பரிசுத்தஆவியின் அபிஷேகம்

எழுதியவர் :   சகரியா பூணன் வகைகள் :   வாலிபர்
Article Body: 

பழைய ஏற்பாட்டு (பழைய உடன்படிக்கை) பக்கங்களைக் கடந்து புதிய எற்பாட்டு (புதிய உடன்படிக்கை) பக்கங்களுக்குள் செல்லும் ஒருவரை, அப்புதிய ஏற்பாடு தன் முதல் இரு வாக்குத்தத்தங்களால் பிரமிப்படையச் செய்கிறது ! ஆம், புதிய உடன்படிக்கைக்குள் பிரவேசிப்போருக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன் ஊழியத்தின் மூலம் வழங்குவதே அவ் அருமையான வாக்குத்தத்தங்கள்!!

1) அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் (மத். 1:21)

2) அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் (மத் 3:11)

புதிய உடன்படிக்கைக்கு இந்த இரு உபதேசங்களும் அஸ்திபாரமான அடிப்படையானதால், சாத்தான் இந்த உபதேசங்களுக்கு விரோதமாய் கடும் குளறுபடி உண்டாக்கி வைத்திருப்பதில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை. தன் பிள்ளைகள் ஒவ்வொருவரும் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் பாவத்தின் வலிமையிலிருந்து விடுபட்டு, பூரண இரட்சிப்பை ருசிக்க வேண்டும் என்பதே தேவ சித்தமாய் இருக்கிறது. இதற்கு இணையாக, தன் ஒவ்வவாரு பிள்ளைகளும் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெறவேண்டும் என்பது அவரது சித்தமாயிருக்கிறது. இந்த இருமேன்மையான பிறப்புரிமைகளைத் தேவனுடைய பிள்ளைகள். சுதந்தரிக்க முடியாதபடி சாத்தான் தீவிரமாய் செயல்பட்டு வருகிறான். அங்ஙனமே தன் சதித்திட்டத்தை திரளான விசுவாசிகளிடம் செயல்படுத்தியும் விட்டான். இது வேதனையன்றோ !

1. சுவிசேஷங்களில் வாக்குத்தத்தங்களோடு ஆரம்பித்துப் பின் அப்போஸ்தலர் நடப்படிகள் 2 - ம் அதிகாரத்தில் நிறைவேறும் இப்பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இல்லாமல் ஆண்டவருக்கு ஒருவர் ஊழியம் செய்வது ஒருக்காலும் முடியாது.

புதிய ஏற்பாட்டின் முதல் 5 - புத்தங்களும் பரிசுத்தாவி அபிஷேகத்திற்கான வாக்குத்தத்தோடு தான் ஆரம்பிக்கிறது (மத். 3:11; மாற்கு 1:8; லூக் 3:16; யோ. 1:33, அப் 1:5). பின் இந்த வாக்குத்தத்தம் அப்போஸ்தலர் நடபடிகள் 2-ம் அதிகாரத்தில் நிறைவேறி, அதைத்தொடர்ந்து அப்போஸ்தலர் நடபடிகளில் அநேக இடங்களில் நடந்தேறுவதையும் நாம் காண்கிறோம். மறுபடியும் மறுபடியுமாக புதிய ஏற்பாட்டின் முதல் 5- புத்தகங்களில் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் குறிப்பிடப்பட்டிருப்பது, அதன் முக்கியத்துவத்தை நமக்கு தெளிவுபடுத்துகிறதல்லவா !

இயேசுவானவர் பரிசுத்தாவியின் அபிஷேகத்தைக் குறிப்பிடுகையில் "பரிசுத்த ஆவியானவர் சீஷர்கள் மேல் (Upon) வருவார்" என்றே கூறினார். (அப். 1:5,8 வசனங்களை ஒப்பிட்டுப்பாருங்கள்). அதெப்பெடியெனில், தேவனுடைய சிங்காசனத்திலிருந்து பூமியை நோக்கிப் பாய்ந்து வரும் நீர்வீழ்ச்சியில் சம்பூரணமாய் மூழ்கிவிடுவதாகும் !

