ஓர் குடிசையில் குடியிருக்கலாம். அப்படி இருந்தாலும், அந்த ராஜா, ராஜாதான்! இப்படித்தான் இயேசுவும் இருந்தார்!!
இயேசு பூமியில் இருந்தபோது, குறிப்பிடப்பட்ட ஏழு தருணங்களில் மற்றவர்கள் தன்னைத் "தொழுது" கொண்டதை அவர் ஏற்றுக் கொண்டதே, அவரின் தேவத்துவத்திற்குச் சரியான நிரூபணமாகும் (மத் 8:2, 9:18; 14:33; 15:25; 20:20; மாற் 5:6; யோவா 9:38). தேவதூதர்களும், தேவபக்தியுள்ள மனிதர்களும் தங்களுக்கு "ஆராதனையை" ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை (அப் 10:25, 26; வெளி 22:8,9). ஆனால், இயேசு ஏற்றுக்கொண்டார்! ஏனென்றால், அவர் தேவகுமாரனாயிருந்தார்!! பூமியில் இருக்கும்போது இயேசு தேவகுமாரனாகத்தான் இருந்தார் என்பதைப் பிதாவும் பேதுருவுக்கு வெளிப்படுத்தினார் (மத் 16:16, 17).
இயேசுகிறிஸ்துவின் மனிதத்தன்மையை குறித்து எபி 2:17-ல் இன்னமும் ஒருபடி தெளிவாக, இயேசுவானவர் "எல்லாவிதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பானார்" என பிரகடனம் செய்கின்றது. இவ்வசனத்தின்படி, அவர் ஆதாமின் பிள்ளைகளுக்கு ஒப்பானவர் இல்லை என்பதைக் கவனியுங்கள். அப்படியிருந்தால் எல்ல மனுஷர்களையும் போன்று அவருக்கும் "பழைய மனிதன்" இருந்திருப்பான் (பழைய மனிதன் என்பது ஓர் வேதாகமச் சொல்லாகும். ஆனால், துரதிஷ்டவசமாக அச்சொல் தேவவார்த்தைக்கு முரணாக "பாவசுபாவம்" என அநேகரால் வியாக்கியானம் செய்யப்படுகின்றது).
இயேசுவானவரோ, இப்பூமிக்குரிய தகப்பனுக்குப் பிறக்காமல் பரிசுத்தாவியினால் பிறந்தார். மேலும், கர்ப்பத்திலிருந்தே அவர் பரிசுத்தமுள்ளவராய் இருக்கும்படி "பிரித்தெடுக்கப்பட்டார்" (லூக் 1:35).
அப்படியானால், "சகோதரருக்கு ஒப்பாய்" என குறிக்கப்பட்ட இயேசுவின் ஆவிக்குரிய சகோதரர்கள் யார்? ஆம்! பிதாவின் சித்தம் செய்கிறவர்களும் (மத் 12:49-50); ஆவியினால் பிறந்தவர்களும் (யோவா 3:5); பழைய மனுஷனைக் களைந்து (எபே 4:22,24) புதிய மனுஷனை தரித்துக் கொண்டவர்களுமே ஆவார்கள்!! இருப்பினும், இயேசுவின் சகோதரர்களாகிய நமக்கோ சுயசித்தம் நிறைந்த ஓர் மாம்சம் இருக்கிறதை கவனியுங்கள். இங்குதான் இயேசு "எல்லாவிதத்திலும்" நம்மைப் போலாகி அதே மாம்சத்தை உடையவராய் இருந்தார்! பிதாவின் சித்தம் செய்வதற்காக, என் சுய சித்தத்தை வெறுக்கிறேன் என இயேசுவே மொழிந்தார் (யோவா 6:38).
நாம் ஆதாமின் பிள்ளைகளாய் பிறந்தபோது, பழைய மனிதனோடு பிறந்தோம். பழைய மனிதனோ உண்மையற்ற, வேலைகாரனைப் போல நம் மாம்சத்தில் உள்ள இச்சைகளாகிய திருடர் கூட்டம் நம் இருதயத்திற்குள் பிரவேசிக்க கதவை திறந்துவிடுகிறான். நாம் மறுபடியும் பிறந்தபோது, இந்த பழையமனிதன் தேவனால் கொல்லப்பட்டுவிட்டான் (ரோ 6:6). பழையமனிதன் கொல்லப்பட்டும், நாம் இன்னும் மாம்சத்தில் இருக்கின்றபடியால், சோதிக்கப்படுகிறோம். இப்பொழுது இந்த பழையமனிதன், புதியமனிதனாய் மாற்றப்பட்டு மாம்சத்தின் இச்சைகளை எதிர்க்க கூடியவனாகவும், மாம்ச இச்சைகளாகிய திருடர் கூட்டத்திற்கு தன் இருதயக்கதவை அடைக்கிறவனாகவும் இருக்கிறான்.
இயேசுவும் இவ்விதமே நம்மை போலவே எல்லாவிதத்திலும் சோதிக்கப்பட்டும், பாவம் செய்யாதவராய் ஜெயங்கொண்டிருந்தார் (எபி 4:15). அவர் பாவமாம்சமாய் வராமல், பாவமாம்சத்தின் சாயலாய் வந்தார் (ரோ 8:3). நாம் பல ஆண்டுகளாக பாவத்திலே வாழ்ந்துவிட்டபடியால், பல வருடங்களாக செய்த பாவத்தின் நிமித்தம், பாவ பழக்கங்களை உடையவர்களாகி, நாம் மறுபடியும் பிறந்தபின்பும் அறியாமல் பாவம் (unconscious) செய்கிறவர்களாய் இருக்கிறோம்.
