நாம் வாழும் இந்த நாட்களில் "தீர்க்கதரிசனம் சொல்லுவதை" எதிர்கால நிகழ்ச்சியை முன்கூட்டி சொல்வதாகவும், "ஒரு தீர்க்கதரிசியாய்" இருப்பவர், எதிர்காலத்தை சொல்லுகிறவராகவும் விசுவாசிகள் கருதுகிறார்கள்!
இந்த புதிய உடன்படிக்கையில் அகபு தீர்க்கதரிசியை மாத்திரமே அனேக விசுவாசிகள் அறிந்திருக்கிறார்கள். அதற்குக் காரணம், இரண்டு எதிர்கால நிகழ்வுகளை அவர் இருமுறை முன்குறித்து கூறினார் என்பதேயாகும் (அப் 11:28; 21:10). ஆனால், இதே அப்போஸ்தல நடபடிகளில் யூதா, சீலா ஆகிய இவர்களும் தீர்க்கதரிசிகளாய் இருந்தார்கள் என்பதை எண்ணற்ற கிறிஸ்தவர்கள் அறியவில்லை! இவர்களது தீர்க்கதரிசனம் என்ன தெரியுமா? "சகோதரர்களுக்கு அனேக வார்த்தைகளினால் புத்திச் சொல்லி, அவர்களை திடப்படுத்தினார்கள்" என்பதேயாகும் (அப் 15:32). இவ்வாறு விசுவாசிகளுக்கு புத்திசொல்லி திடப்படுத்தியவர்களும் தீர்க்கதரிசிகள்தான் என்பதை இன்று எத்தனை கிறிஸ்தவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்?
கேட்கிறவர்களுக்கு "பக்தி விருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகும்படி பேசுவதே மெய்யான தீர்க்கதரிசனம்" என புதிய ஏற்பாடு தெளிவாகவே கூறுகிறது (1கொ 14:3). இதற்கு மாறாக இன்று நாம் கேட்கும் "முன்கூட்டி அறிவிக்கும் தீர்க்கதரிசனங்கள்" பக்தி விருத்தியும், புத்தியும், ஆறுதலும் அளிக்கின்றதா? நிச்சயமாய் இல்லை! கர்த்தருக்கு வழியை ஆயத்தம் செய்ய வந்த பழைய உடன்படிக்கையின் பெரிய தீர்க்கதரிசியாகிய யோவான்ஸ்நானகனை சற்று கவனியுங்கள் (லூக் 1:76). அவர் ஒன்றும் எதிர்காலத்தை முன்கூட்டி அறிவிக்கவில்லையே! அவர் கூறியதெல்லாம், "தன் நாட்களில் வாழ்ந்த தேவ ஜனத்திற்கு ஒரு செய்தியை கொண்டு வந்தார்"! என்பதேயாகும்.
இத்தனை வலிமையான தேவனுடைய தீர்க்கதரிசியின் தரத்தை இழந்து, "தங்களைத் தாங்களே, தீர்க்கதரிசிகள்" என அழைத்துக் கொண்டவர்களின் ஒரே நோக்கமெல்லாம் "தங்களின் முன்கூட்டி குறிசொல்லும் தீர்க்கதரிசனங்களைக்" கூறியபிறகு, ஜனங்களைக் கவர்ச்சித்து, அவர்கள் தரும் கட்டணங்களை வசூலித்து செல்வதுதான்!
வேதாகமத்தில் உரைக்கப்பட்ட எதிர்கால தீர்க்கதரிசனங்களை விவரித்து கூறுபவர்கள் "போதகன்" மாத்திரமே, தீர்க்கதரிசி அல்ல. வேதாகமத்தின் கடந்தகால நிகழ்வுகளை மனப்பாடம் செய்ததுப்போல் ஒப்பிப்பவரோ "வேதபாரகன்" எனப்படுவார். ஆனால், ஒரு தீர்க்கதரிசியோ "நிகழ் காலத்திற்குரியவைகளை" வலியுறுத்திப் பேசுகிறவராய் இருப்பார்! தேவஜனங்கள் மனந்திரும்பி, தேவனுடைய வழிகளுக்கு இன்றே திரும்ப வேண்டுமென ஜனங்களிடம் அறைகூவல் விடுப்பார்!
