Article Body: 

பொதுவாக கூற வேண்டுமென்றால், கிறிஸ்தவர்கள் கீழ்காணும் வகைப்படி இரண்டு இரண்டு பிரிவினராக செயல்படுகிறார்கள்:

1. "ரோமன் கத்தோலிக்கர்கள்"-"புராட்டஸ்டாண்டுகள்."இவர்கள் பிறப்பின் ஆதாரத்தின் படியான இரு குழுவினர்.

2. "எபிஸ்கோப்பல்" (Conformist) - "சுயாதீன சபையினர்" (Non-Conformist). இவர்கள் "சபை கட்டுப்பாட்டை" கைக்கொள்வதின் ஆதாரத்தின்படியான இரு குழுவினர்.

3. "மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்கள்" - "பெயரளவில் கிறிஸ்தவர்கள்." இவர்கள் "அனுபவத்தை" ஆதாரமாகக் கொண்ட இரு குழுவினர்.

4. "சுவிசேஷத்திற்கு உட்பட்டவர்கள்" - "தாராள நோக்குடையவர்கள்." இவர்கள் "உபதேசத்தை" ஆதாரமாகக் கொண்ட இரு குழுவினர்.

5 "ஆவிக்குரியவர்" - "ஆவிக்குரியவர் அல்லாதவர்." இவர்கள் "அந்நியபாஷை பேசுவதை" ஆதாரமாகக் கொண்ட இரு குழுவினர்.

6. "முழு நேர கிறிஸ்தவ ஊழியர்கள்" - "வேலையில் இருந்துகொண்டே ஊழியர்கள்." இவர்கள் "வேலையை" ஆதாரமாகக் கொண்ட இரு குழுவினர்.

மேற்கண்டவாறே, இன்னும் பல வகையினர் இருக்கக்கூடும்! ஆனால் இதுபோன்ற வகையினர் ஒருவராயினும் "எந்தப் பிரச்சனையை தீர்ப்பதற்கு ஆண்டவர் வந்தாரோ" அந்தப் பிரச்சனையின் வேர் பகுதியை அறிந்து அதை வீழ்த்திட கிரியை செய்திடவில்லை!!

இன்று அநேகர் "கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரித்தார்" (1 கொரி. 15:3) என்பதை அறிந்திருக்கிறார்கள். ஆனால் எண்ணற்ற திரள் கூட்டத்தார், வேதாகமம் போதிக்கிறபடி "இனி நாம், நமக்காக பிழைத்திராமல் அவருக்காக பிழைத்திருக்க வேண்டும்" என்பதற்காகவும் கிறிஸ்து மரித்தார்! என அறியாமலே இருக்கிறார்கள் (2 கொரி. 5:15).

ஆகவே வேதாகமபூர்வமாய் கீழ்காணும் விதமாக கிறிஸ்தவர்களை வகைப்படுத்துவதே சாலச் சிறந்ததாகும்:

1. "தங்களுக்காக ஜீவிப்பவர்கள்"- "கிறிஸ்துவுக்காக ஜீவிக்கிறவர்கள்" அல்லது,

2. "தங்களுக்கானதை தேடுகிறவர்கள்" - "கிறிஸ்துவுக்கு உரியவைகளை தேடுகிறவர்கள்" அல்லது,

3. "மண்ணுக்குரியவைகளை முதலாவது தேடுகிறவர்கள்" - " தேவனுடைய ராஜ்யத்தை முதலாவது தேடுகிறவர்கள்" அல்லது,

4. "பணத்தை நேசிப்பவர்கள்" - "தேவனை நேசிப்பவர்கள்." ஏனெனில், லூக்கா. 16:13-ல்

இரண்டையும் நேசிப்பது ஒருக்காலும் முடியாது என இயேசுவே கூறியிருக்கிறார்!