உதாரணமாக, கடந்த நாட்களில் அநேகர் ஆணையிடுவதை பழக்கத்தில் கொண்டிருந்தபடியால், அதே ஆணையிடுதல் சோதனை நேரத்தில் அவர்களையும் அறியாமல் அவர்கள் வாயிலிருந்து தானாக புறப்படுவதைக் காணலாம். இதற்கு நேர்மாறாகவே இரட்சிக்கப்படாத நாட்களில் ஒரு போதும் ஆணையிடாத ஒருவர், அறியாமல்கூட அந்த வார்த்தையை உபயோகப்படுத்தாமல் இருப்பதைக் காணலாம். அதைப்போலவே, அதிகமாக ஆபாச புத்தகங்களை படித்தவர்கள் அப்படி படிக்காதவர்களை காட்டிலும் அதிகமாக, கெட்ட சிந்தனைகளினாலும், கனவுகளினாலும் பிரச்சனைக்குள்ளாவதை காணலாம்.
இயேசுவோ ஒருபோதும் பாவம் செய்யாதவரானபடியால், அவருடைய வாழ்க்கையில் அறியப்படாத பாவங்களும் கூட இருந்ததில்லை. ஒருவேளை அறியாமல் ஒரே ஒரு முறைகூட இயேசு பாவம் செய்திருப்பாரேயானால், அந்த பாவத்துக்குரிய பலியை செலுத்த வேண்டியதாய் இருந்திருக்கும் (லேவி 4:27,28). அப்பொழுது, நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற பூரணமான பலியாக அவர் இருந்திருக்கமுடியாது. இயேசு அறிந்தும் அறியாமலும் ஒரு தடவை கூட பாவம் செய்யவே இல்லை.
இயேசுவின் மனிதத்தன்மையை குறித்த சத்தியம் சபையின் சரித்திரம் முழுவதிலும் முரண்பாடான கருத்தும், வேற்றுமையான உபதேசமும் நீங்கா இடம் பெற்றதாயிருக்கிறது. சிலர் அவருடைய தெய்வத்தன்மையை அதிகமாக வலியுறுத்தி, நம்மைப்போல மாம்சத்தில் வெளிப்பட்டு எல்லாவற்றிலும் சோதிக்கப்பட்டவராக இருக்கிறதை காணக்கூடாமலும், வேறு சிலர் இயேசுவின் மனிதத்தன்மையை அதிகமாக வலியுறுத்தி, அவருடைய தெய்வத்தன்மையை அங்கிகரிக்காதவர்களாயும் இருக்கிறார்கள்.
இவ்விரு வேற்றுமையான உபதேசங்களிலிருந்தும், நம்மை விலக்கி பாதுகாத்துக் கொள்ள வேதத்திலுள்ள தேவ ஆலோசனைப்படி விலகாமல் நிற்போமாக (2யோவா 7,9).
இயேசு மனிதனாக இந்த பூமிக்கு வந்தது ஒரு இரகசியம். இந்த சத்தியத்தை வேதத்தில் நமக்கு சொல்லப்பட்டதற்கு மிஞ்சி அலசி ஆராய முற்படுவது மதியீனமாகும். அப்படி செய்வது மதியீனமும், பயமற்ற இஸ்ரவேலர்கள் கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டியின் உள்ளே ஆர்வத்தோடு பார்த்ததினால் தேவனால் அடிக்கப்பட்ட நடக்கைக்கு ஒப்பானதாக இருக்கும் (1சாமு 6:19).
பிதாவின் சித்தம் செய்வதற்காக என் சுயசித்தத்தை வெறுக்கிறேன் என்று இயேசு சொன்னார் (யோவா 6;38). மேலும் மத் 26:39-வசனம் இயேசுவின் சித்தமானது, பிதாவின் சித்தத்திற்கு எத்தனை முரணாக எதிர்த்து நின்றது என்பதை தெளிவாக காட்டுகிறது. நம்மைப்போலவே இயேசுவின் மாம்சத்திலும் சுயசித்தங்கள் இருந்தது என்பதையே இந்த வசனங்கள் காண்பிக்கின்றன.
இயேசுகிறிஸ்துவும் எல்லாவிதத்திலும் நம்மைப் போலவே சோதிக்கப்பட்டார் (எபி 4:15). ஆனால், இவ்விதம் சோதிக்கப்பட்ட எல்லா வேளைகளிலும் ஒரு தடவைகூட மனம் அதற்கு இசைந்து பாவம் செய்யாதவராக இருந்தார் (யாக் 1:15). நாம் சந்திக்கும் எல்லா சோதனைகளையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தன்னுடைய பூலோக வாழ்க்கையிலே சந்தித்து ஜெயித்தார்.
நாம் ஒருநாள்கூட பாவம் செய்யாமல் இருப்பது, எவ்வளவு கடினம் என்பதை நாம் எல்லோரும் அறிந்திருக்கிறோம். அதனால், இயேசுகிறிஸ்து செய்த மிகப்பெரிய அதிசயம்: நம்மைப்போல எல்லாவற்றிலும் சோதிக்கப்பட்டும் முப்பத்துமூன்றரை வருடங்கள் பாவமில்லாதவராக வாழ்ந்ததுதான் என்று சொல்லுவோம். அவர் மரணபரியந்தம் பாவத்தை வெறுத்தார். பிதாவின் கிருபையை, அவர் பிறந்ததிலிருந்து இறக்கும்வரை பெற்றிருந்தார் (லூக் 2:40; எபி 2:9). அதை அவர் பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும் தேடி அடைந்தார் (எபி 5:7; 12:3,4).