இன்று விசுவாசிகளின் மிகப்பெரிய தேவை இதுதான். ஆம், தேவனுடைய வார்த்தையை விளங்கி கொள்வதும், நாம் வாழும் இந்நாட்களில் அவரது நோக்கத்தை அறிவதுமேயாகும்! இதையெல்லாம் புறக்கணித்துவிட்டு, இன்றைய திரள்கூட்ட பிரசங்கிகள் அர்மகெதோன் கடைசி யுத்தத்தில் வரும் கோகு யார்? மாகு யார்? போன்ற விளக்கங்களை பேசித் திரிகிறார்கள். இந்த விளக்கங்கள் முடிந்துவிட்டால், பழைய ஏற்பாட்டு கூடாரத்தில் காணும் உத்திரங்களின் அர்த்தங்கள் என்ன? தூண்களின் அர்த்தங்கள் என்ன? என்றெல்லாம் விலாவரியாக விவரிப்பதற்கு தங்கள் தலையை பிராண்டிக் கொள்கிறார்கள். இந்த இருவகையான பிரசங்கிகளும் "நம்முடைய இந்த நாட்களில் தேவன் என்ன செய்கிறார்?" என்பதைக் காணத் தவறிவிட்டார்கள்!
இயேசுவோ, "இந்தக் காலத்தை நிதானியாமல் போகிறதென்ன?" என்றே ஜனங்களிடம் சவால் விடுத்தார் (லூக் 12:56).
இதுப் போன்றே ஒரு தீர்க்கதரிசி, சரித்திரத்தின் அந்தந்த நாட்களில் தேவனால் நியமனம் செய்யப்பட்டவராய் இருப்பார்! விசேஷித்த குணாதிசயங்களும் அவரிடம் காணப்படும்! தன்னுடைய நாட்களில், தேவ ஜனத்திற்கு "தேவனுடைய இருதயத்தின் குறிப்பான பாரத்தை" அறிவிக்கிறவராய் இருப்பார். ‘அதுவே’ அவருடைய ஒரே செய்தியாய் இருக்கிறபடியால், அவருடைய ஊழியம் சமநிலை கொண்டதாய் இருப்பதில்லை. மாறாக, அவருடைய வார்த்தைகள் கூர்மையாயும், ‘வெட்டு ஒன்று துண்டு இரண்டுப்போல்’ எக்காலத்தும் ஒத்தவேஷம் தரிக்க மறுப்பதாய் இருக்கும்!
ஒரு உண்மையான தீர்க்கதரிசியை, யோவான்ஸ்நானகனின் மாதிரிக்கு ஒப்பிடலாம். இந்த யோவான்ஸ்நானகன் தன் காலத்தில் வாழ்ந்த தேவனுடைய ஜனங்களுக்கு ஒரேஒரு செய்தியைதான் வலியுறுத்தினார். அந்தச் செய்தி, "மனந்திரும்புங்கள்!" என்ற வார்த்தை மாத்திரமே! இதனிமித்தமே அவருடைய ஊழியம் சமநிலையற்றது போன்று தோன்றியது. மேலும் அவருடைய வார்த்தை அதிக கூர்மையாய் "விரியன் பாம்புக்குட்டிகளே" என அழைப்பதாய் இருந்தது. அவரது உடை, வேலை செய்த ஸ்தலம், மேலும் அவரது உணவுகூட உலகில் உள்ள யாதொன்றுக்கும் அவர் ஒத்தவேஷம் தரிக்கவில்லை என்பதை பறைசாற்றும் நிருபணமாய் இருந்தது.
மனுஷர்களுடைய அபிப்பிராயங்களுக்கு ஏற்றவிதமாய் தங்கள் செய்திகளை எவ்விதத்திலும் தரக்குறைவாக்காமல் தொடர்ச்சியாய் வலியுறுத்திக் கூறும் தீர்க்கதரிசி எங்கே இருக்கிறார்கள்? பாரபட்சம் ஏதுமின்றி தேவனுடைய செய்தியை பட்டயக் கூர்மையோடு தயங்காமல் பேசும் தீர்க்கதரிசி எங்கே இருக்கிறார்கள்?. இன்று, இவ்வித தரம்குன்றா தீர்க்கதரிசிகளே தேவையாய் இருக்கிறார்கள்!