காரியம் இவ்வாறிருக்க, மேற்கண்டவிதமாக இன்றைய கிறிஸ்தவர்கள் வேறுபடுத்திக் காண்பதை நாம் கேள்விப்பட்டதே இல்லை! இவ்வித வகைப்படுத்தல், கிறிஸ்தவர்களின் அந்தரங்க உள்ளான வாழ்க்கையையும், தேவனோடு தனிப்பட்ட விதத்தில் நடந்திடும் ஜீவியத்தையும் ஆழமாக உணர்த்தக் கூடியதாக இருக்கிறது. ஆனால், முதலாவது குறிப்பிடப்பட்ட வகைப்படுத்தலோ, ஒருவனின் வெளிப்புற வாழ்க்கையை அடிப்படையாக கொண்டிருக்கிறது. எப்படியிருப்பினும், இரண்டாவது வகைப்படுத்தப்பட்டபடியே பரலோகமும் கிறிஸ்தவர்களை வேறுபடுத்தி வகைப்படுத்துகிறது! "இந்த வகைப்படுத்தல்" மாத்திரமே ஜீவநாடியாக இருக்கிறது என்பதை ஒருவன் அறிந்திருக்க வேண்டும். இவ்வித வகைப்படுத்தலை ஆதாரமாகக் கொண்டு 'மற்றவர்கள்' நம்மை சீர்தூக்கிக் காண இயலாது. ஆம், நம்மை நாமே தான் வகைப்படுத்தி காணமுடியும். . . . அது ஏனெனில், நம்முடைய உள்ளான சுகங்களையும், விருப்பங்களையும் நாம் மாத்திரமே அறிந்திருப்பதன்றி, வேறு எவரும் அறிந்துகொள்ள முடியாது! நாம் எதற்காக ஜீவிக்கின்றோம்? என்பதை நம்முடைய மனைவிமார்கள் கூட அறிந்துகொள்ள முடியாது!

இந்த பூமிக்கு ஜனங்களிடத்தில் வந்து ஒரு உபதேசத்தைக் கொடுக்கவோ! அல்லது ஒரு சபைக் கட்டுக்கோப்பை கொடுக்கவோ! அல்லது அவர்களை அந்நியபாஷை பேசும்படி செய்வதற்கோ! அல்லது ஒரு அனுபவத்தைக் கொடுப்பதற்கோ கூட நம் ஆண்டவர் பிரதானமாக வரவில்லை!!

ஆம், "நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை இரட்சிப்பதற்கே" அவர் வந்தார்! மரத்தின் வேரின்மீது கோடாரியை வைத்திடவே அவர் வந்தார்! ஏனெனில், பாவத்தின் வேரானது நம்மை மையமாக கொண்டிருப்பதும்! நமக்கானதைத் தேடுவதும்! நம்முடைய சுயசித்தம் செய்வதுமே! பாவத்தின் வேராயிருக்கிறது. நம்முடைய ஜீவியத்திலுள்ள "இந்த வேரை" கோடாரி வைத்து வீழ்த்திட நம் ஆண்டவருக்கு நாம் இடம் தரவில்லையென்றால், வெறும் "மேற்பூச்சு கிறிஸ்தவர்களாகவே" நிலைகொண்டிருப்போம்! வேண்டுமானால், நம்முடைய உபதேசத்தை வைத்து, அல்லது நம்முடைய அனுபவத்தை வைத்து, அல்லது நம்முடைய சபை கட்டுக்கோப்பை வைத்து. . . மற்ற கிறிஸ்தவர்களைவிட மேலான கிறிஸ்தவர்களாக 'நாமாகவே நம்மை' எண்ணிக்கொள்ளும்படி சாத்தான் நம்மை வஞ்சித்திட முடியும்!

நாம் இன்னமும் "நமக்காகவே ஜீவித்துக் கொண்டிருக்கும் பட்சத்தில்" அதாவது, நாம் இன்னமும் தொடர்ந்து "பாவத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கும் பட்சத்தில்". நம்மிடத்தில் சரியான உபதேசம் இருப்பதைக் குறித்தோ, அனுபவம் கொண்டிருப்பதை வைத்தோ, சரியான சபை கட்டுக்கோப்பு வைத்திருப்பதையோ சாத்தான் ஒரு பொருட்டாக ஒருக்காலும் எண்ணுவதே இல்லை! இன்றைய கிறிஸ்தவம் தனக்கானதைத் தேடும் கிறிஸ்தவர்களாலும், தங்களுக்காகவே வாழ்ந்திடும் கிறிஸ்தவர்களாலும் நிறைந்திருக்கிறது! இவ்வித லட்சணத்தில் வாழ்ந்து கொண்டு, மற்ற கிறிஸ்தவர்களைவிட தாங்களே உயர்ந்தவர்கள் என தேவன் தங்களைக் காண்பதாக இன்னமும் இவர்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு இவர்கள் கொண்ட ஆதாரம் எல்லாம் உபதேச வித்தியாசங்களும், சபைக் கோட்பாடும், அனுபவங்களுமே ஆகும்! இதைக் காணும்போது, இன்றைய கிறிஸ்தவத்தில் சாத்தான் எத்தனை பெரிய கிரியை செய்து சாதித்துவிட்டான் என்றே தோன்றுகிறது!

