ஆசரிப்புக் கூடாரத்தின் அர்த்தங்கள்

Article Body: 

(இந்தியாவின் பெங்களூரில், டிசம்பர்-26-28; 2000-ல் நடை பெற்ற கருத்தரங்குகளில் (கான்பரன்ஸ்) அளிக்கப்பட்ட வேதாகம பாடத்தின் தொகுப்பு).

படிக்க: யாத் 25 லிருந்து 31 மற்றும் 35 லிருந்து 40-ம் அதிகாரம்.

இஸ்ரவேல் புத்திரரின் மத்தியில், தேவன் வாசம் பண்ணும் ஸ்தலமாக பழைய ஏற்பாட்டிலே, ஆசரிப்புக் கூடாரம் இருந்தது. (யாத் 25:8).

Tabernacle

இது இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்டு, நமக்குள்ளே வாசம் பண்ணின காரியத்திற்கு நிழலாய் இருக்கிறது (யோவான் 1:14). தேவன் மனுஷருக்குள்ளே வாசம் பண்ணுவதும், தேவனுடைய முடிவான (நிறைவான) வாசஸ்தலமாகிய சபையையும் இந்த ஆசரிப்புக் கூடாரம் இன்னும் தெளிவாக நமக்கு விவரித்து காண்பிக்கிறது.


துல்லியமான மாதிரியின்படியே:

தேவன் தான் மோசேக்கு கற்பித்த மாதிரியின் படியே, ஆசரிப்புக் கூடாரத்தின் சகல பணிமுட்டுக்களும் இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்தார் (யாத் 25:9). ஆசரிப்புக்கூடாரத்தின் அளவையும் சகல பணிமுட்டுகளையும், அவைகள் செய்யப்பட வேண்டிய பொருட்கள் ஆகியவற்றையும் குறித்த காரியத்தை தேவன் மோசேக்கு மிகவும் நுணுக்கமாக கொடுத்திருந்தார். நமது ஜீவியத்திலும், சபையிலும் தேவன் நமக்குத் தந்தருளின தமது வார்த்தையின்படியே, துல்லியமாக செய்யவேண்டும் என்பதை அநேக கிறிஸ்தவர்கள் அறியாமலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள், தங்கள் புத்தி கூர்மையினால், எந்தமட்டும் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியலாம் என்றும் அவருடைய கட்டளைகளை எப்படி எங்கே மாற்றி அமைக்கலாம் என்றும் தீர்மானிக்கிறார்கள்.

ஆனால், எகிப்தின் பிரமாண்டமான பிரமீடுகளையும் அவைகளின் கட்டிட அமைப்புகளையும் மோசே கண்டிருந்தும், மனுஷர்களுடைய கண்களுக்கு இணங்க (ஏற்றார்போல்) தேவனுடைய அந்த ஆசரிப்புக்கூடாரத்தின் எளிய வடிவமைப்பை மாற்றி அமைக்கவில்லை. சகலவற்றிலும், மோசே, கர்த்தர் தனக்குக் கற்பித்தபடியே, ஆசரிப்பு கூடாரத்தைக் கட்டி முடித்தான் (யாத் 39:1-40:33). இதனிமித்தமே, மகிமை இறங்கி ஆசரிப்பு கூடாரத்தை நிரப்பிற்று.ஒருவேளை, மோசே 40 வயதாய் இருக்கும்போது, அந்த ஆசரிப்புக்கூடாரத்தின் மாதிரி கொடுக்கப்பட்டிருந்தால், தன்னுடைய எகிப்தின் ஞானத்தை பயன்படுத்தி ஆசரிப்புக்கூடாரத்தை கட்டியிருப்பார். அதினால், ஒரு வேளை ஆசரிப்புக்கூடாரம் மேன்மையாக காட்சியளித்திருக்கும். ஆனால், தேவனுடைய மகிமையை அங்கே நாம் கண்டிருக்க முடியாது. இதே காரியம்தான் இன்று அநேக சபைகளுக்கு சம்பவித்திருக்கிறது.

நம் நினைவுகள், வழிகளைக் காட்டிலும், தேவனுடையது மிகவும் உயர்ந்திருக்கிறது (ஏசா 55:8,9). இவைகளை எல்லாம், யார் உணராதிருக்கிறார்களோ, அவர்கள் தங்கள் மனுஷீக யுக்திகளை தேவனுடைய பிரமாணத்தோடு கூட்டி கட்டுகிறார்கள்.

நமது ஆண்டவர், தன் பூமிக்குரிய முழு வாழ்க்கையையும் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனத்தின்படியே, ஒவ்வொரு சிறிய காரியங்களிலும் கூட நிறைவேற்றுபவராகவே வாழ்ந்தார். அது அவருடைய பிறப்பு, வாழ்க்கை, மரணம் இவை எல்லாவற்றிலும் தம்மை குறித்து எழுதப்பட்டிருந்தபடியே சகலத்தையும் நிறைவேற்ற மிகவும் கவனமுள்ளவராக இருந்தார்(எபி 10:7).

பூமியிலே வாழ்ந்த இயேசுவின் முதல் 'கிறிஸ்துவின் சரீரம்' மூலம், நாம் அநேக காரியங்களை அறிந்து (கற்று) கொள்ளலாம். உதாரணமாக, ஒரு மாட்டுத் தொழுவத்தில் பிறந்து, எளிய முறையில் வளர்ந்தார். நாம் அவரை பார்க்கும்போது , அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது (ஏசாயா 53:2). அவருடைய இரண்டாம் சரீரமாகிய சபையும் அப்படியே தான் இருக்க வேண்டியதாக இருக்கிறது. ஆனால், இன்றைய சபையிலே சத்தியத்தை அறிந்து கொள்ளாதவர்கள் தங்கள் கவர்ச்சி மிகுந்த சபை கட்டிடங்கள் மற்றும் இன்னிசை முதலானவைகளைக் கொண்டு ஜனங்களை கவர்ச்சிக்க விரும்புகிறார்கள்.

நம் ஆண்டவருடைய பூமிக்குரிய வாழ்க்கையின் கடைசியிலே, தேவன் தமக்கு செய்யும்படி பணித்த (நியமித்த) கிரியைகளை செய்து முடித்தேன் (யோவா 17:4; 19:30) என்று சொல்லமுடிந்தது. அதே போல, அப்போஸ்தலனாகிய பவுலும், தம்மை பற்றிய தேவனுடைய சித்தம் (திட்டம்) முழுவதும் நிறைவேற்றி முடித்தேன் என்று சொல்லமுடிந்தது (2 தீமோ 4:7). இன்றைய கிறிஸ்துவர்கள் தேவன் தங்களை என்ன செய்யவேண்டும் என்று சொல்லுகிறார் என்பதைக் கேட்க கவனம் கொள்ளாமல், தங்கள் ஜீவியத்தை தங்களுடைய ஞானத்தை கொண்டே திட்டம் பண்ணுகிறபடியால், தங்கள் ஜீவியத்திலும் ஊழியத்திலும் தேவனுடைய மகிமையை காண கூடாமல் இருக்கிறார்கள்.

மோசே ஆசரிப்புக் கூடாரத்தைப் பற்றிய சிறுசிறு காரியங்களை விட்டு மனுஷீக ஞானத்தினால், ஆசரிப்புக் கூடாரத்தின் மிக இன்றியமையாத பகுதிகளின் அளவுகளோடு ஆரம்பம் பண்ணி இருந்திருக்கலாம். ஆனால், தேவன் முதலாவது, பிரதானமாக உடன்படிக்கை பெட்டியின் மாதிரியை மாத்திரமே, மோசேக்கு கொடுத்தார் (யாத் 25:10). ஆசரிப்புகூடாரத்தின் ஒரு சிறு அறையிலே, இருக்கிறதான மகா பரிசுத்த ஸ்தலத்தில் இந்த மரத்தாலாகிய உடன்படிக்கை பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்திலேதானே தேவனுடைய மகிமை காணப்படும். அதனிமித்தமே, ஆசரிப்பு கூடாரத்திலே, உடன்படிக்கை பெட்டி முதலாவதாக, ஸ்தாபிக்கபட வேண்டியதாக இருந்தது. நம் வாழ்க்கையின் சகலமும் தேவனை கொண்டே ஆரம்பிக்க வேண்டும் என்பதையே இது குறிக்கிறது. வேதமும் 'ஆதியிலே தேவன்' என்றே ஆரம்பிக்கிறது. நம் வாழ்க்கையின் எந்த தீர்மானத்திலும் தேவனே முதலிடம் வகிக்க வேண்டும்.

