புதிய ஏற்பாடு நமக்களித்த மாதிரி ஊழியம்!

எழுதியவர் :   சகரியா பூணன் வகைகள் :   திருச்சபை
Article Body: 

நமது பாரத தேசத்தில், முதலாவதாக ஊழியத்தை துவக்க இருந்த நாங்கள் "எங்களைச் சுற்றியுள்ள சபைகளின் தரத்தைப் பார்க்காமல்" புதிய ஏற்பாட்டின் மாதிரியையே முழுமையாக பின்பற்றிட தீர்மானம் செய்வதோம்!

முதலாம் நூற்றாண்டுகளில், தேவன் தமது சபையைக் கட்டுவதற்கு அப்போஸ்தலர்களையும், தீர்க்கதரிசிகளையும், சுவிசேஷகர்களையும், மேய்ப்பர்கள் மற்றும் போதகர்களையும் பயன்படுத்தினார் (எபே 4:11). ஆகவே, நமது தேசத்தில் சபையை கட்டுவதற்கு இந்த ஐந்து ஊழியங்களையும் எங்கள் நாட்களில் பெற்றிருக்கவேண்டும் என்றே தேவனிடம் வேண்டுதல் செய்து ஜெபித்தோம்!

1. அப்போஸ்தலர்கள்: சபைகளை ஸ்தாபித்து, அதற்கு மூப்பர்களை நியமனம் செய்பவர்களே அப்போஸ்தலர்கள் (அப் 14:23). அவர்கள் ஸ்தாபித்த சபைகளின் மூப்பர்களுக்கு இந்த அப்போஸ்தலர்களே ‘ஆவிக்குரிய தகப்பன்மார்களாய்’ இருந்து, சபைக்கு வழிகாட்டியாய் நடத்தினார்கள். மேலும், தங்கள் சபைகளை "ஒரு ஸ்தாபனமாய்" (Denomination) இவர்கள் மாற்றிவிடாமல், ஒவ்வொரு சபையும் சுயமாய் இயங்குவதற்கே வழிவகுத்தார்கள். ஆனால், இதுப்போன்ற அப்போஸ்தல ஊழியங்கள் நம்மைச் சுற்றியுள்ள எந்த சபைகளிலும் காணப்படவில்லை. நாம் காண்பதெல்லாம், "மனுஷர்களால் உருவான, இரண்டு அமைப்புகளில்" இயங்கும் சபைகளையே காண்கிறோம்! இதன் இரண்டு அமைப்புகள்:

பிரமிடு அமைப்பு: ஓர் மத்திய ஆளுகை அமைப்பில், சபைகளை நடத்துவதற்கு போப் அல்லது சூப்பரிண்டெண்டுகள் தலைவர்களாய் விளங்குவார்கள். அவர்களுக்கு கீழாக பாஸ்டர்களும் இருப்பார்கள். இந்தப் பதவிகள் அனைத்தும் தேர்தல் நடத்தி நிரப்பப்படும்! இதுப்போன்ற அமைப்பு, இன்றைய வியாபார உலகத்தை பிரதிபலிப்பதாய் இருக்கிறது.

சுயாதீன அமைப்பு: இந்த அமைப்பில் ஒவ்வொரு சபையும் முழுமையான சுயாதீனத்தில் இயங்கும். இவர்கள் யாருக்கும் உத்திரவாதம் தரத் தேவையில்லை! ஒரு கமிட்டி குழு ஒன்றுசேர்ந்து, எதாவது ஒரு வேதாகம கல்லூரி பட்டம் பெற்றவருக்கு சம்பளம் கொடுத்து அவரைத் தங்கள் பாஸ்டராயிருக்க அழைப்பார்கள். சில வருடங்களுக்குப் பிறகு இந்த பாஸ்டர் ஒரு பெரிய சபையை கண்டறிந்து அங்கு தனக்கு கூடுதல் சம்பளம் கிடைப்பதினிமித்தம் அந்த சபைக்கு சென்றுவிடுவார்! பிறகு, அந்த கமிட்டி குழு விளம்பரம் செய்து, தங்கள் சபைக்கு வேறொரு பாஸ்டரை நியமனம் செய்வார்கள்!