யோவான் 6:38-ல், தான் வானத்திலிருந்து பூமிக்கு எதற்காக வந்தேன்? என ஆண்டவர் தெளிவுபடுத்தினார்:

1. ஓர் மனிதனாக இந்த பூமிக்கு வந்தபோது அவர் பெற்றுக்கொண்ட "மானிட சித்தத்தை" வெறுப்பதற்கும்!

2. ஓர் மனிதனாகவே வாழ்ந்து பிதாவின் சித்தத்தை செய்வதற்கும் வந்தார். அதன் மூலமாக நமக்கு அவர் மாதிரியானார்!!

இந்தப் பூமியில் இயேசு வாழ்ந்த 33 ½ -ஆண்டுகளும், தன் சுயசித்தத்தை இயேசு வெறுத்து பிதாவின் சித்தத்தைச் செய்தார். யாரெல்லாம் தன்னுடைய சீஷர்களாக இருக்க விரும்பினார்களோ, அவர்கள் அனைவரும் அவர் சென்ற அதே வழியில்தான் சென்றிட வேண்டும் என தன் சீஷர்களுக்கு மிக ஆணித்தரமாக கூறினார். இவ்வாறு, நம் ஜீவியத்தில் "சுயசித்தம் செய்தல்" என்ற பாவத்தின் வேரை பலமாக தாக்கி, அதன் மூலம் நம்மை அக்கொடிய சுயசித்தத்தின் பிடியிலிருந்து விடுவிப்பதற்காகவே இயேசு வந்தார்!

விஞ்ஞான உலகில், அண்ட சராசரத்திற்கும் "பூமியே" மையத்திலிருக்கிறது என்ற தவறான கருத்தை, பல ஆயிரம் வருடங்களாக மனுஷன் கொண்டிருந்தான்! மனுஷருடைய கண்களுக்கும் அப்படித்தான் தோன்றியது. ஏனெனில், ஒவ்வொரு 24-மணி நேரத்திலும் சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் பூமியைச் சுற்றி வருவதாகவே காட்சியளித்தது! நிரந்தரமாக கருதப்பட்ட இந்தக் கருத்தை சந்தேக கேள்வி தொடுத்த மன தைரியம் கொண்ட புருஷனான காப்பர்நிக்கஸ் என்ற பெயர் கொண்ட மனுஷன் எழுந்தான்! அண்ட சராசரத்தில் மாத்திரமல்லாமல், சூரிய மண்டலத்திலுமே கூட பூமி மையமாக இல்லை. இவ்வித தெளிவு, சுமார் 450 வருடங்களுக்கு முன்புதான் ஏற்பட்டது! சூரியனின் மையத்தில் இருக்கும்படியே பூமியானது சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறது என இவ்வுலகத்திற்கு எடுத்துரைத்தார். தவறான மையத்தை மனுஷன் கொண்டிருந்த காலம் மட்டும், அவனுடைய விஞ்ஞான கூட்டல் கழித்தல்கள் தவறாகவே இருந்தது. ஏனெனில், அவன் தெரிந்துகொண்ட மையம் தவறானது, அவ்வளவுதான்! ஆனால் மனுஷன் 'என்று' சரியான மையத்தை கண்டுபிடித்தானோ 'அன்றே' அவனுடைய கூட்டல் கழித்தலின் கணிதம் சரியாக மாறியது!