தேவ மனுஷனாகிய மோசே நாற்பதுநாள் புசியாமலும் குடியாமலும் தேவனோடு தனித்திருந்த அந்த வேளையில்தானே ஆசரிப்புக்கூடாரத்தின் மாதிரியை தேவனிடத்தில் பெற்றுக்கொண்டான் (யாத் 24:40). தேவனிடத்தில் காத்திருக்கிறதிலே ஓர் அவசரம் அல்லது மனுஷர்களுடைய அபிப்ராயங்களுக்காகவே, வாழ்கிறவர்களாகிய இப்படிப்பட்டவர்கள் தேவனுடைய சித்தத்தை ஒருக்காலும் அறிந்துக்கொள்ளவேமாட்டார்கள்.

பெசலியேல் மற்றும் அகோலியாபையும் ஆசரிப்புக் கூடாரத்தை கட்டவும், வினோதமான வேலையை யூகித்து செய்கிறதற்கும் வேண்டிய ஞானத்தையும், இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட திறமையையும் அளித்ததைப்போலவே, இன்றைக்கு சபையைக் கட்ட பரிசுத்தாவியின் வல்லமையே நமக்கும் வேண்டியதாக இருக்கிறது (யாத் 31:1-3).

ஆசரிப்புக் கூடாரத்தத்தின் பகுதிகள்:

Outer Court

வெளிப்பிரகாரமானது 150- அடி நீளமும், 75 அடி அகலமும் கொண்டது. திரித்த, மெல்லிய, பஞ்சு நூலினாலான மூடுதிரை கிறிஸ்துவின் நீதியைக் குறிக்கிறதாய் இருக்கிறது. அது சபையின் உள்ளே இருக்கிறவர்களையும் வெளியே இருக்கிறவர்களையும் அவர்களுடைய மனுஷீக நீதியின் வித்தியாசத்தைக் கொண்டு பிரிக்காமல், சபையின் உள்ளே இருக்கிறவர்களின் வித்தியாசம் கிறிஸ்துவின் நீதியினாலே தரிப்பிக்கப்பட்டதினாலே, உண்டாகிறது என்பதை காண்பிக்கிறது. மெல்லிய திரித்த பஞ்சு நூல், சபையின் எளிய தன்மையைக் (தோற்றத்தை) குறிக்கிறதாக இருக்கிறது. ஆனால், அதற்கு மாறாக, பாபிலோன் என்னும் வேசியோ பகட்டாகவும், கவர்ந்து இழுக்கத்தக்கதான தோற்றத்தைக் கொடுக்கிறதாக இருக்கிறது என்று வெளிப்படுத்தின விசேஷத்திலே காண்கிறோம். (வெளி 17:4-ஐ 19:8-டோடு ஒப்பிட்டுப்பார்க்கவும்) இது எளிய தன்மையுள்ள கிறிஸ்துவின் சபைக்கு முற்றிலும் வித்தியாசமானது.

ஆசரிப்புக் கூடாரத்துக்கு ஒரே ஒரு நுழைவாசல்தான் உண்டு. அது 30அடி நீளமுடைய பல வருணநிறமுடைய திரையாக ஆசரிப்புக் கூடாரத்தின் கிழக்கு பகுதியில் இருக்கும். அது, தேவனுடைய சபையையும், ஒரே வாசலை கொண்ட அந்த நுழைவாசல் கிறிஸ்துவின் வழியாகத்தான் சபைக்குள் பிரவேசிக்க வேண்டும் என்பதையும், அவராலேயன்றி ஒருவராலும் பிதாவினிடத்திற்கு வரமுடியாது என்பதையும் குறிக்கிறது (யோ 14:6).

ஆகவே, ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும் ஒருவர் சூரியனுக்கு தன் முதுகை காண்பித்து நுழைவதின்மூலம் சூரியனை வழிபடும் காரியத்தை தள்ளுகிறதையே இது குறிக்கிறது. (எகிப்து மற்றும் உலக நாடுகளில் சூரியனை வழிபடுவது பொதுவான காரியமாக அந்த நாளின் வழக்கமாக இருந்தது).

வெளிப்பிரகாரத்திலே காணப்படும் முதல் பகுதி, பலிபீடம். இது கிறிஸ்து சிலுவையிலே நம்முடைய பாவங்களுக்காக மரித்தார் என்பதையே பிரகடனப் படுத்துகிறதாய் இருக்கிறது.

கழுவும் தொட்டி - ஒரு பெரிய தொட்டி நிறைய தண்ணீர். இது தேவனுடைய வார்த்தையினாலே வெளிப்புற சுத்திகரிப்பையும், மறுஜென்ம முழுக்கையும் குறிக்கிறது (எபே 5:26).

வெளிப்பிராகாரத்தின் கடைசியில் இரண்டு அறை கொண்ட கூடாரம் அமைக்கப்பட்டு இருந்தது. அது பரிசுத்தஸ்தலம், மகாபரிசுத்தஸ்தலம் என்றும் சொல்லப்படுகிறது. கூடாரத்தில் இருக்கும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் திரையின் வழியாக நுழைந்து, பின் பரிசுத்த ஸ்தலத்துக்கும், மகா பரிசுத்தஸ்தலத்திற்கும் இடையிலான தடித்த திரையின் வழியாக பிரவேசிக்கலாம் (எபி 10:19,20).

எவ்வாறு வெளிப்பிராகாரம் இஸ்ரவேலருக்காக மாத்திரமே (புறஜாதியாருக்கு அல்ல) திறக்கப்பட்டதோ, அதைப்போலவே, பரிசுத்தஸ்தலம் தேவனை சேவிக்கும் ஆசாரியர்களுக்கு மாத்திரமே திறக்கப்பட்டிருக்கிறது. அந்த பரிசுத்தஸ்தலத்திலே குத்துவிளக்கு, சமுகத்தப்பம், தூபகலசம் போன்றவை காணப்படும்.

மகா பரிசுத்த ஸ்தலத்திலோ, பிரதான ஆசாரியன் மாத்திரமே நுழைய முடியும். அதுவும் பாவ நிவர்த்திக்காக, இரத்தத்தோடு, வருடத்தில் ஒரேமுறை மாத்திரம் நுழைய முடியும். அங்குதான் உடன்படிக்கை பெட்டி வைக்கப்பட்டிருந்தது. கிருபாசனம் அதை மூடியிருந்தது. அங்கே, தேவனுடைய மகிமை காணப்படும்.

வாசஸ்தலமும், அதின் பலகைகளும்:

Tent

45 அடி நீளமுள்ள வாசஸ்தல கூடாரம் 15 அடி அகலமும் 15 அடி உயரமும் கொண்டதாயிருந்தது. பரிசுத்தஸ்தலத்தின் நீளம் 30 அடியும் அகலம் 15 அடியாகவும், மகா பரிசுத்த ஸ்தலம் 15 அடியிலான சதுர வடிவமாகவும் இருந்தது.

Wooden Board

வாசஸ்தலத்தின் பலகைகள், சீத்திம் மரத்தால் செய்யப்பட்டு பொன் தகட்டால் மூடப்பட்டிருந்தது. அது, நமது ஆண்டவராகிய இயேசு, தேவனாகவும் (பொன்) மற்றும் மனிதனாகவும் (மரம்) இருக்கிறார் என்பதையும் குறிக்கிறது. அதுமாத்திரமல்லாமல், இன்று கிறிஸ்துவின் சபையிலும் மனிதர்களாக நாம் இருந்தாலும் கிறிஸ்துவின் திவ்விய சுபாவத்துக்கு பங்குள்ளவர்களாகவும் இருக்கிறோம் என்பதையும் அது குறிக்கிறது (2பேதுரு 1:4).

ஒவ்வொரு பலகைக்கும் இரண்டு வெள்ளியிலான பாதங்களும் அவைகள் நிலத்தில் ஸ்திரமாக பதித்து வைக்கும்வண்ணம் செய்யப்பட்டிருக்கும். அது விசுவாசத்தையும், கீழ்ப்படிதலையும் குறிக்கிறதாகவும், அது ஒவ்வொரு விசுவாசியினிடத்திலும் அவர்கள் அசையாதவர்களாயும், இந்த வனாந்திர வாழ்க்கையில் உறுதியானவர்களாயும் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. கீழ்ப்படிதல் இல்லாத விசுவாசமுடையவர்கள் ஒரே காலுடைய பலகைக்கு ஒப்பாகவும் சமநிலை அற்றவர்களாயும் இருப்பதை இது காட்டுகிறது.