அப்போஸ்தலர்கள் உலகமெங்கும்போய் சுசேவிஷத்தைப் பிரசங்கிக்கும்படி (மாற்.16:15) இயேசுவானவர் கட்டளையிட்டார். ஆனால் அவர்கள் போவதற்கு முன்பு உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேமில் காத்திருக்கும்படி குறினார் (லூக் 24:49). ஆம், அவர்கள் பரிசுத்த ஆவியின் வல்லமையால் தரிப்பிக்கப்படாமல் ஆண்டவரின் ஊழி யத்திற்குச் செல்லவே கூடாது. ஆனால் பெரும் துயரம் யாதெனில் இன்று அநேக விசுவாசிகள் இந்த உன்னத பெலனைப் பெறாமலேயே அவருக்கு ஊழியம் செய்யப் போய்விட்டார்கள் !!

2.நீங்கள் விசுவாசிகளானபோது பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா? என்ற பவுலின் கேள்வி கற்றுத்தரும் சத்தியங்கள் ! இதே கேள்வி தான் 'பாப்டிஸ்ட்' 'பிரதரன்' போன்ற சபையினரை இன்றும் இடித்து கேட்பதாய் உள்ளது !

உங்களுக்குத் தெரியுமா? மறுபடியும் பிறந்து, தண்ணீரில் மூழ்கி ஞானஸ்நானம் எடுத்தபிறகும் ஒருவர் பரிசுத்தஆவியின் அபிஷேகத்தைப் பெறாமலேயே இருக்க முடியும். இது போன்ற நிலையை அப்போஸ்தலர் நடபடிகளில் நாம் காண்கிறோம். அப்போஸ்தலர் 8:1 2-ல் சமாரியாவினர் தண்ணீரில் மூழ்கி ஞானஸ்நானம் எடுத்ததை வாசிக்கிறோம். இப்போது அவர்கன் 'பாப்டிஸ்ட்' (Baptist) அல்லது பிரதரன் (Brethren) விசுவாசிகளைப் போன்றவர்கள் மாத்திரமே ! அவர்கள் இன்னமும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறவில்லை. ஆனால், ஆதி அப்போஸ்தலர்களோ அவர்களை அதே நிலையில் விட்டுவிட வில்லை. சில நாட்களுக்குள்ளாகவே அவர்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெறும்படி வழி நடத்தினார்கள் (அப். 8:14-17).

இதைப்போலவே அப். 19.1-7-ல் இன்னொரு நிகழ்ச்சியைக் காண்கிறோம். பவுல் எபேசுவுக்கு வந்தபோது அங்கே சில-சீஷர்களைக் கண்டார் (வசனம்-1) . அவர்கள் வாழ்வில் ஏதோ குறைவுபடுவதையும் பவுல் கண்டுணர்ந்தார். எனவே அவர்களிடம் "நீங்கள் விசுவாசிகளானபோது பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?" என்ற கேள்வியைக்கேட்டார் . இன்றும் ஒருவர் கூட அந்நிய பாஷை பேசாத அல்லது அசெம்பிளியின் சரித்திரத்தில் எந்த ஆவியின் வரங்களும் கிரியை செய்யாத ஓர் விசுவாசிகளின் அசெம்பிளியிக்குப் பவுல் வருவாரென்றால் "நீங்கள் விசுவாசிகனானபோது பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா? என்ற அதே கேள்வியைக் கேட்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பவுலின் கேள்வி, குறைந்தது மூன்று சத்தியங்களை நமக்குப் போதிக்கிறது:

1.பரிசுத்த ஆவியைப் பெறாமலே ஒருவர் விசுவாசிக்க முடியும். இயேசுவை விசுவாசிக்கும்போதே பரிசுத்த ஆவியைப் பெறுவது தானாக நடந்துவிடுமென்றால், பவுலின் இந்த கேள்வி புத்தியீனமானதாய் இருந்திருக்கும். ஆனால் இன்றைய பாப்டிஸ்ட் அல்லது பிரதரன் பிரசங்கிகள் பவுலைக் கண்டால், "என்ன பவுலாரே ! ஒருவன் கிறிஸ்துவை விசுவாசிக்கும்போது தானாகவே (automattically) பரிசுத்த ஆவியையும் பெற்று விட்டான் என்பது உமக்கு தெரியாதா ? அவன் பரிசுத்த ஆவியை அறிகிறானோ அறியவில்லையோ; விசுவாசிக்கிறானோ விசுவாசிக்கவில்லையோ; விரும்புகிறானோ விரும்பவில்லையோ; அது அவனுக்குப் பொருட்டல்ல !! "என்று சொல்லியிருப்பார்கள் ஆனால் பவுலோ இந்த விபரீத தேவசாஸ்திரங்களை நம்பியவன் அல்ல.

2.நாம் திருமணம் செய்திருக்கிறோமா அல்லது இல்லையா என்பதை திட்டமாய் அறிந்திருக்கிறது போல, நாம் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறோமா அல்லது இல்லையா என்பதையும் திட்டமாய் அறிந்திருக்க முடியும்.

3.விசுவாசிப்பதற்கும்' பரிசுத்த ஆவி அபிஷேகத்தைப் 'பெற்றுக் கொள்வதற்கும்' இடையில் எந்த தாமதமும் தேவையே இல்லை. சமாரியாவில், அவர்கள் கிறிஸ்துவை விசுவாசித்ததைத் தொடர்ந்து உடனடியாகவே பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையும் பெற்றிருக்க வேண்டும் என்றே பவுல் எதிர்பார்த்தார்.

எபேசு விசுவாசிகள் பரிசுத்த ஆவி அபிஷேகத்தைப் பெறவில்லை

என பவுல் அறிந்தவுடனேயே அவர்களை அபிஷேகத்திற்குள் நடத்தினார். அபிஷேகத்திற்குள் பிரவேசிப்பது அவர்களுக்கு எளிதாகவே இருந்தது. ஏனெனில், இன்று அநேகர் பரிசுத்த ஆவி அபிஷேகத்தைக் குறித்த பலதரப்பட்ட போதனைகளால் குழம்பி இருப்பதுபோல் அன்று அவர்களின் மனம் குழப்பம் அடைந்திருக்கவில்லை. இன்றும்கூட பாப்டிஸ்ட், பிரதரன் வேத சாஸ்திரங்களால் குழப்பம் அடையாதிருக்கிறவர்கள் (குறிப்பாக கிறிஸ்தவர்கள் அல்லாமல் புறமதத்தில் இருந்து வந்தவர்கள்) இந்த அனுபவத்திற்குள் சீக்கிரமாய்ப் பிரவேசித்து விடுகிறார்கள். மறுபடியும் பிறந்த விசுவாசிகளான அந்த எபேசு சீஷர்களுக்குப் பவுல் தண்ணீர் ஞானஸ்நானம் கொடுத்தார். அதற்குப் பிறகு பரிசுத்தஆவி அவர்கள் மேல் வந்தார் (அப். 19:5,6).

இயேசுவும் கூட முதலில் பரிசுத்த ஆவியினால் மாத்திரமே பிறந்தார்

(லூக் 1:35). ஆனால் பல வருடங்களுக்குப் பிறகு பரிசுத்த ஆவியாவைர் அவர் மேல் இறங்கினார் (லூக் 3.21,22). இவ்விதம் பரிசுத்த ஆவியானவர் அவர்மேல் இறங்கியதற்குப் பின்பு தான் இயேசு இவ்விதம் கதறினார். "கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார் தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம் பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், கர்த்தருடைய அனுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார்" (லூக். 4:18-19).

சுமார் 30 வருடங்கள் இயேசுவானவர் பாவத்தை ஜெயித்து வாழ்ந்தார், புதிதும் ஜீவனுமான மார்க்கம் நடந்தார், ஞானத்தில் வளர்ந்தார், அன்பில் வேரூன்றி திலைத்திருந்தார். இவை யாவும் அவர் தன் உள்ளான மனிதனில் பெற்ற வல்லமையின் நிறைவினால் செய்து முடித்தார். ஆனாலும், அவர் ஆவியின் அபிஷேகத்தைப் பெறும் வரைக்கும் தன் பிதாவுக்கு ஊழியம் செய்து சேவிக்க முடியவில்லையே ! !