இந்த இரு அமைப்புகளிலேயும், ஆவிக்குரிய தகப்பன்மார்கள் காணப்படமாட்டார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட சம்பளம்பெறும் தலைவர்களே இருப்பார்கள்! மனுஷர்களால், உருவான இந்த இரு அமைப்புகளையுமே நாங்கள் உதறிவிட்டு, புதிய ஏற்பாட்டில் நாம் காணும் "அப்போஸ்தல அமைப்பையே" தெரிந்து கொண்டோம்.

2. தீர்க்கதரிசிகள்: ஒரு சபையில் உள்ள மறைவான பாவங்களையும், வீழ்ச்சிகளையும் வெளிப்படுத்தி, அதற்குரிய தீர்வையும் கொடுப்பவர்களே தீர்க்கதரிசிகள் (1கொரி 12:28). இந்த ஊழியமானது, சபைக்கு பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் வழங்கிடும் ஊழியமாக இருக்கிறது (1கொரி 14:3). ஆனால், இத்தகைய தீர்க்கதரிசன ஊழியமோ நம் நாட்களில் காண்பது மிகவும் அரிதாகிவிட்டது! இன்று நாம் காண்பதெல்லாம், குறிசொல்லுகிறவர்களைப்போல், எதிர்காலத்தை முன்கூட்டியே அறிவிப்பதாக பாசாங்கு செய்து விசுவாசிகளை ஏமாற்றும் கள்ளத்தீர்க்கதரிசிகளே இருக்கிறார்கள்! இதுப்போன்ற வஞ்சகர்களிடமிருந்து ஆண்டவர் எங்களை பாதுகாத்து, மெய்யான தீர்க்கதரிசன ஊழியத்தை எங்களுக்கு வழங்கியிருக்கிறார்!

3. சுவிசேஷகர்கள்: ஜனங்களை கிறிஸ்துவண்டை நடத்தி, அவர்களை ஸ்தல சபையில் கொண்டுவந்து சேர்ப்பவர்களே இந்த சுவிசேஷகர்கள். ஆனால், இந்த ஊழியமும் நம் நாட்களில் "சுவிசேஷ பெருவிழா கூட்டங்களை" நடத்துவதில் மாத்திரமே அக்கறைக் கொண்டு, அக்கூட்டங்களில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களை ‘ஒன்று சேர்த்து’ ஓர் புதிய உடன்படிக்கை அமைப்பை கொண்ட ஸ்தல சபையாய் கட்டப்படுவதே இல்லை! அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்சமான ஆத்தும ஆதாயமோ, ‘தனிமனிதர்களாய்’ செய்திட்ட சுவிசேஷ ஊழியமாகவே இருக்கிறது. இவ்வித தனிதாள் ஊழியம் செய்து, ஜனங்களை கிறிஸ்துவுக்கு ஆதாயம் செய்தது மாத்திரமல்லாமல், அவர்களை ஸ்தல சபைகளில் இணைத்திடும் சிறந்த சுவிசேஷகர்களையே தேவன் எங்களுக்கு தந்திருக்கிறார். நாங்களும், எங்களுடைய சகோதர சகோதரிகளை ஊக்குவித்து, பரிசுத்தாவியானவர் அவர்களை "தெய்வபக்தியுள்ள வாழ்விற்கு வாஞ்சை கொண்ட" தங்கள் அருகாமையிலுள்ள ஜனங்களிடத்தில் நடத்தும்படி ஜெபித்திட துரிதப்படுத்துகிறோம். எங்கள் ஜெபங்களை தேவன் கேட்டு, அனேக சீஷர்கள், சபைகளில் வந்து சேரும்படிசெய்து, பதில் அளித்திருக்கிறார். 1975 - ஆண்டு ஆகஸ்டு மாதத்தில், என் வீட்டில் நான்கு குடும்பங்களோடு எங்கள் முதல் கூட்டம் துவங்கியது. அதன்பின்பு, உலகத்தின் பல பகுதிகளிலிருந்து பல ஆயிரம் ஜனங்களை எங்களோடு தேவன் சேர்த்துள்ளார். இந்த செயல் அதிகபட்சமாய் "தனித்தாள் ஊழியத்தின்" மூலமாகவே நடைப்பெற்றது!