நெஞ்சுறுதி கொண்ட ஒரு உத்தம தீர்க்கதரிசி, தன்னைச் சுற்றியுள்ள மார்க்கத் தலைவர்களிடமிருந்து அதிகமான எதிர்ப்புகளையே சந்திக்க வேண்டியதாக இருக்கும். ஆகிலும், ஒரு சிறு கூட்டம் குருடாய்ப்போன தங்கள் மார்க்கத் தலைவர்களுக்கு செவிக்கொடாமல், கர்த்தருடைய பாரத்தை பிரகடனம் செய்த தலைவர்களுக்கு செவிக் கொடுப்பார்கள். மார்டின் லூத்தர் காலத்தில் வாழ்ந்த ஒரு விசுவாசி, செம்மையாய் பகுத்தறியக்கூடியவராய் இருந்தால், தன்னுடைய நிலைப்பாட்டை லூத்தரோடுதான் சேர்ந்து நின்றிருப்பார். அதேப்போல, ஜான்வெஸ்லியின் காலத்தில் வாழ்ந்த ஒரு நல்ல பகுத்தறியும் விசுவாசி, வெஸ்லியின் காலத்தில் வாழ்ந்த சமயம், வெஸ்லியைப் புறகணித்து விட்டு முந்திய சந்ததிக்கு தேவமனிதனாய் திகழ்ந்த லூத்தரோடு தன்னைச் சேர்த்துக்கொண்டால், நாம் என்ன சொல்லுவோம்? அப்படிப்பட்டவர், தன் நாட்களில் அசைவாடிய பரிசுத்தாவியின் நடத்துதலை இழந்தவராய் இருப்பார்! இதுப்போன்ற ஒரு விசுவாசி, இக்காலத்திற்குரியவராய் வாழாமல், கடந்தக்காலத்தில் வாழ்பவராகவே காணப்படுவார்.
எந்த ஒரு ஆவிக்குரிய இயக்கமும் சில காலங்களுக்குப் பிறகு, உலகப்பிரகாரமான ஒரு நிறுவனமாகவே மாறிவிடுகிறது. இவ்வாறு ஒரு தீர்க்கதரிசியால் துவங்கப்பட்ட ஒரு ஆவிக்குரிய இயக்கம் "செத்த நிறுவனமாக" மாறாதிருக்க நாம் உறுதி செய்ய வேண்டிய பகுதிகள் யாது?
தன்னுடைய அழைப்பை குறித்து நல்ல உணர்வுகொண்ட தீர்க்கதரிசி மாத்திரமே, மேற்கண்ட அபாயங்களுக்கு தொடர்ச்சியான விழிப்பு கொண்டிருப்பான்! தூய்மையான தரத்தோடு தேவனுடைய இயக்கம் பாதுகாக்கப்பட்டிருக்க, அவ்வித தரத்திற்கும் தரிசனத்திற்கும் இசைந்து வராத யாவரிடமும் ஒரு வலிமையான நிலையை வலியுறுத்தி இந்த தீர்க்கதரிசி உறுதியுடன் நிற்க வேண்டும்! இதுப்போன்ற தருணத்தில், மனுஷர்களைப் பிரியப்படுத்தும்படி ஒத்தவேஷம் தரிப்பவராய் மாறிவிட்டால், அவ்வித தீர்க்கதரிசி, தேவன் அவர் மூலமாக நிறைவேற்ற விரும்பிய பணியை தானே அழிப்பவராய் மாறிவிடுவார்!