இன்றும், ஆவியினால் பிறந்த உண்மையான விசுவாசிகள் இன்னமும் பரிசுத்தஆவி அபிஷேகத்தைப் பெறாமலே இருக்க முடியும். ஆம், விசுவாசிகளாய் இருந்து புதிதும் ஜீவனுமான மார்க்கத்தையும் கிறிஸ்துவின் சரீரத்தைப் பற்றியும் கூட பேச முடியும். ஆனால் ,அவர்களின் அசெம்பிளியோ 1 கொரிந்தியர் 12,14-1-ம் அதிகாரத்தில் கூறப்பட்ட ஆவியின் வரங்கள் ஒன்றுகூட கிரியை செய்யாத கெளரவமான

"பிரதரன் அசெம்பிளி" யாகவே தேங்கி நின்றுவிட முடியும். நாம் இவ்விதமாய் முடிந்து விடாதபடி , இருக்க விழிப்புடன் இருப்போமாக!

3.வேத வரம்பைத் தாண்டி "உணர்ச்சித் தூண்டுதலுக்குள்" வீழ்ந்த பெந்தேகொஸ்தேயினர் ! இக்குழுவைக் கண்டு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையே உதாசினம் செய்யும் மற்றொரு குழுவினர்!! இப்படித்தான் சாத்தான் கொக்கரித்து மகிழ்கிறான்!!

வரம்பு மீறிச் செல்லும் விசுவாசிகளைப் பயன்படுத்தி, அதற்கு எதிராக மற்றொரு குழுவினரை உருவாக்குவதில் சாத்தான் கைதேர்ந்த திறமை பெற்றவன். உதாரணமாக பரிசுத்தஆவியின் அபிஷேகத்தைக் கொண்டு வேத வரம்பைத் தாண்டி 'உணர்ச்சித் தூண்டுதலுக்குள்' வீழும் பெந்தேகொஸ்தேயினரை சாத்தான் உருவாக்கிவிட்டான். இவ்விதம் குன்றின் ஒரு முனையில் வீழ்ந்து மாயும் குழுவினர்! இப்போது இவ்விதம் வரம்புமீறிச் செல்லும் பெந்தகொஸ்தேயினரைக் கண்டு, பரிசுத்த ஆவியின் அபிஷேகமும் , ஆவியின் வரங்களும் வெறும் மனுஷீக உணர்ச்சிப் பெருக்கமே என அபிஷேகத்தின் போதனையையே உதாசினம் செய்யும் மற்றொரு எதிர் குழுவினர்!! இவ்விதமாய், இந்த எதிர் குழுவினர் குன்றின் மறு முனையில் வீழ்ந்து மாய்கின்றனர் !! நான் உருவாக்கிய இவ்விரு குழுவினரையும் கண்டு சாத்தான் கொக்கரித்து மகிழ்கிறான். ஏனென்றால், இவர்கள் குன்றின் எதிரான இரு முனைகளுக்குச் சென்று தங்களை மாய்த்துக் கொள்கிறார்கள். இது உண்மையாகவே சாத்தானின் கைதேர்ந்த கலையாகும்.

சாத்தானின் தந்திரங்களைக் குறித்து ஏதும் அறியாத பேதைகளாய் நாம் இருக்கவே கூடாது. வேத வரம்பைத் தாண்டி தவறாய் நடத்தப்பட்ட விசுவாசிகளைக் கண்டு அதற்கு எதிர்மறையாய் நம் வாழ்க்கையில் கிரியை செய்யாதவர்களாய் நம்மைக் காத்துக் கொள்வோமாக. இயேசுவும் ஆதி அப்போஸ்தலர்களும் "உண்மையாகவேப் பெற்றிருந்த ஆவியின் அபிஷேகத்திற்காக தேவனை வாஞ்சித்து நெருங்குவோம்.