ஒவ்வொரு பலகையும், இடைவெளியேதும் இல்லாமல் ஒன்றொடொன்று இசைந்து இருக்கும்படி செய்யப்பட்டிருக்கும். கிறிஸ்துவின் சரீரமாகிய சபையிலே, ஒருவரோடு ஒருவர் நெருங்கிய ஐக்கியம் உள்ளவர்களாய் தேவனிடம் வாஞ்சைஉள்ளவர்களாய் இருக்கவேண்டும் என்பதையே இது குறிக்கிறது. ஒவ்வொரு பலகைக்கும் நான்கு வளையங்களும் இரண்டு பலகைகளும் ஒன்றோடொன்று இசைந்தும், அதில் தாழ்ப்பாள்கள் பாய்ச்சப்பட்டிருக்க வேண்டும். நடு தாழ்ப்பாள் (ஐந்தாவது) ஒருமுனை தொடங்கி மறுமுனை மட்டும் பலகைகளின் மத்தியில் உருவ பாய்ச்சப்பட்டிருக்க வேண்டும். இந்த ஐந்து தாழ்ப்பாள்களும் ஒவ்வொரு பலகைகளையும் இணைத்து வைத்துக்கொள்ளவும் அசையாதபடி காத்துக்கொள்ளவும் உதவும். இப்படி அசையாதவர்களாயும் உறுதிப்பட்டவர்களாயும் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் இருக்க, விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதலுக்கும் மேலாக ஒரு நெருக்கமான ஐக்கியம் உள்ளவர்களாக நாம் இருக்க வேண்டும் என்பதையே காட்டுகிறது.

வாசஸ்தலத்தின் மூடுதிரைகள்:

வாசஸ்தலத்தில் நான்கு மூடு திரைகள் உள்ளது. விசித்திர வேலையாய் செய்யப்பட்ட திரித்த மெல்லிய பஞ்சு நூல், இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிவப்பு நூலாலான ஒரு மூடுதிரை வாசஸ்தலத்தின் உட் பகுதியில் போடப்பட்டிருக்கிறது. அது கிறிஸ்துவினால் உண்டான நீதியின் சௌந்தர்யத்தை காட்டுகிறது. இரண்டாம் மூடுதிரை: (அதற்கு மேலாக) ஆட்டு மயிராலான ஒரு மூடு திரை போடப்பட்டிருக்கும். அது கிறிஸ்து நம் பாவங்களை சுமந்து பாளையத்துக்கு புறம்பே அனுப்பப்பட்ட போக்காட்டிற்கு (Scape Goat) அடையாளமாக சொல்லப்படுகிறது. மூன்றாம் திரை: சிவப்பு தீர்ந்த ஆட்டுக்கடாத் தோலினாலானது. அது கிறிஸ்து நமக்கு பதிலாக, நமக்காக இரத்தம் சிந்தி மரித்ததைக் காட்டுகிறது. கடைசியாக, மேற்புறத்தின் மூடு திரை தகசு தோலிலானது. அது பார்க்கத்தக்க ரூபம் அவருக்கு இல்லாததையும் வனாந்திரத்தின் மண் ஒட்டிக் கொள்ளும் ஒரு வெளிப்புறமான அழகு இல்லாததையே காட்டுகிறது. வாசஸ்தலத்தின் உட்புறத்தில் மாத்திரமே அந்த பூரண அழகுள்ள மூடு திரையைக் காணமுடியும். அதைப்போலவே, ஒரு உண்மை கிறிஸ்தவனின் அழகு உள்ளான மகிமையே அல்லாமல் வெளிப்பிரகாரமான தோற்றத்தில் அல்ல.

தகசு தோலானது, "கிறிஸ்துவின் நிந்தையை" நமக்கு அறிவிக்கிறது. வெளிப்பிரகாரமாக, உண்மையான சபையானது, தவறாக புரிந்து கொள்ளப்பட்டும் கனவீனப்படுத்தப்பட்டும் நிந்தைக்குள்ளாக்கப்பட்டும் தான் இருக்கும். ஆனால், உலகத்திலோ காரியங்கள் முற்றிலும் எதிர்ப்பதமாக வெளியே அழகுள்ளதாகவும் உள்ளேயோ அசுத்தத்தால் நிறைந்ததாகவுமே இருக்கும்.

இயேசு இந்த பூலோகத்துக்கு வந்த போது, அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது (ஏசா 53:2). இந்த உலகம் அவரை அற்பமாக எண்ணி புறக்கணித்தது. தேவபக்தியை வாஞ்சித்தவர்கள் மாத்திரமே அவரிடத்தில் வந்தார்கள். அதைப்போலவே சபையும் இருக்கவேண்டும். வெளி உலகத்தில் காணப்படுகிற எந்த ஒரு கவர்ச்சியினிமித்தமும் ஜனங்கள் சபையில் இழுக்கப்படாமல் சபையின் ஜீவியத்தினாலும் ஐக்கியத்தின் அடிப்படையினால் மாத்திரமே அவர்கள் இழுக்கப்பட வேண்டும்.

இயேசுவுக்கு சொந்தமானவர்கள் அவரோடு கூட நிந்தையை சுமந்து பாளையத்துக்கு (உலகத்தின்) புறம்பே போவார்கள். ஆனால், திரைக்குள்ளாகவோ தேவனோடு ஐக்கியம் பெற்றிருப்பார்கள் (எபி 10:19,20;13:13). ஆனால், பெரும்பான்மையான கிறிஸ்துவர்கள் பாளையத்துக்கு உள்ளேயும், திரைக்கு வெளியேயும் ஜீவிக்கிறவர்களாகவே இருக்கிறார்கள்.

பாளையத்திற்கு புறம்பே என்பதின் அர்த்தம், "உலகத்தால் புறக்கணிக்கப்பட்ட வாழ்க்கையேயாகும்". இயேசு, தம் வாழ்நாட்களெல்லாம் இந்த பரிசேயரால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டும், பெயல்செபூல் என்றும் அழைக்கப்பட்டிருக்க (வீட்டு எஜமானையே அப்படி சொல்வார்களானால் வீட்டிலிருக்கிறவர்களாகிய நம்மையும் இன்னும் அதிகமாக அப்படி சொல்வார்கள் என்றே சொன்னார். மத் 12:24) இன்றைக்கு ஏன் அநேக கிறிஸ்துவர்கள் உலகத்தில் பிரபல்யமாக இருக்கிறார்கள்? (இயேசுவுக்கு இல்லாத) மனுஷர்களை பிரியப்படுத்தியும், தந்திரமாய் ஒத்துப்போவதினிமித்தமே அவர்கள் பிரபல்யமாக இருக்கிறார்கள். ரோமர்களோ, அல்லது கிரேக்கர்களோ இயேசுவை எதிர்த்தவர்கள் அல்ல. மாறாக, யூதர்களே அவரை பகைத்தார்கள். ஏன்? ஒத்த வேஷம்தரியாமல், தேவனுடைய சத்தியத்துக்காக நின்றதினிமித்தமே. இன்றைக்கு அதேவிதமான மார்க்க கிறிஸ்துவர்களும் ஒத்துப் போகிறவர்களும் மற்ற வேறு மார்க்கத்தாருமே கிறிஸ்துவின் சபையை பகைக்கிறவர்களாக இருக்கிறார்கள்.

வெண்கல பலிபீடம்:

Bronze Alter

வெளிப்பிராகரத்தின் முதல் பகுதியில் பலிபீடம் வைக்கப்பட்டிருக்கிறது. வெண்கலத்தாலான பள்ளமான தொட்டி தரையிலே வைக்கப்பட்டு மூடப்பட்டிருக்கும். பலிபீடத்தின் உள்ளே தரையிலே பலிக்குரியவைகள் வைக்கப்பட்டிருக்கும். அது பூமிக்குரியவைகளில் ஒன்றிலேயே செய்யப்பட்டிருக்க வேண்டும். (தேவன் உண்டாக்கியவைகளினாலே அல்லாமல் மனுஷனால் உண்டாக்கப்பட்டவைகளினால் அல்ல) அது கல்வாரி சிலுவையை (தேவனே உண்டாக்கின) குறிக்கிறது (யாத் 20:24,25).