அப்போஸ்தலனாகிய பவுலையும் அவரது ஊழியத்தையும் சற்று கவனித்துப் பாருங்கள். ஒருகாலத்தில் தேமா, பவுலுக்கு உடன் ஊழியராய் இருந்தார் (கொலே 4:14). ஆனால், அவர் உலகத்தோடு ஒத்துப்போனபடியால், பவுலை விட்டு விலகினார் (2 தீமோ 4:10). அந்த சமயத்தில், பவுலோடு இருந்த மற்ற உடன் ஊழியர்களும் விலகிச் சென்றார்கள். இச்சமயத்தில் தன் உடன் ஊழியர்களை, தன்னோடு வைத்துக்கொள்ள பவுல் ஏன் பிரியப்படுத்த துணியவில்லை? அப்படி அவர் செய்திருந்தால், தேவன் அவர் மூலமாய் செய்த பணிக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டிருக்கும். இவ்வாறு தன் உடன் ஊழியர்களிடம் பவுல் கண்டிப்பாய் நடந்தனிமித்தம், அவர்களோடு கொண்டிருந்த வெகுஜன மதிப்பு பாதிக்கப்பட்டாலும், அதைக் குறித்து பவுல் சிறிதேனும் சஞ்சலம் அடையவில்லை! ஏனெனில், அவர் தன்னுடைய கௌரவத்திற்கு அடிமையாய் வாழவில்லை என்பதே காரணமாகும். ஜனங்கள் தன்னைக் குறித்து என்ன சொல்லுவார்களோ அல்லது என்ன சிந்திப்பார்களோ என்பதைக் குறித்து பவுல் சிறிதேனும் கவலைப்படவில்லை (கலா 1:10). ‘எதுவானாலும் நடக்கட்டும்’ என பவுல் தேவனுடைய சத்தியத்திற்கு ஒத்தவேஷம் தரியாமல் உறுதியுடன் நின்றார்! ஏனெனில், பவுலை ஆட்கொண்டு உந்தித்தள்ளும் அவருக்குள் வாசமாயிருந்த தேவனுடைய ஆவியானவரே அனைத்திற்கும் மூலகாரணமாயிருந்தார். இவ்வித உறுதியான நிலைப்பாட்டில் பவுல் நின்றபடியால், ஒன்றிற்கும் மேலாக பிளவுகள் ஏற்பட்டன. தன் ஜீவியத்தின் முடிவை எட்டுகையில் "ஆசியா நாட்டிலிருக்கிற யாவரும் என்னை விட்டு விலகினார்களென்று அறிந்திருக்கிறாய்" (2தீமோ 1:15) எனக்கூறும் நிலைத்தான் பவுலுக்கு இருந்தது. பவுலுடன் இருந்த உடன் ஊழியர்களில் தீமோத்தேயு மாத்திரமே தன்னைப் போன்ற ஏகசிந்தை உடையவராய் இருந்ததை பவுல் கண்டறிந்தார் (பிலி 2:20).
தான் பிரயாசப்பட்ட தேவனுடைய பணி "ஓர் செத்த நிறுவனமாக" மாறாதிருக்கும்படி பாதுகாக்க பவுல் முயற்சித்த வேளையில், சில பின்னடைவுகளை பவுல் சந்திக்க வேண்டியிருந்தது உண்மைதான்! இவ்வாறு பல்வேறு நிலைகளில் தேவன் ஒரு தீர்க்கதரிசி மூலமாய் துவங்கிய ஊழியப்பணியில் "சுத்திகரிக்கப்படுதல்" நடந்த செயல்தான், அந்தப்பணி ஓர் செத்த ஸ்தாபனமாக தேய்ந்து போகாதிருப்பதற்குரிய நிருபணமாய் இருக்கிறது. தேவனுடைய இவ்வித சுத்திகரிப்பு செயலை பகுத்தறியா விசுவாசிகள் தவறாய் புரிந்துக் கொள்ளக்கூடும்.
தேவனால் நியமனம் செய்யப்பட்ட ஒரு தீர்க்கதரிசி, மேற்ப்பூச்சாய் அரவணைத்துப் போகக்கூடியவராகவோ அல்லது அரசியல்வாதியாகவோ இருக்கமாட்டான். இந்த தீர்க்கதரிசி தேவனுடைய பார்வையில் மாத்திரமே ஜீவிப்பவன். அவனுடைய வசனிப்புகள், தன் ஆண்டவருடைய வசனிப்புகள் போலவே "என்னுடைய இராஜ்ஜியம் இந்த உலகத்திற்குரியது அல்ல"! என்ற முழக்கமாய் இருக்கும். இவன் தனக்கென பாதுகாத்துக்கொள்ள எந்த இராஜ்ஜியமும், எந்த ஊழியமும் இருப்பதில்லை! ஆகவேதான், இயேசு கூறிய வார்த்தைகள் அவனுடைய சொந்த ஜனத்தின் மத்தியிலோ ஏற்றுக் கொள்ளப்பட்டதில்லை" என்பதேயாகும்.
நாம் கர்த்தருடைய வழியை பகுத்து அறிந்து கொள்பவர்களாய் இருந்தால், நம் காலத்திற்குரிய தேவனுடைய தீர்க்கதரிசிகள் யார்? என்பதை நன்கு புரிந்துக் கொள்ளமுடியும். அப்போது, நம் காலத்தில் இயங்கும் தேவனுடைய இயக்கத்தில் ஒரு பங்காய் இணைந்து கொள்வோம். அவ்வாறிருந்தால் நாமும் அந்த தீர்க்கதரிசிகளைப் போலவே, என்னக் கிரயமானாலும் ஒத்துப்போக மறுத்து நிற்போம்!
கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன்.