இதனிமித்தமே, அவர் நமது முன்னோடியாகி தான் சிலுவை எடுத்து சென்ற அதாவது, மாம்சத்தின் இச்சைகளை மரணத்திற்குட்படுத்தியத் தன் மாதிரியைப் பின்பற்றும்படி நம்மை இப்போது அழைக்கிறார் (லூக் 9:23).
நாம் பாவத்தை சீரிய முறையில் எதிர்க்காததினாலேயும், தேவனுடைய கிருபையை கேட்டுப் பெற்றுக் கொள்ளாததினாலேயும் நாம் பாவத்தில் வீழ்ந்து விடுகிறோம். இன்று நாம் அவருடைய வெளிப்பிரகாரமான ஜீவியத்தின் அம்சங்களாகிய ஒரு தச்சனாகவோ, திருமணமாகாதவராகவோ அல்லது அவருடைய ஊழியங்களாகிய தண்ணீரின் மீது நடப்பதும், மரித்தோரை எழுப்புவதுமாகிய காரியங்களில் அவரைப் பின்பற்றுகிறவர்களாக அல்ல. மாறாக, அவரைப்போல பாவத்தின் மேல் ஜெயம் பெறுவதில் உண்மையாக இருக்கும்படி அழைக்கப்படுகிறோம்.
பரிசுத்தாவியானவர், நாம் இயேசுகிறிஸ்துவைப் பற்றி இரண்டு அறிக்கைகள் செய்வதற்காகவே நம்மை ஆட்கொண்டிருக்கிறார். ஒன்று, அவர் ஆண்டவர் என்பதும்; இரண்டாவது, அவர் மாம்சத்தில் வந்தார் என்பதுமே ஆகும். இந்த இரண்டு அறிக்கைகளும் ஒரே முக்கியத்துவம் உடையதாகும். இருப்பினும், இரண்டாவது அறிக்கையானது அதிக முக்கியத்துவம் உடையது எனலாம். ஏனென்றால், இந்த இரண்டாவது அறிக்கையைச் செய்யாதவர்களே "அந்திகிறிஸ்துவின் ஆவியை" உடையவர்கள் என, இனம் கண்டு கொள்ளும் (2யோவான் 7) அடையாளமாக இருக்கின்றது.
இன்று, மனுஷனாகிய கிறிஸ்து இயேசு "அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராய் இருக்கிறார்" (ரோ 8:29). அதாவது, அவர் நம்முடைய மூத்த சகோதரன்! அவருடைய பிதாவே நம்முடைய பிதாவும் ஆவார்! (யோவா 20:17; எபே 1:3; எபி 2:11).
இயேசுகிறிஸ்து பூமிக்கு வந்தபோதும், அவர் தேவனாகவே இருந்தார் (யோவான் 10:33). அவர் பரமேறிப் போனபோதும், மனிதனாகவே இருந்தார் (1தீமோ 2:5)
இரட்சிப்பை குறித்த சத்தியம்
இரட்சிப்பை முக்கால அனுபவமாக சத்தியவேதம் சித்தரிக்கிறது. கடந்தகாலம் (எபே 2:8), நிகழ்காலம் (பிலிப் 2:12), வருங்காலம் (ரோ 13:11) . அதாவது 1. நீதியாக்கப்படுதல் (Justification). ௨. பரிசுத்தமாகுதல் (Sanctification). 3. மகிமையடைதல் (Glorification).
இரட்சிப்பு என்பது; அடித்தளத்தையும், மேற்தளத்தையும் உடையதாக உள்ளது. அடித்தளம் என்பது, பாவமன்னிப்பும், நீதிமானாக்கப்படுதலும் ஆகும்.
நீதிமானாக்கப்படுதல் பாவமன்னிப்பைக் காட்டிலும் மேலானது.தேவனுடைய பார்வையில் நாம் நீதிமான்களாக தீர்க்கப்பட்டதையும் கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதல், அவர் பரத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதின் அடிப்படையில் நம் பாவங்கள் மன்னிக்கப்படுவதையும் இது காட்டுகிறது இது நம்முடைய கிரியைகளினால் உண்டானது அல்ல (எபே 2:8,9). ஏனென்றால், நம்முடைய நீதியான கிரியைகள் கூட தேவனுடய பார்வையில் அழுக்கான கந்தை போலவே இருக்கிறது (ஏசா 64:6). ஆம்! நாம் கிறிஸ்துவின் நீதியினால் தரிபிக்கபட்டவர்களாய் இருக்கிறோம் (கலா 3:27). ஆம்! மனந்திரும்புதலும், விசுவாசமுமே நம் பாவ மன்னிப்பிற்கும் நாம் நீதிமானாக்கப்படுதலுக்குமுரிய நிபந்தனைகள் (அப் 20:21).