பலிபீடத்துக்கு ஏறும்படிக்கு படிகள் அதற்கு இல்லை. மாறாக பலிபீடத்தின் உட்புறம் தாழ இறங்கும் (சரிவு பாதை) விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும். அது இரட்சிப்புக்கு ஏறும் படிகள் இல்லை என்பதையே குறிக்கிறது (யாத் 20:26).

சீத்திம் மரத்தால் பலிபீடம் உண்டாக்கப்பட்டு, வெண்கல தகட்டால் மூடப்பட்டிருக்கும். வெண்கலம் நியாயத்தீர்ப்புக்கு அடையாளமாக இருக்கிறது. பலிபீடத்திலிருக்கும் அக்கினியினால் பலிபீடம் கருகும்போது, உட்புறமாகிலும், வெளிபுறமாகிலும் காணப்படாதபடிக்கு உண்டாக்கப்பட்டிருக்கும். அது கிறிஸ்து மாம்சத்தில் படும் பாடுகளை ஒருவரும் காணக் கூடாததற்கு அடையாளமாக இருக்கிறது (1பேதுரு 4:1).

அநேக கிறிஸ்துவர்கள் இயேசுகிறிஸ்து சிலுவையில் பட்ட வெளிப்பிரகாரமான பாடுகளை மாத்திரமே அறிந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால், இயேசு தம் பூமிக்குரிய வாழ்க்கையில் பட்ட உள்ளான பாடுகளை குறித்து ஒன்றும் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு சூழ்நிலைகளையும் சோதனைகளையும் சகித்தபோது அவர் ஒருக்காலும் துக்கப்பட்டு கண்ணீர்விடவில்லை. நம்முடைய துக்கங்களுக்காகவே அவர் கண்ணீர்விட்டார். தேவமனிதர்கள், கூட அப்படிதான் வாழ்ந்தார்கள். பவுல் கொரிந்து சபைக்கு தன்னுடைய அப்போஸ்தல அதிகாரத்தை நிலைநாட்ட தான் அடைந்த அநேக பாடுகளை விவரித்து காண்பித்தார். ஆனால், தான் அடைந்த உள்ளான பாடுகளை குறித்தோ ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், அவரது முழு ஊழியமும் அவர் அடைந்த உள்ளான பாடுகளினாலே உண்டானது.

பலிபீடத்தின் நான்கு முனைகளிலும், நாலு கொம்புகள் உண்டாக்கப்பட்டிருந்தது. பலியிடப்பட வேண்டிய பலி, கொல்வதற்கு முன், கொம்புகளில் கட்டப்பட்டிருக்கும். அது, தாம் எருசலேமுக்கு போகும் போது(சிலுவையில் மரிக்க) இருந்த உறுதியான மன நிலையை காட்டுகிறது. (லூக்கா 9:51). இந்த நிலையான உறுதியை பெற்றுக்கொள்ள, அனுதினமும் சிலுவையை சுமக்கிறதிலே (சுயத்திற்கு மரிக்க) நாமும் விருப்பமுள்ளவர்களாகவும் கட்டப்பட்டவர்களாகவும் இருக்கவேண்டும்.

வெண்கல கழுவும் தொட்டி:

Bronze Laver

வாசஸ்தலத்தின் வெளிப்பிரகாரத்திலே இந்த கழுவும் தொட்டி வைக்கப்பட்டு இருக்கும். தேவனுடைய வார்த்தையினாலே நாம் கழுவப்பட வேண்டும் என்பதையும் வசனத்தைக் கேட்டு அதன்படி செய்கிறவர்களாகும் போது, நாம் தேவனுடைய வார்த்தையினால் சுத்திகரிக்கப்படுவோம் என்பதையும் தண்ணீர் ஞானஸ்நானத்தையும் இது குறிக்கிறது (எபே 5:26).

தேவன் முதலாவது, தண்ணீரினாலும் பின்பு பரிசுத்தாவியின் அக்கினியினாலும்; பொன்னை எப்படி தண்ணீரினாலும் அக்கினியினாலும் சுத்திகரிக்கிறது போல நம்மையும் சுத்திகரிக்கிறார் (எண்ணா 31:21-23).

பழைய உடன்படிக்கை வாசிக்கிறவர்களும் அதற்கு கீழ்ப்படிகிறவர்களும் வெளிப்புறமான எல்லா பாவத்தினாலும் சுத்திகரிக்கப்படுகிறார்கள். இப்படித்தான் நியாயப்பிரமாணம் தண்ணீரால் நம்மை சுத்திகரிக்கிறது. ஆனால், இயேசு, பாவத்தைக்குறித்து, "பாவம் என்பது வெளிப்பிரகாரமான செயலை காட்டிலும் ஆழ்ந்த உள்ளான ஜீவியத்தில் தீர்க்க வேண்டிய ஒரு பிரச்சனை" என்று சுட்டிக்காட்டினார். "ஓர் ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் அவளோடு தன இருதயத்திலே விபச்சாரம் செய்தாயிற்று" என்றார் (மத் 5:28). இங்குதான் பரிசுத்த ஆவியானவர் நம்மை சுத்திகரிக்கிறார். அந்தரங்க ஜீவியத்தில் உதவி செய்கிறார்.

பரிசுத்தாவியானவரை நாம் நம்முடைய ஜீவியத்தில் ஆளுகை செய்ய அனுமதிக்கும்போது, இன்னும் வேறுவிதமான ஆழமான காரியங்களான - வேறொருவரின் மனைவியின் சமையலை, தன் மனைவியைக்காட்டிலும் பாராட்டுகிறதிலே காணப்படுகிற வேசித்தனத்தையும், பணத்தின் மேலுள்ள ஆசையையும், இன்னும் வெவ்வேறான காரியத்திலே இருக்கிற வேசித்தனத்தையும் காண்பிக்கிறார். ஓர் வெங்காயம் அது நடு தண்டுவரை தோலுரிக்கப்படுவதுப்போல படிப்படியாய் ஆவியானவர் நமக்கு உணர்த்துவார்.

வெளிப்பிரகாரத்தின் தண்ணீராகிய வசனத்தினாலே நாம் (வெளிப்புறமான பாவங்களிலிருந்து) சுத்திகரிக்கப்படும்போது, மனுஷர்களுக்கு முன்பாக நல்லதொரு சாட்சியை நமக்கு கொடுக்கும். ஆனால், மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளாக போய் பரிசுத்த அக்கினி நம்மை அந்தரங்க ஜீவியத்தில் சுத்திகரிக்க அனுமதித்தாலொழிய, உண்மையான ஆவிக்குரியவர்களாக மாறாமல், மார்க்க சம்பந்தமானவர்களாகவே, தேங்கி நின்று விடுவோம்.

பொன்னாலான மேஜையும், சமுகத்தப்பங்களும்:

Golden Bread

பரிசுத்தஸ்தலத்திலே, பொன்னாலான மேஜையும் அதிலே இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தாருக்கு அடையாளமாக பன்னிரண்டு சமூகத்தப்பங்களும் வைக்கப்பட்டிருந்தது. ஆசாரியர்கள் மாத்திரமே அதை புசிக்கலாம்.

இது, இயேசுவே ஜீவ அப்பமாகவும் தேவனுடைய வார்த்தையாகிய அப்பத்தினால் மாத்திரமே மனுஷன் பிழைப்பான் என்பதையும் குறிக்கிறது (மத் 4:4).

பழைய உடன்படிக்கையிலே தனித்தனியே பன்னிரண்டு அப்பங்கள் இருந்தது. ஏனென்றால், இஸ்ரவேலர் ஒரே சரீரமாக மாறமுடியவில்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் மற்றவர்களை விட தெளிவான வேறுபாடு கொண்டவர்களாகவே இருக்க தீர்மானித்திருந்தனர். ஆனால், நாமோ புது உடன்படிக்கையிலே உலகமெங்கும் பல ஆயிரம் கோத்திரங்களாக இருந்தாலும் ஒரே அப்பமாக; கிறிஸ்துவின் சரீரமாக கர்த்தருடைய பந்தியிலே இருக்கிறோம்.