இதைப்போலவே தான், நாம் "தேவனை-மையமாக" கொண்டிராமல் "சுயத்தை-மையமாக" வைத்திருக்கும் காலம்வரை நடைபெறுகிறது!. இந்நிலையில், வேதாகமத்தை நாம் புரிந்துகொள்வதும், தேவனுடைய பரிபூரண சித்தத்தை அறிந்துகொள்வதுமாகிய நம்முடைய கூட்டலும் கழித்தலும் தவறாகவே இருக்கும். நாம் மேலே கண்டதுபோல், சுமார் 5000 வருடங்களுக்கும் மேலாகவே மனுஷன் தன்னுடைய கருத்தை சரி என்றே எண்ணியிருந்தான். அதுபோலவே, நாமும் நம்மை சரியென்றே எண்ணி வாடிழ்திருக்க முடியும்! ஆனால் உண்மை யாதெனில், நாம் நூற்றுக்கு நூறு தவறாகவே இருந்திருக்கிறோம்!!

இன்றும் இவ்வித நிலையில்தான் ஏராளமான "நல்ல கிறிஸ்தவர்கள்கூட" இருப்பதை நாம் காண்கிறோம். இவர்களிடம் "ஒரே வேதாகமத்தைக் குறித்து" பல்வேறுபட்ட வியாக்கியான விளக்கங்கள் தோன்றின. வேறுபட்ட இவர்களது விளக்கத்தில் "தன்னுடைய விளக்கமே சரியென" ஒவ்வொருவரும் ஆணித்தரமாக கூறினர். அந்த ஒவ்வொருவரும், மற்ற எல்லோருடைய விளக்கமும் தவறு என்றும், அந்த மற்றவர்களை "வஞ்சிக்கப்பட்டார்கள்" எனவும் கூறினார்கள்! ஏன் இந்த குளறுபடி? ஏனெனில், இவர்கள் கொண்டிருந்த மையம் தவறானது, அவ்வளவுதான்!

மனுஷன், தனக்குத்தானே மையமாயிருக்கும்படி சிருஷ்டிக்கப்படாமல் தேவனிடத்தில் மையமாயிருக்கும்படி சிருஷ்டிக்கப்பட்டான். கிறிஸ்தவர்கள் தாங்கள் கொண்ட மையத்தில் தவறாயிருக்கும் பட்சத்தில், அவர்கள் பெற்ற "சுவிசேஷமும்" நிச்சயம் தவறாகவே இருக்கும்!

அடிப்படைபூர்வமாக கூறுவோமென்றால், இன்று இரண்டு சுவிசேஷங்கள் மாத்திரமே பிரசங்கிக்கப்படுகிறது:

1) மனுஷனை மையமாக கொண்ட சுவிசேஷம்!

2) தேவனை மையமாக கொண்ட சுவிசேஷம்!

மனுஷனை மையமாக கொண்ட சுவிசேஷம், மனுஷனுக்கு அவன் வாழ்வில் தேவையான அனைத்தையும் தேவன் அவனுக்குத் தருவார் என்றே வாக்குறுதி வழங்குகிறது. அதன் மூலமாக இந்த பூமியில் அவன் வாழும் வாழ்க்கையில் சொகுசாக இருப்பது மாத்திரமல்லாமல், அவனுடைய ஜீவியத்தின் இறுதியில் 'பரலோகத்திலும்' அவனுக்கு ஒரு ஆசனத்தை வழங்கிடும் என கூறுகிறது. இன்று மனுஷனுக்கு சொல்லப்படுவதெல்லாம், இயேசு நம்முடைய அனைத்து பாவங்களையும் மன்னிப்பார்! நம்முடைய நோய்கள் அனைத்தையும் சுகமாக்குவார்! பொருளாதார ஆசீர்வாதத்தையும் செழிப்பையும் தருவார்! இந்த மண்ணின் பிரச்சனைகள் யாவையும் தீர்ப்பார்..என்றே சொல்லப்படுகிறது!!