உண்மையான மனந்திரும்புதல், "திரும்பச் செலுத்தும்" (Restitution) கனியை நிச்சயம் உண்டு பண்ணும், அதாவது திருட்டுத்தனமாக பிறருடைய உடமைகள் நம்மிடமிருக்குமென்றால், அது பணமோ அல்லது பொருளோ அல்லது செலுத்தவேண்டிய வரிகளோ போன்ற எதுவானாலும் அதைத்திரும்பச் செலுத்த வேண்டும். மேலும் நமக்கு முடிந்தவரை, நாம் யாருக்கெல்லாம் தீங்கிழைத்தோமோ அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு ஒப்புரவாக வேண்டும் (லூக் 19:8,9). அடுத்து, தேவன் நம்மை எவ்விதம் மன்னித்தாரோ நாமும் பிறரை அவ்விதமே மன்னிக்கவேண்டும் என தேவன் நம்மில் எதிர்பார்க்கிறார். இதைச் செய்வதற்குத் தவறும்போது தேவன் தம்முடைய மன்னிப்பை வாபஸ் பெற்றுவிடுகிறார்! (மத் 18: 23-35).
"மனந்திரும்புதல்-விசுவாசத்தைத்" தொடர்ந்து தண்ணீரில் மூழ்கி ஞானஸ்நானம் எடுக்க வேண்டும். அதன் மூலமாகவே, நாம் நம்முடைய பழையமனிதன் அடக்கம் செய்யப்பட்டான் என்பதைப் பகிரங்கமாக சாட்சி பகருகிறோம் (ரோ 6:4,6).
இதன்பின்பு, நாம் பரிசுத்தாவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். நம் ஜீவியத்தின் மூலமாகவும், வாயின் அறிக்கை மூலமாகவும் கிறிஸ்துவுக்கு ஓர் சாட்சியாகத் திகழும்படியே நாம் இவ்வாறு உன்னத பெலத்தினால் தரிப்பிக்கப்படுகின்றோம் (அப் 1:8). தண்ணீர் ஞானஸ்நானம் நாம் "கீழ்ப்படியும்படி" தரப்பட்ட கட்டளை! பரிசுத்தாவியின் அபிஷேகமோ நாம் விசுவாசத்தினால் பெற்றுக்கொள்ளும் ஓர் வாக்குத்தத்தமுமாக தேவனுடைய எல்லா பிள்ளைகளுக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது! (மத் 3;11; லூக் 11:13).
நாம், தேவனுடைய பிள்ளை என்று ஆவியானவர் சாட்சி கொடுப்பதும் (ரோ 8:16), நாம் நிஜமாகவே பரிசுத்தாவியின் அபிஷேகம் பெற்றிருக்கிறோம் என்று உறுதியாய் அறிந்திருப்பதும் (அப் 19:2) ஒவ்வொரு சீஷனுக்குரிய சிலாக்கியமாகும் (எபே 5:18).
பரிசுத்தமாகுதலின் பொருள்: நாம் பாவத்திலிருந்தும், உலகத்திலிருந்தும் "பிரித்தெடுக்கப்படுதல்" ஆகும்.இது ஒரு கட்டிடத்தின் அடித்தளம் போன்றதாகும். இந்தப் பரிசுத்தமாகுதல், நாம் மறுபடியும் பிறந்ததிலிருந்து ஆரம்பித்து (1கொரி 1:2) இவ்வுலகஜீவிய காலம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும் ஓர் கிரியையாகும் (1தெச 5:23,24). இந்தக் கிரியையைத் தேவனே நம்மில் பரிசுத்தாவியின் மூலமாக ஆரம்பித்துத் தன் பிரமாணங்களை நம்முடைய இருதயத்திலும், மனதிலும் எழுதுவார் (எபி 8:10). என்றாலும், நாமோ நம் இரட்சிப்பு நிறைவேறப் பயத்தோடும் நடுக்கதோடும் பிரயாசப்படுகிறவர்களாய் இருக்கவேண்டும் (பிலி 2:12,13). ஆவியானவர் அளிக்கும் வல்லமையினால், நாம்தான் சரீரத்தின் செய்கைகளை மரணத்திற்குட்படுத்தி அழிக்கவேண்டும் (ரோ 8;13). பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தும்படி நம் மாம்சத்திலும், ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க நாம்தான் நம்மைச் சுத்திகரித்துக் கொள்ளவேண்டும். (2கொரி 7:1).
பரிசுத்தாவியின் இக்கிரியைகளுக்கு ஓர் சீஷன் ஆணித்தர உறுதியுடனும், முழு இருதயத்தோடும் ஒத்துழைக்கும்போது அவன் வாழ்வில் பரிசுத்தமாகுதலின் கிரியை துரிதமான வளர்ச்சியை அடைந்துவிடும். ஆனால், ஆவியானவரின் வழிநடத்துதலுக்குத் தன்னைப் பூரணமாய் ஒப்புக்கொடுத்து ஒத்துழைக்காத ஒருவரின் வாழ்வில், இக்கிரியையானது மந்தமாகவோ அல்லது தேங்கியோ கூட நின்றுவிடும்.
சோதனையின் நேரத்தில்தான் நாம் பரிசுத்தமாகுதலை முழு இருதயத்தோடு வாஞ்சிக்கிறோமா என்பது பரீட்சிக்கப்படுகின்றது.
பழைய உடன்படிக்கையில் நியாயப்பிரமாணத்தின் நீதி வெளிப்பிரகாரமாக இருந்ததுபோல அல்லாமல், நீதி நம் இருதயத்திற்குள் நிறைவேறுவதே பரிசுத்தமாக்கப்படுதல் ஆகும் (ரோ 8:4). இதைத்தான் இயேசு, மத் 5:17-48- வசனங்களில் வலியுறுத்தினார்.