4. மேய்ப்பர்கள்: எபே 4:13- ல் மேய்ப்பன் என்ற பதம் "பாஸ்டர்" என்றே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதுவும், சபைக்கு அருளப்பட்ட ஓர் வரமேயாகும். அதுமட்டுமல்லாமல், இன்றைய சபைகளில் நாம் காண்கிறபடி, ஒரு சபையின் தலைவருக்குத் தரப்படும் ஓர் பட்டம் அல்லவே அல்ல! புதிய ஏற்பாட்டு சபையின் தலைவர்கள் "மூப்பர்கள்" (ELDERS) என அழைக்கப்பட்டார்களேயல்லாமல், "பாஸ்டர்கள்" என அழைக்கப்படவே இல்லை. அதுவும், ஒவ்வொரு சபையிலும் ஒரு மூப்பருக்கும் அதிகமாகவே இருந்தார்கள். சில சமயங்களில், மூப்பருக்குரிய தகுதியை சிலர் அடையும்மட்டும் நாங்கள் காத்திருக்க வேண்டியதாகவும் இருக்கிறது. ஆகிலும், காலாவட்டத்தில், ஒவ்வொரு சபையையும் நடத்துவதற்கு தேவபக்தியுள்ள மூப்பர்களை தேவன் எங்களுக்கு அருளியிருக்கிறார். இயேசு நமக்கு காண்பித்துள்ள மாதிரியின்படி, ஒரு நபர் 12 - ஜனங்களுக்கு மாத்திரமே வலிமையான மேய்ப்பனாய் இருந்திட முடியும். ஆகவே, 120 - பேர் கொண்ட சபைக்கு, குறைந்தது பத்து மேய்ப்பர்கள் அல்லது பாஸ்டர்கள் தேவையாய் இருக்கிறார்கள். சபையிலுள்ள ஆடுகளையும், ஆட்டுக்குட்டிகளையும் கரிசனையோடு பராமரிக்கும் மேய்ப்பனுக்குரிய இருதயம் கொண்ட அநேக சகோதரர்களைத் தேவன் எங்களுக்கு தந்திருக்கிறார். ஆகிலும், 12 - ஜனங்களுக்கு ஒரு மேய்ப்பன் என்ற விகிதாசாரத்தை நாங்கள் இன்னமும் அடையவில்லை!!

போதகர்கள்: புதிய ஏற்பாட்டின் போதகர்கள், "இயேசு கட்டளையிட்ட யாவற்றையும் விசுவாசிகள் கைக்கொள்ளும்படி" மத்தேயு 28:20 - போதிக்கும் பொறுப்பில் இருக்கிறார்கள். இவர்கள் வேதவாக்கியங்களை கல்வி அடிப்படையில் போதிப்பதில்லை! மாறாக, அவர்களுடைய போதனைகள் முழுவதும் நடைமுறை அனுபவமாகவும், அது ஜனங்களை தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்படியும்படி நடத்துவதாயும் இருந்திட வேண்டும். உதாரணமாய், "கோபம் கொள்ளாதீர்கள்; ஸ்திரீகளிடம் இச்சை கொள்ளாதிருங்கள்; உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள்; மனுஷருடைய கனத்தைத் தேடாதிருங்கள்; பணத்தை நேசிக்காதீர்கள்!" போன்ற கட்டளைகள் (மத் 5:22,28,44; 6:1-18-24). இன்று நம்மைச் சுற்றியுள்ள அநேக சபைகளில் இதுப்போன்ற போதகங்களை நாம் ஒருபோதும் கேட்பதேயில்லை. ஆனால், தேவனின் இந்தக் கட்டளைகளுக்கெல்லாம் எவ்வாறு கீழ்படிய வேண்டும் என விசுவாசிகளுக்கு போதிக்கும்படி நல்ல போதகர்களை தேவன் எங்களுக்கு அருளியிருக்கிறார்.