ஆனால், இதுபோன்ற மனுஷனின் வாழ்வில் அவனுடைய சுயமே மையத்தில் நிலைகொண்டிருக்கிறது. . . அவன் ஒவ்வொரு ஜெபங்களுக்கும் பதிலளித்து, அவனுடைய விருப்பம் என்னவோ அதையெல்லாம் கொடுப்பதற்கு "அவனுடைய வேலைக்காரனாக" தேவன் அந்த மனுஷனைச் சுற்றி சுற்றி வந்துகொண்டிருக்கிறார்!! இதற்கு அந்த மனுஷன் என்ன செய்ய வேண்டும்? விசுவாசிக்க வேண்டும்! அனைத்து பொருளாதார ஆசீர்வாதங்களையும் இயேசுவின் நாமத்தில் சுதந்தரித்துக் கொள்ள வேண்டும்! அவ்வளவுதான்!?

இதுவே பொய் சுவிசேஷம்! ஏனெனில், இந்த சுவிசேஷத்தில் "மனந்திரும்ப வேண்டும்" என ஒரு வார்த்தை கூட சொல்லப்படவில்லை. யோவான்ஸ்நானகன் தொடங்கி இயேசுவும், பவுலும், பேதுருவும் மற்ற எல்லா அப்போஸ்தலர்களும் "மனந்திரும்புதலையே" எல்லாவற்றிற்கும் முதலாக பிரசங்கித்தார்கள். ஆனால் இன்றோ. . . துரதிஷ்டவசமாக, "மனந்திரும்புதல்" கடைசிக்கெல்லாம் கடைசியாக பிரசங்கிக்கப் படுகிறது!!

இதற்கு நேர்மாறாக, தேவனை-மையமாகக் கொண்ட சுவிசேஷமோ "மனந்திரும்பும் படியே" மனுஷனை அழைக்கிறது! மெய்யான மனந்திரும்புதல் கீடிழ்க்கண்டவாறு மனுஷனுக்கு அறைகூவல் விடுக்கிறது:

1. ஒவ்வொருவரும் தங்கள் ஜீவியத்தில் மையமாக வீற்றிருக்கும் "சுயத்திலிருந்து" திரும்பிவர வேண்டும்!

2. தன் சுயசித்தம் செய்வதிலிருந்து திரும்பிவர வேண்டும்!

3. தானாக தெரிந்துகொண்ட வழியில் நடப்பதிலிருந்து திரும்பிவர வேண்டும்!

4. பணத்தை நேசிப்பதிலிருந்து திரும்பிவர வேண்டும் !

5. உலகத்தையும், உலகத்திலுண்டான மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை மற்றும் ஜீவனத்தின் பெருமையிலிருந்து திரும்பிவர வேண்டும்!

எல்லாவற்றிற்கும் மேலாக,

1. தேவனிடத்திற்கு திரும்பிவர வேண்டும்!

2. தன் முழு இருதயத்தோடும் அவரை அன்புகூர திரும்பிவர வேண்டும்!

3. அவரையே தன் வாழ்வின் மையமாக வைத்து, இதுமுதற்கொண்டு அவருடைய சித்தம் செய்திட திரும்பிவர வேண்டும்!

"சிலுவையில் கிறிஸ்து அடைந்த மரணத்தின்மீது" கொண்டிருக்கும் விசுவாசம், அவன் மனந்திரும்பினால் மாத்திரமே அவனுடைய பாவங்களை மன்னித்திட முடியும்! அதன் பின்பு, பரிசுத்த ஆவி அபிஷேகத்தின் வல்லமையைப் பெற்று, அது அளித்திடும் பெலனைக் கொண்டு நாள்தோறும் தன் சுயத்தை வெறுத்து. . . அதனிமித்தமாக, தேவனை-மையமாக கொண்டதோர் வாழ்க்கையை அவன் வாழ்ந்திட முடியும்!! இந்த சுவிசேஷத்தையே, இயேசுவும் அப்போஸ்தலரும் பிரசங்கித்தார்கள்.