இதிலே, நாமெல்லாரும் தலையாகிய கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டிருப்பதால் நாமெல்லோரும் இந்த அப்பத்தில் புசிக்கிறோம். பழைய உடன்படிக்கைக்குரிய ஒரு தலைவர் மூலமாக அல்ல, கிறிஸ்துவோடு (தலையாகிய) தனித்தனியாக நேரடியாக தொடர்பு கொண்டிருப்பதால் அப்படி ஆகும்.

பொன்னாலாகிய குத்துவிளக்கு:

Lamp Stand

ஒரு தனிப்பட்ட சாட்சியுள்ள வாழ்க்கையும் ஸ்தலசபையின் சாட்சியுள்ள வாழ்க்கையையுமே இந்த குத்து விளக்கு பிரகடனப்படுத்துகிறது.

குத்துவிளக்கு எப்போதும் எரிந்து கொண்டே இருப்பதை ஆசாரியன் உறுதி செய்வது போல, நம்முடைய பொதுப்படையான சாட்சியுள்ள வாழ்க்கை எப்போதும் பிரகாசமாய் இருந்திட வேண்டும்.

பழைய உடன்படிக்கையிலே, ஒரே ஒரு குத்து விளக்கும் , அதிலே ஏழு கிளைகளும் இருந்தன. இது,இஸ்ரவேலர் பல கிளைகளைக் கொண்ட ஒரே ஸ்தாபனமாக இருந்தனர் என்பதை குறிக்கிறது.

ஆனால், புது உடன்படிகையிலே,ஒவ்வொரு சபையும் தனித்தனியே குத்து விளக்குகளாய் காட்டபடுகிறது(வெளிப்படுத்தின விசேஷம்). இந்த குத்துவிளக்குகளின் மத்தியிலே நிலையங்கி தரித்தவராய் கர்த்தர் உலாவி வருகிறதாக பார்க்கிறோம் (வெளி 1:13,20).

புதுஉடன்படிக்கையின் ஒவ்வொரு சபைக்கும், கிறிஸ்துவே நேரடியான தலையாக இருந்து நடத்துகிறார் என்பதை (இஸ்ரவேலர்கள் போல் அல்லாத) போதிக்கிறது. ஆனால், இன்றைய அநேக சபைகள் இன்னும் பழையஏற்பாட்டின் முறைமையின்படியான மிகப்பெரிய ஒரே ஒரு குத்துவிளக்கு மாதிரியான ஸ்தாபனமாகவே இருக்கின்றன.

ஒவ்வொரு குத்துவிளக்கும் (சபையின் ஒவ்வொரு அங்கமும்) பிரகாசமாக எரிந்திட வேண்டும். சபையின் ஏதோ ஒரு அங்கத்தினன் பாவம் செய்யும்போது, (வெளிச்சம், இருளாகும் போது) காரியங்களை சரிப்படுத்தியும், கிடைக்கும் சந்தர்ப்பத்திற்குள்ளாக மங்கி எரிகிற திரியை சீர்படுத்தவும் வேண்டும். இல்லையெனில், அப்படிபட்டவனிமித்தம் கர்த்தரின் சாட்சி சபையிலே கனவீனபடாதிருக்கும்படி அவனை அகற்றி விடலாம்.

தேவனுடைய மாதிரியின்படியே பின்பற்றும் பட்சத்தில் மாத்திரமே தேவனுடைய மகிமை அந்த ஸ்தல சபையை நிரப்பிட முடியும்.

பொன்னால் செய்யப்பட்ட தூபவர்க்கம்:

Alter

பரிசுத்த ஸ்தலத்திலே காணப்படும் தூபகலசம் இயேசுவின் நாமத்தில் ஏறெடுக்கப்படும் (வெளி 5:8) ஜெபத்தை குறிக்கிறதாக இருக்கிறது. ஜெபமானது, நாம் தேவன் மேலே சார்ந்துக்கொள்ளும் காரியத்தையும் குறிக்கிறது. இயேசுவின் நாமத்தினாலாகிய ஜெபம் (தூபவர்க்கமாகிய) எப்போதும் நம்முடைய இருதயங்களிலிருந்து தேவனை நோக்கி நித்தியதூபமாய் ஏறெடுக்க பட வேண்டும் (யாத் 30:8; லூக்கா 18:1) நம்முடைய ஜெபம் கர்த்தருக்கு தூபமாய் ஏறெடுக்கபடப் வேண்டும்.

இதை குறித்து கர்த்தர் மோசேயிடம், "இந்த சுகந்த தூபவர்க்கத்தை நீ செய்யவேண்டிய முறைமையின்படி தேவனுக்கு மாத்திரமே அல்லாமல் எந்த மனுஷனுக்காவும் இதை செய்யாலாகாது" என்றார் (யாத் 30:37). இது இரண்டு காரியங்களுக்கு அடையாளமாக இருக்கிறது.

முதலாவதாக, நம் சொந்த தகுதியினால், தேவனுக்கு ஜெபத்தை ஏறெடுக்கமுடியாது. தேவனுக்கு முன்பாக நின்றிட இயேசுவின் நாமம் ஏதோ மாயஜால வார்த்தை கிடையாது. ஆனால், இயேசுவின் நாமத்தினால் மாத்திரம்; அவர் நமக்களித்த தகுதியினால் மாத்திரம், அப்படி தேவனுக்கு முன்பாக நின்றிடவும் ஜெபிக்கவும் முடியும். பதில் கிடைக்க பாத்திரமானவர்கள் என்ற எண்ணத்திலும் நாம் ஜெபிக்க முடியாது. ஏனென்றால், அந்த ஜெபம் இயேசுவின் நாமத்தினால் ஏறெடுக்கபடவில்லை. அவ்வளவுதான். (யாராயிருந்தாலும்) யாதொருவன் தன் சொந்த தகுதியில்லாமல் இயேசுவின் நாமத்தில் ஜெபத்தை ஏறெடுக்கிறானோ அவனையல்லாமல் வேறொருவராலுமே தேவனிடத்திலிருந்து பதிலை பெறமுடியாது.

இரண்டாவதாக, நாம் ஜெபிக்கும்போது நம் சொந்த ஆதாய நோக்கோடு ஜெபிக்கக்கூடாது. நாம் எதை செய்தாலும் தேவனுடைய நாமம் மகிமைப்படவே செய்கிறவர்களாக இருக்கவேண்டும் (1கொரி 10:31). "பிதாவிவின் நாமம் மகிமைபடவும் அவருடைய இராஜ்யம் பூமியிலே ஸ்தாபிக்கப்படவும் அவருடைய சித்தம் செய்யப்படவும்" என்றே இயேசு ஜெபிக்க கற்றுக்கொடுத்தார். நமக்காக நாம் ஏறெடுக்கும் எல்லா ஜெபங்களும் கூட பிதாவின் நாமம் மகிமைக்காகவே ஏறெடுக்கப்பட வேண்டும். இதினிமித்தமே, நீதிமான் செய்யும் ஊக்கமானஜெபம் அதிக பெலனுள்ளதாக இருக்கிறது என்று பார்க்கிறோம். ஏனென்றால், அவன் செய்கிற எல்லாவற்றிலும் தேவநாம மகிமை ஒன்றேயே நாடுகிறான் (யாக் 5:16).

பரிசுத்த ஸ்தலத்திற்குள் போகும் வழி:

ஆசரிப்புக் கூடாரமானது, (வெளிப்பிரகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம்) ஒரு மனிதனின் ஆவி, ஆத்துமா, சரீரம் என்பதை விளக்கும் படமாக இருக்கிறது (1 தெச 5:23).

நம் சரீரமானது, எப்படி வெளிப்படையாக பார்க்க முடிகிறதோ, அது போலவே, ஆசரிப்புக் கூடாரத்தில், வெளிப்பிராகாரம் மாத்திரமே வெளிப்படையாய் பார்ப்பதற்கு திறந்தளிக்கப்பட்டு இருக்கிறது. நம்முடைய ஆவி, ஆத்துமாவை போலவே பரிசுத்த ஸ்தலமும், மகா பரிசுத்த ஸ்தலமும் வெளிப்பிரகாரமாய் பார்க்க கூடாததுபோல மூடப்பட்டு இருக்கும்.