ஆதியின் கனியானது, நம் குணாதியசித்தை மறுரூபப்படுத்தி கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாய் நம்மை மாற்றுவதற்காகும் (கலா. 5.22,23). ஆனால், ஆவியின் வரங்கள் அத்தனையும் மற்றவர்களுக்கு ஊழியம் செய்வுதற்காகும் (1 கொரி.12.8-10: ரோ.12.6-8).

நாம் பரிசுத்தஆவியின் அபிஷேகம் பெறாமல் தேவாதி தேவனுக்கு வல்லமையாய் ஊழியம் செய்வது ஒருக்காலும் முடியாது! ஆம், அது இயேசுவாலும் முடியாது - நாம் எம்மாத்திரம்!!

4.பலனற்ற தங்கள் பிரயாசங்களில் சோர்வுற்று தவிக்கும் தாகத்தோடும் விசுவாசத்தோடும் தன்னிடம் வருவோரை கிறிஸ்துவானவர் உண்மையாகவே அபிஷேகிக்கிறார்!

உன்னத்திலிருந்து ஜீவ நதியாகப் பாய்ந்தோடும் பரிசுத்த ஆவிக்காக தாகம் கொள்ளும்படி இயேசு நமக்குப் போதிக்கிறார் (யோ. 7:37,39). தவிக்கும் தாகத்தை, ஓர் மிகப் பெரிய வாஞ்சையாகத் தேவன் மனித சரீரத்தில் ஏற்படுத்தியிருக்கிறார். ஆம், உணவு அல்லது உறக்கத்திற்காக கொள்ளும் வாஞ்சையைவிட அளவு கடந்த வாஞ்சையாகும் .'தாகம்' எனவே தான் நாம் தேவனிடம் இருந்து வரும் உன்னத பெலனை அடைய வாஞ்சை கொள்வதற்கு "தாகம்" என்ற பதத்தை இயேசு உபயோகித்தார். இயேசு சொன்னார் "ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வரக்கடவன் (யோ. 7:37) . அதாவது அவரது உன்னத பெலத்கிற்காக ஏக்கமுற்று தவிக்கும் தாகம் இல்லாமல் ஒருவன் இயேசுவிடம் வருவதில் எந்தப் பிரயோஜனமும் கிடையாது. "கர்த்தருடைய ஊழியம்" என்றும் "சபை கட்டுகிறோம்" என்றும் நீங்கள் சொல்லிக்கொள்கிற ஊழியத்தைச் செய்வதற்கு பரலோக அபிஷேகத்தின் தேவையை கொஞ்சமும் உணராமல், எல்லாம் சரியாகச் செய்வதுபோல் உள்ள நிலையில் நீங்கள் இருப்பீர்களென்றால் நீங்கள் ஆண்டவரிடம் வரவேண்டிய அவசியமே இல்லை. இப்படிப்பட்டவர்களை ஆண்டவரும் ஒருபோதும் அழைப்பதே இல்லை! நிச்சயமாய் இல்லை! தங்கள் பலனற்றப் பிரயாசங்களில் சோர்வுற்றவர்கள் பரிசுத்த ஆவியின் எந்த வெளிப்பாடும் இல்லாமல் ஜீவிக்கும் தங்கள் ஜீவியத்தில் சலிப்படைந்தவர்கள்; தங்களின் சொந்த மனுஷீகத் திறமையால் பிரயாசப்பட்டு அதில் துயருற்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்தவர்கள்; இப்போது எக்கிரயமானாலும் தேவ வல்லமையைப் பெற்றே தீரவேண்டும் என தவிக்கும் தாகத்தால் துவளுகிறவர்கள் மாத்திரமே அவரிடம் வரும்படி அழைக்கப்படுகின்றனர்.