பொய்யான சுவிசேஷமோ, வாசலை விசாலமாக்கி வழியை அகலமாக்கித் தருகிறது. இதன் விளைவாக, ஒருவன் தன் சுயத்தை வெறுத்திட தேவையில்லை! அல்லது சுய ஆர்வத்தில் வாழும் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்திடவும் தேவையில்லை! தன் சொந்த ஆதாயத்தை தேடுவதை நிறுத்திடவும் தேவையில்லை! "இத்தனை பெரிய விசாலத்தில்" அவன் மிக எளிதாக நடந்து திரிகிறான்!! இன்றும், இந்த பொய் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும் கூட்டங்களுக்கு லட்சக்கணக்கில் ஜனங்கள் கூடுகிறார்கள்! இந்த சுவிசேஷம் நடத்தும் வாசலில் பிரவேசித்து, அதன் விசாலமான வழியில் நடந்துகொண்டு, அந்தப் பாதை தங்களை ஜீவனுக்குள் நடத்தும் என்றே கற்பனை செய்து கொள்கிறார்கள். ஆனால், மெய்யாகவே மெய்யாகவே அழிவிற்கே இந்தப் பாதை அவர்களை நடத்திச் செல்கிறது! இந்தப் பொய் சுவிசேஷத்திற்கு "சுவிசேஷகராக" வலம் வந்தவரோ அகமகிழ்ந்து, தங்கள் கூட்டங்களில் "கரங்களை உயர்த்தி, கிறிஸ்துவுக்காக தீர்மானங்கள் எடுத்த" திரளான ஜனத்தின் எண்ணிக்கையை தன் ஊழிய அறிக்கையாக புகழ் பரப்புகிறார்! இவை அனைத்தும் ஓர் கொடிய வஞ்சகம். அதுபோன்ற கூட்டங்களில், தங்கள் நேர்மையின் நிமித்தம் மெய்யாகவே மனந்திரும்பியவர்கள் ஒருசிலர் இருந்தபோதிலும், . . . அங்கு "மாற்றமடைந்த" திரள்கூட்டத்தார்" இரட்டிப்பான நரகத்தின் பிள்ளைகளாகவே" (மத்.23:15) முற்றுப் பெறுகிறார்கள்! தங்கள் உண்மை நிலையை அறிந்துகொள்ள முடியாமல் வஞ்சிக்கப்படுகிறார்கள்!

ஆகிலும் "மெய் சுவிசேஷமோ வாசலை சிறியதாகவும், வழியை இடுக்கமாகவுமே" வைத்திருக்கிறது. சில மார்க்க கண்மூடிகள் (CULTS) மாத்திரமே தங்களின் "நூதன ஆவிக்குரிய தன்மையால்" இயேசு வைத்த சிறியதும் இடுக்கமுமானதைவிட, இன்னும் அதிகமாக இடுக்கமாக்கி வைத்திருக்கிறார்கள்! மெய் சுவிசேஷமோ, இயேசு உருவாக்கிய "அதே அளவின்படியான" இடுக்கமான பாதையையே நமக்கு காட்டுகிறது. ஜீவனுக்குள் நடத்தும் இந்தப் பாதையை கண்டுபிடித்தவர்கள் வெகு சிலர்! மெய் சுவிசேஷத்திற்காக பாடுபடும் சுவிசேஷகர்களுக்கு "அறிக்கை சமர்ப்பித்திட" யாதொன்றும் பெரிதாக இருப்பதில்லை! அவர்கள் தரும் புள்ளி விவரங்கள் கவர்ச்சி தருவதாக இருப்பதுமில்லை! இருந்தபோதிலும், இந்த சுவிசேஷம் மெய்யாகவே ஜனங்களை ஆண்டவராகிய இயேசுவினிடத்திற்கும், பரலோக ராஜ்ஜியத்திற்கும் நடத்துகிறது!

"நீங்கள் எவ்வாறு கேட்கிறீர்கள் என்பதைக் குறித்து கவனமாயிருங்கள்! தான் கேட்டவைகளுக்கு கீழ்ப்படிகிறவன் எவனோ, அவனுக்கே அதிகமான வெளிச்சமும் புத்தியும் தரப்படும்! ஆனால், தான் கேட்டவைகளுக்கு கீழ்ப்படியாதவன் எவனோ, அவன் ஏற்கனவே தான் பெற்றுக்கொண்டதாக எண்ணிய வெளிச்சமும், புத்தியும் அவனிடத்திலிருந்து எடுக்கப்பட்டுவிடும்!" (லூக்கா 8:18- விரிவாக்கம்).

கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன்!