நாம் ஏற்கனவே, கண்டபடி மகா பரிசுத்த ஸ்தலமானது, சதுரவடிவிலானது. புதிய எருசலேமும் சதுரவடிமாயிருந்தது (வெளி 21:16). அதில் அகலமும் நீளமும் சமமாயிருந்தது.

தங்களின் வெளிப்படையான ஜீவியம் உள்ளான ஜீவியத்திற்கு ஒத்தில்லாதிருக்கிறவர்கள், தேவ சமூகத்துக்கு முன்பாக வாழாமல் மற்றவர்களுக்கு முன்பாக வாழுகிறவர்கள், மற்றவர்களுக்கு முன்பாக மாத்திரம் தங்களை ஆவிக்குரியவர்களாக காண்பிக்க விரும்புகிறவர்கள் மற்றும் உள்ளான ஜீவியத்தோடு ஒத்திராத வெளிப்படையான ஜீவியம் செய்கிற மாய்மாலகாரர்கள் யாவரையும் தேவன் புறக்கணிப்பார்.

தேவனுடைய வார்த்தையானது, ஆவியையும் ஆத்துமாவையும் பிரிக்கிறதாய் (எபி 4:12) இருக்கிறது. நாம் தேவனுடைய வார்த்தைகளை வாசிக்கும்போது, முதலாவது அது நம் சரீரத்தின் மூலம் (கண்,காதுகள் மூலம்) நுழைந்து பின்பு அது நம் ஆத்துமாவில் நுழைந்து, (மனம், சித்தம், உணர்வு) மனதுக்கு போதித்து, நம் உணர்வுகளை கிளர்ச்சியூட்டும். ஆனால், அது அங்கே தேங்கி நின்று நம் சித்தத்தை கீழ்ப்படிய செய்யவில்லையானால், அந்த வார்த்தை நம் ஆவியில் நுழைய முடியாது. நாமும் ஆவிக்குரிய ஜீவியத்தில் வளரவும் முடியாது.

உதாரணமாக, "நீ ஜெபிக்கும்போது, உன் பேரில் உன் சகோதரனுக்கு குறை உண்டென்றும், உன்னிமித்தம் மனம் புண்பட்டிருக்கிறான் என்று அறிந்தும், நீ அதை சரிசெய்யாத பட்சத்தில் நீ ஏறெடுத்த ஜெபம், காணிக்கையை தேவன் அங்கிகரிப்பதில்லை" என்பதையும் வேதத்திலே வாசிக்கிறோம் (மத் 5:23,24). இதை நாம் புரிந்துக்கொண்டும், சவாலூட்டப்பட்டு இருந்தாலும், அந்த சம்பந்தப்பட்ட சகோதரனிடம் மன்னிப்பு கேளாதபட்சத்தில், நம் ஆவி இன்னும் செத்ததாகவே இருக்கிறது. இது எல்லா வசனத்துக்கும் பொருந்தும். வார்த்தையை புரிந்து கொண்டும் சவாலூட்டபட்ட வார்த்தை மாம்ச திரையை ஊடுருவி, பரிசுத்த ஸ்தலத்திலிருக்கும் ஆத்துமாவிலும் ஊடுருவி, மகா பரிசுத்த ஸ்தலத்தில் இருக்கும் ஆவியில் செயல்பட்டு பிரித்துவிடும்.

இயேசுவும் தம் சித்தத்தின்படியல்ல, தன் பிதாவின் சித்தத்தை செய்யும்படியே வானத்திலிருந்து இறங்கி வந்தார் (யோவா 6:38). இப்படியாக, தன்னுடைய ஆத்துமாவிற்கும், ஆவிக்கும் இடையே இருந்த திரைசீலையை கிழித்து (தன் சுய சித்தத்தை) தன் பூமிக்குரிய ஜீவியம் முழுவதிலும், "ஆகிலும் என் சித்தம் அல்ல. உம் சித்தத்தின்படியே ஆகக்கடவது" என்றார்.

இப்படிதான், இயேசுவை பின்பற்றும்படி நாமும் அழைக்கப்பட்டு இருக்கிறோம். நம்மில் அநேகர் ஆவிக்குரியவர்களாய் இன்னும் மாறாமல் இருப்பதற்கு தாங்கள் தேவனுடைய சித்தத்தை அறிந்திருந்தும் சவாலூட்டப்பட்டும், தேவனுடைய சித்தத்தை செய்யும் பொருட்டு, தங்கள் சுய சித்தத்தை விட்டு விட மனதில்லாது இருப்பதே அதற்கு காரணம்.

பரலோகத்திலே, பிதாவோடு இயேசு இருந்தபோது, பிதாவின் சித்ததை போலவே, அவருடைய சித்தமும் இருந்தது. ஆனால், பூமிக்கு வந்து நம்மை போல மாம்சத்தை உடையவரானபோது, தம்முடைய சொந்த சித்தத்தை (விருப்பத்தை) உடையவராய் மாறினார். பிதாவின் சித்தத்தை செய்யும் பொருட்டு, தன் சொந்த சித்தத்தை மறுதலித்து வாழ வேண்டியதாய் இருந்தது.

தன் இளம் பிராயத்திலே, தன் பெற்றோர்களான, யோசேப்புக்கும், மரியாளுக்கும் கீழ்ப்படியவேண்டும் என்பதை அவ்வளவு எளிதான காரியமாக உணர்ந்தார். அவர்கள் பூரணமில்லாமலும் அவர் பூரணராயும் இருந்தார். ஆனாலும், இயேசு அந்த வருடங்களிலேயே தன் சுயசித்தத்துக்கு மரித்து தன்னை ஒப்புக்கொடுத்தார்.

இதே காரியத்தைதான் வீட்டிலே அநேக மனைவிமார்களும் கையாள வேண்டும். இரக்கமில்லாத, தேவனுக்கு கீழ்ப்படியாத கணவன்மார்களுக்கு கீழ்ப்படிய வேண்டும். அதைப்போலவே, தங்களுக்கு ஒவ்வாத மூத்த சகோதரர்களிடத்திலும் இதே விதத்திலே கீழ்ப்படிய ஒப்புக்கொடுக்கிறவர்களாக இருக்க வேண்டும்.

கெத்சேமனேயிலும் பிதா அருளின பாத்திரத்திலே பானம் பண்ண விருப்பமில்லாதவராகவே இயேசு இருந்தாலும், தன்னுடைய சுயசித்தத்தை விட்டு கொடுத்து, முடிவிலே, அதை பானம் பண்ணினார்.

மெய்யான ஆவிக்குரிய தன்மையின் ரகசியமே, ஒருவன் தன் சுய சித்தத்தை மறுத்து பிதாவின் சித்தத்தை செய்வதுதான்.

நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையானது, ஒருபோதும் உணர்வுகளின் அடிப்படையாக கொண்டதாக இருக்க கூடாது. நம்மை சுற்றி நடக்கும் காரியங்கள், நாம் எதிர்பார்த்தவிதத்தில் நடக்காதிருக்கும் போது நாம் தைரியமிழந்து இருக்க சோதிக்கப்படுகிறோம். ஆனால், நம் சித்தத்தை தேவனை துதிக்க தீர்மானிக்க செய்ய வேண்டும்,

1.ஏனென்றால், இவ்வுலகின் சகல காரியங்கள் மேலும் கட்டுபாடு வைத்திருப்பவராக நம் தேவன் இருக்கிறார். (விரிவாக்கம் 1தீமோ 6:15).

2.ஏனென்றால், சாத்தான் கல்வாரியிலே தோற்கடிக்கப்பட்டதால்,

3. ஏனென்றால், நம் வாழ்க்கையில் சகலத்தையும் நன்மையாக மாற்றுவதால்.

ஒருவேளை, நம் ஜெபத்திற்கு பதில் கிடைக்கவில்லையானாலும் நம் உணர்வுகளின் அடிப்படையில் வாழ மறுத்து தேவனை துதிக்கணும். இவ்வழியில் தொடர்ந்து நிலைத்திருந்தால், மாத்திரமே உண்மையான ஆவிக்குரியவர்களாய் மாறமுடியும்.

ஒருவேளை, இயேசு தம் சுயசித்தத்திற்கு தொடர்ச்சியாக மரித்திருக்காவிட்டால், தன் ஜீவிய காலமுழுவதிலும் ஒரு பழுதற்ற ஆட்டுக்குட்டியாக இருந்திருக்கமாட்டார். ஒரேமுறை கூட தன் சுய சித்தத்தை செய்திருப்பாரென்றால், நம் பாவங்களுக்கேற்ற பூரண பலியாகவும் இருந்திருக்கமாட்டார். மகா பரிசுத்த ஸ்தலத்துக்கு போகிறதுக்கு திரைசீலையும் கிழிந்திருக்காது.