தேவனாகிய கர்த்தரிடத்தில் முழுஇருதயத்தோடு அன்பு கூருவதையும், நம்மில் நாம் அன்பு கூருவதுப்போல பிறனிடத்தில் அன்புகூருவதையும் நியாயப்பிரமாணத்தின் மொத்த அடக்கமாக இயேசு தொகையிட்டுக் கூறினார் (மத் 22:36-40).
இந்த அன்பின் பிரமாணத்தையே தேவன் இப்போது நம் இருதயத்தில் எழுதும்படி தவித்து வாஞ்சிக்கிறார். ஏனெனில், இதுவே அவரது திவ்விய சுபாவமாகும் (எபி 8:10; 2பேதுரு 1:4). இதை வெளியரங்கப்படுத்தி ஜொலிப்பதுதான், எல்லா அறிந்த பாவங்களிலிருந்தும் ஜெயம் பெற்று வாழும் ஜெயவாழ்வு! மற்றும் இயேசுவின் எல்லா கற்பனைகளுக்கும் (யோவான் 14:15) கீழ்ப்படியும் கீழ்ப்படிதல்!!
இயேசு பிரகடனம் செய்த சீஷத்துவத்தின் நிபந்தனைகளை முதலாவது நிறைவேற்றாமல், இந்த ஒப்பற்ற வாழ்விற்குள் பிரவேசிப்பது கூடாத காரியம் (லூக் 14:26-33). இந்த சீஷத்துவம் வலியுறுத்துவதெல்லாம், ஒருவன் தன் உறவினர்களையும், சுய வாழ்க்கையையும் வெறுக்க வேண்டும் என்பதும், தன் எல்லா உலக ஆஸ்தி உடைமைகளிலுருந்தும் சற்றும் பிடிப்பில்லாமல் விடுபட்டிருக்கவேண்டும் என்பதே ஆகும்.
நாம் முதலாவது பிரவேசிக்க வேண்டிய இடுக்கமான வாசல் இதுவே! அதை தொடர்ந்து வரும் பரிசுத்தமாகுதலின் இடுக்கமான வழியும் இதுவே!! இந்த பரிசுத்தமாகுதலை நாடாத ஒருவரும் தேவனைத் தரிசிக்கவே முடியாது. (எபி 12:14).
நாம் இவ்வுலகத்தில் இப்பொழுதே, நம் மனசாட்சியில் பூரணமடையும் சாத்தியமானது எத்தனை நிச்சயமாயிருக்கிறது (எபி 7:19;9:14). ஆனால், நாம் மகிமையடைந்த சரீரத்தை இயேசு திரும்ப வரும்போது பெற்றுக்கொள்ளும் வரைக்கும், நாம் "பாவமில்லாத பூரணம்' (Sinless Perfection) அடைவது சாத்தியமே இல்லை. ஆம்! அவர் வரும்போதுதான் (1யோவான் 3:2) நாம் அவருக்கு ஒப்பாயிருப்போம்! அதுவரைக்கும் உள்ள இந்த உலக வாழ்க்கையில் இப்போது நாம் செய்யவேண்டியதெல்லாம், அவர் நடந்தபடியே நாமும் நடக்க வேண்டும்.(1யோவான் 2:6).
நாம் எவ்வளவுதான் பரிசுத்தம் அடைந்திருந்தாலும், நமக்கு இந்தப் பாவசரீரம் இருக்கும்வரை, அதில் "அறியாத பாவங்கள்" (Unconscious Sin) இருக்கத்தான் செய்யும் (1யோவான் 1:8). இருப்பினும், இயேசு நடந்தப்படியே நாமும் நடக்கவேண்டும் என்பதன் பொருளானது, நாம் நம் மனசாட்சியில் பூரணராகவும், "அறிந்த பாவங்களில்" விடுதலையடைவதுமே ஆகும் (1யோவான் 2:1). நாம் முழுஇருதயம் உடையவர்களாக இருந்தால், இந்த எல்லையை நாம் நிச்சயம் அடைந்து விடமுடியும்! (1கொரி 4:4).
இப்போது, நம் இரட்சிப்பின் இறுதிக்கட்டமாக, அவர் வருகையில் நாம் மகிமையடையும்படி கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காக காத்து நிற்கிறோம்! அப்பொழுது பாவமில்லாத பூரணராயுமிருப்போம். (ரோ 8:23; பிலி 3:21).
சபையைக் குறித்த சத்தியம்
சபையானது, கிறிஸ்துவின் சரீரமாகும். அதன் ஒரே தலை கிறிஸ்துவே! அதன் ஒரே தலைமை அலுவலகம் மூன்றாம் வானமே! கிறிஸ்துவின் சரீரத்தில் ஒவ்வொரு அவயமும் அதனதன் அளவுக்கு தக்கதாக கிரியை செய்யப்பட வேண்டும் (எபே 4:16). சில அவயங்கள் வேறொரு அவயத்திலும் முக்கியம் வாய்ந்ததாகவோ அல்லது நன்கு காணக்கூடிய ஊழியத்தை உடையதாகவோ இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு அவயமும் முக்கியம் வாய்ந்ததாகவும் ஒன்றுக்கொன்று பகிர்ந்தளிக்கக் கூடியதாகவும் உள்ளது.