ஊழியர்களுக்கு பொருளாதார உதவி: புதிய ஏற்பாட்டில், கர்த்தருடைய ஊழியர்களின் பொருளாதார தேவைகள் இரண்டு வழிகளில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. சிலரின் தேவைகள் விசுவாசிகளின் அன்பின் காணிக்கைகளாலும்; இன்னும் சிலர் பவுலைப்போல் தாங்களே தங்கள் தேவையை பூர்த்தி செய்திருக்கிறார்கள். நம் இந்திய தேசத்தில், கிட்டத்தட்ட ஒவ்வொரு கிறிஸ்தவ ஊழியரும் ஒரு சபையின் சம்பளத்தின் மூலமாகவோ அல்லது விசுவாசிகள் தரும் காணிக்கைகள் மூலமாகவோ தங்களை போஷித்துத் கொள்கிறார்கள். ஆகவே, இவர்களின் மத்தியில், சில இந்திய ஊழியர்களாவது தாங்களே தங்கள் தேவையை பூர்த்திசெய்து, புதிய ஏற்பாட்டில் காணப்படும் அந்த புறக்கணிக்கப்பட்ட இரண்டாவது வழியை கடைப்பிடித்து, சமநிலையை சீர்படுத்த வேண்டும் என்ற மிகப்பெரிய அவசியத்தைக் கண்டோம். ஆகவேதான், இதற்கு நானே முன்வந்து, என் தேவைகளை நானே பூர்த்தி செய்துக்கொண்டு, நம் இந்திய தேசத்து சபைகளுக்கு முற்றிலும் இலவசமாய் ஊழியம் செய்திட தீர்மானித்தேன். மேலும், எங்கள் சபையின் புத்தகவெளியீடுகளுக்கும், கேஸட் வெளியீடுகளுக்கும் தரப்படும் "எழுத்தாசிரியர் தொகையை" (Royalties) வாங்கக்கூடாது எனவும் தீர்மானித்தேன். என் மாதிரியையே என் உடன் ஊழியர்களும் பின்பற்றிட அவர்களை ஊக்குவித்தேன். நாங்கள் கண்ட வியத்தகு அற்புதம் என்னவெனில், இந்தியாவிலுள்ள எங்கள் சபைகளில் 70 மூப்பர்களுக்கு மேலாகவே, ஆண்டவருக்கு முற்றிலும் இலவசமாக பல ஆண்டுகளாய் ஊழியம் செய்து வருகிறார்கள். இவர்களில் சிலர், இந்தியாவின் ஏழை கிராமங்களில் ஊழியம் செய்து கொண்டிருக்கிறார்கள்!