இப்போது, இயேசு நமக்காக புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை திறந்து வைத்ததால், அதிலே ஒவ்வொருநாளும் நாமும் நடக்க முடியும் (எபி 10:19,20).

இது ஏதோ ஒரேமுறை நுழையும் வாசல் அல்ல. ஆனால், நம் ஜீவிய காலமுழுவதும் நாம் நடக்ககூடிய வழியாக அது இருக்கிறது. அப்போது மாத்திரமே, நாம் எப்போதும் மகா பரிசுத்த ஸ்தலத்தில் ஜீவிக்கிறவகளாய் இருக்கமுடியும்.

பொன்னால் செய்யப்பட்ட உடன்படிக்கை பெட்டி:

Ark

மகா பரிசுத்த ஸ்தலத்திலே, உடன்படிக்கை பெட்டியும், அதைசுற்றி கிருபாசனமும் வைக்கப்பட்டிருந்தது. உடன் படிக்கை பெட்டி மற்றும் கிருபாசனம் தேவனுக்கும் மனிதனுக்கும், புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தரான இயேசு கிறிஸ்துவுக்கு அடையாளமாக சொல்லப்படுகிறது.

பாவ நிவர்த்தியின் நாளிலே கிருபாசனத்தின் மேலே இரத்தம் தெளிக்கப்படும். பொன்னால் செய்த இரண்டு கேருபீன்கள் அதின் மேல் நிழலிட்டிருக்கும். முற்காலத்திலே ஏதேன் தோட்டத்திலே ஜீவ விருட்சத்துக்கு போகும் வழியை காக்கும்படி சுடரொளிபட்டயத்தை பிடித்திருந்தவைகள் இவைகளே. இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்த போது அந்த பட்டயம் முதலாவது, இயேசுவின் மேலே விழுந்தது. நாமும் அவரோடு கூட சிலுவையில் அறையப்பட்டதால் (கலா2:20) நம்மேலும் அது விழுந்தது. இப்போது நம் சுய சித்தத்தை பட்டயத்தால் கொல்லப்பட நாம் அனுமதிப்பதின் மூலமே அல்லாமல் ஒருவரும் ஜீவ விருட்சமாகிய இயேசுவினிடத்தில் வரமுடியாது.

Manna

உடன்படிக்கைப் பெட்டியிலே இரண்டு கற்பலகைகள் வைக்கப்பட்டிருந்தது. (பத்து கட்டளைகள் எழுதப்பட்டிருந்தது) பொற்பாத்திரம் (மன்னா வைக்கப்பட்ட) ஆரோனின் துளிர்த்த கோல் (பூத்துக்காய்த்திருந்த).

வானத்திலிருந்து மன்னா விழுந்திருந்தாலும் ஒரு சில இஸ்ரவேலர்கள் இராமுழுவதும் அதை வைத்திருந்த படியால், அது பூச்சிபிடித்து நாற்றம் எடுத்தது. ஆனால், அதே மன்னா தேவ சமூகத்தில் வைக்கப்பட்டு வனாந்திரத்திலே, நாற்பது வருடங்களாகியும் நாற்றமெடுக்காதிருந்தது அது தேவனுடைய சத்தியத்தை வெறும்தலையறிவிலே (மூளை) மாத்திரம் வைத்திருந்தால், அது மரணத்தை பிறப்பிக்கும். ஆனால், அதை தாழ்மையோடு தேவ சமூகத்திலே வைத்திருந்தால், அது தொடர்ச்சியாக (நீண்ட காலமானாலும்) புத்தம் புதியதாகவே இருக்கும். தேவ சமூகத்தில் தரித்திருக்கும் ஒரு மனிதனின் வார்த்தை எப்போதும் புதியதாகவே இருக்கும். ஆனால், அதே செய்தியை அப்படியே வேறொருவர் அதேப்போல செய்ய முயலும் போது, உலர்ந்த மரித்த எலும்புகள் போலவே இருக்கும்.

ஒருசமயம் மோசே, ஆரோன் என்பவர்களுடைய அதிகாரத்தை குறித்து ஜனங்களால் கேள்வி எழுந்தபோது, ஒவ்வொரு கோத்திர பிரபுக்களிடமிருந்தும் ஒவ்வொரு கோலாக பன்னிரண்டு கோல் வாங்கப்பட்டு தேவசமூகத்திலே, இரா முழுவதும் வைக்கப்பட்டிருந்தது. அதிலே ஆரோனின் கோல் மாத்திரம் துளிர்விட்டு, பூபூத்து வாதுமை பழங்களை கொடுத்தது (எண் 17) காய்ந்து போயிருந்த அந்த கோல்களுக்காக தேவன் உயிரை கொடுத்ததின் மூலம் தேவன் தம்முடைய அதிகாரத்தை நிலைநாட்டும் பொருட்டு சாட்சி பகருகிறார். அந்த கோலும் நாற்பது ஆண்டுகளாக புத்தம் புதியதாகவே இருந்தது. தேவ சமூகத்திலே அப்பியாசிக்கப்பட்ட அதிகாரமே மதிப்பு நிறைந்ததாக காணப்படும்.

சாமுவேலின் நாட்களிலே, சில ஆர்வமுள்ள இஸ்ரவேலர்கள் உடன்படிக்கை பெட்டியினுள் இருப்பதை பார்க்கும் ஆர்வத்தினால் கிருபாசனம் திறக்கப்பட்டது. கர்த்தர் அப்படி செய்தவர்களை உடனடியாக அடித்ததினிமித்தம் செத்தார்கள்.

(1சாமு 6:19). இது கிறிஸ்து எப்படி தேவனும் மனிதனுமாயிருந்தார் என்பதை குறித்து அலசி பார்ப்பது எவ்வளவு ஆபத்தும், மதியீனமான காரியம் என்பதை நமக்கு உணர்த்துகிறது. அதேப்போல, அவர் எப்படி நம்மை போல எல்லாவிதத்திலும் சோதிக்கப்பட்டிருக்க முடியும்? இப்படி அநேக காரியங்களை நாம் புரிந்து கொள்ளவில்லையானாலும் பரவாயில்லை. நமக்கு தேவையாயிருப்பது எல்லாம் தேவன் தம்முடைய வார்த்தையில் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறவர்களாக இருப்பதே நம்முடைய தேவையாய் இருக்கிறது.

பிரதான ஆசாரியர்களின் வஸ்திரம்:

பிரதான ஆசாரியரான ஆரோன், இயேசுவுக்கு மாதிரியாக இருக்கிறார். அவருடைய வஸ்திரத்தில் மூன்று பொருட்கள் காணப்படும்.

Priest Dress

முதலாவதாக, தலைப்பாகை: மெல்லிய பஞ்சு நூலில் தயாரிக்கப்பட்ட அது இயேசுவின் நீதியை குறிக்கிறதாக இருக்கிறது.

அதற்கு மேலே ஒரு இளநீல அங்கி வைக்கப்பட்டிருக்கிறது. அதின் கீழ்ப்பாகம் சுற்றிலும் மாதுளம்பழம் மற்றும் இடைஇடையே சுற்றிலும் பொன்மணிகள் அதின் ஓரங்களில் தொங்கும்படி செய்து வைக்கப்பட்டிருந்தது. நீல நிறம் உன்னதத்தையும், மாதுளம்பழம் ஆவியின் கனியையும் பொன்மணிகள் ஆவியின் வரங்களையும் குறிக்கிறது. தேவனை சேவிக்க இவைகள் இரண்டும் தேவையாயிருக்கிறது.

அவன் இந்த வஸ்திரத்தின் மேலே ஏபோத்தை அணியவேண்டும். அது பலவர்ண மேலங்கியைப் போல இருக்கும் அதிலே மூன்று விசேஷித்த பொருட்கள் இருக்கும். அது,

1. இரண்டு தோள் துண்டுகளும், அதிலே இஸ்ரவேலரின் பன்னிரண்டு கோத்திர நாமங்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.