கிறிஸ்துவின் சரீரம் கட்டப்படுவதற்கே, அவர் தன் சபைக்கு அப்போஸ்தலர்களையும்; தீர்க்கதரிசிகளையும்; சுவிசேஷகர்களையும்; மேய்ப்பர்களையும் தந்தருளினார் (எபே 4:11)). இவைகள் ஊழியங்களே அல்லாமல் பட்டங்கள் அல்ல. அப்போஸ்தலர்கள் யார் எனில், தேவனால் அழைக்கப்பட்டு, குறிப்பிட்ட ஓர் ஸ்தலத்தின் எல்லைக்குள் தன் விசேஷித்தப் பணியை செய்து சபையை நாட்டும்படி தேவனால் அனுப்பப்படுபவர்கள், (2கொரி 10:13). சபையில் முதலாவது இடம் வகிப்பவர்கள் இந்த அப்போஸ்தலர்களே (1கொரி 12:28). இப்படியாக தங்கள் ஸ்தல எல்லைக்குள் உள்ள எல்லா கிறிஸ்துவின் ஊழியங்களுக்கும், இவர்கள் மூப்பர்களாகிறார்கள். தீர்க்கதரிசிகள் யார் எனில், அந்தரங்கங்களை வெளிப்படுத்தி, தேவ ஜனத்திற்குள் காணும் மறைவான தேவைகளுக்கு ஏற்ப ஊழியம் செய்பவர்களாவர். சுவிசேஷகர்கள் யார் எனில், புறஜாதிகளை கிறிஸ்துவண்டை கொண்டுவரும் வரம் பெற்றவர்களாவர். ஆம்! இவர்கள் மனந்திரும்பியவர்களை "ஸ்தல சபைக்கே" கொண்டு வரவேண்டும். ஆனால், இன்றைய திரளான சுவிசேஷ ஊழியங்கள் இவ்விதம் செய்வதற்கு தவறிவிட்டன. மேய்ப்பர்கள் யார் எனில், தங்கள் ஆடுகளையும், ஆட்டுக்குட்டிகளையும் கண் வைத்துப் பராமரித்து செம்மையாய் வழி நடத்துபவர்களாவர். போதகர்கள் யார் எனில், வேத வாக்கியங்களையும், அதன் உபதேசங்களையும் திறம்பட விளக்கிப் போதிப்பவர்களாவர். இந்த ஐந்து வரங்களே உலகம் தழுவி நிற்கும் சபைக்கு அருளப்பட்டிருக்கிறது. இந்த ஐந்து ஊழிய வரங்களில், மேய்ப்பர்களும் தீர்க்கதரிசிகளுமே ஒவ்வொரு ஸ்தல சபைக்கும் அது உருவாகும் ஆரம்பத்திலிருந்தே பிரதானமாய்த் தேவைப்படுகிறது. ஏனைய வரங்கள், மற்ற ஸ்தல சபைகளிலிருந்து அழைக்கப்பட்டு பயன்படுத்தப்படலாம்.
ஸ்தல சபையை நடத்தும் பொறுப்பு மூப்பர்களின் கரத்தில்தான் இருக்கவேண்டும். புதிய ஏற்பாடு இதை நமக்குத் தெளிவாய்ப் போதிக்கின்றது (தீத்து 1:5; அப் 14:23). "மூப்பர்கள்" என பன்மையில் குறிப்பிடப்பட்டிருப்பதைக் கவனியுங்கள்! எனவே ஒவ்வொரு சபைக்கும் குறைந்தது இரண்டு மூப்பர்கள் நிச்சயம் இருக்கவேண்டும். மற்றும் மத் 18:20 -ன்படி ஸ்தல சபையின் சமநிலையான தலைமைத்துவத்தினால், சாத்தானுடைய கிரியைகளை கர்த்தருடைய வல்லமையான பிரசன்னத்தின் மூலமாய் கட்டிடமுடியும். ஓர் சபைக்கு ஒரே மனிதன் தலைமைகொள்ளும் ஆதிக்கம் புதிய ஏற்பாட்டின் போதகத்திற்கு முற்றிலும் முரணானது ஆகும். இருப்பினும், இந்த மூப்பர்களில் ஒருவர் தீர்க்கதரிசியாக வரம் பெற்றிருந்தால், அவர் அந்த சபையின் தூதனாக" (MESSENGER- தூது கொண்டுவருபவர்) இருக்க முடியும் (வெளி 2:1). விசுவாசிகள் ஸ்தல சபையின் மூப்பர்களுடைய அதிகாரத்திற்கு சபை சம்பந்தப்பட்ட எல்லா காரியங்களிலும் அடங்கி இருப்பவர்களாக இருக்க வேண்டும் (எபி 13:17; 1தெச 5:12,13).
தன் சீஷர்கள் பெயர் பட்டங்கள் (TITLES) வைத்துக்கொள்ளக் கூடாதென இயேசு கடுமையாய் தடைவிதித்தார் (மத் 23:7-12). தேவவசனத்திற்கு எதிர்த்து நிற்பவர்களே தங்களை ரபீ அல்லது பிதா (தந்தை) அல்லது பாஸ்டர் அல்லது ரெவரெண்ட் (Rev) அல்லது தலைவர் என குறிப்பிட்டு அழைத்துக் கொள்கிறார்கள். வேதாகமத்தில், Reverend (Rev) என்ற பட்டம் தேவனுக்கு மாத்திரமே தரப்பட்டுள்ளது (சங் 111:9-KJV) இப்பட்டத்தைத் தங்களுக்காக உபயோகிப்பவர்கள் தேவனுக்கு ஒப்பாய் மாற விரும்பிய சாத்தானாகிய லூசிபரின் குற்றத்திற்கு ஆளாகின்றார்கள் (ஏசா 14:14). சபையில் இருக்கும் ஒவ்வொருவரும் சகோதரனாகவும், வேலைக்காரனாகவும் இருப்பதற்கே அழைக்கப்பட்டிருக்கிறார்கள் (மத் 23:8,11).