சுற்றறிக்கைகள்: புதிய ஏற்பாட்டில், அப்போஸ்தலர்களால் எழுதப்பட்ட அனேக நிருபங்கள் உள்ளன. ஆகிலும், ஒரு நிருபத்தில்கூட தங்கள் ஊழியத்தைப் பற்றிய யாதொரு அறிக்கையையும் அவர்கள் வெளிப்படுத்தவில்லை! மேலும், தங்கள் தேவைக்கோ அல்லது தங்கள் ஊழியத்திற்கோ எந்த பண உதவியையும் அவர்கள் கேட்டதும் இல்லை! ஆனால், கிட்டதட்ட நாங்கள் அறிந்த ஒவ்வொரு கிறிஸ்தவ ஸ்தாபனங்களும் அவர்களின் ஊழிய அறிக்கைகளை கிரமமாய் அனுப்பி, மிக தைரியமாய் ஜனங்களிடம் பணம் கேட்கிறார்கள்! நாங்களோ, எங்கள் ஊழியத்தைப் பற்றிய யாதொரு புகைப்படமோ அல்லது எங்கள் பொருளாதார தேவைகளைக் குறித்த மறைமுகமான முறையீடுகளோ யாதொருவருக்கும் தெரியப்படுத்தாமல், எங்கள் பரமபிதா ஒருவரிடமே தெரியப்படுத்த வேண்டுமென, அப்போஸ்தலர்களின் மாதிரியையே பின்பற்றிட நாங்கள் தீர்மானம் செய்தோம். இந்த முறைமையை, எங்கள் ஊழியத்தை துவக்கிய 1975 - ஆண்டு துவங்கி இன்றுவரை பின்பற்றி வருகிறோம். தேவன் எங்கள் அனைத்து தேவைகளையும் அபரிதமாய் பூர்த்தி செய்கிறார். பவுல் தனது ஊழிய பிரயாசங்களைத் தன்னுடைய உடன் ஊழியர்களிடம் மாத்திரமே பகிர்ந்து கொண்டார். அதை மாத்திரமே நாங்களும் செய்து வருகிறோம்.

ஐக்கியம்: தன்னுடைய சீஷர்களின் மத்தியில் ஐக்கியமும், ஒருமனமும் நிலவவேண்டும் என்பதே யோவான் 17 -ல் காணப்படும் இயேசுவின் ஜெபத்தில் பிரதானமான பாரமாய் இருந்தது. இதுவே அப்போஸ்தலர்களின் இலக்காகவும் இருந்தது. இன்று, நம்மைச் சூழ்ந்திருக்கும் திரளான சபைகளில் ஊழிய நிகழ்ச்சிகளும், ஏராளமான கூட்டங்களும் வலியுறுத்தப்படுகிறதே அல்லாமல், ஐக்கியத்திற்கும் ஒரு மனதிற்கும் முக்கியத்துவம் தரப்படுவதில்லை! நாங்கள் கூட்டங்களின் மதிப்பை அறிந்திருக்கிறோம். ஆகிலும், ஐக்கியமே அதிக முக்கியத்துவம் கொண்டது என்பதை உணர்ந்தோம். ஆகவே, ‘பிக்னிக்’ போன்ற நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்து, அதன்மூலமாய் ஒருவரையொருவர் அறிந்துக்கொள்வதில் தேர்ச்சி பெற்றோம். இவ்வாறாக, எங்களுக்குள் ஆழமான ஐக்கியத்தை கட்டி எழுப்பி, அதுவே எங்களுக்கு விலையேறப்பெற்றதும் இணையற்றதாயும் இருக்கிறது!

இதுப்போன்ற இன்னும் பல பகுதிகளில், எங்களைச் சுற்றியுள்ள மற்ற சபைகளுக்கு வித்தியாசமாய் நாங்கள் செய்தோம். இவ்வாறு புதிய ஏற்பாட்டு நடைமுறைகளுக்கு திரும்பி வருவதற்கு, புதியவழிகளை கையாண்டு முயற்சித்தது ‘ஓர் யுத்தமாகவே’ எங்களுக்கு இருந்தது! சாத்தான் எங்களை அகோரமாய் எதிர்த்தான், ஏராளமான கிறிஸ்தவர்கள் எங்களை விமர்சித்தார்கள்! ஆகிலும், தேவன் எங்களோடு இருந்தார், அது ஒன்றே எங்களுக்குப்போதும்!!