ஆம், இவர்கள் வந்து பெற்றுக்கொள்ள முடியும். ஆனாலும் இவர்கள் விசுவாசித்து வரவேண்டும். தேவனுடைய வார்த்தைகளை குழந்தை போன்று விசுவாசித்து வரவேண்டும். லூக்கா. 11: 5-13ல் கூறப்பட்ட உவமானமானது, நாம் பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ள எப்படி ஜெபிக்க வேண்டும் என கற்றுத்தரும் பொருட்டு இயேசுவே கூறியதாகும் (வசனம் - 13). நமக்கடுத்தவர்களுக்கு (சிநேகிதன்) ஊழியம் செய்வதற்குத் "தேவையானதைப் பிதா தரும்படி அவரிடம் விசுவாசத்தோடு சென்று தட்டித் தட்டி...தொடர்ந்து தட்டி கேட்கவேண்டும். இவ்விதம் நாம் பரிசுத்தஆவியின் அபிஷேகத்தை வாஞ்சித்துக் கேட்கும்போது, நாம் அசுத்த ஆவியைப் பெற்றுவிடுவோமோ என சிறிதும் அஞ்சத் தேவையே இல்லை. ஏனெனில், நம் அருமை பிதா மீன் கேட்போருக்குப் பாம்பை ஒருக்காலும் தரவே மாட்டார். (லூக். 11:11).

ஓர் சுருக்கமான, ஜெபம் செய்து, பின் "விசுவாசத்தில் எடுத்துக்கொள்கிறேன்" என்ற எளிதான முறையில் ஒருக்காலும் திருப்தியே அடையாதீர்கள். பரிதாபம்! இன்று அநேகர் இப்படித்தான் தவறாய் போதிக்கப்பட்டிருக்கிறார்கள். உண்மையை நழுவவிட்டு, வாழ்நாளெல்லாம் ஓர் ஏமாற்று வஞ்சகத்திற்குள் ஜீவிக்கவே வேண்டாம். அப்போஸ்தலர் நடபடிகளில் ஒருவர் கூட "விசுவாசத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்" என போதிக்கப்படவேயில்லை நீங்கள் பரிசுத்த ஆவியால் அபிஷேகிக்கப்படும்போது அதை நீங்களே அறிவீர்கள் - மாறாக நீங்கள் விசுவாசத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய நாடகத்திற்கு உட்பட அவசியமே இருக்காது!! நீங்கள் 10-வருடங்கள் காத்திருந்து உண்மையானதைப் பெறுவது தேவலாமேயல்லாமல், நீங்கள் விசுவாசத்தில் எடுத்துக் கொள்ளும் பொய் வஞ்சகத்தில் வாழ்நாளெல்லாம் ஜீவிப்பது பரிதாபம்! நாம் பரிசுத்த ஆவியைப் பெற்றோம் என எப்படி உறுதிசெய்து கொள்ள முடியும்? உங்களுக்கு அந்த உறுதி அளிப்பதற்கு எத்தனையோ வழிகளை தேவன் வைத்திருக்கிறார். இவ்வித உறுதியை உங்களுக்கு தேவன் தரும் பொருட்டு, நீங்கள் மாத்திரம் தவிக்கும் தாகத்தோடு அவரை முழு இருதயமாய்த் தேடுங்கள் அது போதும். அவர் அதை நிச்சயமாய் உங்களுக்குத் தர வல்லவராயிருக்கிறார். இவ்வித தாக வாஞ்சையோடு வந்த எத்தனையோ விசுவாசிகளுக்கு அவர் இந்த உறுதியை கையளித்திருக்கிறாரே அதை உங்களுக்கும் தருவார்.

5.பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தோடு அந்நியபாஷையையும் நமக்கு தர தேவன் வாஞ்சிக்கிறார்! ஜோதிகளின் பிதா வழங்கும் தன்மையும், பூரணமுமான இவ்வரத்தைத் தடைகள் அகற்றி தாமதமின்றி பெற்றிடுவீர்.