சபையானது, போதககூட்டமாயும், (அப் 20:9,11), சுவிசேஷத்தை பிரசங்கிக்கவும், ஜெபிக்க மற்றும் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தவும் (அப் 2:14-40), தவிர ஸ்தல சபையின் கூட்டங்கள் எல்லா சீஷர்களும் தீர்க்கதரிசனம் (வேதவசன வெளிப்பாட்டு செய்திகள்) சொல்லுவதற்கு திறந்தளிக்கப் பட்டிருக்கவேண்டும். சபை கூடிவரும் வேளையில் பயன்படுத்தும் பொருட்டு, தீர்க்கதரிசன வரமானது எல்லோராலும் நாடப்பட வேண்டும் (1கொரி 14:1,39). அந்நியபாஷை வரமானது பிரதானமாய் சுய பக்திவிருத்திக்கே ஏதுவானதாகும் (1கொரி 14:4,18,19). இருப்பினும், இவ்வரமானது சபையில் மட்டாக உபயோகிப்பதில் பயன் உண்டு. ஆனால், அவ்வாறு சபையில் பயன்படுத்தப்படும் அந்நியபாஷை அர்த்தம் சொல்லப்பட வேண்டும் (1கொ 14:27). அந்நியபாஷையில் உண்டாகும் ஓர் வெளிப்பாடு; அறிவை உணர்த்தும் வசனம்; தீர்க்கதரிசனம்; போதகம்; அல்லது தேவனுக்கு ஏறெடுக்கும் ஜெபம் ஆகிய எதுவாயிருந்தாலும் வியாக்கியானம் செய்யப்பட வேண்டும் (1கொரி 14:2,6). 1கொரி 12:8-10 ,28 மற்றும் ரோமர் 12:6-8-ல் கூறப்பட்டுள்ள வரங்கள், கிறிஸ்துவின் சரீரம் கட்டப்படுவதற்கு அவசியமானதாகும். ஆவியின் வரங்களை அசட்டை செய்து, உதாசீனம் செய்யும் ஓர் சபை அவ்வரங்களை ஒருக்காலும் பெற்றுக்கொள்ள முடியாது.
ஸ்திரீயானவள் ஜெபம் பண்ணுகிறபோதும், தீர்க்கதரிசனம் சொல்லுகிறபோதும் தலையை மூடிக்கொள்ளக்கடவள் (1கொரி 11:5) என்றும், உபதேசம் பண்ணவும், புருஷன் மேல் அதிகாரம் பண்ணவும் ஸ்திரீயானவளுக்கு உத்தரவு கொடுக்கிறதில்லை (1தீமோ 2:12). ஸ்திரீயானவள் முக்காடிட்டுக் கொள்ளுகிற காரியத்தை குறித்ததான அடையாள அர்த்தம் என்னவெனில்:
1. புருஷனுடைய மகிமையை சபையிலே மூடிக்கொள்வதையும் (ஸ்திரீயானவள் புருஷனுக்கு மகிமையாக இருக்கிறாள் வசனம் :7).
2.ஸ்திரீயின் மகிமையை சபையில் மூடிக்கொள்வதையும் (ஸ்திரீயின் தலைமயிர் அவளுக்கு மகிமை வசனம் :15). (ஸ்திரீ அவளுடைய தலைமயிர் அவளுடைய மகிமை (அழகு) என்று அறிந்திருக்கிறபடியால், அரைகுறையாக மூடிக்கொள்கிறாள்).
3.புருஷனுடைய அதிகாரத்திற்கு அடங்கி இருக்கிறதையும் குறிக்கிறது (புருஷனானாலும், தகப்பனானாலும், மூப்பரானாலும் வசனம் :10).
கிறிஸ்துவின் பரிசுத்ததிற்கேற்ப ஸ்திரீயானவள் தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும் உடை உடுத்தவேண்டும் (1தீமோ 2:10).
சகல ஜாதிகளிலும் கிறிஸ்துவின் "சீஷர்களை" உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தை மனதிற்கொண்டு, சாதகமான எல்லா முயற்சிகள் மூலமாகவும், தொடர்பு கொள்ள வாய்ப்பு கிடைக்கும் அனைவருக்கும் சுவிசேஷத்தின் நற்செய்தியைப் பிரசங்கிப்பது சபையின் ஓர் முக்கிய பொறுப்பாகும் (மாற் 16:15 ; மத் 28:19). ஆனால், சீஷனாக்காத சுவிசேஷ ஊழியம், இப்பூமியில் கிறிஸ்துவின் சாட்சிக்குப் பெரும் பாதகத்தையே உண்டாக்கும்.
ஒவ்வொரு ஸ்தலசபையிலும் "அப்பம் பிட்குதல்" மூலம் (1கொ 11:23,24) ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் மரணத்தைத் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அனுசரிப்பதை எத்தனை நாளுக்கு ஒருமுறை செய்ய வேண்டும் என்பதற்குத் தேவன் அந்தந்த ஸ்தல சபைக்கே முழு உரிமையும் வழங்குகின்றார். ஆனால், இந்த அனுசரிப்பானது ஓர் போலி சடங்காச்சாரமாய் தரம் குறைந்துவிட இடம் தரவே கூடாது.