2. மார்பதக்கம் - அதிலே பன்னிரண்டு கற்கள் . அது இஸ்ரவேலரின் பன்னிரண்டு கோத்திரத்தை குறிக்கிறதாயிருக்கிறது.

3. ஊரீம், தும்மிம் - நியாயவிதி மார்பதக்கத்திலே வைக்கப்பட்டிருக்கும்.

Priest

இந்த மூன்று பொருட்களும் நம்மை பெலப்படுத்தும் கிறிஸ்துவின் வல்லமையும் நம்மை அரவணைக்கும் அவருடைய அன்பையும், நம்மை நடத்தும் அவருடைய ஞானத்தையும் குறிக்கிறது. இந்த மூன்றும் 2தீமே 1:7-ல் சொல்லப்பட்ட தேவ ஆவியின் மூலம் தொடர்புடைய நற்ப்பண்புகளையும் ஆவியின் வரங்களையும் குறிக்கிறது. தேவனுக்கு சேவை செய்ய இவைகள் இரண்டும் அவசியமானதாக கருதப்படுகிறது.

பிரதான ஆசாரியரின் தலையிலே பாகையும், அதற்குமேல் பரிசுத்த காணிக்கையிலே, காணப்படும் குற்றத்தை ஆரோன் சுமக்க வேண்டும். நம்முடைய "பரிசுத்த காணிக்கையிலும்" கூட பாவம் இருக்கும்.

பாவநிவர்த்திக்காக, வருஷந்தோரும் செலுத்தப்படும் பலி பிரதான ஆசாரியன் மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கும் முன் விசித்திர ஆடைகளை கழற்ற வேண்டும். வெள்ளை ஆடையை அணிந்து உள்ளே போகவேண்டும். வெளியே வந்து ஜனங்களுக்கு முன்பு போகும் முன்னே இந்த விசித்திர ஆடையை அணியவேண்டும்.

அது, நாம் தேவனுக்கு முன்பாக போகும்போது எளிய தோற்றமுடனும், தாழ்மை மற்றும் நொறுங்குதலோடும் போக வேண்டும். ஜனங்களிடத்தில் திரும்பி வரும்போது, முகத்துக்கு எண்ணெய் பூசி, நம்முடைய ஜெபம் உபவாசம், தியாகம் எல்லாம் மறைக்கப்பட வேண்டும்.

கிறிஸ்துவ ஜீவியத்தின் மூன்று நிலைகள்:

ஆசரிப்பு கூடாரத்தின் மூன்று பாகங்கள். வெளிப்பிரகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம். கீழ்கண்டவாறு அடையாளமாக இருக்கிறது.

நிலையான வளர்ச்சியின் மூன்றுபடிகள்:

1. தேவனால் மன்னிக்கப்படுதல்.

2. தேவனை சேவிப்பது.

3. தேவனோடு (உறவு) ஐக்கியம் கொள்வது.

மூன்று வகையான கிறிஸ்துவர்கள்:

1)மாம்சீக கிறிஸ்துவர்கள் 2)மனுஷீக கிறிஸ்துவர்கள் 3)ஆவிக்குரிய கிறிஸ்துவர்கள்.

பரிசுத்த ஆவியானவரின் மூன்று ஊழியங்கள்:

1. பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறத்தல்.

2.பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம்.

3. அனுதினமும் பரிசுத்த ஆவியினால் நடத்தப்படுதல்.

தேவன் மீது நமக்கிருக்க வேண்டிய மூன்று மனப்பான்மைகள்:

நன்றி சொல்லுதல், துதி செலுத்துதல், ஆராதனை.

1. நன்றி சொல்லுதல்:

நாம் பெற்றுக்கொண்டதும், ஆசிர்வதிக்கப்பட்டதுமான தேவனுடைய ஈவுகளை நினைத்து வாழுதல்.

2. துதித்தல்:

நமது, நிமித்தம் செயல்பட்ட தேவனுடைய மகத்துவம் மற்றும் சர்வ வல்லவரின் பெலனை நினைத்து வாழுதல்.

3. ஆனால், ஆராதனையிலோ நம் கண்ணோட்டம் எல்லாம் தேவனாக அவர் நம் வாழ்க்கையில் எப்படி பட்டவராய் இருக்கிறார் என்பதற்காய் அவரை பணிந்து கொள்ளுவதேயாகும்.

வெளிச்சத்தின் மூன்றுபடிகள்:

1. சுயபுத்தி. (மனுஷீக காரண யுக்தி).

2. தேவ வார்த்தையின் போதனை.

3. தேவனின் சுபாவம்.

மேற்கண்ட இந்த மூன்று ஆதாரங்களில் ஏதோ ஒன்றின் அடிப்படையிலே நாமெல்லாரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

வெளிப்பிரகாரம், பரிசுத்த ஸ்தலம் இவைகளில் காணப்படும் ஒளி (அல்லது) வெளிச்சம், உண்டாக்கப்பட்டவைகள் மூலமாக இருந்து வருகிறது. வெளிப்பிரகாரத்துக்கு சூரிய வெளிச்சமும், பரிசுத்த ஸ்தலத்துக்கு குத்துவிளக்கிலிருந்தும் வருகிறது. ஆனால், மகா பரிசுத்த ஸ்தலத்திலோ உண்டாக்கப்பட்ட வெளிச்சமாயில்லாமல், தேவனுடைய பிரசன்னத்தினாலேயே வருகிறதாய் இருக்கிறது.

கனியுள்ள வாழ்க்கையின் மூன்று படிகள்:

1. முப்பது மடங்கு.

2. அறுபது மடங்கு.

3. நூறு மடங்கு.

விதைக்கிறவனுடைய உவமையில் மூன்று நல்ல நிலங்களும், மூன்று கெட்ட நிலங்களும் (மாற் 4:1-8) சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், நல்ல நிலத்திலிருந்து கிடைக்கும் பலனின் அளவு எவ்வளவு முழு இருதயம் கொண்டவர்களாய் இருக்கிறோம் என்பதை பொறுத்தே அளவிடப்படும்.

கிறிஸ்துவ வாழ்க்கையின் முதிர்ச்சியில் காணப்படும் மூன்று படிகள்:

1. குழந்தைகள்.

2. வாலிபர்.

3. பிதாக்கள்.

பிள்ளைகள் எப்போதும், மற்றவர்களையே சார்ந்து இருப்பார்கள். வாலிபர் வைராக்கியம் உள்ளவர்களாய் இருப்பார்கள்.

பிதாக்கள் ஞானத்தினால் நிறைந்திருப்பார்கள்.

நாம், மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர், தமது மாம்சமாகிய திரையின் வழியாக புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை உண்டு பண்ணினபடியால், (எபி 10:20). இன்று மீண்டும் திரை கிழிக்கப்பட வேண்டியதில்லை. ஆனால், அனுதினமும் இந்த மகா பரிசுத்த ஸ்தலத்திலே தைரியமாக நடக்க அநேக சந்தர்ப்பங்கள் நமக்கு உண்டு.

தேவ சமூகத்திலே, நாம் அனுதினமும் ஜீவிக்க வேண்டும் என்பதே அவருடைய சித்தமாயிருக்கிறது. அநேகர் வெளிப்பிரகாரத்திலோ அல்லது பரிசுத்த ஸ்தலத்திலோ தங்கி இருக்கிறவர்களாயிருப்பதால், எப்போதும் அபிஷேகம் அவர்கள் மேல் தங்கி இருப்பதில்லை. மகா பரிசுத்த ஸ்தலத்திலே அனுதினமும், சிலுவையை சுமந்து திரையின் ஊடாக பிரவேசிக்கிறவர்களாக இருக்கவேண்டும் (எபி 10:20).

சிலுவையின் பாதை என்பது ஒரு இலக்காக இல்லாமல், ஓர் பாதையாகவே நம் நினைவிலிருக்கட்டும் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிதாவோடு உறவாடும் ஐக்கியமே நமது இலக்காக இருக்கட்டும். அதன்மூலம் சிலுவையின் செய்தியைவிட பிதாவோடுள்ள ஐக்கியம் பிரகாசித்து ஓங்கட்டும்!

நம் ஜீவிய காலமெல்லாம், அந்த ஆசீர்வதிக்கப்பட்ட ஐக்கியத்திலேயே, ஜீவிக்க நாடுவோம்!

ஆமென்! ஆமென்!

காதுள்ளவன் எவனோ அவன் கேட்க கடவன்!