பரிசுத்த ஆவியால் அபிஷேகம் பெற்றதும் இயற்கைக்கு அப்பாற்பட்ட அந்நியபாஷைகளையும் பேசினார்கள் என அப்போஸ்தலர் நடபடிகளிள் பல இடங்களில் காண்கிறோம். (அப்.2.5; 10:46: 19:6) நாம் பிரதானமாய் வல்லமையினால் தரிப்பிக்கப்படுவதற்குத் தான் பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்படுகிறோம். அபிஷேகம் பெற்றதற்கு இந்த வல்லமையே உறுதியான சாட்சியாகும். இதை நிரூபணம் செய்யும் அப்.1:8; 10:38 வசனங்களை வாசித்துப் பாருங்கள். இருப்பினும், தேவன் நமக்கு அநிந்யபாஷை பேசும் வரத்தையும் நமக்குத் தர வாஞ்சிக்கிறார். ஆம், இந்த வரம் விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் ஓர் அடையாள வரமாக ஆண்டவரே

வாக்கு செய்கிருக்கிறார் (மாற் 16:17). நம் ஜெபத்திலோ அல்லது துதியிலோ நம் ஆவியில் உள்ள பாரத்தைத் தேவனுக்குத் தெரியப்படுத்துவதற்கு இந்த அந்நியபாஷை வரம் நமக்கு கைகொடுக்கிறது. இந்த அந்நியபாஷை வரத்தினால், நாம் நம் மனதைத் தாண்டிச் சென்று (1 கொரி. 14:14) தேவனிடம் நம் ஆவி நேரடியாகவே நம் நாவின் மூலமாகத் தன்னை வெளிப்படுத்திப் பேசுகிறது. இவ்விதமாகத்தான் நாம் ஆவிக்கேற்ற பக்திவிருந்தி அடைகிறோம் (1 கொரி.14:4) . நாம் சபையாகக் கூடிவரும் போதும் இவ்வரத்தை வியாக்கியான வரத்தோடு உபயோகித்து, சபையும் ஆவிக்கேற்ற பக்திவிருத்தி அடைந்து கட்டப்படுகிறது (1 கொரி.14:5,6,1 2,1 3 ) இந்த அந்நியபாஷை வரத்தை உதாசினம் செய்பவர்களுக்குத் தேவன் ஒருக்காலும் அவ்வரத்தை அவர்களுக்தத் தரவே மாட்டார். சபையை வழிநடத்தும் பொறுப்பில் உள்ளவர்கள் நிச்சயம் இந்த வரத்தை பெற்றிருக்க வேண்டும் இல்லாவிட்டால், சபையில் இந்த வரம் பிரயோகிக்கப்படுவதை ஒழுங்கு செய்வது அவர்களால் முடியாமல் போய்விடும். பவுல் கொரிந்தியர்கள் அனைவரும் பேசுவதை விட அதிகமாய் அந்நியபாஷைகளைப் பேசியபடியால் தான், கொரிந்துவில் அவர்கள் ஒழுங்கில்லாமல் அந்நியபாஷை வரத்தைப் பிரயோகித்ததைத் திருத்த முடிந்தது (1 கொரி. 14:18).

நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, ஜோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது (யாக். 1:17). இந்த நன்மையும் பூரணமான வரங்களில், பரிசுத்த ஆவி அபிஷேகமும் அந்நியபாஷை வரமும் உள்ளடங்கும். காரியம் இப்படியாய் இருக்க, நீங்கள் உங்கள் தவறான

அபிப்ராயத்தாலோ அல்லது ஞானமில்லாமல் குன்றின் ஒருமுனைக்கு ஓடியோ அல்லது விசுவாசத்தில் எடுத்துக்கொளளும் வஞ்சகத்தினாலோ உங்களின் மேன்மையான பிறப்புரிமை சுதத்திரத்தை இழந்து போகாதீர்கள்! ,

"நீங்கள் கேட்காதபடியால் பெற்றுக்கொள்ளவும் இல்லை நீங்கள் கேட்டும், அதைத் தகாதவிதமாய் கேட்டபடியால் பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள்" (யாக்.4:2,3)

தேவனுக்கு மகிமையுண்டாகக் கேளுங்கள்! கேட்டுக் கொண்டே இருங்கள் அப்போது நிச்சயம் பெற்றுக்கொள்வீர்கள்!! (லூக்:11:10) ஆமென்!