காணிக்கைப் பணம் பெறும் விஷயத்தில், தேவனுடைய ஊழியத்திற்காக அவிசுவாசிகளிடம் பணம் பெறுவது, பெரும் தவறு என வேதவசனம் மிகத்தெளிவாய் கூறுகின்றது (3யோவான் 7). எனவே, அவிசுவாசிகள் இருக்கும் ஓர் கூட்டத்தில் காணிக்கை எடுக்கப்படவே கூடாது. விசுவாசிகள் கொடுக்கும் விஷயத்திலும், அவர்கள் மனப்பூர்வமாகவும், அந்தரங்கமாகவும் கொடுப்பதற்கே வழிவகுக்க வேண்டும் (2கொரி 9:7). பிறரிடத்திலிருந்து பணம் காணிக்கையாகப் பெறும் நோக்கத்தோடு, தாங்கள், கர்த்தருக்கு செய்யும் ஊழியத்தைக் குறித்த "விளம்பர ரிப்போர்ட்" அல்லது ஜெப சுற்றறிக்கையை பிறருக்கு அனுப்புவதும் தவறு என்பதை நாங்கள் விசுவாசிக்கிறோம்.
சீஷர்களை விசுவாசத்திற்கு கீழ்படியும்படி "தொடர்ந்து" நடத்தி அதன் மூலம் இயேசுவின் எல்லா கற்பனைகளுக்கும் (குறிப்பாக, மத் 5 முதல் 7- அதிகாரங்கள்) கீழ்ப்படியச் செய்யும் சபை மாத்திரமே அசைக்கப்பட முடியாத உறுதியான சபையாய் இருக்கமுடியும். புதிய ஏற்பாட்டில் காணப்படும் மிகச் சிறிய கற்பனைகளும் தீவிரமாய்க் கைக்கொள்ளப்பட்டு அவைகள் எல்லா வைராக்கியத்துடனும் அறிவித்துப் பிரகடனம் செய்யப்பட வேண்டும் இப்படிப்பட்டவர்களே தேவனுடைய பார்வையில் மிகவும் பெரியவர்களாவர் (மத் 5:19).
ஆனாலும், இன்னும் அநேக காரியங்களில் புதிய ஏற்பாடு மௌனமாகவே உள்ளது. அப்படிப்பட்ட காரியங்களில், நாம் எதையும் வலியுறுத்திக் கூறக்கூடாது. ஆனால், நாம் மனதில் நிச்சயத்துக் கொண்ட உணர்த்துதலில் உறுதியாய் இருந்து கொண்டு (ரோமர் 14:5), மற்ற சீஷர்கள் அவரவர் நிச்சயித்துக்கொள்ளும் உணத்துதலைப் பற்றிக் கொள்ள முழு சுதந்திரம் தரப்படப் வேண்டும்.
ஆம்! நம்மோடு சேர்ந்து எல்லாக் காரியங்களிலும் கண்ணோடு கண் வைத்து ஒருமித்துப் பார்ப்பவர்களை நேசிப்பது மிகவும் எளிது. அவ்விதம் இல்லாமல், நமக்கு வேறுபட்டிருப்பவர்களிடம் நம் மனநிலை எவ்வாறிருக்கிறது என்பதை வைத்தே நம் அன்பு சோதிக்கப்படுகின்றது. ஒவ்வொரு அற்ப காரியங்களுக்கும் தன்னுடைய பிள்ளைகள் ஒரே அபிப்ராயத்தையேப் பற்றியிருக்க வேண்டும் என தேவன் விரும்புவதில்லை. அதுப்போலவே, வசனத்தில் குறிப்பிடப்படாத விஷயங்களில் ஒவ்வொரு ஸ்தலசபையும் ஒரே மாதிரியைக் கொண்ட அமைப்புகளை வைத்துக் கொள்ளவும் அவர் விரும்புவதே இல்லை. வேற்றுமையின் மத்தியில் காணும் ஓர் ஒற்றுமையில் தான் தேவனுடைய மகிமையைக் காண முடியும். "ஒரே மாதிரியான அமைப்புகள்" (UNIFORMITY) மனுஷனால் உருவாக்கப்படுவதாகும். அதன் விளைவு ஆவிக்குரிய மரணமே! ஒரே அமைப்புகளை அல்ல, ஒன்றாய் இருக்கும் ஒற்றுமையே (UNITY) தேவன் வாஞ்சித்து விரும்புகிறார்!
கடைசியாக, ஒருவரிலொருவர் அன்பாயிருப்பதே இயேசுவின் சீஷர்களை அறிந்து கொள்ளும் தெளிவான அடையாளம் என்பதை நாம் எப்போதும் நினைவிற்கொள்ள வேண்டும் (யோவான் 13:35). எனவே பிதாவும், குமாரனும் ஒன்றாயிருப்பது போல (யோவான் 17:21) சபையும் ஒன்றாய் இருப்பதற்கே எப்போதும் வாஞ்சை கொள்ள வேண்டும்.
மேற்கூறியவை எல்லாம், நாங்கள் விசுவாசிக்கும் சத்தியத்தின் இரத்தினச்சுருக்கமாகும்.
இதுவே, சத்தியம் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்! ஏன் தெரியுமா? இந்த சத்தியத்தை முழு இருதயத்தோடு ஏற்றுக்கொண்டவர்களை அது விடுதலையாக்கியிருக்கிறதே! (யோவான் 8:32).